Thursday, November 12, 2015

நட்பின் சிகரம் ( கனவுக்காட்சிகள்)

நட்பின் சிகரம்.....( கனவுக்காட்சிகள்...கவிஞர் சுவாதி...11)

( விரைவில் விடுபட்ட பதிவுகள் வரும்)
*********************************************************************************


ஆனந்தம், குழப்பம் இரண்டின் சங்கமகாகவே இருந்தான் கர்ணன். கனவு அவனுக்குள் இரண்டு விதமான அலைகளையும் பெருக வைத்திருந்தது.

ஒன்று, அவன் அரச குலத்தைச் சேர்ந்தவன் என்பது. அதனால் உண்டானது ஆனந்தம். இதை ஏற்கனவே அவன் அறிந்திருந்தான்.சொன்னவர் பரசுராமர்.

வண்டு தொடையைத் துளைத்து அப்புறம் போகும் வரை பொறுத்திருக்க ஒரு ஷத்திரியனால் தான் முடியும் . நீ என்னிடம் பொய் சொல்லி, கற்றுக் கொண்ட வித்தை கடைசித் தருணத்தில் உனக்குப் பயன் படாமல் மறந்து போகும் “.

இப்படி ஒரு சாபத்தை அவர் சொன்ன போது, முதலில் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த சாபத்துக்குள், தான் ஒரு ஷத்திரியன் என்கிற செய்தியும் ஒளிந்திருக்கிறது என்பதை அறிந்த நிலையில், வருத்தத்தை விட சந்தோஷம் பீறிட்டது. அந்த சந்தோஷம் சரிதான் என்பதை , இந்தக் கனவு ஊர்ஜிதம் செய்து விட்டது.

ஆனால், கனவின் அடுத்த பகுதிதான் குழப்பமாயிருந்தது. அப்படி என்ன தான் கனவு?

வானத்தில் இருந்து வந்த ஒளி, அவன் நாட்டைக் கருப்பாக்கி விட்டது. முகம் தெரியாத ஒரு பெண் தென்படுகிறாள். அவளையே அம்மா என்றும், மகாராணி என்றும் குறிப்பிடுகிறார்கள். தெய்வம் வந்து யாசகம் கேட்கிறது. அம்மா எனப்பட்டவளே வரம் கேட்கிறாள். துரியோதனனின் தோட்டம், பூக்களெல்லாம் கருகி பொலிவிழந்து கிடக்கின்றன.

இவ்வளவு தான் கனவு. தான் ஷத்திரியன் என்று அறிந்தால் ஆனந்தப்பட்டவன், கனவின் பிற பகுதிகள் இன்னெதென்று புரியாமல் குழம்பிப் போனான். அதே சமயம், அவை நல்ல செய்தியை உணர்த்தவில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது.

இருந்தால் என்ன? இனி என்ன செய்வது? எல்லாவற்றையும் தன்னோடு பகிர்ந்து கொள்ளும் துரியோதனனிடம் இதைச் சொல்வதா? வேண்டாமா? ஆனால், கனவு அவனைப் பற்றியது, அவனிடம் எப்படிச் சொல்லாமல் இருப்பது? சொல்லவும் முடியாது. நல்ல செய்திகளைப் பகிரலா,. இது அப்படியா? சரி,  போகட்டும்.

தான் ஷத்ரியன் இல்லை என்பதால் ஏற்பட்ட அவமானங்கள் இப்போது தவிடு பொடியாகி விட்டன. நம் பிறப்புக்குக் காரணமான அந்த அன்னையை சந்திக்கவும் போகிறோம் என்கிற நினைப்பு மனதுக்குள் மீண்டும் மீண்டும் வந்து புத்துணர்ச்சியானது.

ஆனால், கனவின் பிற பகுதிகள், தொடையைக் குடைந்த வண்டு போல் மனத்தைக் குடைந்து கொண்டே இருந்தன. நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொன்றாய் புரிய ஆரம்பித்தன.

அவன் நாட்டை ஒளி பாய்ந்து கருப்பாக்கியதன் பொருள் என்ன? சூது அவனுடைய வெளிச்சத்தை ஆற்றலை கவர்ந்து செல்லப் போகிறது என்பதற்கான குறியீடு என்பது அவனுக்குப் புரிந்தது. “அம்மா” எனப்பட்ட “மகாராணி” இன்னார்தான் என்று புரிந்த போது, ஆனந்தமும் துக்கமும் ஒரு சேர சங்கமித்தன அவனுக்குள்.

எந்த அர்ஜுனன் மேல் வெறுப்படைந்திருந்தானோ, அவன் தன்னுடைய தம்பி என்பதால் ஆனந்தம். ஆனால், அவன் அல்லது தான் இருவரில் ஒருவர் தான் எஞ்சியிருக்க முடியும் என்பதை அறிந்து தான் சற்றே கலக்கம். வேறு வழியில்லை. துரியோததனுக்கு பீஷ்மரைவிட, துரோணரை விட நம்பிக்கைக்குரியன் கர்ணன் தான். “ தன்னுடைய சந்தோஷத்தைக் கண்டு ஆனந்தப்படுகின்ற அற்புதமான நண்பன் என்று கர்ணனை உளம் நிறைய கொண்டாடிக் கொண்டிருக்கிறான் துரியோதனன்.

அது மட்டும் தானா? தேரோட்டியின் மகன்” என்று எல்லோரும் ஏளனம் பேசிய தருணத்தில், அங்க நாட்டின் மன்னனாக அறிவித்து, அலங்காரம் செய்தவன் அவன் அல்லவா? “பொன்னும் கொடுப்பான்,: பொருளும் கொடுப்பான், என்றெல்லாம் புலவர்கள் பாடியதற்குக் காரணமான செல்வம் அவனால் அல்லவா கிடைத்தது. கொடுத்தவன் கர்ணன், ஆனால், அவனுக்குக் கொடுக்கப்பட்டது துரியோதனனால் அல்லவா?

கர்ணனின் ஈர நெஞ்சம் உணர்ச்சிகளால் குழைந்தது: இறுகியது: நெகிழ்ந்தது.... ஈரமான உள்ளங்களுக்கு எப்போதுமே போராட்டம் தான். எல்லாவற்றையும் வாங்கி, விதைத்து, விளைந்து, காயப்பட்டு, ரத்தம் சிந்தி...கர்ணனுக்கும் அதே நிலைதான். ஆனாலும், எந்த நிலையிலும் எதை முன்னிட்டும் துரியோதனனை விட்டுக் கொடுப்பதில்லை என்று உறுதி கொண்டது அவன் உயர் நெஞ்சம்.

ஆனால், அவனை துரியோதனனிடம் இருக்க விட்டு, அவனுடைய ஆற்றலை பலவீனப்படுத்தியது தெய்வசக்தி> தெய்வ சதி, வேறென்ன சொல்வது? விதி வகுத்த பாதையில்  ஓடியது அந்தப் பேராறு. அவ்வளவுதான்.

தன் மகன் அர்ஜுனனுக்காக இந்திரன் வந்து வரம் கேட்டான். எப்போது? மிகச் சரியாக கர்ணன் சூர்ய வழிபாடு செய்யும் போது, ஏன்? அப்போது யார் வந்து என்ன தானம் கேட்டாலும் அதைக் கொடுக்கும் ஒரு உயரிய கொள்கை வைத்திருந்தான் கர்ணன். அதனால் தான், இந்திரன் வந்து கேட்டதும் தனது கவச குண்டலங்களையும், இழக்க வேண்டியதாயிற்று.

 சூரியன் எச்சரித்து என்ன பலன்? தானே ஏற்படுத்திக் கொண்ட விரதம், கர்ணனையும் கட்டியது. மாற்றிச் சொன்னால், அவன் விரதன் என்கிற கயிரால் அவனையே கட்டிப் போட்டார்கள்” பவீனமாக்கினார்கள்.

ஜயத்ரதன் என்னும் சிந்து அரசன், அபிமன்யூ சக்ர வியூகத்தில் நுழையும் போது துரோணரின் கட்டளைப் படி உதவி செய்தான். அதன் படி, அபிமன்யூ இறக்க, அந்தப் பழியும் கர்ணன் மீது விழுந்தது. கர்ணனுக்குப் பல மகன்கள் இருந்தனர். அவர்களின் ஒன்பது பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களில் விருஷ கேது மட்டுமே போருக்குப் பின் அர்ஜுனனின் அரவனைப்பில் இருந்தான்.

திரௌபதியுன் சுயம்வரத்தைத் தொடர்ந்த கை கலப்பில் சுதமா இறந்தான். ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் குருஷேத்ர போரில் துரோணர் தலைமை தாங்கிய போது அர்ஜுனன் ககளில் மடிந்தனர். சத்யசேனா, சித்ர சேனா மற்றும் சுஷர்மா நகுலனின் கைகளால் இறந்தனர். கர்ணனின் மூத்த மகன் வீரசேனா போரின் கடைசி நாளில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான். ஆக, கர்ணன் தான்மட்டும் நன்றி உடையவனாக இருக்க வில்லை: தன் மகன்களையும் அப்படியே துரியோதனனுக்கு வழங்கியிருந்தான்.

கர்ணன் பாண்டவர்கள் தனது சகோதரர்கள் என்ற உண்மை தெரியும். ஆனால், பாண்டவர்களுக்கு அது தெரியாது.

போரிடும் வேளையில், அர்ஜுனனின் தேரை தன்னுடைய கணை வீச்சால் கர்ணன் பின்னுக்கு நகர்த்திய போது, கிருஷ்ணனே “ மாவீரன்” என்று கர்ணனைப் பாராட்டினான். அர்ஜுனனுக்கு கோபம் வந்தது. “ நான் கர்ணனின் தேரை பல மைல் பின்னுக்குத் தளிளியும் என்னைப் பாராட்டாமல் அவனை எப்படிப் பாராட்டலாம்” என்றூ கிருஷ்ணன் சொன்னான். கடவுளின் துணையோடு உள்ள இந்தத் தேரை பின்னுக்குத் தள்ளுபவன் மகாவீரன்” என்று.

தன் மகன் இழிவடைவதைப் பார்க்கப் பொறுக்க முடியவில்லை. சூரியனால், ஒவ்வொரு முறையும் எச்சரிக்கிறான். “ தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” தான். ஆனால், தந்தை தராத நாட்டை நண்பன் தந்தான். தந்தை அமைத்துக் கொடுக்காத அந்தஸ்தை நண்பன் அமைத்துக் கொடுத்தான். எனவே, நட்புக்கு களங்கம் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் கர்ணன்.

ஒரு மகாவீரனை யாரும் வீரனாய்ப் பார்க்கவில்லை. அவன் குலம் என்ன? என்ன பிறப்பு? என்பதிலேயே தான் அவர்களின் கண்ணோட்டம் இருந்தது. இந்த பழிச்சொல்தான் அவனை எல்லாவற்றையும் கற்க வைத்தது. என்னால் முடியும் என்று ஒவ்வொரு முறிஅயும் சொல்லிக் கொண்டான். போர்க் கலைகளும், ராஜதந்திரங்களும், வித்தைகள் அனைத்தும் தனக்குக் கைவரப் பெறும் என்று உறுதியாக நம்பினான்.

திரௌபதையின் சுயம்வரத்தில் திரௌபதையின் மீது முதலில் ஆசைப்பட்டவன் கர்ணன் தான். ஆனால், திரௌபதை கர்ணனை நிமிர்ந்து பார்க்கும் தருணத்தில், “தேரோட்டியின் மகனே” என்று கண்ணன் அவனை அழைத்ததால், பார்வையை அவன் மீது வீசவேயில்லை திரௌபதி. பார்த்திருந்தால் அவன் அழகு. வீரம் மிகுந்த தோற்றம், ஷத்திருயனுக்குரிய தீர்க்கமான கண்கள், திடமான வலிய தோள்களைக் கண்டிருப்பாள். ஆனால், பார்க்காததற்குக் காரணமான கண்ணனை விட, பார்க்காமலேயே போன திரௌபதையின் மேல் அதிகக் கோபமும் பகைமையும் கொண்டான் அவன்.

பின் நாளில் மறந்தான் தான் என்றாலும், அந்தத் தோல்வி , தன் பிறப்பைப் பற்றிய எள்ளி நகையாடல் என்று நினைத்ததாலேயே அவையில் அவளை துகில் உரியும் போது அவன் அதர்மமாக நடந்து கொள்ள நேர்ந்தது.

கர்ணனின் வாழ்வு முழுவதும் நிராகரிப்புகள், வேதனைகள், துயரங்கள் தான். ஒருவனுக்கு தன் முயற்சியால் வரும் துன்பங்களையும் விட தன்னை அவமானப் படுத்துதலால் வரும் துன்பமே கொடூரமானது. அதனைத்தான் தன் வாழ்நாளெல்லாம் சந்தித்தான் கர்ணன்.

தன் பேச்சு வன்மையாலும் போர்த்திறனாலும், நிஷாதர்கள், கலிங்கர்கள்...என்று தன் அருகில் இருக்கும் அனைத்து நாட்டவர்களையும் துரியோதனனுக்காக போர் புரியவருமாறு கேட்டுக் கொண்டான். கண்ணன் வரமாட்டான் என்பதும், கண்ணனின் படை உதவி கிடைக்கும் என்பதும், அவனுக்குத் தெரிந்தே இருந்தது. 10 நாட்கள் வரை குருஷேத்திரப் போரில் கலந்து கொள்ள இயலாததும் பெரிய வலிதான், ஆனாலும், அதனையும் மறைத்து 11ம் நாள் போரில் ஈடுபட்டான். பாண்டவப் படையை கலங்க வைத்தான்.சல்லியனுக்கும் தனக்கும் பிணக்கு இருப்பதாய் கர்ணன் உணரவே இல்லை. ஆனால், சல்லியன் கர்ணனை பகைவனாய் நினைத்தான். தான் சார்ந்த நாடு தோல்வியுறுவது பற்றி கவலை கொள்ளாமல், கர்ணன் கொலையாக வேண்டும் என்றே அவன் கருதினான்.

மீண்டும் கனவைப் பாருங்கள்.

துரியோதனனின் தோட்டப் பூக்கள் கருகி பொலிவிழந்து....துரியோதனன் போரில் உறவுகளை இழந்து, அரசிழந்து, குந்தி கேட்ட வரம், இந்திரன் யாசகம், கிருஷ்ணனின் வரம் நாகாஸ்திரம், கடோத்கஜன் வதம், ...போரில் நடந்த கிருஷ்ண சாமார்த்தியம். கர்ணனின் மகன்கள் இறந்தது. ..

அவன் கனவு பலித்து விட்டது. மீதம் இருப்பது ஒன்றுதான். அவன் ஷத்திரியன் என்பது உலகுக்குத் தெரிய வேண்டும். அது தெரிய வேண்டுமென்றால், அதற்கு தன் இறப்பு துணை செய்யும் என்று ஆழ்மனதில் எழுந்த காரணத்தால் தான், அவன் இறப்பும் ஏற்பட்டது. எளிதில் இறக்கும் உடம்போ மனசோ இல்லை அது. அவன் மனதால் இறப்புக்குத் தயாரானதால் இறப்பு அவனை எட்டியது,

சரி, தவறு என்பதெல்லாம், அவரவர்களின் சூழலைப் பொறுத்து மாறுபவை. ஆனால் அறம் என்பது சார்பில்லாதது. அது மாற்றம் இல்லாதது. சரியானதை அது அங்கீகரிக்கும். சரியற்றதை தூக்கி வீசி விடும். கர்ணனின் கனவு பலித்தது. காலம், துரியோதனுடனான நட்பை ஒதுக்கியது. கொடையில் கர்ணனை குன்றிலேற்றியது.

******************************************************************************

5 comments:

  1. கர்ணனில் மறந்து போன விடயங்கள் மீண்டும் தங்களால் அறிந்து வருகிறேன் நன்றி சகோ...

    ReplyDelete
  2. ஈரமான உள்ளங்களுக்கு எப்போதுமே போராட்டம் என்பது 100% உண்மை தான்...

    ReplyDelete
  3. கர்ணனை பற்றி சிறப்பித்த பதிவு! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வணக்கம் சகோ,
    எது எப்படியோ, அனைவரலாலும் வஞ்சிக்கப்பட்ட ஓர் ஆத்மா,
    நன்றி.

    ReplyDelete