Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, December 23, 2015

போய் வருகிறேன் புதுகையே

போய் வருகிறேன் புதுகையே
என்
 தாயின் கருவறை தாங்கியதை விட
நீ
தாங்கினாய்
என் சோகங்கள் - உள்
வாங்கினாய்

இங்குள்ள்
ஒவ்வொரு நபர்களும்
என்
பிரியத்திற்குரியவ்ர்கள்
எனக்கான எதிர்பையோ
மறுப்பையோ
கொண்டிருந்தாலும்

எனக்கான
 பள்ளங்கள் தோண்டியோருக்கும்
இந்நேரத்தில் நான்
என் பாசங்களை
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்

திருமணம் ஆனதும்
திருப்பூர் சென்ற போது
அடர் காட்டில்
அமிழ்த்தப்பட்டதாய் உணர்ந்து
குற்றம் சாட்டி,,,,,
பேரம் பேசி,
வாதாடி,
போராடி,,,,
மீண்டும்
புதுகையே வந்துவிட்டேன்
ஆனால் இப்போது?????

நாற்றுகள்
ஒரே இடத்தில் இருந்தால்
வளர்ச்சியும் இல்லை
முதிர்ச்சியும் இல்லை
எனவே தான்
இந்த மாறுதல்

கை கூப்பி அழைக்கும் சென்னை
என்னை
ஆதரிக்குமா?
அபகரிக்குமா ?
ஆற்றுப்படுத்துமா?
எதுவும் தெரியவில்லை.
இப்போதைக்கு
அதன்
அழைப்பின் அணைப்புக்குள் கிடக்கிறேன்


பரந்து விரிந்த மாநகரத்தில்
எனக்கான
பிரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இயல்பில் பிரியமானவளுக்கு
நிறைய நிறைய்ய
பிரியங்களைக் கோர்த்திருக்கிறேன்
நட்பால் வார்த்திருக்கிறேன்


எங்கும் விதைத்திருக்கிறேன்
எனக்கான
பிரியங்களையும்
கருத்து வேறுபாடுகளையும்
நல்ல வேளை
இது வரை
நான்
பகைமைகளைச் சந்திக்கவே இல்லை
பகைமையென யாரையும் உணரவே இல்லை
இறைவனுக்கு நன்றி

இப்போது
எல்லோரிடமும் கொட்டிச் செல்கிறேன்
எனக்கான அன்புகளை மட்டும்


என் பிரியத்திற்குரிய புதுகையே
உன்
பாதம் தொட்டு வணங்கி
விடைபெறுகிறேன்
என்னை
ஆசிர்வதித்து அனுப்பு


என் மூச்சுக்குள் நிறைந்த புதுகையே
உன்னை
என் உயிருக்குள் வைத்து
ஆரத்தழுவுகிறேன்
என் நெற்றியில் முத்தமிட்டு
விடைகொடு!!!!!!


இனியும் வருவேன்
உன்னைக் காண
விருந்தினர் போல
ஒருநாள்...இருநாள்...
பயணத்திட்டங்களுடன்


என் பணிகள் சிறக்க செழிக்க
உன்னிலிருந்து
எடுத்துச் செல்கிறேன்
ஊக்கங்களை
ஆக்கங்களை
அன்புகளுடனும்,
நன்றிகளுடனும்


இந்த ஊர்குருவி
பருந்தாக ஆசைப்பட்டு
பறந்து செல்கிறேன்


வல்லூறுகளின்
வலிமை பழகவில்லை நான்,,,
எனினும்
எனக்கான
வளிமண்டலத்தில்
வாகைசூடுவேன்
அழுத்தமாய்...ஆழமாய்...

என் பாதைகளில்
பன்னீர் தெளிப்பார்களா?
கண்ணீர் தெளிப்பார்களா?
என அறியவில்லை நான்


ஆனால்
கண்ணீரையும்
பன்னிர் ஆக்கிக் கொள்ள
பழக்கு!!!!

நினைவின் கூடுகளில்
நீயே நிறைந்திருப்பாய்!


உன்
சேமநலநிதிக்கணக்கில்
எப்போதும்
எனை வரவில் வை


வரலாற்றுப்பக்கத்தில்
எப்போதும்
எனை
உறவில் வை...!!!!


அழுத்தமாய்....ஆழமாய்...!!!

உன் சுவாதி...


**************************************************************************

Tuesday, September 29, 2015

எழுந்து வா சகோதரி

எழுந்து வா சகோதரி எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 4 புதுக்கவிதை


எழுந்து வா சகோதரி
*************************

விதியென்று
வீட்டுக்குள் உறங்கும் பெண்ணே
வெளியே வா
உனக்காகத்தான்
உலகம் காத்திருக்கிறது

சிறையைவிட்டு வந்து
செயற்கைக் கோளுக்குச் சென்று வா
அணு உலைகளை
ஆராய்ச்சி செய்து கொடு
அடிமைத்தனத்தை விடுத்து
அகிலத்தை ஆராய்ச்சி செய்ய வா
அரிசிச் சோற்றை
ஆக்கமட்டுமல்ல
விண்கலம் வரை உனது
விரல்கள் போகட்டும்

எழுந்து வா பெண்ணே
நீ
அடங்கிப்போனது போதும்
முரட்டுப்பிடிகளில்
முடங்கிப் போனதும்போதும்
நாளைய உலகை
நீதான் உருவாக்க வேண்டும்
குழந்தை உருவாக்க மட்டுமல்ல
உனது கருவறை
குவலயம் படைக்கும்
திருமறை நீதான்
நீ...நீயே தான்
இந்தியாவின் கலங்கரை விளக்கு
துயரங்களை விலக்கு
பாரதத்தின் பாதையே
பதுங்கிக் கிடந்ததும்
ஒதுங்கிப் போவதும் தான்
ஒழுக்கம் என்ற அழுக்கு சிந்தனையை விட்டுவிடு
சடங்குகளுடன் சரிந்து போன நீ
சட்டம் எழுத வா
இருண்டு போன நெஞ்சங்களில்
உன் எழுத்துக்கள் ஒளிரட்டும்
பாழடைந்து போனவைகள்
உன்னைக் கண்டு
பயந்து ஒதுங்கட்டும்
இப்போது பார்
உன்னை ஒதுக்க முயன்றவர்கள்
உன் பின்னே வருகிறார்கள்
உன் கண்களின் ஒளியில் தான்
கதிர்கள்
கனல் கக்க வேண்டும்
 உன் கால்களின் பாதையில் தான்
கானக முட்களுக்கு
கண் தெரிய வேண்டும்
உன்
கைகளின் எழுத்துக்களில் தான்
உலகமே உன்னதப் படவேண்டும்
வா பெண்ணே
வா
உலகம்
உனக்காகத் தான் காத்திருக்கிறது
**********************************************Image result for working women pencil drawing



என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 4 புதுக்கவிதை

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
*******************************************


என்ன வளம் இல்லை இங்கே
ஆனாலும்
அயல்நாடு சென்று வந்தால்
அதிகம் மதிப்பு
வீட்டுக்குள் மட்டும் இல்லை
சமூகத்திலும்
மருத்துவம்,கலைகள்,என்று
எல்லாமும் இங்கிருந்து
புறப்பட்டது தான்
யார் கைகளுக்குள் அகப்பட்டு
இப்படிப் போனது தெரியவில்லை
உழவர்கள்
விவசாயம் தவிர்த்து
வேறு என்ன செய்யலாம் என
யோசிக்கிறார்கள்
வங்கிக்கடன் பெறவும்,வேறு பயன்களுக்குமாய்
மாறிப்போனது நிலத்தின் பட்டா ரசீது
நிலங்களோ எப்போதும்
ரியல் எஸ்டேட் காரர்களிடம்
சிக்கிக் கொண்டு சின்னபின்னமாகிக் கிடக்கிறது
களர் நிலங்கள் கிடக்கின்றன்.
யாரும் பார்க்காதவண்ணம்
விளைநிலங்கள் தான்
விற்பனைக்குள் சிக்குகின்றன்.
எதனைக் கொண்டு எதனை மீட்டெடுக்க?
வருங்காலங்களில்
தலைக்கவசம் போல்
காற்றின் கவசம் அணிந்து
செல்ல முடியுமா என்ன??
மீட்டெடுப்போம்
நம் எண்ணங்களை...
விதைத்திடுவோம் உழவின் மேன்மைகளையும்
உழவர்களின் உழைப்பையும்
************************************************

 Image result for வயல் வெளிகள்

Monday, September 28, 2015

நட்புகள் தொகுக்கட்டும்

நட்புகள் தொகுக்கட்டும் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 4 புதுக்கவிதை



நட்புகள் தொகுக்கட்டும்
****************************


விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள்
வறண்ட ஏரிகளிலும், குளங்களிலும்
கிட்டிப்புல் மறந்து கிரிக்கெட்  தொடர்கிறது
தாயம், பல்லாங்குழி
எல்லாவற்றையும் தொலைத்து
கணினி விளையாட்டு

அன்பு வளர்த்த விளையாட்டுகள்
நட்பு சேர்த்த விளையாட்டுகள்-இன்று
வன்மம் வளர்த்து, பகைமை நிறைத்து
படுகாயத்தில் இறங்கி
படுகொலையில் முடிகிறது
விளையாட்டுச் சண்டைக்கெல்லாம் என
பெற்றோர்கள் சலித்துக் கொள்வார்கள்
சண்டை முடிந்து

பெற்றோர்களைவிட பிள்ளைகள் தான்
முதலில் பேசுவார்கள்
இன்றோ
விளையாட்டே சண்டைக்காக
நடத்தப்படுகிறது
வேலைமுடித்த அலுப்போ
உழைப்பு தரும் களைப்போ
மறைக்கவும், மறக்கவும்
என்றான விளையாட்டு -இன்று
வேலை மறக்க வைக்கும்
விளையாட்டாக மாறிப்போனது
மனம் திட்பமாகியது
மதிநுட்பமாகியது
உடலைத் திடமாக்கியது
உறவுகளை வடமாக்கியது
இன்றோ ஒரே இடத்தில்
கணினி விளையாட்டு
கயமை விளையாட்டு ,
கருமை விளையாட்டு
 மனம் உருகிவரும்
உறவுகள் எல்லாம்
இறுகிப்போனது கூட
விளையாட்டாய் வந்த சண்டகளால் தான்
சண்டைகள் வளர்கின்றன
சமாதானம் செய்வோர் யாருமின்றி
சண்டைகள் வளரவேண்டுமென்பதற்காகவே
சமாதானமே ஆகக்கூடாது என்று
நினைப்போரும் உண்டு
சில நேரங்களில் சமாதானங்கள் கூட
சண்டை வளர்க்கின்றன\
எண்ணங்கள் வெறுப்புக்குள் கிடப்பதாலும்
நெருப்புக்குள் உழல்வதாலும்
வறண்டே கிடக்கின்றன
நட்பான விளையாட்டுகள்
இனியாரும்
சண்டையை விலையாட்டாய் நினைக்காதீர்
விளையாட்டுகளிலும் சண்டையை வளர்க்காதீர்
விளையாட்டே விளையாட்டில் மகிழட்டும்
உறவுகளை வளர்க்கட்டும்
நட்புகளைத் தொகுக்கட்டும்
**************************************************************************
Image result for games pencil drawing

Sunday, July 20, 2014

பெண்ணுக்கு ஆடை

கிழிந்த ஆடையுடன்
வந்த பிச்சைக்காரியின் உடம்பில்
காமத்தைத் தேடினான் காமுகன்

ஐயோ! தெய்வமே!
பாராயோ! பாராயோ!
என்றான் ஆன்மீகவாதி

என் தேசம் இப்படிப்போச்சே
ஐயோ! உலகமே
என்ன இது
கொடுமையிலும் கொடுமை
என்று கதறினான் கவிஞன்

பெண்ணின் கிழிந்த ஆடைக்கு
மாற்று தராத அரசாங்கம்
ஒரு அரசாங்கமா?
என்று பிரசங்கித்தான்
ஒரு அரசியல் வாதி

கிழிந்த ஆடையுடன் பெண்
என்ற தலைப்பில்
 சுவையான கட்டுரை எழுதினான்
 பத்திரிக்கைக்காரன்

ஆடையற்றவர்களுக்கு ஆடையளிப்பதும்
சமூக ஊனங்களை சரி செய்வதும்
என் தொழில் என்று
ஆடை கொடுப்பது போல
புகைப்படம் மட்டும்எடுத்துக்கொண்டான்
சமூக சேவகன்

இந்தக் காட்சியை
எப்படி படம் எடுத்தால்
நல்ல வசூலாகும் என்று
யோசித்தான் சினிமாக்காரன்

ஆனால்
கடைசிவரை
எவருமே ஆடைதர முன்வரவில்லை
*************************************************

Wednesday, July 9, 2014

பொய்களின் சாம்ராஜ்ஜியம்

பார்க்குமிடங்களில்
அங்கிங்கெனாதபடி
எங்கும் பொய்கள் தான்!

ஒரு அயோக்கியனை
மேடையில் அருமையாக
புகழ்கிறார் ஒருவர்

மொழியே புரியாதவனை
கவிஞர் என்கிறார் ஒருவர்

எனக்கு இதை விற்பதில்
ஒரு ரூபாய் தான் இலாபம்
என்கிறார் வியாபாரி

உறவினர்களுள்
பிரியம் வைத்திருப்பது போலவும்
பாசம் வைத்திருப்பது போலவும்
பொய்கள்

இப்பத்தான் உங்களை நினைச்சேன்
நீங்களே வந்துட்டீங்க என்று
பச்சைப்பொய் சொல்கிறார்
தன் செருப்பை எங்கே தொலைத்தோம்
என்று தெரியாத ஒருவர்

அரசியல்வாதிகளுக்கோ
பொய்களே உணவு

புள்ளிவிபரக் கணக்கே
பொய்கள் தான் என்கிறார்
அந்தத்துறையை ச் சார்ந்தவர்

இது முகத்தை அழகாக்கும்
என்கிறது ஒரு விளம்பரம்

இது முடியைக் கருப்பாக்கும்
என்கிறது ஒரு விளம்பரம்

இது உங்களது வங்கி என்கிறது
பெரிய பொய்யாய்

காதலிக்கவே இல்லை என்று
மறுத்து விட்டு அதே நபரை
திருமணம் செய்து கொள்கிறார்கள்
திரைத்துறையினர்

உண்மை கலந்த பொய்கள்
பொய்யில் மிதக்கும் பொய்கள்
பொய்யையே முழுதும் நிறைத்த பொய்கள்
உண்மையாய் தோன்றும் பொய்கள்
அநீதியான பொய்கள்
அவசர உதவிப் பொய்கள்
நிதானமாய் யோசித்த பொய்கள்

இப்படி பொய்கள்
உலகில் காற்று மண்டலத்தில்
கலந்துள்ள
நைட்ரஜன், ஆக்ஸிஜன்
சதவீதம் மாதிரி
அங்கிங்கெனாதபடி
எங்கும்
நிறைந்திருக்கிறது போலும்
*************************************

Tuesday, July 8, 2014

தவறுகள்.....தவறும் தவறுகள்......தவறத்தவறுகள்..

ஏதாவது ஒரு வகையில்
தவறு செய்து விடுகிறேன்
தினந்தினம்

கூட்டுக்கு உப்புபோட
மறந்திருப்பேன் ஒருநாள்

தாமதமாய் எழுவேன்
ஒருநாள்

மகளின் பள்ளிப்பையில்
உணவு வைக்கவே
மறந்தேன் ஒருநாள்

எத்தனையோ முறை
நானும்
சாப்பிட மறந்து போவேன்

சிறு சிறு தவறுகள்
செய்த வண்ணமாய் இருக்கிறேன்
ஒவ்வொரு முறை
தவறு செய்த பின்னும்
அடுத்தமுறை செய்ய மாட்டேன்
என்ற தன் மன்னிப்புடன்......

ஆனாலும் இன்று
காலணி மாற்றி அணிந்த
தவறுக்காக
குற்றம் என்றுசொல்லி
மகளை அடித்து விட்டேன்
எதிலும்
தவறும் நான்......!!!
*****************************************************

Thursday, July 3, 2014

விலங்கின் பிரதிபலிப்புகள்

விலங்கிலிருந்து
மனிதன் வந்தான்

இதைப்
 படிக்கும் போதெல்லாம்
சந்தேகம் வரும்

மனம் வழக்காடும்

நிச்சயமாய் இருக்காது

அதெப்படி? என்று
அறிவு யோசிக்கும்

கடைசியில்
இல்லை, இல்லை என்ற
முடிவுக்கே
மீண்டும் மீண்டும் வரும்

இப்போதெல்லாம் தொன்றுகிறது
இவன் நிச்சயமாய்
மிருகங்களின் பரிணாமம் தானோ?

எங்கும் எங்கும்
விலங்குகளின் பிரதிபலிப்புகள்
விலங்குகளின் பிம்பங்கள்
மனித போர்வையில்....

Wednesday, July 2, 2014

நன் கொடை( நன்றல்லாத கொடை மாத கடைசியில் மட்டும்)

அலுவலக நாட்களில்
ஆளுக்கொரு முறை
 வந்து விடுகிறார்கள்
கூழ் ஊத்தப் போறோம்
காவடி எடுக்கப் போறோம் என்று

ஒவ்வொரு ஞாயிறும்
ஒருவராவது
 வந்து விடுகின்றனர் வீட்டுக்கு
நோட்டு ஏந்திக்கொண்டு
மகளுக்குத் திருமணம்,
பெரியவருக்குச் சிகிச்சை என்று

கடைகளில் தொங்கும்
பத்திரிக்கைகளில்
 எங்கேனும்
வந்துவிடுகிறது
 ஒரு விளம்பரம்
இதய அறுவை சிகிச்சைக்கு
பணம் அனுப்ப வேண்டிய முகவரி என்று

பேருந்து நிறுத்தங்களில்
சின்னக் குடத்தில்
மஞ்சள் துணி கட்டி
வந்து விடுகிறார்கள்
அலகு குத்திக் கொண்டோ
வேப்பிலை வைத்துக் கொண்டோ
பழனி பாத யாத்திரை
ஆதிபராசக்தி பாதயாத்திரை என்று

புரட்டாசியும் மார்கழியும்
வெங்கட்ராமா கோவிந்தா

ஆடியும் தையும்
மாரியம்மனுக்கு அரோகரா
ஐயப்பா, ஓம்முருகா என்று
மாதங்கள் தோறும்

இதெல்லாம் போக
உறவினர் திருமணம்
உற்ற நண்பர்கள் திருமணம்

பூப்பு நீராட்டு விழா
புதுமனை புகுவிழா
காது குத்து, வளைகாப்பு என்று
ஏகப்பட்ட அழைப்புகள்
அதையும் மீறி
மறைந்த நடிகர்
மறைந்த தலைவர்
உயிரோடு இருக்கும் பிரமுகர்கள்
பிறந்த நாள், நினைவுநாள்
கொண்டாட
வசூல் வேட்டை

தொழிலதிபர்கள்
கருப்புப் பணத்தை
வெள்ளையாக்கத் திண்டாடுகிறார்கள்

நடிகர்கள் சிலர்
தொழில்வரி கட்டாமல்
தொகையை அமுக்கி விட்டனர்

சித்திரை முதல் பங்குனி வரை
ஜனவரி முதல் டிசம்பர் வரை
சிகிச்சை என்றோ
திருமணம் என்றோ
காரணம் கண்டு பிடித்திருக்கிறார்கள்
அன்பளிப்பு வாங்க என்று

அரசியல் தலைவர்கள்
பாதிபேருக்கு
அரசாங்க வங்கியில்
கோடிக்கணக்கில் கடன்

எல்லாவறரியும்
எல்லோருக்கும் கொடுத்த அரசாங்கம்
நடுத்தர வர்க்கத்து
அரசு ஊழியர்களிடம்
வரியை ப் பிடிங்கிக்கொள்கிறது

பிச்சைகள் பலவிதம்
பிழைப்புகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
************************************************

Tuesday, July 1, 2014

என் முகம்

ஒவ்வொரு இடத்திலும்
எனக்கு ஒரு முகம்

கலகலக்க வைப்பாள்
என்பாள் என் பள்ளித் தோழி
என்னைப்பற்றி!

மைக்கில் மட்டுமே பேசுவாள்
மனிதர்களோடு பேசமாட்டாள்
என்பாள் என் அலுவலகத்தோழி
என்னைப்பற்றி

எப்போதாவதுதான் சிரிப்பாள்
சண்டைகாரியும் இல்லை
வம்புக்காரியும் இல்லை
என்பாள் என் பக்கத்து வீட்டுக்காரி
என்னைப்பற்றி

எதுக்கெடுத்தாலும் அடம் செய்வாள்
சமாதானக்காரி இல்லை
என்பாள் என் அம்மா
என்னைப்பற்றி

எதுவும் சொல்லமாட்டாள்
எதற்கும் ஒரு புன்சிரிப்போடு பேசுவாள்
அழுத்தக்காரி என்பாள்
என் மாமியார்
என்னைப்பற்றி

தடாலடியாக முடிவெடுப்பாள்
வேகமாக வேலை செய்வாள்
எப்போதும் கோபக்காரிதான்
என்பார் என் கணவர்
என்னைப்பற்றி

பேசுவாள் சிரிப்பாள்
சொல்லிக்கொடுப்பாள்
நட்பு காட்டுவாள்
அன்புமுகம்
தேவதை மாதிரி
என்பாள் என் மகள்
என்னைப்பற்றி
******************************************************************

Monday, June 30, 2014

கொடுமைகள்

இவர்கள்
அவர்களைக்
கொடுமைப்படுத்தினார்கள்

அவர்கள்
இவர்களைக்
கொடுமைப்படுத்தினார்கள்

நடுவில் நின்று கொண்டிருந்த
எவர்களோவையும் சேர்த்துக்
கொடுமைப்படுத்துகிறார்கள்
*********************************************

Sunday, June 29, 2014

எப்படி வாழ்வது?

இந்த உலகில்
எப்படி வாழ்வதென்று தெரியவில்லை

உண்மையையே சொன்னால்
பெரிய அரிச்சந்திர மகாராஜா என்கிறார்கள்

தர்மப்படி நடந்தால்
மனுநீதிச் சோழனோ என்று இடிக்கிறார்கள்

மனிதநேயமாய் இருந்தால்
காந்திதான் என்று
இளக்காரமாய்ப் பார்க்கிறார்கள்

துணிவாகப் பேசினால்
பகத்சிங் னு நினைப்பு
என்று முணுமுணுக்கிறார்கள்

கவிதையை ரசித்து
எழுதிப்படித்தால் கூட
பாரதியாராக்கும் என்று
ஏளனச்சொல் சொல்கிறார்கள்

நான்
 எப்படி இருக்க வேண்டுமென்று
இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்
என்று தெரியவில்லை

ஒன்று மட்டும் புரிந்தது
நான் எப்படி இருந்தாலும்
ஏதாவது பேசுவார்கள் போலும்

*****************************************************************

Saturday, June 28, 2014

குழந்தையின் துணை

தொலைக்காட்சிப் பெட்டியின்
துணையுடன் தூங்குகிறது குழந்தை
அரட்டை அடிக்க
ஆள் தேடப் போன ஆயா வராமல்!

இருவரும் சம்பாதித்தாலும்
சொந்த வீட்டுக்கனவு
நிறைவேறாத ஆசையில்
அலைக்கழியும் அப்பா!

வீட்டு வேலையும் பார்த்து
அலுவலகத் தூசுகளையும் தட்டி
குழந்தை தூக்கும் கையில்
கோப்புகள் தூக்கும் அம்மா!

வயதாகிவிட்டதால்
எந்த வேலையும் செய்யக்கூடாதென
சட்டம் வகுத்துக் கொண்ட பாட்டி!

நடந்த பாதை
மிதித்த சைக்கிள்
படித்த பாடம்
கிடைத்த வேலை பற்றி
வீதிதோறும் சொல்லி வரும் தாத்தா!

எல்லோரும் இருந்தும்
தொலைக்காட்சிப் பெட்டியின்
துணையுடன்
தூங்குகிறது குழந்தை!

Wednesday, June 25, 2014

பறவையாக ஆசை....

பறவைகளிடத்தில்
அடுத்த வீட்டைக் கண்டு
பொறாமை கொள்ளும்
வன்மையில்லை

பறவைகளிடத்தில்
சேமநலநிதிக் கடன் பெற்று
செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை

அலுவலகக் கட்டிடத்துள்
நுழையுமுன்பு
சூடு, சுரணை, மானம்
ஒதுக்கி வைத்து
உதடு கழிக்கச் சிரித்து
மேலதிகாரியிடம்
பணம் கொடுத்துப் பின்
பதுங்கும் ஒப்பனை இல்லை

குறிப்பாக
வீட்டுகடன் வாங்க
எழுபது கையெழுத்துக்களை
எல்.ஐ.சி. க்குத் தரவேண்டியதில்லை

டப்பாவில்
 சோறை அடைத்துக் கொண்டு
பேருந்தில் பயணித்து
இடி வாங்கி இடி தாங்கி
வேலைக்குப் போக வேண்டுமெனக்
கட்டாயம் இல்லை

பெற்றோர்ஆசிரியர் கழகத் தலைவரிடம்
வழிய வேண்டியதில்லை

பள்ளிக்கூட
வங்கிக்கணக்குப் புத்தகத்தில்
அவரின் புகைப்படத்தை
பக்கத்தில் ஒட்டவேண்டிய
அபத்தம் இல்லை

யார் கையெழுத்துக்காகவும்
மணிக்கணக்கில்
காத்திருக்கத் தேவையில்லை

சமைக்க வேண்டியதில்லை
துவைக்க வேண்டியதில்லை
பாத்திரம் கழுவ வேண்டியதில்லை

வெள்ளி செவ்வாயில்
விளக்கு விளக்க வேண்டியதில்லை
வீடு துடைக்க வேண்டியதில்லை

நியாயவிலைக் கடைகளில்
பருப்புக்காக நீண்ட வரிசையில்
நிற்க வேண்டியதில்லை

எத்தனையோ தேவையின்மைகள்
ம்....ம்...ம்....
அதிஷ்டக்காரப் பறவைகள்
***********************************************************

Monday, June 23, 2014

யாமிருக்க பயமேன்

விடுமுறை வந்தாலோ
விருந்தாளிகள் பயம்

வெளியே செல்லலாம் என்றாலோ
கொள்ளையர்கள் பயம்

வீட்டுக்குள் கிடக்க எண்ணினால்
பூகம்ப பயம்

வீதிக்கு வந்தாலோ
விபத்துக்கள் பயம்

கொல்லைக்கு போனால் கூட
கற்பழிப்பு பயம்

ஆனாலும்
சிரிக்கிறார்
முருகன் சாமி
யாமிருக்க பயமேன் என்றபடி!
*****************************************************************

Sunday, June 22, 2014

மேலும் கீழும்

எங்கெங்கும் வாக்கு வாதங்கள்!
எப்போதும் சண்டைகள்!
எதற்கென்று தெரியாமலே!

கீழே உள்ளவர்கள்
தாம் தான் மேலே
வந்திருக்க வேண்டும் என்பர்
மேலே உள்ளவர்கள்
தாம் தான் ஒழுக்க சீலர் என்பர்

ஆனால்
யாரும் யாருக்கும்
மேலும் இல்லை
கீழும் இல்லை

ஆனாலும்
விவாதங்கள் பிடிவாதங்கள்
கோபங்கள், குமுறல்கள்
தொடரும்....தொடரும்...
என்றும்
எங்கெங்கும்
*********************************************************

Saturday, June 21, 2014

குழந்தையின் குரல்

எப்போதும் ஏதேனும்
ஒரு புழுக்கத்துள்
புதைந்து போகும் மனசு

வாழ நினைக்கிறது

வாடி அழுகிறது
ஒன்றில்லாவிடில்
மற்றொன்றிலிருந்து

எங்கிருந்தாவது
குத்தப்பட்டுவிடுகிறது
ஈட்டிகள், ஊசிகள்
வேல்கள், ஆணிகள்
அரூபமான ஆயுதங்கள்
வெளிப்படையாய்த் தெரியாத
பனிப்போர்கள்

மனம் ஒடுங்கி
என்ன வாழ்வு இது
என்ன பிறப்பு இடு
என்ன நடப்பு இது
என்ன நட்பு இது

எல்லாம் வெறுத்து
சூழல் மறந்து
சுற்றம் மறந்து
சுகம் மறந்து

இறப்பை நோக்கி
இதயம் எழுகையில்
அம்மா என்கிறாள்
குழந்தை

இறப்பு மறந்து
வஞ்சம் மறந்து
மாயச் சூழல் மறந்து

மீண்டும்....மீண்டும்...
மீண்டு
வாழத்துடிக்கிறது
மனசு
******************************************************

Friday, June 20, 2014

பூமிப்பந்து...பூப்பந்து

பெளர்ணமி புறப்படப்போகிறது
ஆயத்தமாய் இரு!

உறவுக்கூண்டை விடுத்து
வீதிக்கு வந்து
கவிதைகளால்
பொங்கல் வை!

அழுக்கை பொசுக்கு
பொறாமை கருக்கு

எல்லா நீர் நிலைகளையும் ரசி
அழுக்கு குளமாயினும்
அதன் அழகை நின்று புசி

ஆடுகள் மேய்வதும்
மாடுகள் அசைவதும்
கவிதைதான்

கண்களால்
யாகம் நடத்து

புல்வெளியெல்லாம்
 உன்
பெயர் சொல்லட்டும்

வீசும் தென்றலுக்கு
மேனியைத் தியாகம் செய்

காற்றில் அசையும் மரங்களுக்கு
இசை சொல்லிக்கொடு

ஊமத்தம் பூவுக்கும்
உன்னதம் உண்டு

பூமிக்குச் சொல்லிக்கொடு
பூக்களின் புகழை

வெயில் தாங்கு
வியர்வை வாங்கு

துன்பத்தை
 துவைத்துப் போடு

இன்பத்தை
இரவலாவது வாங்கு

உழைப்பு செய்
களைப்பு தவிர்

இப்போது பார்
பூமி ஓர்
உல்லாசப் பூப்பந்து

Wednesday, June 18, 2014

பெண் சிசுக் கொலை விடுதி

இனி
பெண்சிசுக்கொலையை
ஆதரியுங்கள் அரசே!

காந்தியே சொல்கிறார்
கருணைக்கொலை
கட்டாயம் தேவை என்று!

இதுவும் ஒரு
கருணைக் கொலைதான்

காமூகனிடமிருந்து மீண்டு
சமூகத்திலிருந்து மீண்டு
எத்தனையோ
அக்கினிகளுக்கு இடையில்
அடுக்கி வைப்பதை விட
பிறந்ததும் கொல்வது ஒன்றும்
பேதமை இல்லை!

அரசு நியாய விலைக்கடை போலவே
அரசு மதுபானக்கடை போலவே’
அரசு மாப்பிள்ளைக் கடை திறங்கள்

அல்லது
சிசுக் கொலை விடுதி நடத்தி
வேதனையைக் கடத்துங்கள்
*******************************************

மன ஆராய்ச்சி

எங்கு நோக்கினும்
புகார் பெட்டிகள்

எந்த இடத்திலும்
சாக்கடைகள்

எல்லாவீடுகளிலும்
இரட்டைப் பூட்டுகள்

வார்டு வாரியான
காவல் நிலையங்கள்

வட்ட வாரியான
நீதி மன்றங்கள்

விண்வெளி ஆராய்ச்சி
 வெற்றி
சரிதான்

மன ஆராய்ச்சி?!?!