Saturday, October 17, 2015

அன்பின் தென்றல்...கனவுக்காட்சிகள்

கல்கியின் தீபம் இதழில் நான் எழுதிய கனவுக் காட்சிகள் பகுதி...2

பிப்ரவரி 05...2015 இதழில்.......கவிஞர் சுவாதி

*******************************************************************************


ஒருவர் காணும் கனவு இன்னொருவருக்கு  நன்மையை உரைப்பதாக அமைவது வியப்பு தான். ஆனால், உண்மையில் அந்தக் கனவு, அதைக் கண்டவருக்கு ஒருதீய செய்தியைத்தான் உணர்த்தியது. அதே சமயம், அவரருகே இருந்தவருக்கு அது மிக மிக நல்லசெய்தி. இப்படி ஒரு சுவாராஸ்யமான முரண் தான் வாழ்க்கை என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்திய கனவு இது.

கனவைக் காண்பவள்,விபீஷணனின் மகளான திரிசடைதான். அவள் தான் அசோகவனத்தில் சீதைக்குக் காவலாக இருக்கிறாள். சீதைக்குக் காவலாக இருக்கிறாள். சீதையோ எப்போதும் விழுதல், விம்முதல்,மெய்யுற வெதும்புதல், எழுதல், ஏங்குதல்,இரங்குதல்,இராமனை எண்ணித் தொழுதல்,சோருதல், துலங்குதல், துயர் உழந்து உயிர்த்தல், அழுதல்..என்று உணர்ச்சி பிழம்பாகவே தடுமாறிக் கொண்டிருக்கிறாள்.

சிந்தனையில் எப்போதும் ,”இராமன் வருவானா? எப்போது வருவான்? எப்படி வருவான்? யார் சொல்வார்கள்? இந்த இடம் எப்படித் தெரியும்? இளவல் தன் மேல் உள்ள கோபத்தால் சொல்லாமல்விட்டிருப்பானோ? “ என்று பற்பல சந்தேகங்களோடு உளைகிறது அவள் மனம்

தோழியருடனும், சகோதரிகளுடனும் கூடிக் களித்து சந்தோழித்தவளுக்கு,இந்தத் தனிமைச்சிறை மேலும் தவிப்பைத் தருகிறது. கணவனைப் பிரிந்த துன்பம் ஒருபுறம்: தன்னுடைய நிலையை எண்ணிஏற்பட்ட தன்னிரக்கம் இன்னொருபுறம்: பகிர்ந்து கொள்ளவும் துணையற்றுப்போன துயரம் மறுபுறம்”... இப்படித்  துவண்டவளுக்கு திரிசட ஆறுதலாகிறாள்.

அப்போது, சீதைக்கு இடப்பக்கத் தோள்கள்,புருவம், கண்கள் துடிக்கின்றன. அதனால்திரிசடையிடம் கேட்கிறாள். “ நாங்கள் வனம் புகுந்த நாளிலும் இராவணன் என்னைக் கவர்ந்து வந்த நாளிலும் வலது பக்கம்துடித்தன. ப்போதோ இடதுபக்கம் துடிக்கிறது. ஆனால், இந்தக் காட்டுக்குள் எனக்கென்ன நன்மை வந்து சேரப்போகிறது?” என்று கேட்கிறாள்.

கேள்வியில் நப்பாசை இருக்கிறது.பயம் இருக்கிறது.எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆவல் இர்க்கிறது.திரிசடை நல்லவை மட்டுமே சொல்லவேண்டும் என்கிற வேண்டுதல் இருக்கிறது. அதற்கு ஏற்பவே திரிசடை பேசுகிறாள். “ தேவி, உனக்கு மங்களங்கள்வந்து சேரப்போகின்றன.நீ நிச்சயம் உன் தலைவனிடமிருந்து ஒரு தூதுவன் வந்து உன்னை சந்திக்கப் போகிறான். உனக்குக் கொடுமை செய்த தீயவர்களுக்குத் தீமையே சேரும்”

அவள் சொல்லும் தீயவர்கள் யார்? அவளுடைய பெரியப்பாவான ராவணன். அவனுடைய தவறுக்குத் துணை செல்பவர்கள். அவர்களுக்குத் தீமையே சேரும் என்று சொல்லும் போது, அவர்கள் அனைவரும் தன் உறவுஎன்று  தெரியாமாலா அவள் சொல்கிறாள்? இல்லை....கண்ணெதிரே, கணவனைப் பிரிந்து, தன்னுள் குமைந்து  கழிவிரக்கத்தால் நலிந்து துடிக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறாள். “வனவாசம்” என்ற கொடுமையே கூட ஆனந்தம் என்று கணவனோடு வந்தவளுக்கு இப்படியொரு துக்கம் வரலாமா? அதை ஏற்படுத்தியது யாராய் இருந்தால் தான் என்ன? என்கிற சத்தியாவேசம் அவளுக்குள், அதனால்தான், அவளே தொடர்ந்து சொல்கிறாள்.

“இராவணன் தலையில் எண்ணை தேய்த்துக் கொண்டு பேய்களும் கழுதைகளும் பூட்டிய தேரில்தெந்திசை போகக் கண்டேன். அவன் மட்டுமல்ல, அவன்மக்களும் சுற்றமும் கூடப் போனார்கள்,நகரிலிருந்த தோரணக் கம்பங்கள் ஒடிந்தன.யானைகளின் தந்தங்கள் முறிந்தன. பூரணக் கும்பத்திலிருந்த புனித நீர்க் கள்ளைப் போல் பொங்கிவழிந்தது. மங்கையர்களின் தாலியெல்லாம் தாமே இற்றுவீழ்ந்தன. மண்டோதரியின் கூந்தலும் அவிழ்த்து துர்நாற்றம் வீசியது,

இன்னும் கேள், இரண்டு சிங்கங்கள் புலிக்கூட்டத்தோடு இங்கு வந்து மத யானைகள்வாழும் வனத்தை வளைத்து அவற்றோடு போர்செய்தன. யானைகள் கூட்டம் கூட்டமாக வீழ்ந்து பட்டன. அந்த வனத்திலிருந்து மயிலும் பறந்து போனது. அதே நேரம் அழகான தீபம் ஏந்தியபடி வீடணன் அரண்மனைக்குச் சென்றாள். இந்தச் சமயம் என்னை நீஎழுப்பி விட்டாய்” என்கிறாள்.

இதைக் கேட்டதும் சீதை கண் மலர்கிறது. முகம் மலர்கிறது. கவலை மடிந்த பொழுதாகவும்,துயரம் ஒடிந்த பொழுதாகவும், தெரிகிறது. எனவே, ஆவல் படிந்த குரலில் சொல்கிறாள். ” இன்னும் தூங்கி மீதம் உள்ள கனவையும் எனக்குச் சொல் அன்னையே” என்கிறாள்.

சீதை பூமியிலிருந்து பிறந்தவள். அயோனிஜை.அதனால், அவளுக்கு அன்னை இல்லை.தன் மாமியார்களையும் அவள் அன்னை என்று அழைப்பதில்லை. உண்மையில் திரிசடைக்கு அவள் வயதும் இருக்கலாம்: அல்லது அவளைவிட வயதில் குறைந்தவளாகவும் இருக்கலாம். ஆனால்,அன்னையே என்று அவளைக் கூப்பிட வைத்தது கனவு தான்.

இதற்கு முன்னரே சீதையை அடிக்கடி ஆற்றுப்படுத்தும் பணியை திரிசடை செய்கிறாள், எனவே தான் அவளை எதிரியின் உருவமாகக் காணாமல், நட்பின் உருவமாகக் காண்பதோடு அன்னையின் உருவமாகவே காண்கிறாள் சீதை.

இராவணன் பற்றிய ரகசியம் சொன்னதால் சீதை தைரியம் அடைந்ததும் இந்த அன்பு அரக்கியால் தான்.

இன்னொன்றும் திரிசடை கனவில் கவனிக்கத் தக்கது. தென்புலம் என்று திசை சொல்கிறாள். நேரம் சொல்கிறாள். ஆக, அவளூக்குள் சீதையின் துன்பம் மனதின் ஆழத்தில் படிந்ததோடு, அவள் கவலைகள்மறந்து களிப்பாக மாற வேண்டும்.என்ற பிரார்த்தனையோடு இருந்ததாலேயே சீதையைப் பற்றிய கனவு காண முடிந்தது என்றே தோன்றுகிறது.

தன் குலமே அழிந்து, தன்நாடு, தன் மக்கள், தன் சுற்றம், அனைத்தும் அழியும் என்றாலும் சீதை என்ற அழகின் மாது, அன்பின் தென்றல் வாழ வேண்டும் என்று நினைக்கிறாள். அதற்கு விலையென எதுவும் மாய்ந்து போனாலும் அது நன்மை என்றே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்ட ராட்சஸியாக இருக்கிறாள்.

ஆச்சரியமான ஒரு முரணும் இங்கு இருக்கிறது. அனுமன் முதன் முதலில் இலங்கை வரும் போது, இலங்கையின் காவல் தெய்வம் தடுக்கிறது. அதை வீழ்த்தி நுழைகிறான் அனுமன். “ இன்றிலிருந்து இலங்கையின் அழிவு ஆரம்பமாகிறது” எனச் சொல்லி அந்த தெய்வம் ஒதுங்குகிறது. அநீதி ஆட்சி செய்த போது , அதற்கு துணைபோன தெய்வமும் ஒதுக்கப்பட்டு விட்டது.

அப்படியென்றால், த்ர்மத்தில் பிறழாத விபீஷணன்  பொறுப்பேற்றால், யார் காவலிருக்க முடியும். அவனைப் போன்றே தர்மமும், கருணையும், வீரமும் மிக்கவர்கள் தானே இருக்க முடியும். அதற்கு திரிசடையே தக்கவள் என்றும் முடிவு கட்டினாள் பிராட்டி என்றால், மிகையல்ல.அதனால் தான், சீதை கடைசியாக அங்கிருந்து கிளம்பும் போது,”நீயே இந்த இடத்தில் காவல் தெய்வமாக இரு” என்று வாழ்த்தி விட்டுச் செல்கிறாள்.

அதே சமயம், அரக்கர் என்பது உருவத்திலா? உள்ளத்திலா? என்ற கேள்வியோடு நம்மை வியக்க வைக்கிறது திரிசடையின் கனவு

(காண்போம்)
*********************************************************************

3 comments:

  1. அருமையான பகிர்வு.தொடர்கின்றேன்.

    ReplyDelete
  2. கனவுக்காட்சிகள் நினைவாக முன்வருகின்றன. தொடர்கிறோம். நன்றி.

    ReplyDelete