Tuesday, September 29, 2015

எழுந்து வா சகோதரி

எழுந்து வா சகோதரி எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 4 புதுக்கவிதை


எழுந்து வா சகோதரி
*************************

விதியென்று
வீட்டுக்குள் உறங்கும் பெண்ணே
வெளியே வா
உனக்காகத்தான்
உலகம் காத்திருக்கிறது

சிறையைவிட்டு வந்து
செயற்கைக் கோளுக்குச் சென்று வா
அணு உலைகளை
ஆராய்ச்சி செய்து கொடு
அடிமைத்தனத்தை விடுத்து
அகிலத்தை ஆராய்ச்சி செய்ய வா
அரிசிச் சோற்றை
ஆக்கமட்டுமல்ல
விண்கலம் வரை உனது
விரல்கள் போகட்டும்

எழுந்து வா பெண்ணே
நீ
அடங்கிப்போனது போதும்
முரட்டுப்பிடிகளில்
முடங்கிப் போனதும்போதும்
நாளைய உலகை
நீதான் உருவாக்க வேண்டும்
குழந்தை உருவாக்க மட்டுமல்ல
உனது கருவறை
குவலயம் படைக்கும்
திருமறை நீதான்
நீ...நீயே தான்
இந்தியாவின் கலங்கரை விளக்கு
துயரங்களை விலக்கு
பாரதத்தின் பாதையே
பதுங்கிக் கிடந்ததும்
ஒதுங்கிப் போவதும் தான்
ஒழுக்கம் என்ற அழுக்கு சிந்தனையை விட்டுவிடு
சடங்குகளுடன் சரிந்து போன நீ
சட்டம் எழுத வா
இருண்டு போன நெஞ்சங்களில்
உன் எழுத்துக்கள் ஒளிரட்டும்
பாழடைந்து போனவைகள்
உன்னைக் கண்டு
பயந்து ஒதுங்கட்டும்
இப்போது பார்
உன்னை ஒதுக்க முயன்றவர்கள்
உன் பின்னே வருகிறார்கள்
உன் கண்களின் ஒளியில் தான்
கதிர்கள்
கனல் கக்க வேண்டும்
 உன் கால்களின் பாதையில் தான்
கானக முட்களுக்கு
கண் தெரிய வேண்டும்
உன்
கைகளின் எழுத்துக்களில் தான்
உலகமே உன்னதப் படவேண்டும்
வா பெண்ணே
வா
உலகம்
உனக்காகத் தான் காத்திருக்கிறது
**********************************************Image result for working women pencil drawing



No comments:

Post a Comment