இது நெற்களஞ்சியங்களால்
நெல்வேலியிட்ட நாடு!
உழவுகள் இங்கே
இழவுகள் ஆகிவிட்டதால்
நாடு நலிந்து போனது!
நன்மைகள் நலப்படாவிட்டாலும்
நரிகள் நலமாகின்றன!
களர் நிலங்களையெல்லாம்
கவர் நிலங்களாக்கும் திறமையிருந்தும்
கவர்ச்சி தினங்களிலேயே நம்
காலங்கள் கரைவதால்
எத்தனுக்கே ஏற்றமிகு காலமாக...
விவசாயம் வீழ்ச்சியானது!
வீணர்களின் ஆட்சியானது!
ஆதிக்க வேர்கள்
கருத்தாளர் சொல்வதைவிட
காசாளர் சொல்வதைக் கேட்கும் போது...
இன்னல்களே இந்தியாவாகி
இசைநாட்டியம் நடக்கிறது!
அஹிம்சை வழிகள் அழிந்து போய்
அரக்கநெறிகள்
அமைதியின் சின்னமாய்
அறிவிக்கப்பட்டு
ஆசீர்வாதம் செய்வதால்
துக்கங்களே தூளியானது!
விவசாயிகளின் சுயம்வரத்தில்
விரக்தியே மணமகன் ஆனதால்
வெட்டிகளீன் வயிற்றில்
வெற்றியை நிரப்பிக் கொண்டதால்
கண்டங்கெளே தவமிருக்கின்றன!
கசாப்புக்கடைக்காரனிடம்
கழுத்தை நீட்டிக்கொண்டு!
கோமான்களோடு
கொள்கைக்காரர்கள் ஒத்துப்போய்
கொடுமைக்காரர்கள் ஆவதால்
குடியானவர்கள்
மிடியானவர் ஆகின்றனர்!
பசுமை நிலவும் நாட்டில்
பஞ்சம் நிலவலாமா?
உண்மை உலவும்நாட்டில்
உறக்கம் நிலவலாமா?
உழவர் திருநாட்டில் தமிழ்
புலவர் தரும் ஏட்டில்
வருமை விழலாமா?
சிறுமை தொழலாமா?
இனி
விவசாயமே நமது விண் ஆகட்டும்!
உழவர்களே உயிராகட்டும்!
நாடெல்லாம் பயிர் மேவட்டும்!
மற்றோர்க்கு மகிழ்வு ஏற்பட
கற்றோர் எல்லாம்
களத்துள் இறங்குவோம்!
************************************
அவர்கள் வாழ்வு உயர்ந்தால் தான் மற்றவை எல்லாமே...
ReplyDeleteசிறப்பான கவிதை...
வாழ்த்துக்கள்...