Showing posts with label அனுபவங்கள். Show all posts
Showing posts with label அனுபவங்கள். Show all posts

Tuesday, December 8, 2015

இது கட்டுரை அல்ல....கண்ணீர்

* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து விட்டு போகவும் என்று கத்திக் கொண்டே தான் சென்றனர்.

* அவர்களே மிகத் துரிதமாகத்தான் கத்திக்கொண்டு சென்றனர். தீபாவளியை ஒட்டி வந்த மழையில் எல்லோர் வீட்டிலும் மூன்றடித் தண்ணீர்.எனவே, காவல் துறையினர் அறிவிப்பு செய்தும் சில பொருட்களைப் பரணில் பத்திரப்படுத்தி விட்டு படுக்கச் சென்று விட்டனர். அறிவிப்பு செய்த போது மணி 11.30..மூன்று நாட்களாய் ஒரு விநாடி கூட நிற்காத மழை. சாலையில் முழங்கால் அளவுக்குத் தான் தண்ணீர்.

அரைமணி நேரத்தில் மழை கட்டிலைத் தாண்ட சில குடும்பங்களில் லாப்டில் ஏறி அமர்ந்துள்ளனர். ஆனால் அடுத்த இருபது நிமிடத்தில் மேற்கூரையைத் தாண்டி விட்டது நீர்.வெளியேயும் வர இயலாமல் அப்படியே சில குடும்பங்களோடு இறந்து கிடந்தது எல்லோர் மனதையும் குலைத்தது.

புதிதாய் மராமத்து பணி செய்யப்பட்ட வீடு. தன் சேமநலநிதிக் கணக்கு மற்றும் வீட்டுக்கடன் பெற்று கட்டிய வீடு 20 ஆண்டுக்கடனில் 5 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருக்க , கட்டுமானப் பணியில் என்ன கோளாறு என்று அறியாமலேயே குடும்பத்தோடு இடித்துத் தள்ளிக் கொண்டே போய்விட்டது.

அறிவிப்பு  வந்த நேரத்தில் ஒரு சில கடைகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ( இரவு 2 மணிக்குப் போனாலும் எல்லா சாலைகளிலும் வாகனங்களும் மனிதர்களும் நகர்ந்த வண்ணமிருப்பர்.) முன்பே மழை மூன்றடிக்கு வந்து போயிருந்ததால் அவர்கள் இந்த அறிவிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

சர சர வென்று நீர்மட்டம் ஒரு பேய் வேகத்தில் உயர, திறந்திருந்த கடைகள் மட்டுமல்ல சாலைகளில் பயணித்தோர் அனைவரும் நீரோடு போராட முடியாமல், போய்ச் சேர்ந்தனர்.

இருசக்கரவாகனங்கள், கார்கள், லாரிகள், வேன்கள், பஸ்கள், என்று அனைத்து வகை வாகனங்களும் உருட்டிக் கிடந்தது.

சைதாப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு கணினியாளர் அன்று வேலை இருந்ததால் திடீரென்று அறிவிப்பும் அதைத் தொடர்ந்து கூச்சல், எல்லாம் கேட்க மாடியில் நின்று பார்த்தவர் உறைந்து போயிருக்கிறார். தன் கண்ணால் மரணங்களின் தொகுப்பைப் பார்த்து இன்னும் எந்த மிரள்வில் இருந்து மீளாமல் காணப்படுகிறார்.

மாணவர்களுக்கு தண்ணீரின் அடர்த்தி பற்றி வேகம் பற்றி கற்பிக்க ஒரு பவுடர் டப்பாவில் மூன்று துளையிட்டு அதில் அடியில் இருக்கும் துளையில் தண்ணீர் அதிகமாக வருவதைச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று வகுப்பெல்லாம் தண்ணீராக்க்கி, ஆயாம்மாவிடம் கொஞ்சம் முனகல் பெற்று, ஆனாலும் விடாமல் அவர்களை தண்ணீர் ஊற்ற சொல்லிகிறேன் என்று நானே ஊற்றி ஊற்றி விளையாடி இருக்கிறேன். நீரின் வேகமும் அடர்த்தியும் இவ்வளவே நான் அறிந்தது. ஆனால் இழுத்துக் கொண்டு போன பலரை நேரில் பார்த்ததும் இன்னும் ரீங்கரிக்கிறது பயத்தின் அலறலும், உயிரின் பீதியும், கடைசியாய்க் கத்திய மரணவலியும்.

மண்டபங்களில், பள்ளிகளில், பாதுகாப்பில் உள்ளோர் எண்ணிக்கையும் மரணத்தைத் தழுவியோர் எண்ணிக்கையும் குறைவாகத்தான் வெளியிடப்படுகிறது. ஏனெனில் உண்மைக் கணக்கு யாருக்குத் தெரியும்,,(அந்தந்த பகுதியில் பார்த்தவர்கள் தான் சாட்சி)

இடுப்பு அளவையும் தாண்டி தண்ணீர் உள்ளே வந்ததால் இனி ஆபத்து நேரலாம் என்று உணர்ந்த ஒரு சகோதரி, தன் மகனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு(மூன்றாம் வகுப்பு) மற்றொரு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் சற்று பெரியவள் என்பதால் தனியே நடக்கவிட்டுக் கூட்டி வர தன் மகள் தண்ணீருக்குள் கரைவதைப் பார்த்த பின்னும் தன் மகளை இழுக்கப் போனால் கையில் இருக்கும் குழந்தையும் சிறுவனையும் கூட இழக்க நேரிடும் என்று உணர்ந்து இவர்களைக் காப்பாற்றி விட்டு தன் மகளின் சடலமாவது கிடைக்குமா என்று என்று கதறிய காட்சியைப் பார்த்த போது என் இதயம் சுக்கு நூறாகி வெடிக்கும் ஓசையை நானே கேட்டேன்,

அறிவிப்பு வந்தபின் சாப்பிட்டு விட்டு நிதானமாக கிளம்ப கொஞ்சம் துணிகள், உணவுப் பொருளுடன் கிளம்பிய குடும்பம் மொத்தமும் அடித்துச் செல்லப்பட்டனர்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் சுற்றிலும் நீர் என்பதால் வெளியே வர இயலவில்லை. மின்சாரம் இல்லை. எனவே சுற்றி தண்ணீர் இருந்தும் குடிக்கத் தண்ணீர் இல்லை.

கழிப்பறை வசதி இல்லாததால் உணவு உண்டால் தான் அந்தத் தொல்லை என்றே உணவே எடுத்துக் கொள்ளாமல் காலம் தள்ள முயற்சித்தோம்

ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்த்து சாப்பிடு என்று சொன்னது போக , கொஞ்சம் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய் மா என்று சொல்ல ஆரம்பித்தோம்.

திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் தான். ஆனால் ஆறு நாட்களும் நரகவேதனையில் 600 ஆண்டுகள் போல் நீண்டது

முதல் தளத்தில் இருப்போர் கீழ்த்தளம் வரைதான் தண்ணீர் வரும் என்றும் மேலே வரை எட்ட வாய்ப்பே இல்லை என்று எண்ணிய எண்ணத்தில் விழுந்தது நீர்

மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் நான்காம் நாள் மின்சாரம் வந்து விடக்கூடாது என்றே பயந்தோம். வந்தால், பூட்டப்பட்ட வீடுகளின் வழியாகவும் நீரால் சூழப்பட்டு உள்ளேயே இறந்து கிடந்தோரின் வீட்டின் மூலமாகவும் பல பகுதிகளில் மின்சாரம் வந்தால் தண்ணீர் வெளியேறாத நிலையில் தாக்கப்படுவோம் என்றே பயந்தோம். அதற்கு இருட்டு வாழ்வே தேவலாம் என்று தோன்றியது.(திங்கள் முதல் சனி வரை மின் இணைப்பும் வழங்கப்படவில்லை)

கீழ்தளத்தில் சிலர் வண்டியை வைத்துப் பூட்டி சென்றிருந்தாலும் அது அடித்துச் செல்லப்பட்டு எங்கு போனதென்ற சுவடே தெரியவில்லை.

அடித்து வரப்பட்ட இருசக்கர வாகனங்கள் பல இடங்களில் தேங்கிக் கிடந்தன. ஆனால், அவைகளை சுமந்தவர்களை,??

வீட்டுக்குள் சுழற்றி அடித்த்  தண்ணீர் அதுவாகவே பீரோவைத் திறக்க வைத்து, மிக்ஸி, கிரைண்டர், அடுப்பு சிலிண்டர், வாஷிங் மிசின்,பிரிட்ஜ் என்று அனைத்துப் போருட்களையும் சேதப்படுத்தி அல்லது அதனையும் அடித்துச் சென்றிருந்தது.

நான்கு நாட்கள் கழித்து வீடு பார்க்கும் போது மாநாகராட்சிக் கழிப்பரையைவிட அலங்கோலமாகக் கிடந்தது.

இன்னும் மேல் மாடி வரை எட்டியத் தண்ணீரின் அதிசயத்தை பே

சிப் பேசி மாளவில்லை. மேல் தளத்திலும் 5 அடிக்குத் தண்ணீர்

சுதாரித்தோர், மொட்டை மாடிக்கு சென்று நடுங்கும் குளிரில், மழையில் நனைந்து கொண்டே இருந்ததால் மொட்டை மாடிகளிலும் பிணங்களின் குவியல்கள்

சர சரவென இடிந்த வீடுகளை வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே வந்த நிமிடத்தில் தண்ணீரால் இழுக்கடிக்கப்பட்டு மரணித்தனர்

சென்னையின் பிரதான் சாலைகள் அனைத்திலும் தண்ணீர்..( அளவின் விகிதம் தான் கூடியதும் குறைவானதாகவும் இருந்ததே யன்றி எங்கும் நீரால் சூழ்ந்தது உலகு

தீபாவளியை ஒட்டி வந்த மழையில் இடுப்பளவு மட்டுமே வீட்டுக்குள் புகுந்த்தால், பலர் வீட்டைவிட்டு போகாததாலும் இறந்தனர்

கழிப்பறை அளவு உள்ள இடத்தையும் வீணாக்காமல் வீட்டாய் மாற்றி வாடகை பெற்ற சென்னை இன்று மொத்தமாகவே கழிப்பறை ஆனது

சாலைகள் அனைத்தும் ஆங்காங்கே பிளவு பட்டு கார் முங்கும் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டதால் மறுநாள் வந்த கார்கள் மூழ்க சில சாலைகள் மூடப்பட்டு போக்குவ்ரத்தை தடை செய்து உத்தரவு போட்டிருந்தனர்.

சென்னையின் மழை தாக்கத்தை மீம்ஸ் ஆக்கி மகிழ்ந்தோருக்கு உணமையில் மழையின் இறப்பு சதவீதமும் இழப்பு சதவீதமும் தெரியவில்லை

எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர்தான். தனது ஊதியத்தில் வாங்கிய பொருட்கள் தான் அவ்வளவும். இனி அடுப்பிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் ஆரம்பிக்க வேண்டும். பாத்திரங்கள், சமையல் பொருட்கள், படுக்க, இருக்க என்று ஒவ்வொரு பொருளும் இனி வாங்கிச் சேர்த்துவிடலாம். ஆனால் இந்த மனபாரத்தைத் தான் எப்படித் தாங்குவது எனத் தெரியவில்லை

அப்பா, அம்மாவை விட்டு இங்கே வேலை பார்த்தவர்கள், மனிவியை விட்டுப் பிரிந்து இருப்போர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பிரிந்து வந்தோர் தான் பெரும்பாலும். ஆனால் யாரும் யாருடனும் தொடர்பு கொள்ள இயலாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற தகவலுக்குக் கூட தொலைபேசிக்கு மின்சாரம் இல்லை. நெட்வொர்க்கும் இல்லை.

வெளியூரிலிருந்து பால் பிஸ்கட், பிரட் போன்ற பொருட்கள் மக்கள் தங்கியிருந்த  பள்ளிகள், மண்டபங்களை எட்டினாலும் பாதிப்பே இல்லாதோர் தான் முண்டி அடித்துக் கொண்டு வாங்கினர்.

இதிலும் வியாபாரம் பார்க்க நினைத்த சிலர் அந்தப் பொருட்களையும் வாங்கி விற்றனர்.

ஒண்ணாம் தேதியே மழை பெய்ததால் ஊதியத்தை ஏடிஎம் லிருந்து நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்த பணத்தையும் செலவு செய்து விட பாங்குகளில் எல்லாம் தண்ணீர் சூழ எந்த வங்கிகளும் இயங்கவில்லை. ஏடிஎம்மில் பணமும் எடுக்க இயலவில்லை. இதனால் அட்டைகளில் பணம் இருந்தும் எடுக்க இயலாத கொடுமையும் நேர்ந்தது

இரவு இரண்டு மணியானாலும் காலை நான்கு மணியானாலும் போக்குவரத்து வாகனங்களாலும் மக்களாலும் தூங்காமல் விழித்திருக்கும் சென்னையில் அனைத்துக் கடைகளும் மூடியே கிடந்தன. வியாபாரிகள் பாடு கொண்டாட்டமாகவும் மக்கள் பாடு திண்டாட்டமாகவும் இருந்தது

எங்கும் போக இயலவில்லை. எல்லாவற்றுக்கும் விலை வைத்தார்கள்.

பால் 200 கத்தரி 200 மற்ற பொருட்கள் அதன் மடங்குகளில்

சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் குறைந்ததும் நாங்கள் கேட்ட ஒலி எல்லாம் ஹெலிக்காப்டர் சத்தமும், ஆம்புலன்ஸ் சத்தமும்

வேளச்சேரி பகுதியின் ஹவுசிங் யூனிட், கல்கி நகர், ராஜலட்சுமி நகர், விஜய நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, தண்டீஸ்வரம் நகர் தான் மற்ற பகுதிகளை விட பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது

அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் இரண்டு நிமிட நடையில் எட்டும் தூரம் எல்லாம் 6 மணி நேரம் பிடித்தது. வெளியில் போனால் உயிரோடு மீண்டும் வீட்டுக்குள் வருவோம் என்ற உத்திரவாதமே இல்லை

மண்டபத்தில் உணவு வழங்குகிறோம் என்ற போர்வையில் பெண்கள் கையைத் தடவி, வருடி, உணவு வழங்கிக் கொண்டது சில மனித மிருகங்கள்

சில இடங்களில் தங்கும் போது மோசமாக நடந்து கொண்டிருக்கின்றனர்

வெளியூரிலிருந்து வந்த பொருட்களை வியாபாரிகள் பிடிங்கி விலை வைத்து விற்றனர்.

பிஸ்கட், பால், பிரட் என்று என்ன பொருட்கள் வழங்கினாலும் போட்டோ எடுத்துக் கொண்டனர் கொடுத்தவர்கள், அதில் அழகாய் இருப்பவர்கள் புறக்கனிக்கப்பட்டனர். அவர்களுக்கு சோக எஃபக்ட் பத்தலையாம்

பலரின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளிருப்போர்களை மீட்ட கொடுமையும் நடந்தது.

அனைத்து இடங்களிலும் கழிவுநீர் பாதாள சாக்கடைகள் மூடி தானே திறக்கப்பட்டு இரண்டும் ஒன்றாகக் கலந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது

இவ்வளவு அழிவுகளைத் தந்த நீர் தனக்காக காவுகளை எடுத்துக் கொண்ட நேரம் அரை மணி நேரம் தான்

முதல் நாள் முதல் தளம் வரை எட்டிய நீர் இரண்டு நாட்கள் கழித்து தான் சாலையில் இடுப்பளவில் நடக்கும் அளவில் குறைந்தது

சாலையோரங்களில் மிக உயர்ந்த மரஙகளில் எல்லாம் முதல் நாள் அடித்துக் கொண்டு போன பாலிதீன்கவர்கள் தொங்கியது

ஒரு மனநல்ம் குன்றியோர் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், டோனர்கள் கொடுத்த பணம், மளிகைப் பொருட்கள், அக்குழந்தைகளுக்குப் பயன்படுத்தப் பட்ட வேன் எல்லாம் எல்லாம் ஒட்டு மொத்தமாக அழிந்தது

எல்லோருடைய வீட்டிலும் பள்ளிப் புத்தகங்கள் நீரோடு போய் விட்டது

இப்போது எங்கள் வீடுகளில் அடுப்பு,  மற்ற் சமையல் உதவி சாதனங்கள், மளிகைப் பொருட்கள் என்று எதுவும் இல்லை

இதில் நான் குறிப்பிட்டுருப்பது 0.000000000001 சதவீதம் கூட முழுமையாய் சொல்லவில்லை.

இன்னமும் மழைநீர் சூழ்ந்து வீடுகள் நிறைய இருக்கின்றன். உணவு பால் பொருட்கள் இல்லாமல் மின் இணைப்பும் இல்லாமல் என்ன செய்ய இயலும்?

இன்னும் முழுமையாக நீர் வடியாததால் எங்கே ம்ன் கம்பிகள் ஷாக் அடிக்குமோ என்று பயந்து ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் விடப்படுகிறது

இன்னும் பெரும்பான்மையான் கடைகள் திறக்கப்படவில்லை. காரணம் உள்ளே இருந்த பொருட்கள் இனி விற்பனைக்குகந்தவையாக இருக்காது

இப்போது பலரின் மனது உதவியை விட ஆறுதலைத்தான் எதிர் பார்கிறது

அன்பான வார்த்தைகளால் இழந்த பொருட்களை மீட்டெடுப்போம் என்று நான் நம்புகிறேன்

ஆனால் உயிர்கள்???

அதே போல் இதைச் சாக்கிட்டு பெண்களைத் தவறான முறையில் அணுகியோர்கள் அழுகிச் சாக வேண்டும் என்று சாபமிட்டாலும் இறைவா அவர்களுக்கு நல்ல மனதைத் தா என்று வேண்டுகிறேன்

இனி வரும் ஊதியத்தில் ஒவ்வொன்றாய் வாங்கலாம். பிறக்கும் போதே எல்லாம் கொண்டா வந்தோம்??????







Monday, November 30, 2015

இதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)

குழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை விட்டு தலை நகரம் நோக்கி நகர்ந்திருக்கிறேன்..

மாறுதல் கிடைக்க வில்லை ( கிடைக்கவே கிடைக்காது) என்பதால் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறேன்.

ஒருநாள் அல்லது இருநாட்கள் மட்டுமே புதுகையில் என்பதால், புதுகை செல்வது தான் எனது பயணக் கட்டுரை..( வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் எழுத வேண்டுமா என்ன? என் நாடு புதுகை தான்...)(இம்முறை திங்கள் முதல் சனி வரை)

இதனை வருத்தங்கள், ஏக்கங்கள்,பெருமைகள், வேலைகள், பார்வைகள், செய்திகள் என்ற உணர்வுகளில்...வரிசையாக...அல்லது வரிசையற்று..

வருத்தங்கள்
**************
1.புவனேஸ்வரி கோயில், புதுக்குளம், பிரகதம்பாள் கோயில், நார்த்தாமலை, குமரமலை, போக நினைத்தேன்...போகவில்லை.

2.புதுக்குளக்கரையில் தனிமையில் அமர்வது மிகவும் பிடிக்கும்..ஆனால் நேரம் ஒதுக்க இயலவில்லை.

3,பெரியார் நகர் பூங்காவில் அமரவும், ஆரோக்கியசாமி அம்மாவிடம் பேசவும் நினைத்தேன்.

4. வாணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது . பார்க்க வில்லை.

5. கார்த்திகை தீபம் அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மேன்மைமிகு சரஸ்வதி ராமநாதன் அம்மா தலைமையில் பட்டி மன்றம் சென்று விட்டதால் உள்ளூரில் முருகன் கோயில்களுக்குச் சென்று சொக்கப்பனை பார்க்க இயலவில்லை.( கோயில்கள் செல்லவில்லை என்று நான் எழுதுவதைப் பார்த்து நான் மிகப் பெரிய பக்திமான் என்று என்னை நினைத்து விடாதீர்கள்..தயவு செய்து)

6. எனக்கு தினமும் சிகப்பு ரோஜாக்களைத் தரும் சீதா அக்காவை ( உடல்நல குறைவாய் இருக்கிறார்) பார்க்கவில்லை.

7.நீலா,குணா,வசந்தி,வளர்மதி,ரேவதி,அருணா,டயனா,தேவகி,பாத்திமா,பஷீரா,நிஷா ஆகியோர்களைப் பார்க்கவில்லை

8. சேமநலநிதிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும்..இயலவில்லை. அரியர் ஒன்று மூன்று வருடங்களாய் கிடப்பில் இருக்கிறது.அதற்கான ஏற்பாடுகள் செய்ய இயலவில்லை.

ஒரு வாரம் இருந்தும் பள்ளி சென்று மீதமான நேரத்தில் நிறைய பணிகள் இருந்ததால் என் பயணத்திட்டத்தில் இவையெல்லாம் இருந்தும் என்னால் செயல் படுத்த இயலவில்லை.

இன்னொரு வருத்தமும், பார்த்த எல்லோரும் கொஞ்சம் குண்டாகி வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

பெருமைகள்
*****************
1. ஒரு பட்டிமன்றம் பேசி விட்டேன்

2. த.மு.எ.க.ச. திருக்கோகர்ணம் கிளை கூட்டம் நடத்தி விட்டேன்..

3.பள்ளியில் குழந்தைகள் தின விழா நடத்தி விட்டேன்.

4, ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தி விட்டேன்

5. பள்ளிக்கு எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரையும் பள்ளிக் கருத்தாய்வாளர்களையும் வரச்சொ ல்லி ஒரு சிறிய பெற்றோர் சங்கக் கூட்டம் நடத்தி விட்டேன்

6. பசுமைப் படைக்கு தாவரங்கள் சிலவற்றை ஊருக்குள் நட்டு (வேப்பம் கன்றுகள்) அதனை பராமரிக்க ஆட்கள் நியமித்து விட்டேன்.

7. நான் வரும் சனிக்கிழமை( கிளம்பும் நாள்) என் மாணவர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற தலைப்பில் என்னை மகிழ்விப்பதாய் நினைத்து தங்கள் தனித்திறமைகளைக் காட்டி அவர்களே திறம்பட ஏற்பாடு செய்து நடத்தினார்கள்..( என் பிள்ளைகளை நான் நல்லா வளர்த்திருக்கே ன்னு உணர்ந்த தருணம் அது..என் பிள்ளைகள் என்று நான் சொன்னது என் மாணவர்களை)( இந்த அன்புக்கு நான் இன்னும் இரண்டு ஜென்மங்கள் எடுத்து நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்)

8. கண்ணதாசன் விழாவிற்கு சென்று கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் பேச்சையும் திரு முத்துநிலவன் அவர்களின் பேச்சையும் கேட்டு வந்தேன்..(கிளம்பும் போது..அங்கிருந்து அப்படியே பேருந்து ஏறிவிட்டேன்)விழாவில் முபா,கஸ்தூரிநாதன்,கஸ்தூரிரெங்கன்,முருகபாரதி,பொன்க,திருப்பதி,குருநாதசுந்தரம்,முத்துசீனிவாசன்,சம்பத்குமார்,பாரதி,இளங்கோ எல்லோரையும் பார்த்தேன்..( எல்லாப் பெயர்களுக்கு முன்னால் திருவும் பின்னால் அவர்களும் போட்டுப் படிக்குமாறு வேண்டுகிறென்)

அன்புகள்...ஆதரவுகள்..நெகிழ்வுகள்
***********************************

1. என் மாணவர்கள் என்னைச் சுற்றி நின்று கொண்டே இருந்தனர். ( வகுப்பறை சத்தமாகவே இருந்தது..ஆனால் நான் ரசித்தேன்.நேசித்தேன்.

2. வாயே திறக்காத முத்து, நல்லாருக்கியாப்பா, எப்போ வந்த, எப்போ போறே, இனி எப்ப வ்ருவ? என்று 4 கேள்விகள் கேட்டுவிட்டான்..(பள்ளித் தோழன்)

3. நான் இங்கே இருந்ததை விடவும் அதிக நட்பையும் அன்பையும் பெற்றிருக்கிறேன்.

4. முதல் நாள் (திங்கள் கிழமை ) தலைமைஆசிரியர் கூட்டத்தில், ஆறு கூட்டங்களாக வராதது கண்டு அனைவரும் நலம் விசாரித்தனர். சென்னையில் வெள்ளம் பற்றி கேட்டறிந்தனர்.

5. நான் புதுகையில் இருக்கும் போது என்னைக் கண்டு கொள்ளாதவர்கள் எல்லாம் வாகனங்களை  நிறுத்தி நலம் விசாரித்தனர்.(நான் தான் உயிர் என்று வசனம் பேசியவர்கள் வாய் திறக்கவில்லை)

6. வேளச்சேரியில் வெள்ளம் பற்றி கேட்டறிந்து கொண்டனர். மீனா, வத்சலா, குழுவினர்

7. எதிரில் நடந்து போனாலும் கண்டு கொள்ளாத கதிரேசன் தன் மனைவியோடு பள்ளிக்கு வந்து பார்த்துச் சென்றான்...

8. நலமா சுவாதி என்ற விசாரிப்பில் ஸ்டாலின் குரலில் அவ்வளவு அன்பு(உணர்ந்தேன்.உணர்ந்தேன்)

9. இம்முறை தொலைபேசியில் பேசியதை விட அதிகம் பேசினார் தோழர் மதியழகன்

10. சக்ஸஸ் புத்தகக் கடையும் எஸ்.பி.எம் புத்தகக் கடையும் சென்றதில் விசாரிப்புகள். ( இங்கே தான் புத்தகங்கள் வாங்க வேண்டுமாம்..தொலைபேசியில் சொல்லச் சொன்னார்கள்)

11. முருகேசன்,வசந்த்,காளியப்பன்,இசாக்,இஸ்மாயில் ( என் வகுப்புத் தோழர்கள் இதில் இருவர் ஆசிரியர்கள் மற்ற மூவரும் மளிகைக் கடை சொந்தமாக வைத்திருக்கிறார்கள்..) புதுகை என்னை மிஸ் செய்வதாகச் சொன்னார்கள்.

12 நண்பன் சுரேஷ், தம்பி சுரேஷ், அண்ணன் சுரேஷ் மூவரையும் பார்த்தேன்..பேசினேன்.(கடைவீதிகளில்)(எங்கள் ஊரில் சுரேஷுகள் அதிகம் என் பள்ளியில் 6 சுரேஷ்)

13. கலா, மீனா, சுந்தரி, பாமா வோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்..( ஒரே சிரிப்பு..( கான்பிரன்ஸ் கால்)

14 சுரேஷ் அதிகமாகவே நலம் விசாரித்து, என் வருங்காலத் திட்டம், வாழ்வியல் சிந்தனை என்று பேசி என்னை மகிழ்வில் ஆழ்த்தினார்( இது வேறு சுரேஷ்...அட நீ இவ்வளவு பேசுவியா சுரேஷ்????)

15. இப்போது என்னும் அதிகமாக நெருக்கத்தையும் அன்பையும் உணர்கிறேன்.

எஸ்.இளங்கோ சார் புதுகையில் நான் வராத வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறியதோடு, அவரின் சில கருத்துக்கள், ஆதங்கங்கள் ஆகியவற்றை சொன்னார். (நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட நட்புரை)

16. பேரா,மாதவன், நிறைய பேசினார் பல செய்திகளை, நினைவுகளை, பகிர்ந்து கொண்டார்.. ( இப்போது அவர் வீட்டருகே அல்லவா?)

17. நிர்வாக ரீதியாக அருள் அண்ணாவுடன் ஒன்றரை மணிநேரம் பேசினேன்..(அதில் கொஞ்சம் என் குடும்பம் பற்றியும்)(எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்

18.தொலைபேசியில் ஏற்கனவே என் தன் விருப்ப ஓய்வு பற்றி விவாதித்த திரு கவிஞர் தங்கம்மூர்த்தி நேரிலும் மறு ஒளிபரப்பு செய்தார் சற்று கூடுதலான அக்கரையுடனும், அன்புடனும்`

19ஆக்ஸ்போர்டு சுரேஷின் கருத்தும் இதே தான்..(நிறைய பேசினோம்)

20.ஒரு நண்பனின் குறுஞ்செய்தி..பட்டிமன்றம்,பள்ளி, கூட்டம் நடத்தல், கூட்டம் செல்லல், நட்பு வட்டங்கள் சேர்த்தல் என்று எல்லாவகையிலும் மிளிர்ந்தாய் நன்று வாழ்த்துக்கள் என்று இருந்தது..அவனுக்கு நன்றி..

வேலைகள்
*************
என் சொந்த வீடு சென்று பார்த்து வந்தேன்.

2. நான் வளர்ந்த வீட்டையும் பார்த்து வந்தேன்..( அதிக மன பாரத்துடன்..அது விற்கப்பட்டதால் ,கொஞ்சம் கலக்கமானது,சிறிது நேரம் தான்..)

3. நகைக் கடன் வாங்கியிருந்த இரு வேறு வங்கிகளில் கடனின் வட்டியை கணக்கிட்டு வந்திருக்கிறேன்

4. பெரியவள் அவள் ஆசிரியருக்கு கடிதம் வழங்கியிருந்தாள்.( சமர்த்தாகக் அதனை அவர்களிடம் சேர்த்து விட்டேன்...அந்த ஆசிரியரின் கண்களில் சிறு கண்ணீரையும் கண்டேன்..அவருடைய கணவரை அழைத்து சத்தமாகப் படித்துக் காண்பித்தார்...ஒரு ஆசிரியராக நானும் அந்த மகிழ்வை உணர்ந்தேன்)

5. குழந்தைகளுக்கு மணப்பாறை முறுக்கு, மறமடக்கி கடலை, அங்கே இனிப்பகத்தில் இனிப்புகள், அவள் வழக்கமாக சாப்பிடும் காரசேவ் போன்றவை வாங்கிக் கொண்டு, முறுக்கு மாவும் அரைத்து எடுத்து வந்துள்ளேன்,

6. செட்டியார் கடையில் எண்ணெய்க்கு செட்டியார் அய்யா தொலைபேசி செய்திருந்தும் வாங்க நேரம் இல்லை.

7. புதுகையில் அடுப்பு இல்லாததால் காலையில் ஆச்சி கடையில் மாலை நேரம் பிருந்தா,வீரமணி,சங்கர் கபே என்றும் சாப்பிட்டுக் கொண்டேன்

8. வற்புறுத்தி சாப்பிட அழைத்த தோழிகளை மறுதலித்து விட்டேன். என் வீட்டில் அடுப்பு இருக்கும் போது கூப்பிட்டால் அது விருந்தோம்பு. அது இல்லாத நிலையில் என்னைக் கூப்பிடுவதால் அதுக்குப் பேர் (?) அதனால் அவர்கள் அழைப்பை புறக்கணித்தேன்,( என்னை மன்னிப்பார்களாக)


நான் இனி சந்திக்கவே கூடாது என்று நினைத்த இருவரைச் சந்தித்தேன்..அவர்களோடு பேசவும் நேர்ந்தது...(பிரியமாய் பேசுவது போல் நடித்தனர்)(ஒரு ஆண்..ஒரு பெண்)


பின்குறிப்பு:
*************

இதில் புதுகையில் இருந்த போது பலர் பேசாதவர்கள் கண்டு கொள்ளாதவர்கள், மெல்லிய புன்னகை மட்டும் தருவோர்கள் என்று அனைவரும் அடக்கம்..ஆனால், ஒவ்வொருவரின் பேச்சிலும், அன்பை உணர்ந்தேன்...நன்றி .புதுக்கோட்டை...

பெரும்பான்மையானவர்கள் இன்னும் எனக்கு 15 வருடம் சர்வீஸ் இருப்பதால் நான் வி.ஆர்,எஸ் கொடுப்பது வேண்டாம் என்றே சொன்னார்கள். (ஏ.இ.ஒ உள்பட)

அடுத்த முறை என் பயணத்திட்டங்கள் மிகச் சரியாக வடிவமைத்து ஒவ்வொன்றுக்கும் மிகச் சரியான நேரப் பங்கீடு கொடுக்க வேண்டும்..
நேர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்..

I MISS YOU PUDUKKOTTAI

*********************************************************************************











Tuesday, November 17, 2015

மழ...மழ...மழ..மழ...மழேய்...

முதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\ளின் மழை முற்றிலுமாக பயத்தைத் தந்துவிட்டது.

சென்னையின் தனித்தீவாக ஆகிவிட்டது வேளச்சேரி பகுதி..

ஒரு கதையில் படகுக்காரனும் படித்தவனும் பேசுவது மாதிரி..எல்லாம் கற்றதற்கு நிஜம்மாவே நீச்சல் கற்றிருக்கலாம் என்றே தோன்றியது..

நான் பார்த்தவை...

1. கீழ்தளத்தில் இருந்தவர்களும், தரைதளம் மட்டுமே கொண்ட வீட்டுக்காரர்களும் வீட்டுக்குள் தண்ணி போகப் போகிறது என்று தெரிந்ததும் எல்லோரும் மண் மூட்டைகளை விலைக்கு வாங்கினார்கள். அவரவர் பாத்ரூமில் மூட்டைகளைப் போட்டு அடைத்து விட்டு வேறு இடம் சென்றனர்.( கிருமி தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்களாம்)

2. மழை ஊரே வெள்ளம். ஆங்காங்கே நடைபெற்றன.பஜ்ஜி,பக்கோடா விற்பனை..( எங்கேர்ந்து வந்தீங்க? எப்ப சுட்டீங்க?)

3. கடை வைத்திருந்தோர் மூடி விட்டனர். தள்ளு வண்டிகள் , மற்றும் ஒரு டி.வி.எஸ் பிஃப்டி கூட தற்காலிக தேநீர் கடையாக மாறியது.( அட பாருங்கய்யா அங்கயும் ஆண்கள் கொத்தா நின்னு டீ குடிச்சிட்டு, பாரிஸ் கதைகளையும், பிரிட்டன் நடைமுறைகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.)( எப்பவுமே இப்படியா அல்லது இப்படித்தான் எப்பவுமேமா என்பதை என் மூளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.)

4. அந்தத்தந்தப்பகுதியின் கட்சிக்காரர்கள் வந்து இவர்கள் அவர்களைப் பார்த்து அவர்கள் வைத்து விட்டுப் போன லட்சணங்களால் தான் தமிழகமே தடுமாறுகிறது என்று சொல்லி திட்டித் தீர்த்தனர்.`பிறகு வேறு ஒரு பெரிய்ய்ய கட்சி அண்ணாச்சியும் இவர்கள் ஆட்சியில் எல்லாமே இப்படித்தான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டனர். ( கடைசி வரை தண்ணீர் வெளியேற்ற ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய வில்லை)

5. கழிவு நீர் ஊர்தியாளர்கள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மணிநேரம் என்று பேரம் பேசி, தண்ணீர் எடுத்து விட்டனர்.

6. கோயம்பேடு தண்ணீரில் நிரம்பியதால் காய்கறிகறியே கிடைக்காமல் வீட்டில் என்ன இருந்ததோ அதனை சாப்பிட்டு பசி போக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். அசைவர்களுக்கு மீன் கிடைத்தது. ( அவர்களே அவர்களுக்குத் தேவையானதை பிடித்துக் கொண்டனர்.)

7. எங்கள் வீட்டின் முன்பாக காட்சி அளிக்கும் ஏரி.....இந்த வேளச்சேரி ஹவுசிங் யூனிட் பகுதி முழுமையுமே ஏரியின் இடம் தானாம்..( அதான் , பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஏரி...என் இடத்தை எனக்குத் தா என்று கேட்க வந்தது போல் இருந்தது..வெள்ளம்)

8. பிரதான சாலையில் வழக்கமாய் ஒரு தோசை 80 ரூபாய்க்குத் தரும் ஹோட்டல்கள் அன்றைய தினம் 150 ரூபாய் என்றது.( அதனையும் மக்கள் உண்டார்கள்)( வீட்டில் அடுக்களை வரை தண்ணீர் புகுந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதனையும் புசித்து பசியாறினர்.)

9. 25 ரூபாய்க்கு தோசை தந்தவர்கள் 80 ரூபாய் என்றார்கள். சோளம், கடலை என்று தின்பதற்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது...( ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை மூன்று நாட்களில் செலவாக இருக்கும் போல் ஒரு காட்சிப்பிழை அல்லது கருத்துப் பிழை எனக்கு மட்டும் தோன்றியது)

10 .பால் இருந்தாலும் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்திற்கே பால் தந்தனர். அவர்கள் தான் கேட்ட விலையையும் தந்தனர். பாலின் விலை லிட்டருக்கு 100 ரூபாய்

11. காய்கறிகள் , பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. கிடைத்தாலும் இரட்டிப்பு மடங்கு வைத்து விலை பேசப்பட்டது.

12. பள்ளிப் பிள்ளைகள் தண்ணீருக்குள் நடந்து நடந்து தங்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொண்டனர். (பெரும் பாலும் ஆண்பிள்ளைகள்)
(இனி எப்போது தண்ணீரைக் காண்பார்களோ)

13. அலுவலர்கள் வேலைக்குப் போக வேண்டியிருந்தது . ஆனால் சாலை போக்குவரத்து சில இடங்களின் வழியாக செல்வதை தடை செய்யப்பட்டிருந்ததால், எப்படியும் போக முடியாமல் தவித்தனர். சில ஆட்டோ ஓட்டுநர்கள் நிறைய சம்பாதித்தனர். சிலர் சவாரி கிடைக்காமல் ஆனால் கிடைக்கும் என்ற  ஆசையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தனர்.

14. எங்கள் பகுதியில் இருக்கும் தியேட்டரில் கடந்த மூன்று தினங்களும் 6 ஷோக்கள் ஓடியது.( மழையின் காரணமாக வெளியே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டவர்கள் வீட்டுக்கு வராமல் இருக்க என்ன செய்வது என்பதால் அப்படி நிரம்பி வழிந்தது என்றும், தல” படம் என்பதால் என்ன மழை கொட்டினாலும் பார்ப்பது தான் ரசிகர்களின் இலக்கணம் என்பதாலும் அப்படி வழிந்ததாகப் பேசிக் கொண்டார்கள்.( உண்மை நான் அறியேன்)

15. கழிவு நீர் வெளியேற்றும் பாதாள அல்லது திறந்த நிலை சாக்கடைகளில் பாலீதீன் கவர்களும், பெப்ஸி கோக் போன்ற பாட்டில்களும், மதுபாட்டில்களும் அதிகம் தென்பட்டு அவற்றாலும் விரைவில் தண்ணீர் வெளியேற்றப்படுவது தாமதமானது.

16. எல்லோரும் எல்லோரையும் திட்டிக் கொண்டனர். பாலிதீன்களை ஒழிக்க வேண்டும் என்று சபதம் ஏற்றனர். கையில் பாலிதீன் கவர்களில் இருந்த பால் அல்லது மற்ற பொருட்கள் வாங்கிக் கொண்டே,..

17. கார் தண்ணீரில் மூழ்கும், காட்சியைப் பார்த்த டூ வீலர் காரர்கள், அல்லது அதை வாங்க இயலாமல் பொறாமையோடு பார்த்தவர்கள் எல்லோரும் அந்தக் காட்சியைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்`

18. குப்பைகளை ஆங்காங்கே வீசிவிட்டுச் சென்றனர். தண்ணீரில் அதுவும் மிதந்து வந்தது. எல்லோரும் அதனைப் பார்த்துக் கொண்டே அதனை செய்து கொண்டே அதனைக் கடந்தனர்.

19. இன்னும் சென்னை கழிவு நீர் வெளியேற்றத்தில் விழிப்புணர்வு பெற வேண்டும். என்று ஆளாளுக்கு, சாலமன் பாப்பையாவாக மாறி தீர்ப்பளித்தனர்.

20..மூன்று நாட்கள் முற்றிலுமாக மின்சாரம் தடை செய்யப்பட்டது..( மாவு அரைத்தால் தானே தோசை, சட்னி..தண்ணீர் வந்தால் தானே குளிப்பு துவைப்பு...ஏதும் நடக்கவில்லை)


21. தண்ணீர் சற்று வெளியேற்றப் பட்ட நிலையில் (இப்போது)சாலைகளில் தார் எல்லாம் தண்ணீரோடு போய் வெறும் சரளைக் கற்களாகக் காட்சியளிக்கிறது சாலைகள்...( சில பகுதிகளில் இன்னும் கூட தண்ணீர் வெளியேற்றப்படவில்லை)


இவ்வளவு நடந்தும்..
**********************


. துணி காயப் போட முடியவில்லை என்று இரண்டாம் தளத்தின் இந்திரா அலட்டிக் கொண்டது தான் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது.


மற்றொரு விஷயம் சரவணாஸ்டோர்ல இப்பவும் கூட்டமாம் 

Tuesday, December 9, 2014

பேச்சுப்போட்டி

இன்று பள்ளியில் தூய்மை, சுத்தம் என்று பல்வேறு தலைப்பு கொண்டு பேச்சுப்போட்டிநடத்தப்பட்டது
(எல்லோருக்கும் நானே தான் எழுதித் தந்தேன்....
நானே தான் நடுவர்)
ஒரு மாணவன் அவனுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் முழுவதிலும் முதல் வரி மட்டும் தான் சொன்னான் .முதலில் அனைவருக்கும் வணக்கம் என்பதையும்... கடைசியில் நன்றி என்பதையும் மறக்காமல் சொன்னான்.
சிலர் எழுதிக் கொடுத்ததைவிட சொல்லிய விதம் அருமை
இரண்டு மாணவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு அவர்கள் நேரம் முடிந்ததை அறிவித்ததும் நாக்கைக் நீட்டிக் கடித்துக் கொண்டு இடம் அமர்ந்தனர்.
ஒரு மாணவி அச்சச்சோ மறந்து போச்சு...என்று சொல்லி சட்டைப்பையில் வைத்துக் கொண்ட காகிதத்தைப் பார்த்துக் கொண்டாள்.(இரண்டு முறை)
ஒருமாணவி இடுப்பு, கை, கால் என்று அவளுக்கு எதையெல்லாம் ஆட்டவேண்டும் என்று தோன்றியதோ அதையெல்லாம் அடிக்கடி ஆட்டிக்கொண்டாள்.
ஒரு மாணவி அந்த ஊருக்கே கேட்கும் அளவிற்குக் கத்து கத்து என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.( நாஙகள் ஏதோ அடிப்பதாக இரு பெற்றோர்கள் வேவு பார்க்க வந்தனர். )
ஒரு மாணவன் பல வார்த்தைகளை விட்டு விட்டு சொன்னான். ஆனால் அவன் விடுபட்டதை உணர்ந்ததாக முகக் குறிப்பில் கடைசிவரைக் காட்டவில்லை
எல்லோரிடமும் ஏதோஒரு வகையில் ஒரு குறை அல்லது பல குறைகள் தென்பட்டது.
ஆனால் கடைசியில் எல்லோருக்கும் நான் சொன்னது...டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......பிள்ளைகளாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்னடா....இப்படி அற்புதமாப் பேசினிங்க...உங்கப் பேச்சுக்கேட்கக்கேட்க மிஸ்ஸுக்கு ரொம்பப் பிடிச்சுதுடா......அப்பூடி நல்லாபேசினிங்கடா...என் தங்கப்பிள்ளைகளா.......நாளைக்கு எல்லோருக்கும் என் சார்பில் பரிசு.....சரியா? என்றேன்....
சந்தோசமாயிருக்குடா......இந்த குக்கிராமத்திலிருந்து இப்படி....நான் எழுதிக்கொடுத்ததை அற்புதமா கலக்கிட்டிங்க...ன்னு சொன்னதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சி...அப்புறம் மகிழ்ச்சி....எல்லோருக்கும் கை கொடுத்தேன்.....கலந்து கொள்ளாத மாணவர்களும் கை குலுக்கிக் கொண்டார்கள்...
அடடா....ஒரு பொய் அவர்கள் மனதை என்னமா சந்தோஷமாக்கி ..........?அவர்கள் அடுத்த முறை இன்னும் நன்றாக பேசுவார்கள் என்று நம்புவோமாக.....( பேசுவார்கள் தானே)
என் மாணவர்கள் நலமோடும், அறிவோடும், ஆற்றலோடும் வாழ அன்னையாய் என்னை நினைத்துக் கொண்டு வாழ்த்துகிறேன்.

Tuesday, October 28, 2014

எங்கள் பள்ளி....

இன்று தாரகை ஆயத்த ஆடை யகம் நிறுவனத்தின் திரு முகம்மதுஇக்பால் அவர்கள் எங்கள் பள்ளிக்கு ஆர்வோ சிஸ்டம் கொடுத்திருக்கிறார்.

அவர்கள் முன்பே தீபாவளிக்கு எங்கள் பள்ளி பிள்ளைகளுக்கு அழகிய ஆடைகள் மிகவும் தரம் உயர்ந்ததாகவும் விலை சற்று அதிகமாகவே வழங்கியிருந்தனர்.

என் உதவிஆசிரியருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்து பிள்ளைகளின் துணிகளை வாங்கி வாங்கி பார்த்தார் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என்று ஏதும் கண்டுபிக்க இயலவில்லை அவரால்...

திருமிகு முகம்மது இக்பால் அவர்கள் வந்ததும் எங்கள் பிள்ளைகளிடம் இவர் தான் உங்களுக்கு அந்த அழகிய ஆடைகளை வழங்கியவர் என்று கூறினேன்

மறைந்து பின்னால் போய்... முன்னால் வந்து.... மிக மிக ஆச்சர்யமாய் அவரையே பார்த்துக் கொண்டே இருந்தார்கள்...சிறு பிள்ளைகளுக்கே உரிய இலக்கணத்துடன் (  அவர் நிறமும் ஒரு காரணம் என்றாலும் அவர் மீது வைத்த அன்பே மிகையான காரணம்)

இங்குள்ளோர் எல்லோரும் குடவுனில் பணிபுரிபவர்கள் பெண்கள் வேலை கிடைத்தால் போவார்கள் இல்லையேல் சித்தாள் வேலைக்கும் மற்றும் வயல் வேலைக்கும் செல்வார்கள் என்று சொன்னேன்.

(அந்த  வள்ளல்) அவர் உடனே நாம் இவர்களுக்காக பொங்கலுக்கும் வருகிறேன் என்று சொன்னதும் மாணவர்கள் நான் சொல்லிக் கொடுக்காமலேயே கைதட்டிக் கொண்டே இருந்தனர்.

ஒரு தந்தை எழுந்து நின்று கை தட்டினார்.

இந்த ஊரில் உள்ள அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன், ஏனெனில் என்னைவிட பெரியவர்களாக இருப்பார்கள் . ஆனால் நான் அந்த வழியாக சென்றால் எழுத்து வேட்டியை கீழே இறக்கி விட்டு எழுந்து நிற்பார்கள் .

மேலும் என்னை ஆயா...என்றோ அம்மா என்றோ ஆத்தா என்றோ தான் அழைப்பார்கள்




கொஞ்சம் நடுத்தர வயதுடையவர்கள் ” மேடம்பு ”என்றே அழைக்கிறார்கள் (மேடம் என்று கூப்பிடுகிறார்களாம்)
எங்கள் பிள்ளைகளின் தூய்மையான் அன்பில் அவர் திளைத்திருக்க வேண்டும். ஏனெனில் அன்று ஆடை வழங்கிய போது இவர் நல்ல ஆரோக்கியத்துடனும் அன்புடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்று ஒரு சிறப்பு வழிபாடு நடத்தியிருந்தனர். அதனை நேரில் தெரிவித்தனர். அவர் அதில் தான் நான் பொங்கலுக்கு வருகிறேன் என்று சொன்னது...( அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்???)
(இன்னும் மழை பெய்யுதுன்னா இப்படி சில மனுச மக்க வாழுறதுதாம்பா என்ற ஒரு கிழவியின் குரலை கேட்காமலே ஒரு புன்னைகையோடு கடந்து போனார். )
உண்மையில் நான் ஒருத்தருக்கு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கிறேன். அவர் திரு எஸ்.டி.பசீர் அலி அவர்கள் ( இவர் இருக்குமிடமெல்லாம் அன்பு ஒன்றே நிலைத்திருக்கும்) (தீராத உழைப்பாளி. நல்ல குணங்கள் கொண்டவர்...தான் மட்டுமல்லாது தன்னைச் சேர்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் என்று நற்குணத்தார்...)
யாரோ யாருக்கோ என்று ஏதோ தண்டமாக வேலை செய்யாமல் மிகவும் தரமான பொருட்களைத் தந்துள்ள புளுநைல் திரு ஜான்சன் அவர்களுக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்.
விழாவிற்கு வந்திருந்த பிலிம் சொசைட்டி தலைவர் திரு எஸ்.இளங்கோ, பாலா டிரேடிங் ஹவுஸ் செல்வா எல்லோருக்கும் என் நன்றி

Monday, October 6, 2014

பக்ரித் பண்டிகை

இன்று பக்ரித் பண்டிகை....

புதுக்கோட்டையில் நாணயவியல் சங்கத்தை தொடங்கியிருக்கும் திரு.எஸ்.டி.பஷீர் அலி அவர்களின் இல்லத்திற்கு அழைத்திருந்தார்.

காசிம் புதுப்பேட்டை..அவரது ஊர்...

மிகவும் அழகிய கிராம்...

அதன் அருகில் அணவயல், கீரமங்கலம்...என்ற ஊரெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ஊர்கள்...(கீரமங்கலம் நான் பிறந்த ஊர்)

அழகிய வீடுகள் ...மிக மிக பிரமாண்டமாய்.....

அதைவிடவும் அழகு எல்லோர் வீடுகளிலும் இருந்த தாவரங்கள்

மரங்களும் செடிகளும் நிரம்பிய ஊர்....

அதைவிடவும் மனித மனங்கள் மிக மிக அழகாக இருந்தது....மனிதாபிமானம் நிரம்பிக்கிடந்தது...

இனிய வரவேற்பு தந்தார்கள்.

(மிகவும் தன்னடக்கமாய்)நீங்கள் புத்தகங்களுக்கு செல்ஃப் செய்து அடுக்கி வைத்துள்ளதால் தான் நானும் அடுக்கி வைத்துள்ளேன் என்று ஒரு அறையைக்காட்டினார்.காணக்கிடைக்காதவைகள் சிலவும், அதில் இடம்பெற்றிருந்தன.

அவர் வீட்டு அம்மாவுக்கு நாங்கள் சைவமாய் இருப்பது குறித்து பெரிய வருத்தம் .அவராவது சாப்பிட்டாரே என்ற மகிழ்வு. (அவர் அசைவம் தான்)

அவர் மகள் என்னை சுவாதி அக்கா என்று கூப்பிட்டதும் சரளமாக பேசியதும் சக்தியோடும் சூர்யா வோடும் அன்புடன் பேசியதும் இன்னும் இனிக்கிறது

அவர் பேரன் சிறுவன் அனீஸ் 3ம் வகுப்பு பயில்கிறான். ஈது திருநாள், தியாகத் திருநாள், பற்றி விளக்கங்கள் சொன்னதோடு பல செய்திகளை அழகான மழலை தமிழில் உரையாற்றினான்...

அவன் தங்கை ஆயிஷா அழகோ அழகு...சக்தி, சூர்யாவிற்கு அவளை விட்டு வர மனமே இல்லை....தூக்கி வைத்துக் கொண்டார்கள்...

வரும் போது மல்லிகை , செம்பருத்தி, மருதாணி நாற்றுகளை பறித்து வந்திருக்கிறாள். பெரியவள்...





சில மனிதர்கள் நம்மிடம் நேசத்தின் முகவரியைச் சொல்கிறார்கள்...சில மனிதர்கள்????????? 

Sunday, June 15, 2014

மனதைக் கவர்ந்த மார்கழி...

   “மார்கழிப் பனி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்” மார்கழி மாதம் என்று சொல்லும் போதே சுகம் பிறக்கும். எழுதும் போதே கவிதை சுரக்கும். மார்கழி என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது கோயிலில் திருப்பள்ளி எழுச்சி, பொங்கல், வண்ணக்கோலங்கள், பாசம் வைக்கும் பனி, சங்கீதமாய் உலவும் குளிர்காற்று. இவைகள் நம் நெஞ்சை நிறைக்கும் பஞ்சுமெத்தைகள். மனதிற்கு இதம் தரும் இனிய நிகழ்ச்சிகள் .

ஆனால் தற்போதெல்லாம் மார்கழி மாதம் இப்படியா நம்மை எதிர்கொள்கிற்து? ஒலிபெருக்கிகளின் அலறல் ஒன்றைத் தவிர வேறு எதைச் சிறப்பாகக் கூறமுடியும்? காலையில் எழுந்து தலை குளித்து விட்டு மொட்டை மாடியிலோ, தென்னந்தோப்பிலோ, மரத்தினடியிலேயோ உட்கார்ந்து படித்தால் ஆகா? சொர்க்கம் இங்கேதான், இப்போதுதான் என்று சொல்லத் தோன்றும். எழுத அமர்ந்து விட்டாலோ வார்த்தைகள் பாய்ந்தோடி வந்து கவிதையாய்ப் படுத்துக் கொள்ளும். ஆனால் இப்போதைய மார்கழிகள் மலர்வதே ஒலிபெருக்கியின் சப்தத்தினால்தான்.


   பெரிய கோயில்கள், நடுத்தரக் கோயில்கள், சிறிய கோயில்கள், குழந்தை கோயில்கள் ( பாம்பை அடித்து அதைப் புதைத்து ஒரு கல்லை வைத்து சாமி என வணங்குதல், குரங்கைக் கொன்று அதைபுதைத்துக் கல்லை நட்டு வைத்து சாமி என வண்ங்குதல்) இப்படியாக ஒவ்வொரு விதமான கோயில்களும் ஒவ்வொருவிதமான ஒலிபெருக்கிகளைத் தாங்கிக்கொண்டு சப்தங்களே சங்கீதமாய் ஒலிக்கச் செய்கிறார்கள்.அதைக் கத்தவிட்ட உடன் விழா நடத்துவோர்களுக்கு ஏகப்பட்ட திருப்தி. தாங்கள் ஏதோ இமயத்தையே தொட்டுவிட்டு வந்து விட்டது போல.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தூக்கம் கெட்டுப் போகுமே, மாணவர்களின் படிப்புப் பாழாகிப் போகுமே என ஒருவரும் நினைப்பது கிடையாது. இதைக் குறிப்பிட்ட நபரிடம் சொல்லிவிட்டாலோ நாத்திகவாதிகள் பேச்சை நாங்கள் கேட்பதில்லை கடவுளுக்குச் செய்வதை தயவுசெய்து குறைகூறாதீர்கள் என்று ஒரே வார்த்தியில் கூறி விடுகிறார்கள்.

இப்படி கடவுள் வழிபாடு என்க்கூறிக்கொண்டு திருமங்கையாழ்வார் அருளியது, திருப்புகழ், தேவாரம், திவ்யப்பிரபந்தம், வாரியாரின் சொற்பொழிவு, மற்றையோரின் ஆன்மிகச் சொற்பொழிவுகள், ஆன்மிகப் பாடல்களையாவது போடுகிறார்களா? அடுவும் இல்லை. காதின் புனிதத் தன்மையே  கெட்டுவிடும் போல நாடோடிப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள் இவற்றைத் தான் போடுகிறார்கள்.

அது மட்டுமில்லாமல், திரையிசைபாடல்களின் மெட்டெடுத்து சாமி பாடல்களைப் பாடி அந்த ஒலிநாடாக்களைப் போடுகிறார்கள். இதற்கும் ஒரு காரணம் வைத்திருக்கிறார்கள். எப்படிக் கேட்டால் என்ன? இசையில் என்ன பேதம்? எல்லா இசையும் இறைவனுக்குகந்தவைகளே என்கிறார்கள். திரைப்படப் பாடல்களைக் காலையில் ஒலி பெருக்கியில் அலற விட்டால்தான் அருளுவேன் என்று சாமி சொன்னாரா? எதுவும் புரியவில்லை.

 கொச்சை வார்த்தைகளால் கோர்த்த பாடல்களைத்தான் இறைவன் விரும்புகிறானா? சங்கத்தமிழ் படைத்து முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் தோற்றுவித்துத் தமிழ்பாடித் தமிழ் வளர்த்த சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நாடுதானா இது?

ஆன்மீகம் ஆளுமையை வளர்ப்பதாய் இருக்க வேண்டுமேயன்றி வெறித்தன்மையை வளர்ப்பதாய் அமைதல் கூடாது. மனித நேயத்தை, நல்ல பண்பை, உயரிய நாகரிகத்தை வளர்ப்பதாக ஆன்மிகம் அமைந்தால் இனிய இந்தியாவாகும். இல்லையேல் இன்னலுக்குள் இடிந்து போன இந்தியாவாய்.....

ஐயோ அப்படி போக விடலாமா???

(இது என்னுடைய முத்துப் பந்தல் என்ற நூலில் எழுதிய கட்டுரை...1995ல் வெளியானது. நான் அப்போது B.Com  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.)


Friday, June 13, 2014

இன்று இனிமையான் நாள்.....
இன் மாணவர்கள் இன்று அளவுக்கு அதிகமான் உற்சாகத்துடன் இருந்தனர்.வாசலில் வரும் போதே இரு பக்கங்களையும் அடைத்தவாறு நின்று கூச்சல் போட்டனர். எனக்கு செய்வது புரியாமல் விழித்தேன்... ஆனால் அவர்களோ இரு பக்கமும் ஏதோ தனியார் பள்ளியில் வரவேற்பார்களே அது போல பூக்கள் தூவி வரவேற்றனர்... என்ன ஆயிற்று என்று யோசிப்பதற்குள் ஒருவன் ஓடி வந்து ஒரு அட்டையை நீட்டினான். அதில் தப்புத் தப்பாக happy birth day to u my dear teacher என்று எழுதப்பட்டு இருந்தது. மற்றொருவன் ஒரு பெரிய பேப்பர் கத்தைகளை நீட்டினான். அதில் ப ல மாணவர்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்து இருந்தனர். மற்ற்வன் வேகமாக வந்து பொக்கே போன்ற ஒன்றைக் கொடுத்தான். அதில் அவர்களுக்கு எளிமையாய் என் ன பூக்கள் கிடைக்குமோ அது வெல்லாம் இருந்தது. வகுப்பறையில் நுழைந்ததும் ஒருவன் மின் விசிறியை சுழல விட்டான். அதிலிருதும் பூக்கள் தூவியது. என்னடா பண்றீங்க என்று கத்தியே விட்டேன். அப்போது தான் ஒரு மாணவன் சொன்னான். உங்களுக்கு சரஸ்வதி பூஜை அன்று பிறஎத நாள் தானே அதான் அன்று பள்ளி இல்லாததால் இன்று கொண்டாடுகிறோம் என்றான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏனென்றால் இவர்கள் எல்லோருமே தங்கள் பிறந்தநாளை எந்த வகையிலும் கொண்டாட இயலாத ஏழைகள்... ஆனால் என் பிறந்த நாளை....அதுவும் என்றோ நான் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டு அவர்கள் இப்படி செய்தது மிகப்பெரிய ஆச்சரியம்.இதை விட வேறு என்ன வேண்டும் என்றே தோன்றியது. நெஞ்சம் நெகிழ கண்கள் குளமாக...... அவர்கள் எல்லோரும் மிக நல்ல நிலைமைக்கு வர வேண்டும் வரவைக்க வேண்டும் என்பதே என் இப்போதையக் கவலை

Thursday, June 12, 2014

தோழி....2

எனக்கு மற்றுமொரு தோழி . பெயர் ஜீவஜோதி. மிகப்பெரும் சுடராய் வாழ்ந்திருக்க வேண்டியவள். நல்லபடியாக ஆகமவிதிகளுக்கு ஏற்பத்தான் திருமணம் நடந்தது.ஆனால் திருமணமான 6 மாதங்களில் கணவன் ஒரு சாலை விபத்தில் இறந்து போனார். மீண்டும் 3 வருடம் கழித்து அவளுக்கு அவள் பெற்றோர் மறுமணம் செய்து வைத்தனர்.

இவளும் இவளைப்பார்ப்போர் எல்லாம் எப்போதும் துக்கத்துடனேயே பேசுவதாலும், சில ஆண்களின் பார்வைகளைத் தவிர்ப்பதற்காகவும் இவளும் ஒத்துக் கொண்டாள். இன்றளவும் அவளின் பழைய மாமியார் இவள் வீடு வந்து பணம் வாங்கிக் கொண்டு வயிறெரிய சண்டை போட்டுக் கொண்டு செல்கிறாள் என்பது தனிக்கதை. சம்மந்தமே இல்லாமல்  தொலைபேசியிலேயே என்னையும் அவர்களின் பஞ்சாயத்து தலைவராக்கி விடுவாள் என்பதும் தனிக்கதை.

இவள் ஒரு அரசுப்பணியில் இருக்கிறாள். கணவனும் அரசுப்பணியில் இருக்கிறார். ஆனால் மாதந்தோறும் முதல் தேதியன்று நிறைய மது அருந்திவிட்டு வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. அவன் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறான்.

இவள் ஏதாவது கேட்டால் அவளின்நடத்தை பற்றி மிகத் தாறுமாறாக பேசி மனவேதனைக்கு ஆளாக்குகிறார் அவள் கணவன். அவருடைய பணம் இல்லாமல் இவளுடைய ஊதியம் மட்டுமே வைத்துக் கொண்டு குடும்பம் ஓடுகிறது. அதிலும் ஒரு சிறிய வீட்டை வங்கியில் கடன்பெற்று வாங்கியிருக்கிறாள். அநாவசியமாக புடவை வாங்க மாட்டாள். நகைகள் என்று பெரிதாய் ஏதுமில்லை. தன் மகன் நன்றாகப் படித்து பெரிய டாக்டர் ஆகவேண்டும் என்பது அவள் கனவு. அதற்கு கிளினிக் கட்ட அவன் இந்த வீட்டை விற்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது அவளது திட்டம்.

 ஆனால் இவள் கணவரோ வங்கிக் கடன் செலுத்தும் பணத்தையும் களவாடிச் சென்உ மது அருந்தி வருகிறார். அவள் கணவர் மட்டுமல்ல. கணவரின் தங்கை, மாமனார், மாமியார் என்று அந்தக் குடும்பமே இவளைக் கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறது.இவளுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதாலும் . மேலும் சில ஆண்களின் கொடூரப்பார்வைகளிலிருந்து தப்புவதற்காகவும் மகனின் எதிர்காலத்தை முன்னிட்டும் அவன் மனதளவில் எந்த பாதிப்பும் அடைந்துவிடக் கூடாது என்றும் அனைத்து வசைகளையும் பொறுமையுடன் வாங்கிவருகிறாள்.

இவளுக்கு தன் இயல்பில் வாழ ஏன் இத்தனை பயம்? இதே ஒரு ஆண் மகன் என்றால் உடனே விவாகரத்து பெற்றிருப்பான் தானே? இவள் அந்த்க் கணவனை மீறி வந்து விட்டால் 4 நாட்கள் பேசும் சமூகம் தொடர்ந்து பேசுமா? அப்படி பேசுவோர்கள் சோறு போடுவார்களா? சமூகத்தில் இருக்கும் யாருக்கும் இரக்கம் இல்லையா? இதைவிடவும் அவள் மனதில் வேதனை புகுத்த வேறு ஒன்றுமே இலலையெனத் தோன்றுகிறது.

 இவள் பத்தாம் வகுப்பில் பள்ளி முதலாவதாக வந்தவள். இனிய குரலில் பாடுவாள். இவள் குரல் கேட்டால் கல்லும் கரையும் . எந்த ஒரு ராகத்தையும் எளிதாக மனனம் செய்வதும் அதனை இது இந்த ராகம் எனப் பகுத்தறியவும் அறிந்தவள்.திரைப்படங்களுக்கு மட்டும் பாடியிருந்தால் மிகப் பெரிய புகழைப் பெற்றிருப்பாள். இந்நேரம் இவள் புகழை உலகம் பாடிக்கொண்டிருக்கும். 5வது படிக்கும் அவள் மகனுக்கு இவள் பாடுவாள் என்று கூடத் தெரியாதாம். அனைத்து சங்கீதப் போட்டிகளில் முதற்பரிசு வென்றதோடுசங்கீதத்திற்க்கான பட்டமும் பெற்றவள்.

இவள் குரலை முறித்தது யார்? இதற்குத் தீர்வென்ன? முறித்தது இந்த சமுதாயம் எனில் நானும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கும் பட்சத்தில் வெட்கித் தலை குனிகிறேன். தடைகள் பல தாண்டி வெற்றி பெறும் பெண்கள் இருக்கிறார்கள் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஒரு பெண்னை அவள் நடத்தையின் பால் பேசி விட்டால் அவள் தன் கூடுக்குள் ஒடுங்கிப் போவாள் என்று ஆண்சமூகம் அவளை இப்படித்தான் அடக்குமா? ஏன், ஏன்? ஏன்?

காக்கை குருவி எங்கள் சாதி( என் இளைய மகள்)

   என் இளைய மகள் யாரோடும் அதிகம் பேசமாட்டாள். பேசினாலும் “நறுக்” கென்று இருக்கும். சில விடுமுறை தினங்களில் ( காலாண்டு, அரையாண்டு,விடுமுறைகளில் ) ஏதாவது பாரதியார், பாரதிதாசன், போன்றவர்களின் பாடல்களைப் பற்றிக் கூறுவதுண்டு.

அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது பாரதியார் மாதிரி ஒரு மனிதாபிமானமிக்க மனிதரைப் பார்க்கவே முடியாது . சாப்பிட சாதம் இல்லாமல் இரண்டு நாள் பட்டினிக்குப் பின் அவரது மனைவி செல்லம்மாள் இரவல் அரிசி வாங்கி வைத்து விட்டு உலை வைக்கப் போயிருந்தார். அந்த நேரம் பாரதி வர அந்த அரிசிகளை குருவிகளுக்கு உணவாக வீசி வீசி எறிந்து விட்டு செல்லம்மாள் வந்து பார்க்கும் பொழுது “பாரேன், செல்லம்மா, இந்த்க் குருவிகளை, எவ்வளவு அழகாக இவைகளைச் சாப்பிடுகின்றன என்று ஆனந்தமாகக் கூறினாரம். தன் குழந்தைகளுக்கு உணவு இல்லாத நிலையில் குருவிகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தார். என்று கூறினேன்.

இது நடந்து ஒரு மூன்று நாள் கழித்து என் இளைய மகள் காலை வேளையில் காப்பி குடித்து விட்டு அரிசி டப்பாவில் இருந்த குறைவான அரிசியை மாடிக்குக் கொண்டு போய்  அள்ளி அள்ளி இறைத்துக் கொண்டிருந்தாள். வீடு நகரத்தை விட்டு தள்ளி இருந்ததாலும் , அருகில் கடைகள் இல்லாததாலும், நான் நீண்ட தூரம் பயணம் செய்தே வேலைக்குச் சென்று வரவேண்டி இருந்ததாலும் மாதம் ஒருமுறை மட்டுமே மளிகை வாங்கும் வழக்கம் வைத்திருந்தேன். காய்கறிகூட வார சந்தைகளிலும் ஞாயிறுகளில் உழவர் சந்தையிலும் மட்டுமே வாங்க இயலும் .

கஷ்ட்ப் பட்டு காசு கொடுத்து வாங்கியதை இப்படி தெரியாமல் விளையாட்டுப் பொருள் ஆக்கிவிட்டாளே என்று வருந்தி என்னம்மா என்ன செய்றே என்று நான் பதறி ஒருவாறாக அவளீடமிருந்து அந்த அரிசி அளக்கும் படியைப் பிடுங்கி வாங்கிக் கொண்டு போய் சேமிப்பு அறையில் வைப்பதற்குள் எனக்கும் போதும் போதும் என்றாகி விட்டது..

மீண்டும் மீண்டும் நான் விளையாடுகிறேன் என்று நினைத்து அதனைப் பிடுங்கியதாக நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் என் மகள் சோகமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகீறீர்கள் என்றாள். சொன்னேன். அப்பா? இது அடுத்த கேள்வி. சொன்னேன். ஒரு கிலோ அரிசி விலை எவ்வளவு என்றாள், சொன்னேன். அது நல்ல நாட்டுப் பொன்னிடா அதன் விலை அதிகம் என்றேன்

.இந்தக் குருவிகள் ஒரு கிலோ அரிசியையுமா சாப்பிட்டு விடும்? ஒன்றுமே இல்லாத பாரதி தன் சாப்பாட்டு அரிசியை குருவிகளுக்குத் தந்தார். ஆனால் நீங்களோ இவ்வளவு சம்பளம் வாங்கும் போதும் உங்களுக்கு ஒரு ட்ம்ளர் அரிசி த ர மனம் வரவில்லை நீங்கள் எப்படி மஹாக்கவி ஆவீர்கள் என்றாள். எனக்கு திக்கென்றது. அப்போது அவளுக்கு ஐந்துவயது மட்டுமே .

இப்படித்தான் இவள் எப்போதும் என்னை நேருக்கு நேர் நிறைய கேள்வி கேட்டிருக்கிறாள் குழந்தைகள் நல்லவர்களாகத்தான் வளர்கிறார்கள் நாம்தான் அவர்களை பிறருக்குக் கொடுக்காத கருமிகளாக மாற்றிவிடுகிறோம் என்று தோன்றியது

Saturday, June 7, 2014

பகிர்ந்து கொள்ள....முக்கியமானது.




  இன்று அதிகாலை 4.30 மணிக்குப் பெரியார் நகடில் வசிக்கும் என் தோழியின் வீட்டிற்கு அவளுடைய ஹவுஸ் ஓனர்வந்திருக்கிறார். (ஐய்யய்யோ.... வீட்டுக்காரர்னு சொல்ல முடியாத படிக்கு இந்த வார்த்தைச் சிக்கல் வேறு)  (ஹவுஸ் ஓனர் என்று நான் விளிப்பதால் தமிழ் கூறும்  நல்லுலகம் என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்)

ஒரு தனியார் நிறுவனத்தில் மிகவும் குறைந்த கூலிக்கு வேலை பார்க்கிறாள். (அவள் வாங்குவதை சம்பளம் என்றோ ஊதியம் என்றோ உயர்த்திக் கூற்வதை என்மனம் மறுக்கிறது) அவள் கணவரும் தனியார் நிறுவனத்தில் தான் பணி புரிகிறார்.

 அவளைப் பற்றி...முன் குறிப்பு
********************************

1..பெளர்ணமி காலங்களீல் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பி நிலா பார்க்கச் சொல்வாள். அவள் வீட்டு மொட்டை மாடியில் நின்றால் என் வீடு தெரியுமாதலால் நானும் மாடிக்கு வந்து விட்டேனா என்று உறுதி செய்து கொள்ள அங்கிருந்து இரண்டு கைகளையும் உயர்த்தி ஆட்டுவாள். தன் மகிழ்வைத் தெரிவிக்க வல்க்கையால் வாயைப்பொத்தி தோளைக் குறுக்கி சிரிப்பது போல் ஜாடை காட்டுவாள். ( நான் மாடிக்கு வந்தது அவுகளுக்கு சந்தோஷமாமாம்)

2.. ஒருமுறை மின் வாரியத்திலிருந்து வந்தவர்களால் அவள் வீட்டு வாசலில் இருந்த் வேப்பமரத்தின் ஒரு பகுதியை வெட்ட நேர்ந்த்து.அந்த சோகத்தில் நானும் பங்கு கொள்ள வேண்டினாள். ஒரு சில தினங்களீல் அவளுடைய தீவிர கவனிப்பினால், அது துளிர் விடுவதை வந்து பார்த்தபின் பள்ளிக்குப் போகலாம் என்று கட்டாயப் படுத்தினாள்.

3..போன வாரம் பெய்த காற்றுடன் கூடிய கனத்த மழையில் பெரியார் நகரில் பல மரங்கள் சரிந்து விழ மறுநாள் தன் வாக்கிங் நேரத்தில் ( என் வாக்கிங் நேரத்திலும் தான் ) அம்மா போலவே பார்த்தாயா? பார்த்தாயா? என்று கேட்டுக் கொண்டே இருந்தவள்.

4..எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் திரு கஸ்தூரிரெங்கன் தன் முகப்புத்தகத்தில் மரங்கள் சாய்ந்ததைப் பற்றி வருத்தமாக எழுதியிருந்தாராம்.அடடா அடடா என்று பாராட்டிக் கொண்டே இருந்தவள்.

5..குறிப்பாக தன் மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குபவர் . அவள் மாமியார் இவளைப் பார்த்து “கட்டு சிட்டா” குடும்பம் நடத்துபவள் என்று அடிக்கடி கூறுவாள். ( அதென்ன ’கட்டு சிட்டு ‘ தமிழ் கூறும் நல்லுலகமே இதற்கு விடைதா.)
   மாமியாரிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி என்று ஏதேனும் கோனார் நோட்ஸ் போல ஒரு சுந்தரி நோட்ஸ் போட்டால் செம கலெக்‌ஷனாகும் ல?)


6.. நானே போகாத கணினி பயிற்சியைப் பற்றி அங்கு என்னெல்லாம் நடந்திருக்கும் என்று கேட்டு என்னை துளைத்து எடுத்தவள்.( எங்கள் ஊரில் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களால் வலை தளம் தொடங்குவதும் பராமரிப்பதற்கான பயிற்சிகள் வெங்கடேஸ்வரா கல்லூரியில் நடத்தப் பட்டது. )

7.. நம்மாழ்வார் அய்யாவை நேசிப்பவள்

8..நான் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறேன் என்பதால் எனக்கு எல்லாம் தெரியும் என்று நம்புபவள், அல்லது தெரிய வேண்டும் என்று நினைப்பவள்.

9.. எவ்வளவு உடல்நலம் குன்றி இருந்தாலும் வீட்டில் மட்டும் தான் சமைப்பவள். என் குழந்தைக்கான உணவை எந்த உணவகங்களும் தர முடியாது என்று உறுதியாய் நம்புபவள்.

10.. வியாழன் அன்று எது எப்படி இருந்தாலும் சீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்பவள்.(பெண்களுக்கான நாட்களிலும் கூட) (அது எங்கள் தெருவின் அடுத்த தெருவில் தான் அந்த கோயில் உள்ளது)

11.. யாருக்கு என்ன துன்பம் நேர்ந்தாலும் போலியற்ற மனதுடன் அவர்களுக்காகப் பிரார்த்திப்பவள் .

12..அவளுக்கு ஒரே மகள். அவள் சிறிது மாதங்கள் முன்னர் தான் பூப்பெய்தி இருந்தாள். அவள் இதே நகரில் உள்ள ஒரு பிரபலப் பள்ளியில் படித்து வருகிறாள். அவளூக்காகத் தான் அவர்கள் இங்கு வந்ததே.

   இவளைப் பற்றி இது போதும் என்று நினைக்கிறேன்.

   மேமாதம் அவள் கணவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் ஒரு மாத விடுப்பு எடுக்கும் நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. அதனால் அந்த மாத வருமானம் அவருக்கு இல்லை.

எனவே இவள் ஊதியம் கொஞ்சம் சேமிப்பு எல்லாம் சேர்த்து மகளுக்கான கல்விக்கட்டந்த்தை செலுத்தி விட்டு மீதன் இருந்த தொகையில் உணவுக்கான மளிகை, அரிசி, எண்ணெய்.போன்ற இன்றியமையாத பொருட்களை வாங்கிவிட்டாள். அதற்கு மட்டுமே பணம் இருந்திருக்கிறது. அதனால் இம்மாத வாடகையை அவள் செலுத்தவில்லை. ஆனால் அவள் பணிபுரியும் நிறுவனத்தில் இந்த மாதம் அனைவருக்குமே முன்பணம் கடனாகத் தருவார்களாம். அதனை வட்டியோடு சிறு தொகையாக மாத வருமானத்தில் திரும்பச் செலுத்தி விட வேண்டுமாம். இது போல் அனைவரும் கல்விக்கட்டண்ங்கள் கட்ட வேண்டியிருப்பதால் இந்த ஏற்பாடாம். ( நல்ல வேளை! ஊதியத்திற்கு பதில் கூலி கொடுக்கும் முதலாலிக்கு இதுவேனும் தெரிகிறதே)

   அந்தக் கடன் 10ம் தேதி தான் வருமாம். வந்தபின்னே வாடகை செலுத்திக் கொள்ளலாம் என்று இருந்திருக்கிறாள். அவளுடைய ஹவுஸ் ஓனர் இருப்பது சென்னையில். எனவே அவள் வங்கியில் அவர்கள் கணக்கில் பிரதி மாதன் 1ம் தேதி இது வரை பணம் செலுத்தியிருக்கிறாள்.இம்மாதன் 7 தேதி வரை ஆகிவிட்டதாக் அந்த ஹவுஸ் ஓனர் இவள் வீட்டுக்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்திருக்கிறார். கதவைத் தட்டி செல்போனில் அழைத்திருக்கிரார்.

 அவள் கணவர் கொஞ்சம் கூச்ச சுபாவமும் பயந்த சுபாவமும் கொண்டவர். எனவே, வாங்க, உட்காருங்க, என்று கூடத்தில் அமர வைத்திருக்கிறார். (அவர்கள் மூவரும் கூடத்தில் உறங்குவது தான் வழக்கமாம். ஏனெனில் இருக்கும் ஒரே அறையில் முக்கியமான பொருட்களை அடைத்து வைத்துள்ளனர்.

  அவள் மகள் வீட்டில் அரைக்கால் டவுசர் போடுவது தான் வழக்கம் .     (  பாவாடை சட்டை போடுவது தான் வழக்கொழிஞ்சு போச்சே) வயதிற்கு வந்த பெண் என்பதால் அடுத்தவர் வருகையின் போது அங்கு படுக்க வைப்பது நாகரிகம் இல்லை என்று எண்ணியும் அதுவும் அரைக்கால் டவுசரோடு அந்நியர் முன் படுக்கவைப்பது சங்கோஜமாக இருக்கும் என்ற நிலையில் எழுப்பி அடுத்த அறைக்குள் படுக்க வைத்துள்ளனர்.

   திடீரென்று எழுப்பியதாலும், மாற்றிப் படுக்கச் சொன்னாலும் தூக்கம் கலைந்து , இயல்பாகத் தூங்க இயலாமல் தவித்துப் போய் தலைவலி வேறு வந்துவிட்டதாம். எனவே அன்று காலை நடக்க இருக்கும் பள்ளியின் சிறப்பு வகுப்புக்கு அவளால் செல்ல இயலவில்லை.

என் தோ ழி தமிழ் மீது சற்று ஆர்வமுள்ளவள். எனவே நான் நடத்தும் த.மு.எ.க.ச. கூட்டத்திற்கும் எங்கள் முதன்மைக்கல்வி அலுவலரின் வீதி கூட்டத்திற்கும் நான் அழைத்தபோது அது ஞாயிறு என்பதால் இன்று எனக்கு இரட்டிப்பு சம்பளம் ( மன்னிக்க ...கூலி...) கிடைக்கும் என்பதால் ஆர்வமிருந்தும் வர இயலவில்லை என அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வாள்.

   அதே சமயம் விடுப்பு எடுத்தால் ஊதியம் கழிக்கப் படுமாம். அந்த ஹவுஸ் ஓனர் வந்து 6 மணி வரை ஏன் வாடகை செலுத்த வில்லை. என்றும் எனக்குச் செக் கொடுங்கள் என்றும் கேட்டதோடு விடாமல், உங்களுக்கு உடல்நலமில்லாமல் இருந்ததற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? ஊதியம் வரவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? 10ம்தேதி ப்ணம் வருன் என்ன ஆதாரம் காண்பியுங்கள்.நான் எப்படி நம்புவது? என்றெல்லாம் கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார்.

   வழக்கமாக 5 மணிக்கு  சமைத்து முடித்தால் தான் அவள் பேருந்து பிடித்துவேலைக்கு போகும் இடம் செல்ல சரியாக இருக்கும். 6 மணிவரை பேசிக்கொண்டிருந்ததால் குழந்தையும் சிறப்பு வகுப்பு 7 மணிக்கு போக வில்லை. இவளும்  அரை நாள் விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். உறவுக்காரர் வீட்டுத் திருமணம் , சடங்கு, இறப்பு, என்று எந்தக் காரியமென்றாலும் மிகவும் திட்டமிட்டு ஒரு மணி நேர அனுமதி கேட்டு வேலைக்குச் சென்று விடுவது அவள் வழக்கம்.

  ஆனால் இன்று ஏற்பட்ட மன உளைச்சலாலும் பணிச்சுமையினாலும் அவள் வேலைக்குப் போகவில்லை  .1/2 நாள் ஊதியத்தை அவள் இழந்தாள்.

இந்த ஹவுஸ் ஓனர் 4ம் தேதி தொலைபேசியில் அழைத்திருக்கிறார். அன்று அவள் அலுவலகத்தில் மேலதிகாரிகள் வந்திருந்ததனால் அவளால் அந்த அழைப்பை ஏற்க இயலவில்லை.மேலும் பெண்களுக்கு வீடு வந்தால் தான் வேலை தொடருமே....பாத்திரம் கழுவி, துணி துவைத்து. வீடு கூட்டி உணவு சமைத்து, மகளை கவனித்து என்று இத்தியாதி வேலைகளில் மீண்டும் இவளே தொடர்பு கொள்ளவில்லையாம். அதனை ஒரு குற்றச் சாட்டாக கூறியிருக்கிறார்.

என் இனியவர்களே... இந்த மனிதர்கள் ஹவுஸ் ஓனர்கள் தானே மன்னர்கள் இல்லையே. அவர்களிடம் குடியிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் வரலாமா? இது நியாயம் தானா?

எப்போது வந்தாலும் காப்பி போட்டுத் தர வேண்டுமாம். காப்பி சற்றே நீர்த்துப் பொய் இருந்தாலும் இரண்டு மடக்கு குடித்து விட்டு இவள் முன்னிலையிலேயே இப்படி நான் மட்டமாகக் குடிப்பதில்லையென சாக்கடையில் கொட்டுவாராம்( இதை அவள் வீட்டின் அடுத்த வீட்டில்  இருக்கும் மற்றொரு அம்மணி சொன்னது.)

 அவள் மகள் முதல் முறையாக இந்த ஆண்டு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கிறாள். எனவே இந்தப் பகுதியில் இருந்தாக வேண்டிய கட்டாயம். இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த ஏரியாவின் ஹவுஸ் ஓனர்கள் மிகவும் கடினமாகத் தான் நடந்து கொள்வதாகத்தான். பலரும் கூறுகிறார்கள்.

அவள் கணவன் அலுவலக நிமித்தம் அடிக்கடி வெளியூர் செல்பவர். அதிகாலை அவர் இல்லாத சமயத்தில் ஒரு அந்நிய ஆடவன் வீட்டினுள் நுழைந்தால் பிறர் என்ன நினைப்பர்ர்கள். முதலில் கூட்டி வரும் அந்த ஆட்டோகாரரே என்ன நினைப்பார்?

எங்கள் பகுதியில் எல்லோரும் காலை நடைபயிற்சி போகிறவர்கள் என்ற காரணத்தால் எல்லோரும் பார்க்கும் படி இப்படி ஆனது அவளை பெருத்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

பெண்களுக்கெதிராகத்தான் அதுவும் அழகிய பெண்களுக்கெதிராக தூற்றத் தான் ஆயிரம் வாய்கள் முளைத்து வருமே?

செய்வதறியாது என் தோழி திகைக்கிறாள். அவள் திடம் கொள்ளவும்  எல்லாத் துயரிலும் எதிர் கொண்டு எழவும் என்னோடு நீங்களும் பிரார்தியுங்கள். விரைவில் தீர்வு கிடைக்கட்டும்
******************************************************************************
பின்குறிப்பு:    மற்றவர் பின்பற்ற:
**********************************
இந்தக் கட்டுரை துவங்கும் போதே ஓம் கரந்தை ஜெயக்குமாராய நமக, ஓம் திண்டுக்கல் தனபாலனாய நமக.. ஓம் முத்துநிலவனாய நமக சொல்லிவிட்டுத் தான் தொடர்ந்தேன்,, ஏனெனில் மின்சாரத்தின் மீது அவ்ளோ பயம். ஏன் அவர்களுக்கு நமக சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் தான் எனக்கு வலைதளம் தொடங்குவது பற்றி கற்றுத் தந்தவர்கள். எனவே அவர்கள் நாமம் வாழ்க. அவர்கள் புகழ ஓங்குக. இவ்ளோ டைப் பண்ணின வரை மின்சாரம் போகலியே.
********************************************************************






Friday, June 6, 2014

பணி நிறைவு விழா

   இன்று இராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஆர்.போஸ் M.Sc.,M.Ed.,M.Phil.,  அவர்களுக்குப் மஹாராஜ் மஹாலில் பணி நிறைவுப் பாராட்டு விழா நடைபெற்றது.

   இவர் பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியராக 22 ஆண்டுகளும், தலைமை ஆசிரியராக 12 ஆண்டுகளும் மொத்தம் 34 ஆண்டுகள் கல்விப்பணி செய்தவர்.

   இவர் என் அப்பா வீட்டிற்கும் குடும்ப நண்பர். என் கணவர் வீட்டிற்கும் குடும்ப நண்பர். எனவே நானும் என் கணவரும் இந்நிகழ்ச்சிக்குச் சென்று அவருக்கும் அவரது துணைவியாருக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தி, அவரிடமிருந்து ஆசி பெற்று வந்தோம்.

   விழா சிறப்புகள்:
   ******************

   அழைபிதழை நேரடியாக வந்து தந்த பின்னும் ஒரு பதிவு செய்யப்பட்ட அவரது குரலில் அனைத்து நண்பர்களின் தொலைபேசிக்கு நான்கைந்து முறை அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. ( தேர்தல் ல அம்மா வாக்களிக்கக் கேட்டாங்களே அதே மாதிரி)

   ஒரு அரசு பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஒரு நீண்ட வரிசையில் நின்று பொன்னாடை போர்த்தியது மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

   கல்வியாளர்கள் தவிர பொறியாளர்கள், அரசியல் தலைவர்கள், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள், நகராட்சி பணியாளர்கள், கருவூல ப் பணியாளர்கள், காவலர்கள்,கவிஞர்கள், பேச்சாளர்கள், இலக்கியவாதிகள். பல்வேறு அமைப்பைச்சார்ந்த சான்றோர்கள், பெரிய தொழிலதிபர்கள், சிறிய தொழில் முனைவோர்கள், என்று அனைத்துத் தரப்பு மக்களும் வந்திருந்தனர்.

   விழாவின் உணவு ஏற்பாடுகளை என் இனிய தம்பி திரு ஜெய்பார்த்தீபன் அனைவரையும் வாங்க உட்காருங்க என்று ஒவ்வொருவருக்கும் சொல்லி நான்கு நீண்ண்ண்ண்ண்ண்ட மேசைகளிலும் என்னென்ன பரிமாற வேண்டும் ,என்று ஆணையிட்டுக்கொண்டே, வரவேற்றுக் கொண்டும், சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தார்.

   திரு அய்யாவு, திரு காசிராஜன் மேடை நிகழ்வுகளைக் கவனித்துக் கொண்டனர்.

   உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சற்று தாமதமாக வந்தார் கவிஞர் தங்கம்மூர்த்தி தன் துணைவியாருடனும்( திருமதி அஞ்சலி) தன் இணைபிரியாத தோழர் முத்துச்சாமியுடனும்.(நண்பர் பேரவை) அவர் வந்த உடன் பாடிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் கவிஞர் தங்கம் மூர்த்தி வந்துவிட்டார் என்று மைக்கில் கத்தி தன் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

   என் தோழி புதுக்கோட்டையின் குயில், திருமதி மீனாசுந்தர் தன் அழகுக்குரலால் நடத்திட்டப் பாட்டுக் கச்சேரி கேட்பவர்கள் காதில் தேனைப் பாய்ச்சியது.

   இன்று மஹாராஜ் மஹால் இருக்கும் தெருவெங்கும் அடைத்து நின்றது பெரிய மகிழுந்துகளும், இருசக்கர வாகனங்களும். கொஞ்ச நேரம் அந்த்ப் பகுதியே ஸ்தம்பித்து விட்டது.

   எங்கள் குடும்ப நண்பர் என்ற அளவிலும் ஒரு தலைமை ஆசிரியர் என்ற அளவிலும் எனக்கு பெருத்த மகிழ்ச்சியைத் தந்தது இந்த விழா

   ஓய்வு பெறும் அவ்ர் அமைதியாகவும், இனிமையாகவும், வாழ வாழ்த்துக்கள்.



 



Tuesday, June 3, 2014

இன்று என் பள்ளி

   இன்று போனதும் கையைப்பிடித்துக்கொண்டே என்னை வரவேற்ற மனோஜா நான் இதழ் பிரித்து புன்னகை செய்யுமுன் நற்காலை வணக்கம், வாழ்க வளமுடன் என்றாள். என்னது ?என்றேன். உங்களுக்கு தமிழ் பிடிக்குமே என்று குட்மார்னிங்கை தமிழில் சொல்லி வாழ்த்தினேன் என்றாள்.

 எனது கைப்பையையும் சாப்பாட்டுக் கூடையையும் வலுக் கட்டாயமாக பிடிங்கிக் கொண்டாள். எனது கையைப் பிடித்துக் கொண்டே எந்து வகுப்பறையின் வாசல் வரை வந்தவள், நேற்று என்னைப் பற்றி “பேச்சு புக்கு லயும் புலாக்கு லயும் எழுதினீங்களா? என்றாள். நானோ இவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாமல் ‘திரு திரு’ வென விழித்தேன். வழக்கமாக அவர்கள் தான் என்னுடைய கேள்வி நேரங்களில் மரியாதையாக விழிப்பது வழக்கம். ( அதாங்க திரு திரு னு) இன்று நான்.

   மீஸ்- பேச்சு புக்கு -டூவீவீட்டரு- புலாக்கு என்றாள். அழுத்தி. எனக்கு சரெலென உரைத்தது.  இவள்  face book, twitter, blog  பற்றித்தான் பேசுகிறாள் என்று புரிந்தது. நேற்று அவள்தான் மாணவர் தலைவி என்று தேர்ந்தெடுக்கப்பட்டதுமே அவளாக வந்து என் கையைக் குலுக்கி வாழ்த்துக்கள் கூறிய போதும் இன்று என்னைக் கண்டதும் நற்காலை வணக்கம் என்று எனக்கு முகமன் கூறியதும் என்க்கு ரொம்பப் பிடித்தது.

 தற்போது ஃப்ஸ்புக், பிளாக், என்றெல்லாம் சொல்லவும் ( உச்சரிப்பு சரியில்லாவிட்டாலும் தெரிந்திருக்கிறதே என்ற உணர்வு) எனக்குள் பூக்கள் சொறிந்து கொண்டிருந்தது.

   இவள் தான் சென்ற ஆண்டு என் பிறந்த நாள் அன்று மின் விசிறியில் பூக்களைக் கொட்டி என்னை வரவேற்று வாழ்த்தியவள். ( பார்க்க எனது முந்தைய பதிவுகள் ) இவர்களுக்காக இன்னும் நான் அதிகமாக சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அன்பு கலந்த சிரத்தையுடன் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் எனக்கு வழங்கி வருபவர்கள். .

   நான் அவளைக் கூப்பிட்டு அது பேச்சு புக்கு இல்லை ஃபேஸ்புக் என்றும் புலாக் இல்லை பிளாக் என்றும் சொன்னேன். சிறு பிள்ளைக்குச் சொல்லித் தருவது போல். உடனடியாக அவள் அதுல தானெ எல்லோரோடயும் பேசுறீங்க அப்ப அது பேச்சு புக்கு தானே என்றாள் அவளுடைய சாமளிக்கும் திறனை நான் வெகுவாக ரசித்தேன். இப்போது அவளை இன்னும் நேசிக்க ஆரம்பித்து விட்டேன். சரி. இன்று தான் பாடம் தொடங்க கூடாது என்றாளே, சரி என்ன செய்யலாம்? வகுப்பு நேரத்தை கண்டிப்பாக வீண் செய்யக்கூடாது. செய்ய மாட்டேன். அதற்கு அனுமதி இல்லை என்றேன். இதன் வழியாக. அவர்களுக்கு வேலையின் மகிமையையும் பொறுப்பில் கடமை, நெகிழ்வு தன்மையிலும் நேர்மை, போன்றவற்றைக் கற்று கொடுக்க நினைத்தேன்.

   இன்று முதலில் நான் கால அட்டவணை தயார் செய்ய வேண்டும். பிரிவேளைகளில் யார் யார் என்ன வகுப்பெடுப்பது போன்ற பல நிர்வாக வேலைகள் இருந்த்தன.( இன்னும் பள்ளி விட்டு செல்லும் மாணவர்களுக்கு டி.சி வேறு எழுதி வழங்க வேண்டும்.

   இன்று கால அட்டவணை தயார் செய்து விடுவீர்களா? என்றாள். ஆமாம் என்றேன். அதில் விளையாட்டுப் பிரிவேளை தினமும்  அரைமணி நேரம் வேண்டும், வாரம் இருமுறை, பாட்டு, கதை, நடனம், பேச்சு போன்ற பாடம் அல்லாதவை வேண்டும் என்றாள்.

   சென்ற ஆண்டு தயார் செய்திருந்தலில் வாழ்க்கைக் கல்வி என்ற பெயரில் பெண்கள் மலர், வாரம்லர், சுட்டிவிகடன்,மங்கையர் மலர், போன்றவைகளில் வரும் எளிய கைவினைப் பொருட்ட்கள் செயல்பாடுகள் போன்ற சில வை மட்டும் ( எங்களுக்கு பிடித்ததாகவும் எளிய தாகவும் இருப்பதை மட்டும் ) சொல்லிக் கொடுத்து வந்தோம். என்க்கும் அவளீன் ஐடியா சரியெனப் பட்டது. ஓகே. டன். என்றேன்.

   ஆனால் எனக்கு நீங்களும் ஒரு உத்திரவாதம் தர வேண்டும் அது போன்ற வகுப்புகளில் அதிகமாக சப்தமிடுவதும் கட்டுப்பாடின்றி அலைவதும் பேசுவதும் தவிர்க்கப் படவேண்டும் என்றேன். உடனே தனது வலது கையைத்தூக்கி கட்டை விரலை உயர்த்தி ஒரு கண்ணை மட்டும் சுருக்கி ஓ.கே.டன் என்றாள்.

   அப்போது தானே நானும் ஓகே. டன் என்றேன் . உடனே அவளும் ஓகே டன் என்கிறாளே என்று எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.

   நேற்று அவள் தான் தலைவி என்று அறிவித்த போது மற்ற வகுப்புப் பெண்கள் அவளைத் தூக்கி ஹேய் என்று சப்தமிட்டார்கள் அல்லவா? இன்று நான் எனது புகைப்படக்கருவியை சரி செய்து விட்டதால் ( காலையே அதனைக் கேட்டு உறுதி செய்து கொண்டு விட்டாள்)மீண்டும் அந்த மாணவிகளைத் தூக்கச் சொல்லி புகைப்படம் எடுக்கச் சொன்னாள். நாங்கள் எடுத்துக் கொண்டிருந்த போதே, இன்று வருகிறேன் என்று சொல்லி ப் போன எங்கள் தலைவர், வாக்குத் தவறாமல் வந்து விட்டார்.  புத்தகம் கொடுப்பது போல் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவற் சிறியதாக சிற்றுரை என்ற பெயரில் ஒரு அழகான பேருரை வழங்கினார். நல்லாபடிச்சு பெரிய ஆளா ஆகணும் என்பதை பற்பல வார்த்தைகளில் மிகத்தெளிவாக விளக்கினார்.

   இன்று மறக்காமல் ஃபேஸ் புக்கிலும் பிளாக் கிலும் எழுதிவிடுங்கள் என்றாள் ஒரு ‘ஆணை’ போன்ற தொனியில். தான் சொல்வது சரிதானா என்று மீண்டும் ஒருமுறை ஃபேஸ்புக், பிளாக் என்று சொல்லிக் கொண்டாள்.  அப்படியே  ஆகட்டும் என்றேன். எழுதிவிட்டேன். நாளை எத்தனை லைக், எத்தனை கமெண்ட் என்று கேட்டாலும் கேட்பாள். அவளையும் மற்றும் என் மாணவர்கள் அனைவரயும் நலமோடும் வளமோடும் பிரச்சனைகளை எதிர் கொள்ளவும், சாமாளிக்கவும், தெளிவு பெறவும் வாழ்த்துங்கள்.

பின்குறிப்பு  .:





இது ஒரு குக்கிராமம். தொலைக்காட்சி பெட்டி தவிர வேறு பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அறியாதவர்கள் இந்த மக்கள். நான் உதவி ஆசிரியரோடு பேசுவதையும் அவர்களிடம் உங்களைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளேன் என்பது பற்றி கேட்டுக்கேட்டே அவள் இந்த அழகிய அறிவைப் பெற்றுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது



Monday, June 2, 2014

பள்ளி துவக்கம்

   இன்று பள்ளி தொடக்கம். பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளி 9 ம் தேதி என்று கூறப்பட்ட வதந்தியால் ஊருக்குள் நான் நுழைவதைப் பார்த்த பிறகு அவசர அவசரமாக குளித்து விட்டு( நிறைய பவுடர் போட்டுக் கொண்டு ) வர ஆரம்பித்தனர். என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டு அரைமணிநேரம் என்னைப் பேட்டி எடுத்தார்கள். நான் பார்த்த படங்கள், சென்ற ஊர்கள், கோயில்கள், வாங்கியவை, ( வாங்கிய திட்டுக்களை ஒருவரிடமும் சொல்ல வில்லையே)
 என்ன செய்தேன்? என்பதை எல்லாம் மாறி மாறி கேள்வி கேட்டு தொலைத்து எடுத்தனர். ( மனசுக்குள் எப்பவுமே நீங்களே கேள்வி கேட்டு எத்தனை நாட்கள் எங்களை திடு திரு நு முழிக்க வச்சுருப்பீங்கன்னு நினைச்சுருப்பாங்களோ???)


முதல் நாள் என்பதால் எல்லோருடைய நெற்றியிலும் விபூதி, குங்குமம், மஞ்சள், என்று நெற்றியில் இடமே இல்லாமல் பக்கிசிரத்தையாய் பூசி வந்தனர். பெண் குழந்தைகளில் பலர் பூ சூடி வந்திருந்தனர்.


   வெயில் என்றும் பாராமல் கருமமே கண்ணாக விளையாடியதால் பலருக்கு வெயில் உபாதைகளான கட்டிகள், வியற்குரு போன்ற சருமத்தொல்லைகள் பரவியிருந்தது.

   காலையே தலைவர் தொலைபேசி தன் சந்தேகம் தீர்த்துக் கொண்டார். ( இன்று பள்ளி உண்டா? நோட்டு வந்து விட்டதா? சீருடைகள் வழங்கி விடலாமா? என்பது தான்.)

   நான் என் மாணவர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கும் போதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பக் கடித்ததோடும், புதிய சேர்க்கைக்கு விண்ணப்பம் கேட்டும், இன்றே செர்க்கவா 9 ம் தே தி சேர்க்கவா என்று என்னிடமே ஜோதிடம் கேட்டுக் கொண்டும் இருந்தார்கள். மதியம் 12 மணி வரை எதற்கும் நேரமில்லை. சீருடைகள், குறிப்பேடுகள்,புத்தகப்பை,வண்ணக்கிரேயான்கள்,புத்தகங்கள் எல்லாம் வழ்ங்கி, அதற்கு கையெழுத்து வாங்கி அடேயப்பா...


   சீருடைக் கொடுத்து திரும்புவதற்குள் மாணவர்கள் எல்லோரும் அடுத்த அறைக்குச் சென்று பழைய சீர்டைகளைக் கழட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு புதிய சீருடையுட்ன் நின்றார்கள், என்னவோ பெரிதாய் சாதித்த மகிழ்வில். ( நான் சொல்லவேயில்லையேப்பா)

   பள்ளி சுற்றுச் சுவரைச் சுற்றி கருவேல மரங்கள் அது ஒரு சுற்றுச் சுவர் எழுப்பியிருந்தது. நல்ல வேளை ( 3 வேப்பமரம், 1 புங்க மரம், 1 முருங்கை, 1 குல்மொஹர்) மரங்களுக்குத் தினமும் தண்ணீர் விடச் சொல்லி ஒரு இளைஞனிடம் சாவி கொடுத்து 100 ரூ கொடுத்து வந்தேன். அவன் நன்றாகவே நீர் ஊற்றிப் பராமரித்திருந்தான்.

   தளதள வென்று வளர்ந்து தலை அசைத்து என்னை வரவேற்பது போலவும் எனக்கு நன்றி கூறியது போல வும் இருந்தது, அந்த மரங்களின் அசைவுகள். எப்போதும் விடுமுறையென்றாலும் நான்கு முறையேனும் பள்ளி செல்வது என் வழக்கம். இம்முறை அதிக வேலைப் பளுவினாலும் உறவினர் வருகையாலும் செல்ல இயலவில்லை. 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடச் சென்றதோடு சரி. அதனால் பள்ளியைப் பார்க்க ஆவலாகவே இருந்தது.

 ஒரு நல்ல தியானத்தோடு வகுப்பைத் ஆரம்பிக்கலாம் என்றேன். உடனே ஒருத்தி எழுந்து தியானம் ஓ.கே. பட் நோ வகுப்பு என்றாள். ( ஐயோ என் பிள்ளைகள் இங்கிலீசு பேசுறாங்கப்பா)

    சர்தான். நாளையே அரம்பிக்கலாம் என்றேன். நாளை செவ்வாய்க்கிழமை. புதன் கிழமை தான் ஆரம்பிக்க வேண்டும் என்றாள்.(அவளே தான்) அதுவும் சரிதான் என்றேன்.( எல்லாம் என் நேரம் டா)

   பள்ளி மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றேன். எவள் வகுப்பை புதன் கிழமை தொடங்கலாம் என்றாளோ அவளையே போட்டியேயின்றி ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள்.அவள் தான் மாணவர் தலைவி என்று அறிவித்ததும் என்னை ஒரு பார்வை பார்த்தாள். ( என்னவாக இருக்கும்?) அவளாகவே வந்து என் கை குலுக்கி வாழ்த்துக்கள் என்றாள். உண்மையில் நான் மிரண்டு போனேன்.முதலில் நான் தானே அவளூக்கு வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்????

   உணவு இடைவேளையின் போது எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்றாள். ( நான் வழக்கமாக அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் தான் சாப்பிடும் வழக்கம் வைத்திருந்தேன்) உங்கள் சாப்பாட்டை எடுத்து வாருங்கள் என்றாள். நான் போவத்ற்கு முன்பே எனக்காக பாய் விரிக்கப் பட்டிருந்தது.

 அவள் பெயர் மனோஜா. ( கடைசி எழுத்து ஜே வருதே அதனால் இருக்குமோ???) பள்ளியில் நிறைய கதைப் புத்தகங்கள் இருக்கிறது. எல்லோரும் அதனைப் படிக்க வேண்டும் என்றும் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்றும் ஆணையிட்டாள். ஆண்பிள்ளைகள் எப்போதுமே கொஞ்சம் அடங்காமல் பேசிக்கொண்டோ விளையாண்டு கொண்டோ ஏதேனும்குறும்பு செய்து கொண்டே இருப்பார்கள். அதுவும் முதல் நாள் அவர்களை அடக்குவது என்பது...????


 ஒருவரும் சத்தம் கித்தம் எதுவும் போடலையே. “மூச்” ( நான் தான் சொன்னேனே அவள் பெயரில் “ஜே” இருக்குனு. ஒருவரைக் கூட வெளியேஎ விளையாட விடவில்லை வெயில் அதிகமாக இருக்குதாம். ( அவளே தான் சொன்னாள்) ( சரி சரி ஏதோ நல்லது நடந்தா சரிதானே?)

  முதல் நாள் இனிமையாக இருந்தாலே எல்லா நாளும் இனிமையாக இருக்கும் ( முதல் நாள் நல்லாயில்லாட்டாலும் நல்லா ஆக்கிடுவோம்ல....)

  முதல் நாளை வெற்றிகரமாகத்துவங்கியுள்ளேன். வெற்றி பெறுவேன். ( பெறுவேன்ல)
              ********************************************

பின்குறிப்பு1
*************

   இந்த் ஊரிலிருந்து 6 பேர் 10 வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்கள். எல்லோருமே 400 க்குமேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களாம். ஒருவர் மட்டும் தொழில் நுட்பக் கல்வி மற்றவர்கள் மேற்படிப்பு. அனைவருமே அறிவியல் கணிதம் பிரிவை எடுத்துள்ளார்களாம். அதில் ஒருவனுக்கு மட்டும் மருத்துவராக விருப்பமாம். பேசப் பேச ஆசையாகவும் இன்று முழுவதும் மகிழ்வாகவும் இருந்தது போல் தோன்றியது.

பின்குறிப்பு2
**************

பற்பல சிற்சில தொழில் நுட்பக் காரணங்களால் புகைப்படம் எடுக்க இயல வில்லை.வருத்தம் மனோஜா வுக்கு மட்டும் இல்லை. தலைவருக்கும் வருத்தம் தானாம். புகைப்படம் எடுக்க நாளையும் வருவேன் என்று சொல்லியிருக்கிறார்.

   

Sunday, June 1, 2014

மதிப்பெண்கள்

இன்று அலுவலகத்தில் மாணவர்களுக்கான விலையில்லா குறிப்பேடுகள், (நோட்டு) ,விலையில்லா சீருடைகள் கொடுத்தார்கள். சீருடை ஒரு பள்ளியிலும், குறிப்பேடுகள் ஒரு பள்ளியிலுமாக வழங்கப்பட்டது. அதிகமான நெருக்கடியைத் தவிர்க்கவும், ஒரே இடத்தில் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்கவும் இது போன்ற ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்வார்கள்.(முன்பெல்லாம் முண்டி அடித்துக் கொண்டு யார்   ( வரிசையின் பலர் நின்று கொண்டு இருந்தாலும்) முன்னால் போகிறார்களோ அவர்களுக்கும் சத்தமாகப் பேசி காரியம் சாதிப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதெல்லாம் தனிக் கதை.)

   ஆனால் தற்போது அவரவர்க்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில் யாருக்கும் சிரமம் இல்லாது மிகவும் சரியான முறையில் சரியான நேரத்திற்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. (என்னைப்போன்ற வாயில்லாப் பூச்சிகளுக்குதான் சிரமம் இல்லை.பந்தா பார்ட்டிகளின் எந்தப் பப்பும் வேகலைல)

   குறிப்பேடுகளும் சீருடைகளும் வேறு வேறு இடங்களில் என்பதாலும் ஒரே வழித்தடத்தில் ( ஒரே ரூட்டில் ) இருக்கும் பத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இணைந்து ஒரு சரக்கு உந்து ( லோடு ஆட்டோ) எடுத்து அதற்கான செலவுகளைப் பிரித்துக் கொண்டு எங்கள் பள்ளிகளில் கொண்டு போய் வைத்து விட்டு வருவது வழக்கம். இதற்கும் யாரேனும் ஒருவரோ அல்லது இருவரோ பொறுப்பேற்றுக் கொள்வோம்.எனவே லோடு ஆட்டோ முழுவதும் ஏற்றி முடிந்ததும் தான் அந்தந்த தலைமை ஆசிரியரகளும் செல்வோம். அவரவர் பள்ளிக்கு பொருட்கள் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டுமல்லவா? இதில் கொஞ்சம் நேரம் வீணாகும் தான் ஆனால் சரியான முறையில் நடக்கும்.

   எனவே அவரவர் பகுதிக்குச் செல்லும் மற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்காகவும் லோடு ஆட்டோவுக்காகவும் கொண்டு செல்ல ஒத்துக் கொண்ட ஆண் அல்லது பெண் த.ஆசிரியர்களுக்காகவும் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்த்தது. ( என்ன பண்றது? இந்த கொடுமையான வெயிலில் தான்)

   முன்பெல்லாம் இவர்களின் பேச்சுக்கள் ஆட்சி, நடிகைகள், திரைப்படம், ஆடைகள், திருமணங்கள், போன்ற வகையில் சென்று ஏதாவது ஒன்றில் நிறைவடையும். ஆனால் இன்று நடந்த பேச்சு அனைத்தும் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றித்தான். முன்பெல்லாம் அம்மா, அப்பாவை வைத்து பிள்ளைக்ளை மதிக்கப்படுவார்கள். ஆனால் இன்றோ பிள்ளைகளின் மதிப்பெண்களை வைத்து பெற்றோர்களை மதிக்கிறார்கள் என்று இவர்களின் பேச்சின் மூலமாகத் தான் அறிய முடிந்தது.

 

ஒருவரின் மகள் 493ம், மற்றவரின் மகள் 486ம் மற்றவரின் மகன் 477ம் பெற்றிருந்தனர். வந்திருந்தவர்களின் பிள்ளைகளில் பெரும்பான்மையானவர்கள் 450 க்கு மேல் தான் எடுத்திருந்தனர் என்று அவர்களின் பேச்சு வாயிலாக அறிய முடிந்தது. இதில் சென்ற வருத்திற்கு முந்தைய வரும் ஒருவரின் மகள் 470 எடுத்திருக்கிறாள். அதை அவர் இவரிடம் பெருமையாக பேசியிருப்பார் போல. 470 எடுத்தவரின் தந்தையை 486 எடுத்தவரின் தந்தை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். அவர் மகள் 400 எடுத்திருந்தாலும் அவர் கொண்டாடுவார். ஏனென்றால் அந்தக் குழந்தையின் தகுதி அவ்வளவு தான் என்றார். 465 எடுத்த மற்றவரைப் பார்த்து இவருக்கு குழந்தைகள் என்றால் உயிர். மார்க்கே எடுக்கவில்லை என்றாலும் கோவிக்கவே மாட்டார் என்றும் பலரின் குணநலன்களையும் குறைநலன்களாகக் கருதி சப்தமாக சிரித்து வம்பு செய்து கொண்டிருந்தார்.

   ஒரு குழந்தை அவரவர் மனநிலைக்கு ஏற்ப , சூழக்கு ஏற்ப மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள். அதனை பெரும் கர்வமாகக் கொண்டு மற்றவரைத் தாழ்த்துவது எந்த விதத்தில் நியாயம்?  மதிப்பெண்கள் எடுத்தால் போதுமா? வேறு பல திறன்கள், ஆற்றல்கள், இருந்தால் தானே வாழ்வை வெற்றி கொள்ள முடியும்? இதெல்லாம் விளங்காமல் இவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களை உயரமாக வைத்துப் பேசியதும் இகழ்ந்ததும் நல்ல நிகழ்வாகத் தெரியவில்லை .

   இவர்களே இப்படி என்றால் இவர்களிடம் படிக்கும் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்? இந்தப் போக்கு நியாயம் தானா? இது போன்ற அவலங்களை நாம் எப்போது குறைப்போம்? மேலும் ஒரு சர்ச்சையும் அங்கு நடந்தது.நான் அந்த மதிப்புமிகு பள்ளியில் சேர்த்தேன். இவ்வளவு கட்டணம் கட்டினேன். ஆனால் அவரோஇதே ஊரில் குறைவான கட்டணம் உள்ள பள்ளியில் சேர்த்தார். என்றெல்லாம் கூட கிண்டல்கள் தொடந்தது. பிள்ளைகளை தனக்க்குப் பிடித்த துறையில், தன் குழந்தைக்குப் பிடித்த துறையில் சேர்த்து விடாமல் மதிப்புக்காக இஞ்ஜினியரிங் (தமிழ்நாட்டில் மட்டும் 535 கல்லூரிகள் இருக்கிறதாம்)  போன்ற காசுப் படிப்புகளில் சேர்த்து விடுவதும் இதனால் தானோ என்று திகைக்கும் வகையில் இருந்தது அந்த கிண்டல்கள். ஒருவர் கலைக் கல்லூரியில் தன் பிள்ளையைப் படிக்க வைக்கிறாராம் அவரை நோக்கித் தான் இந்தக் கிண்டல்..

   அங்கிருந்த சிலர் அவர் நகைச்சுவையாக பேசுவது போல் இருக்கிறதே என்று ரசித்துச் சிரித்தாலும் பலரின் முகம் அவமானத்தாலும் வேதனையாலும் சுருங்கியது. மனசு அருவருத்தது. நாம் எங்கே வசிக்கிறோமோ அங்கேதானே பள்ளியில் சேர்க்க வேண்டும்? வேன் வருகிறதே எனபதற்காக தொலை தூரங்களில் கொண்டுபோய் சேர்த்து என்ன பயன்? என்று கிண்டலடிக்கப்பட்ட ஆசிரியர் புலம்புக் கொண்டுந்தார்.

   நமக்குப் பிள்ளைகளின் பாதுகாப்பும் மனநலனும், தானே முக்கியம். அதைவிடுத்து அதிக காசு கேட்கும் இடம் தான் கெளரவமான இடம் என்றும் அதில் சேர்ப்பதில் தான் தனக்குப் பெருமை என்றும் மருத்துவமும் பொறியியலும் தான் உயர்ந்த படிப்பு என்றே பேசிய அவரைப் போன்றவர்களை என்ன செய்வது? ஒரு நடுத்தரமான பள்ளியில் தன் பிள்ளைகளை சேர்த்திருந்த ஒருவரும் அரசுப் பள்ளியில் சேர்த்திருந்த ஒருவரும் தலை தொங்கி அவமானமாக உணரும் அளவுக்கு இருந்த்தது. அவரது கிண்டல். இதையும் என்ன செய்வதென்று தெரியவில்லை. 

Friday, May 30, 2014

தோழிகள்

   நாகலெட்சுமி என்று எனக்கொரு தோழி. நல்ல கருப்பு நிறம்.மிக மிக கவர்ச்சியான உருவமும், முகமும், தோற்றமும் கொண்டவள். பார்த்ததும் மீண்டும் பார்க்கத்தூண்டும் முகமும் புன்னகை தவழும் சிரிப்பும் அவளிடம் எப்போதும் இருக்கும்.

    கல்லூரி காலங்களில் மிக நன்றாகப் பழகுவாள் , அதைவிட நன்றாகப் படிக்கக்கூடியவள்.எல்லாப் போட்டிகளிலும் அவள் பெயர் இருக்கும். சிலவற்றில் தான் பரிசுகள் பெறுவாள். ஆனால் போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்த மாட்டாள். சலிக்க மாட்டாள். அப்படி ஒரு விடா முயற்சிக்காரி.

   நாங்கள் பி.காம் முடித்ததும் எங்கள் வகுப்பில் இருந்த எல்லோரும் எம்.காம். சேர்ந்து விட்டனர். என்னைப் போன்றவர்கள் தொலைதூரக்கல்வி வழியாகவும் மற்றவர்கள் அதே கல்லூரியிலும் படித்தார்கள்.அவளும் கல்லூரியிலேயே படித்துப் பட்டம் பெற்று போட்டித் தேர்வுகள் அனைத்தும் எழுதியதில் வங்கித்தேர்வில் தேர்ச்சி பெற்று வங்கியில் பணிபுரிகிறாள்.


   பிறந்ததும், வளர்ந்ததும், திருமணம் ஆனதும் ஒரே ஊர் என்பதால்  எனக்கு என் பழைய நட்புகளைப் பார்க்கும் வாய்ப்பும் கொடுப்பினையும் இருக்கிறது. (பெண்கள் மட்டும் தானெ திருமணம் ஆனதும் பிறந்த ஊர் துறப்பவர்கள்..என்வே அவர்களைத் துறவி என்று அழைக்கலாமோ....?)

   வங்கியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவளை நினைத்து எப்போதும் பெருமையும் மகிழ்ச்சியும் எப்போதும்எனக்கு  உண்டு. ( எளிதாக லோன் வாங்கிவிடுவேனோ என்றெல்லாம் சந்தேகப்படக்கூடாது) அவளுக்கும் நான் தலைமைஆசிரியராக இருப்பதில் பெரிய மகிழ்வாம்..( நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் எங்கள் தலைமை ஆசிரியர்களை நினைவு கூர்ந்து மகிழ்வோம்.மாடர்ன் வார்த்தையில் சொல்லப் போனால் கலாய்ப்போம்)

   பார்த்தே நீண்ட நாட்கள் ஆனதாலும் இப்போது எனக்கு விடுமுறை என்பதாலும் வற்புறுத்தி என்னை அவள் இல்லத்திற்கு அழைத்தாள். ( நான் மறந்தும் கூட யார் வீட்டுக்கும் போகவேமாட்டேன். அதென்னவோ அது எனக்குப் பிடிப்பதில்லை)

   பங்களா என்று சொல்லக்கூடிய வீடு அது. அவளுக்கு இரண்டு பெண்கள். ( அவளுக்குமா?) பள்ளியில் படிக்கிறார்கள். அவள் கணவனும் அரசுப்பணியில் இருக்கிறார்.

   எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும், வயித்தெறிச்சலாகவும் இருந்தது. அவள் பேசி வாங்கிய நினைவுப்பரிசுகள் (ஷீல்டு) எல்லாம் ஒரு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு  வைப்பு அறை (ஸ்டோர் ரூமில்) கிடந்தது அந்த வீட்டின் முகப்பில் அவள் பெயர்ப் ப்லகை இல்லை. இவள் எம்.காம்.,எம்.பில்.,பி.ஹெச்.டி., படித்தவள். அவள் கணவர் பெயரோடு பி.ஏ. என்று எழுதிய பெயர்ப்பலகை இருந்தது. சம்பளமும் கூட கண்டிப்பாக இவளை விடக் குறைவாகத்தான் இருக்கும்.

   அந்த வீட்டில் அந்தக் கணவருக்கு தனிஅறை, அந்தக்குழந்தைகளுக்குத் தனிஅறை , கணவரின் அம்மாவிற்குத் தனி அறை இருந்தது. இவளுக்கென்று தனிஅறை இல்லை. ஏன்? (எல்லா அறைகளிலும் குழியலறை,கழிப்பறை இணைக்கப்பட்டிருந்தது. இது போக ஒரு படுக்கையறையில் உறவினர் வந்தால் தங்குவார்களாம். இவள் சில நாள் கணவர் அறையில் தூங்குவாளாம். சிலநாட்கள் தன் மகள்களுடன், சில நாட்கள் மாமியாருடன். )

   அந்தக் கணவர் ஏதோ ஒரு விழாவிற்குப் போய் நினைவுப் பரிசு வாங்கியிருக்கிறார். அது கூடத்தின் ஷோ கேஸை அலங்கரித்திருந்தது. ( அந்த ஷீல்டு அந்தக் கூட்டத்திற்கு வந்த எல்லோருக்கும் வழங்கப்பட்டது. (அநேகமாக அன்று மேஜை துடைத்தவருக்குக் கூட அது வழங்கப்பட்டிருக்கலாம். 150 ரூபாய் கொடுத்தால் நமக்கும் கிடைக்கும்)
 
   ஆனால் இவள் பேசி வென்று வாங்கிய ஷீல்டுகள் சாக்குகளுக்குள் அடைபட்டிருக்க வேண்டுமா என்ன? ஏன்??

அவர்கள் வீட்டில் துவைக்க , பாத்திரம் கழுவ, வீடு துடைக்க, என்று பணியாளர்கள் வருகிறார்கள். ஆனால் சமையலை இவள் தான் செய்யவேண்டுமாம். செய்கிறாள். காலையில் வேலைக்குப் போகும் அவசரம். இரு பெண் குழந்தைகளுக்கும் தலை சீவி, கிளப்பி, மாமியாருக்கு காபி, டிபன், கொடுத்து, கணவருக்கு குழந்தைகளுக்குக் கொடுத்து மதிய சமையலும் செய்து வைக்கிறாள்

    அந்த மாமியாரோ, கணவனோ அவரவர் அறைகளை விட்டு வெளியே வரவில்லை. 8 மணிக்கு எழுந்து குளித்து, காபி டிபன் சாப்பிட்டு உடன் சென்று விடுகிறார். வணிகவியல் படித்த என் தோழிக்கு தமிழின் மீது தீராத பற்றும் காதலும் உண்டு. கம்பராமாயணம், சிலப்பதிகாரம், போன்ற நூல்களோடு யாப்பெருங்கலக்காரிகை தண்டியலங்காரம், போன்றவற்றை எல்லாம் ஆர்வத்துடன் படிப்பாள். பேசுவாள். விவாதிப்பாள்.

   ஆனால் இன்று அது பற்றி கேட்டவுடன் தன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டு வேறு பேச்சுக்கு நம்மை மாற்றுகிறாள். துடிப்பான அந்தப் பெண் எங்கே? வெறும் சமையலுக்கும் , உழைத்து, பணம் தரும் ஏ.டி.எம். மிஷினாகவும் இருக்கும் அவளின் நிலை பரிதாபத்துக்குறியதாக இருந்தது.

    வெளியில் இருந்து பார்த்தால், நிறைய நகைகள், வங்கியில் பணம், அழகிய குழந்தைகள், நல்ல கணவன், சொந்த வீடு, கார், என்று எல்லாம் நிறைந்த வாழ்க்கையாகத்தான் தெரிகிறது,

   ஆனால் இதில் என்தோழி எங்கே? எங்கே ஒடுங்கிக் கொண்டாள்???? எங்கே ஒதுங்கிக் கொண்டாள்??? ஏன்???? அவள் ஏன் தன் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளவில்லை??? ஒரு வங்கியைக் கட்டிக் காக்கும் நிர்வாகத்திறன் கொண்ட அவளால் தன் திறனைக் கட்டிக்காக்கும் திறன் அற்றுப் போனது ஏன்???? அவளீன் பேச்சாளர் கனவை சிதைத்தது யார்? அவளின் குரல்வளையை நெரித்தது யார்??//

   அவள் சம்பாதிப்பதற்காகவாவது அவளுக்கென்று ஒரு தனியறை இருக்கக்கூடாதா? நான் வசதியே இல்லாத வீடுகளைப் பார்த்துக் கேட்கவில்லை. ஆனால் இருக்கும் வீடுகளிலும் பெண்களுக்கென மறுக்கப்படுவது ஏன்??? அவள் புத்தகமே படிப்பதில்லை என்று சொன்னது தான் மற்றொரு அதிர்ச்சி . அவள் கணவனுக்கு பெண்கள் புத்தகங்கள் படிப்பது பிடிப்பதில்லையாம். (இவள் விடாப் பிடியான இந்தியாடுடே வாசகி)

    அப்படியானால் அவருக்குப் பிடித்தது தான் இவளுக்குப் பிடிக்க வேண்டுமா? இவளுக்குப் பிடித்தது அவருக்குப் பிடிக்கக்கூடாதா?இது ஏதோ வேண்டாத வீணான ஆசை யில்லையே. படிப்பது தானே? இந்தக் கேள்விகள் என்க்குள் தான் இருந்தன். எந்தவித வார்த்தைகளையும் சொல்லி அவளின் அழகான குடும்பத்தைப் குலைக்கவிருப்ப வில்லை.

   அவளுக்குச் சிவப்பு நிறம் எப்போதும் பிடிக்கும். இப்போது அந்த நிறத்தில் அவளிடம் ஒரு புடவை கூட இல்லை. ஏன் என்றால் அவள் கணவருக்குப் பிடிக்காதாம். அவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள். எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. வாழ்க்கையில் தோற்றுப் போன பெண் எப்படி வெற்றியான பெண்களை உருவாக்க முடியும்???. அந்தப் பெண்களைக் கராத்தேக்கும் நீச்சல் பயிற்சிக்கும் அனுப்பும் அவள் கணவர் அந்தக் குழந்தை
களின் கணவர்கள் அதை மறுதலித்தால் ஏற்றுக்கொள்வாரா? அதிலும் அவளின் சிறிய மகள் மேன்மைமிகு பாடகி பி.சுசீலா போலவே பாடுகிறாள். அவளீன் தனித்திறன் வருங்காலத்தில் மதிக்கப்படுமா? மிதிக்கப்படுமா? பெண்கள் எங்கே மாறிப்போகிறார்கள்??? ஏன் மாறி ப் போகிறார்கள்?????

Wednesday, May 28, 2014

விருந்தோ விருந்து

 
 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்றார் வள்ளுவர். சிலப்பதிகாரத்திலும் அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்த்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கெடலும்- என்று கண்ணகி கோவலனின் பிரிவாற்றாமையால் செய்ய இயலவில்லை என்று விருந்தோம்பும் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

   மேலும் தொல்காப்பியத்தில் விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே என்றும் நற்றிணையில் அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற என்றும் புறநானுற்றில் விருந்துகண்டொளிக்குந் திருந்தா வாழ்க்கை என்றும் சிறும்பாணாற்றுப்படையில் வெண்சோறு சுவைத்தாள் அலவன் கலவையோடு பெருகுவீர் என்றும் கூறுகிறது.

   ஆனால் இன்றோ விருந்தினர்கள் ( நாம் இருக்கும் இடத்திலிருந்து) பெரியவர்களாக இருந்தால் பார்க்க வேண்டிய கோயில் தலங்களைப் பற்றி அறிந்து கொண்டு வருகிறார்கள்.( விக்கிப்பீடியா தான் அவர்களுக்குக் கக்கீபீடியாவாக இருக்குமோ?) சிறியவர்கள் என்றால் திரைஅரக்குகள் அதில் ஓடும் திரைப்படங்கள் பொழுதுபோக்கு இடங்கள், பார்க்கவேண்டிய இடங்கள் என்று நம்மை விடபொது அறிவில் பிரமாதமாய் இருக்கிறார்கள்.

   அன்றைய காலகட்டங்களில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள் எனவே பெண்கள் ஆளுக்கொரு வேலையாக செய்து மகிழ்ந்து விருந்தை மதித்தனர். இன்றோ தனிக்குடும்பம் .அதிலும் குடும்பத்தலைவி வேலைக்குப்போகிறவரென்றால் விருந்தினர் என்றாலே இடி இறங்கியது போன்று அலறுகிறார்கல். வரும் விருந்தின்ர்களும் “ செல்விருந்தோம்பி வருவிருதந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு என்பது போலவா நடந்து கொள்கிறார்கள்? (அதான் கொல்வார்களே)

   அவர்கள் வீட்டுக்குழந்தைகளால் வீடே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு திருப்பி வைக்கப்படும்.அவர்கள் அராஜகத்திற்கென நம் குழந்தைகள் விட்டுக்கொடுப்பார்கள். பெரியவர்களால் நான்கு மாதத்திற்கு வர வேண்டிய உணவுப்பொருளை வீணாக்கப்படும். ( அது எப்படித்தான் அடுத்த வீட்டு எண்ணெய் என்றால் அரைச்சட்டி ஊற்றித்தாளிப்பார்களோ?)

   விருந்தினர்களால் நேர விரயம், மன விரயம், பொருள் விரயம், வீண் ஆவது தான் மிச்சம். வேறு ஒன்றும்நடந்த பாடில்லை. முடிந்தவரை சண்டை மூட்டி விடுபவர்களாகவே பெரும் பாலோர் வருகிறார்கள். ( ஆயக் கலைகள் அறுபத்து நான்காடு இதையும் சேர்த்திருப்பார்களோ?)

   இதில் ஒரு குடும்பத்தின் கணவனைச் சார்ந்தவர்கள் என்றால் மனைவீன் போக்குகளில் ஏதேனும் ஒரு குற்றமேனும் கண்டுபிடித்தேஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி அலைவார்கள். மனைவியச் சார்ந்தவர்களோ அந்த வீட்டுக் கணவனைப் பற்றி இல்லாதும் தாங்கள் நேரில்பார்க்காதவற்றையும் கூட பார்த்தது போலவே கதை கட்டி விடுவார்கள். ( சங்கர் படத்தில் கதை வசனம் எழுதப்போனால் காசாவது கிடைக்கும்)  ஒருவேளை அவர்கள் குடும்பத்தில் நடந்தவைகளை யாருக்கேனும் தர வேண்டும் என்று நினைப்பார்களோ? ( யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இதிலாவது இருப்போம் என்றோ? )

   வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறுமே பயந்து பயந்து தான் விடியும். ஆனாலும் அவர்கள் வீட்டிலேயே தான் மிகவும் கொடூரமாய் அரங்க்ந்ந்றும் இச்சம்பவங்கள். மூட நம்பிக்கையை நம்புகிறவர்கள் நம்பாதவர்கள் என்று அனைவரும் காகம் கரைந்தால் காகத்தையும் கரித்துக் கொட்டுபவர்களாக மாறிப்போனார்கள்.

   இந்தக்கொடுமையில் சைவர்கள், அசைவர்கள் என்ற பேதமே இல்லை. சைவர்கள் என்றால் சற்று கொடுமைகூடுதலாக இருக்கும். கூட்டு, பொறியல், அவியல், வறுவல், ரசம் பாயாசம் அப்பளம் என்று மனித உழைப்பும் பொருளும் வீணாகும். நம் வீட்டில் தான் அவர்கள் குழந்தையை தானே சாப்பிட பழக்குவார்கள். அதுக்கு தனி இலை போட்டு அனைத்தையும் வைத்து வீடெல்லாம் கொட்டி அதனை பெருமையா பார்த்து வேறு சிரிப்பார்கள்.

   சொந்தக்காசு கொடுத்து வாங்கினால் முருங்கைக்காய்த் தோலையும் மென்று விழுங்கி வைப்பவர்கள் நாகரிகம் என்ற பெயரிலோ, மனதிற்குள் புதைந்து கிடக்கும் வக்கிரம் காரணமாகவோ உணவுப்பொருள் வீணாகும். இது மட்டுமா?

   பல விருந்தினர்கள் வெளியில் விருந்துக்க்கு வந்தால் மட்டும் வாழ்வை சீராக வைத்துக் கொள்வார்கள் போல. காலையில் சிற்றுண்டிக்கு முன் தேநீரும் பின் காப்பியும்(குளம்பியும்) மதியம் பட்டியல், பிறகு மாலை தேநீரோடு ஒரு சிற்றுண்டி, இரவு உணவின் போது ஒரு சிற்றுண்டி, தூங்குமுன் பால் வேறு ( பேருண்டியை ஏன் சிற்றுண்டி என்கிறார்களோ)

   விருந்தினர்கள் வந்து போகும் போதெல்லாம் கணினி கெட்டு விடும். தண்ணீர் மோட்டார் வேலை செய்யாது. மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிஜ் முதற் கொண்டு சீர் கெட்டு விடும். இன்னும் பல எலக்ரிக், எலக்ரானிக் பொருள் கள் தனி. நம் குழந்தைகள் பாடம் படிக்க என்று வாங்கிய பொருள் முதல் ஐபாட்...டேப், வரை எல்லாம் இதற்குள் அடக்கம்.

   அதோடு விடுவார்களா? அவர்கள் வீட்டில் நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் சொல்லியும் அவர்கள் மழலைகள் செய்த குறும்புகளைச் ( அந்த அநியாயங்களுகு இவர்களாக வைத்த பெயர் தான் குறும்பாம்) சொல்லியும்  டண் கணக்கில் தலைவலியை இறக்குமதி செய்கிறார்கள். அதுவும் போக உலகிலேயே அவர்கள் கடைபிடிப்பது எல்லாமே நியாயமாகவும் நாம் செயல்படுவது அத்தனையும் நிற்பது, இருமுவது, தும்முவது  போன்றவைகளில் கூட எங்கே தவறு நடக்கிறது என்று கண்டு கொள்வதில் மகாக்கில்லாடிகளாகவும் பெருங்கணக்கர்களாகவும் இருக்கிறார்கள்.

   காலாண்டு, அரையாண்டு , முழுஆண்டு விடுமுறை விட்டால் அப்பாடா நிதானமாக எழுந்து குளித்து, உணவு சமைத்து , பிடித்த வேலைகள் செய்து குழந்தைகளோடு கொஞ்சி விளையாடலாம் என்பது போய்... யாருக்கும் விடுப்பே விடாமல் தொடர்ந்து  வேலைநாட்களாகவே இருந்து விடக்கூடாதா என்று நினைக்கும் அளவிற்கு விருந்தினர்களின் அராஜகம் அரசியல் அல்லல்களைத்தாண்டியும் நம் வாழ்வைக் குலைக்கிறது. மொத்தத்தில் மே மாதம் உலக்ப் பெண்களின் துக்க கரமான மாதம் என்று அறிவிக்கலாமா என்று யோசிக்கும் வகையில் போய்விட்டது.

  இதில் நாம் வழக்கமாய் பேசும் தோழிகள் கூட நம்மைப் புரிந்துகொள்ளாமல் நாமே நைட்டிநனைய வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது என்ன பேசமாட்டேங்கிற ...ம்.... சரி சரி என்பார்களே பார்க்கணும்.... நாம் தொலைபேசக்கூட சொல்லப்போனால் தொலைபேசியை பார்க்கக்கூட நேரமில்லாமல் தத்தளிக்கும் போது அது அணுவைப் பிளந்து ஆராய்ச்சி செய்வதை விட கொடுமையானது.

   நம் வள்ளுவர் வேறு மோப்பக்குழையும் அனிச்சம் என்றாரா? அவர்கள் முகம் கோணாமல் ந்டக்க இனி கடவுளிடம் தான் கோச்சிங் கிளாஸ் போக வேண்டும். மொத்ததில் விருந்தினர்கள் வேண்டாதவர்களாகவே இருக்கிறார்கள்...