Showing posts with label மழலை இலக்கியம். Show all posts
Showing posts with label மழலை இலக்கியம். Show all posts

Monday, October 27, 2014

கிளி( மழலை இலக்கியம்)

பச்சைக் கிளி ஓடிவா
பாடியாடிப் பறந்து வா
இச்சை கொண்டேன் உன்னிடம்
இனிதாய்ப் பேசு என்னிடம்

சிவப்பு மூக்கு காட்டியே
சிந்தை களிக்கச் செய்கிறாய்
பறந்து வரும் அழகினைப்
படம் பிடித்துக் காட்டுவார்

கிளியின் கணிதம் பொய்க்குமா?
கிள்ளை மொழியும் புளிக்குமா?
இனிய தோழி கிளியக்கா
என்றும் நீயே துணை அக்கா

உன்றன் மொழியைக் கேட்கவே
ஓடி நானும் வருகிறேன்
என்னைக் கொஞ்சிக் கூப்பிடு
இன்பம் என்றும் தந்திடு
***********************************

Tuesday, July 22, 2014

பொம்மை(குழந்தை பாடல்கள்)

பொம்மை நல்ல பொம்மை
புதுமை யான பொம்மை
சாவி கொடுக்க ஆடும்
முரசு கொட்டிச் சிரிக்கும்

கண்ணை நன்கு சிமிட்டும்
என்னைக் கண்டு துள்ளும்
புதிய சட்டை போட்டது
புத்திசாலிப் பொம்மை

கண்ணைப் பாரு மின்னல்
காதில் இரண்டு கம்மல்
இரட்டைச் சடைகள் துள்ளும்
இந்திய நாட்டுப் பொம்மை

அழகு பொம்மை ஆடுது
தலையை ஆட்டிப் பாடுது
எந்தன் அண்ணா தந்த
இனிமை யான பொம்மை
***************************************

Monday, July 21, 2014

மல்லிகை(குழந்தை பாடல்கள்)

மல்லிகை முல்லை செவ்வந்தி
மணக்கும் நல்ல பிச்சிப்பூ
தலைக்கு வைக்க மணக்குமாம்
தஞ்சாவூரு மரிக்கொழுந்து

விலைக்கு வாங்கி வைப்போமா?
வெள்ளைச் சம்பங்கி பூப்பந்தை
ரோஜாப் பூவில் மாலைகட்டி
ராஜாப் போல போவோமா?

தாழம் பூவை தலைக்கு வைத்து
தரணியைச் சுற்றி வருவோமா?
தேசிங்கு ராஜன் குதிரையிலே
தேசம் சுற்றிப் பார்ப்போமா?

நேசம் கொண்ட செண்பகப்பூ
நெஞ்சம் நிறைய வைப்போமா?
வாசம் மிக்க தோட்டத்திலே
வந்து பாட்டுப் படிப்போமா?
**************************************

Sunday, July 13, 2014

சரித்திரம் படைப்போம்

இன்பம் கோடி காண்போமே
இடர்கள் ஓடிப் போ என்போம்
அன்பும் அறனும் சிரித்திடவே
அடக்கம் காத்து வாழ்வோமே

பண்பும் பாசம் மிகக் கொண்டு
பாரில் நன்றாய் வாழ்வோமே
இன்னல் எழுந்து வருமாயின்
மின்னல் போல நீக்குவமே

கன்னல் தமிழில் கவிபாடி
காலம் முழுதும் களிப்போமே
தன்னலம் மறந்தே உழைப்போமே
தமிழின் பெருமை உணர்வோமே

எங்கள் கவிபோல் உலகினிலே
எவரே படைத்தார் சொல்லுங்கள்
சங்கத் தமிழின் புகழ்பாடிச்
சரித்திரம் படைப்போம் வாருங்கள்
**************************************************

காமராஜர்

கல்விக் கண்ணைத் திறந்தவர்
கல்விக் கூடம் கண்டவர்
நல்லோர் பலரும் மகிழ்ந்திட
நண்பகல் உணவு தந்தவர்

இன்னல் தன்னை உணர்ந்தவர்
ஈடில் லாத பெருந்தலைவர்
துன்பம் மக்கள் அடைந்திடவே
தூயவர் பொறுக்க மாட்டாரே

தொண்டு செய்தே வாழ்ந்தாராம்
துணிவு மிகவும் கொண்டவர்
என்றும் அவரைப் போற்றுவோம்
ஏழை வாழ்வை உயர்த்துவோம்

ஐந்து ஆண்டுத் திட்டத்தால்
அகிலம் போற்ற வாழ்ந்தவர்
அவரின் வழியைத் தொடர்ந்துமே
அனைவரும் நன்றாய் வாழ்வோமே
********************************************


(நாளை மறுநாள் கல்வித் திருநாள் முன்னிட்டு)

Thursday, July 10, 2014

நிலா (குழந்தை பாடல்கள்)

நிலா நிலா ஆடவா
நித்தம் என்றன் வீடுவா
உலாச் செல்ல ஏறிவா
உள்ளம் மகிழ ஓடிவா

குழந்தை கூடி ஆடிடக்
குறையிலாது நித்தம் வா
பழமும் சோறும் சாப்பிட
பாய்ந்து நீயும் ஓடிவா

சத்தம் இட்டுப் பாடுவோம்
சண்டையின்றி ஆடுவோம்
முத்துப் பாப்பா அழுதால்உன்
முகத்தைக் காட்ட மகிழுவாள்

எட்டி நின்ற போதிலும்
என்னை மகிழச் செய்கிறாய்
வட்ட நிலா வந்திடு
வண்ண விருந்து தந்திடு
************************************************

Wednesday, June 18, 2014

தொண்டு(குழந்தைபாடல்கள்)

தொண்டு செய்யும் மனத்துடனே
தொடர்வோம் வாழ்வுப் பயணத்தை
மக்கள் சேவை பெரிதெனவே
மதிக்கும் மாந்தர் வாழ்வாரே


காக்கும் கரமே தெய்வம்தான்
காலம் சொல்லும் நன்றியினை
தொண்டு செய்யும் வரலாறு
தூணாய் நிற்கும் நாட்டினிலே


தெரசா என்றொரு தெய்வமகள்
தேசம் கடந்து வந்தாரே
தொண்டுகள் பலவும் தான் செய்து
தூயநெஞ்சம் கொண்டாரே


அன்னை என்றே அவரையும்
அகிலம் போற்ற வாழ்கின்றார்
அன்பே என்றும் பெருமைதரும்
அல்லல் நீக்கி வாழ்வுதரும்


இந்த உண்மை நாமெல்லாம்
இன்றே உணர்வொம்! உய்ர்ந்திடுவோம்
மண்ணில் பிறந்த யாவருமே
மனித நேயம் காத்திடுவோம்.
****************************************************************

Tuesday, June 17, 2014

ஒன்று கூடுவோம்(குழந்தை பாடல்)






மனதால் ஒன்றாய் ஆனோமே

   மக்கள் எல்லாம் கூடுவமே
தனதே தனதே என்றில்லாத்
   தத்துவம் கொண்டு வாழ்வோமே


உனதும் எனதும் சேர்த்துவைத்து
   ஊருக்கெல்லாம் கொடுத்திடுவோம்
தினமும் நாமே எழுந்துவந்து
   தீந்தமிழ்ப் புகழப் பாடிடுவோம்


மதங்கள் தருமே பெருங்கேடு
   மானம் காப்பது பண்பாடு
மதங்கள் என்ற மதம்பிடித்தால்
   மண்ணில் வாழ்க்கை புண்ணாகும்


வதங்கள் செய்து வாழ்ந்திட்டால்
   வரலா  றழித்திடும் புரிந்துநட
பதமாய்ப் பாரை உயர்த்திடவே
   பாங்குடன் வாழ்வில் நடந்திடுவோம்
*****************************************

எல்லைகள்( குழந்தை பாடல்)

இந்தியாவின் வடக்கினிலே
   இமயமலை இருக்குதாம்
இந்தியாவின் தெற்கிலே
   குமரிமுனை இருக்குதாம்

இந்தியாவின் மேற்கிலே
   அரபிக்கடல் இருக்குதாம்
இந்தியாவின் கிழக்கிலே
   வங்கக்கடல் இருக்குதாம்

இந்தியாவின் மக்களில்
   இனியமனம் சிரிக்குமே
இந்தியாவின் மக்களிடம்
   பண்பாடு மணக்குமே

இந்தியாவின் மக்களில்
   இனியதொழில் வளருதே
இந்தியாவின் மக்களிடம்
   நாட்டுப்பற்று ஒளிருதே
 
**************************************

Monday, June 16, 2014

ஒருமைப்பாடு(குழந்தை பாடல்)

ஒருமைப்பாடு நமக்கிருந்தால்
உலகம் என்றும் பெருமையுறும்
அருமை தெரிந்து நடந்து விட
அகிலம் நமக்குத் துணையாகும்

உலகம் வாழ நாம் வாழ்வோம்
உண்மை செழிக்கும் வழி காண்போம்
கலகம் இன்றி வாழ்வதற்குக்
கட்டுப்பாடு மிக வேண்டும்

நாடு வாழ ஊர்வாழும்
நல்லோர் செயல்கள் பயன்சேர்க்கும்
வீடுவாழ வெற்றி பெற
வேண்டும் ஒற்றுமை காப்போமே

மதங்கள் வேறாய் இருந்தாலும்
இந்தியன் என்றே இயம்பிடுவோம்
உதவாப் பிரிவினை இல்லாமல்
ஊக்கம் நாமும் பெற்றிடுவோம்
*******************************************

தரணி போற்ற வாழ்வோம்

தமிழன் என்றே பண்ணிசைத்துத்
   தரணி போற்ற வாழுவோம்
அமிழ்தம் போன்ற மொழியதனால்
   அகிலம் காப்போம் வாருங்கள்


அன்பு கொண்டே அனைவரையும்
   அணைத்து வாழ்வோம் தோழர்களே
தென்றல் போல இணைந்தே நாம்
   தேசப் புகழில் மகிழ்வோமே

முன்னோர் மொழிந்த கருத்துக்களை
   முத்தாய், பொன்னாய்ப் போற்றிடுவோம்
அண்ணல் காந்தி நேருபிரான்
   அறிவு மொழிகள் பேணுவமே

நித்தம் நெஞ்சில் நேர்மையினை
   நிலையாய்ப் பெற்று வாழுவமே
புத்தம் புதிய கலையினிலே
   பூக்கும் தமிழைப் போற்றுவமே

***********************************************

Sunday, June 15, 2014

வணங்கு தமிழ்( குழந்தை பாடல்)

அன்னைத் தமிழை வண்ங்கிடுவோம்
அன்பை நாளும் வளர்த்திடுவோம்
கண்ணாய் உயிராய்ப் போற்றிடுவோம்
கயமை வீழ்த்தப் போரிடுவோம்

கன்னற் சுவையைக் கனியமிழ்தைக்
கருத்தாய் நாளும் பருகிடுவோம்
மண்ணைக் காத்துப் போற்றிடவே
மங்காத் தமிழே உதவிடுவாய்

விண்ணை முட்டும் புகழ்பெற்று
வீரம் கொண்டு வாழ்ந்திடவும்
எண்ணத் தூய்மை எய்திடவும்
எம்க்கு நீயும் வழிகாட்டு

என்றும் எங்கள் நெஞ்சினிலே
எழிலாய் வாழும் தாயே நீ
வெற்றி நல்கிக் காத்திடுவாய்
வேண்டும் உயர்வைக் காட்டிடுவாய்
*******************************************

Tuesday, May 13, 2014

உழைப்பே மேன்மை

உழைப்பு அடிகம் செய்வாயேல்
உண்மை வெற்றி உனக்குவரும்
களைப்புக் கொண்டு தூங்குவோர்
கலங்கும் வாழ்வு வாழ்வாரே

பிழைப்பு சிறக்க நாளும் நீ
பெரிதும் உழைப்பை நம்பிடுவாய்
கவலை இல்லா வாழ்வையும்
கருத்தாய்த் தந்திரும் நமக்குமே

இந்திய நாடு உயர்ந்திடவே
எல்லோரும் உழைப்போம் வாருங்கள்
இழிவு என்பதே இதிலில்லை
இன்பன் ஒன்றே கண்டிடலாம்

உண்டும் உறங்கியும் வாழ்ந்திட்டால்
ஒருவரும் மதியார் அறிவீரே
தொண்டில் முன்னணி வகித்திடுவீர்
தூயவர் எனும்பெயர் பெற்றிடுவோம்
************************************************

Tuesday, January 14, 2014

குறள்{ மழலை இலக்கியம்}

குறளின் கருத்தை உணருவோம்
குறை யில்லாமல் வாழ்வோம்
அறமும் பொருளும் நம்மவர்க்கு
இன்பம் ஒன்றே முதியவர்க்கு

குறளின் வழியே நாம்நிற்க
குன்றா வாழ்வு வந்திடுமே
விதைகள் நன்றாய் இருந்தாலே
விளையும் பயிரும் நன்றாகும்

குறளைப் படிப்போம் நாள்தோறும்
குவலயம் நம்மை போற்றிடுமே
கற்போம் கற்போம் கசடறவே
நிற்போம் நிற்போம் அதுபோல

வள்ளுவர் சொன்ன வாய்மொழியில்
வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்
உள்ளம் வானாய் உயரட்டும்
உவகை தேனாய்ப் பாயட்டும்!
************************************

Sunday, January 12, 2014

விளையாடு( மழலை இலக்கியம்)

நன்றாய் நீயும் விளியாடு
நல்லுடல் வளரும் தெம்போடு
ஒன்றாய்  சேர்ந்து விளையாடு
உள்ளம் சிரிக்கும் மகிழ்வோடு

கட்டுடல் என்றும் பேணிவரின்
கவலை இல்லை நம்மவர்க்கே
நோயில் படுத்த உயிரெல்லாம்
நொடியில் ந்ழுமே தன்னாலே

பாயில் நோயில் படுக்காமல்
பண்பு மக்களெ வாழுங்கள்
படுத்தும் உடுத்தும் வாழ்வதுவெ
வாழ்க்கை என்றே எண்ணாதீர்

உலாவும் பழக்கம் இருந்தாலே
ஊக்கம் பிறக்கும் தன்னாலே
பயிற்சி செய்தேஉடலினைப்
பக்குவமாகக் காத்திடுவோம்
***********************************************

Saturday, January 11, 2014

ராக்கெட்(மழலை இலக்கியம்)

ராக்கெட் அம்மா ராக்கெட்
அக்கினி என்னும் ராக்கெட்
அறிவியல் தந்த ரக்கெட்
ஆற்றல் மிகுந்த ராக்கெட்

சந்திர மண்டலம் செல்லுமே
சாதனை பலவும் புரியுமே
அங்கும் மணலை அள்லியே
அடுக்கு மாடி கட்டுவோம்

புதனில் வீட்டைக் கட்டியே
வியாழனில் உணவை அருந்துவோம்
திரைப்படம் பார்ப்பது வெள்ளியிலே
சனியில் உலவுவோம் இரவினிலே

காலையில் எழுந்து விண்மீனில்
களித்தே ஆடி மகிழ்வோமே
மாலையில் வேறு கோளுக்கு
மலர்ச்சி முகத்துடன் சென்றிடுவோம்
*****************************************

Friday, January 10, 2014

படி (மழலை இலக்கியம்)

காலையிலே எழுந்து படி
கருத்துடன் எதையும் படி
மனதிலே கொண்டு படி
மறக்காமல் இருக்கும் படி

  மூளையிலே இருத்திப்படி
  முனைப்போடு எதையும் படி
  நாளை உனதென்று படி
  நம்பிக்கை கொண்டு படி

சிறந்தஓர் நூலைப் படி
சிந்தையில் வைத்துப்படி
மறக்காமல் நாளும் படி
மகிழ்ச்சியுடன் என்றும் படி

  ஊக்கம் கொண்டு படி
  உயர்வுநாளை உண்டு படி
  ஆக்கம் விளைக்கப் படி
  அறிவியல் விளங்கப் படி
**************************************

பாரத நாடு (மழலை இலக்கியம்)

பாரதம் என்பது நம்நாடு
   பண்பில் அன்பில் உயர்நாடு
நாளும் அதன்புகழ் நீப
  நன்மை விளையும் மகிழ்ந்தாடு

வாழ்வில் உயர்வை நீதேடு
  வளத்தைத் தருமே வயல்காடு
கீழ்மை என்றும் நாடாதே
  கேடுகள் கண்டு வாடாதே

இயற்கை இங்கே செழித்திருக்கும்
  இன்பம் தனையே குவித்திருக்கும்
செயற்கை அன்பு இல்லாத
  சீரிய நாடும் ஈதன்றோ?

இந்தியா போல ஒருநாடு
  எங்கே உள்ளது சொல்நீயே
முந்திய பழமை நிறைநாடு
  முன்னேற் றத்தைநீ நாடு.
***********************************************


Monday, December 2, 2013

சுதந்திரம்

இந்திய நாட்டு முன்னோர்கள்
சிந்திய குருதி போதாதா?
விடுதலை பெற்ற திருநாட்டில்
படுதுயர் மக்கள் படலாமா?

அச்சம் விலகி ஓடட்டும்
அவனியில் அனைவரும் வாழட்டும்
வெற்றி ஒன்றே குறிக்கோளாம்ம
விளங்கி நின்று சிறந்திடுவோம்

வேதனை எல்லாம் தீரட்டும்
வெற்றி எங்கும் பரவட்டும்
சாதனை பற்பல குவியட்டும்
சரித்திரம் படைப்போம் வாருங்கள்

பாரத நாட்டுப் பண்பாடு
பாரே புகழ நீபாடு
வீர சுதந்திரம் பெற்றுள்ளோம்
விடியல் இன்றே சமைத்திடுவோம்
*********************************

Saturday, November 30, 2013

புத்தகம் படிப்போம்(மழலை இலக்கியம்)

புத்தகம் பலவும் படித்திடுவோம்
  புதுமை நாளும் செய்திடுவோம்
முத்தமிழ்த் தேனும் பருகிடுவோம்
  முறையாய் நாளும் கற்றிடுவோம்

புத்தகம் கற்பது பெருமையன்றோ
  பூக்கள் சிரிப்பது அழகன்றோ
சித்தம் குளிரச் செய்திடலாம்
  சிகரம் எதையும் தொட்டிடலாம்

அறிவுச் செல்வம் பெற்றிடலாம்
  அமைதி வழியைக் காட்டிடலாம்
செறிவு நிறைந்த வாழ்க்கையிலே
  செந்தமிழ் என்றும் உதவிடுமே

படித்தே உயர்ந்தார் மேதைகள்
  பாரே போற்றிட நடந்தாரே
நாமும் அது போல் படித்திடுவோம்
  நன்மை பலவும் செய்திடவே

********************************************************