தேசம் காப்போம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்
“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
வகை 5 மரபுக்கவிதை
மின்னுகின்ற ஆற்றலினைப் பிடித்து வந்து
மேதினிலே நாம் வாழ வகையும் செய்வோம்
நன்னுகின்ற மக்களையும் பக்கம் வைத்து
நானிலத்தில் நற்றமிழை உலவவைப்போம்
பொன்மகுடம் பொதுவுடமை ஏற்றி வைத்து
புதுமையினைப் புரட்சியினை நாட்டி வைப்போம்
என் உடமை எனது பொருள் என்று நாமும்
இருப்பதுவோ? பொறுப்பதுவோ? தீமை நீக்கு
அறம்செய்து அன்பு பொங்க நாட்டைக்காக்க
அகிலமெலாம் நம்நாட்டைப்போற்றிப்பாட
திறம் ஏந்தி தீமையெலாம் ஒழித்து இன்றே
திங்களதை ஒளிரவைத்து நலமும் செய்வோம்
மறம்கொண்டு மாக்களையும் அழித்தும் இன்றே
மாத்தமிழை மலரவைத்து வெற்றி கொள்வோம்
முறம்கொண்டு அடித்தாலாம் புலியைப் பெண்ணும்
மூத்தவீரம் காத்திடுவோம் இன்றும் என்றும்
அண்டை நாடு அயர்ந்திடவே மேன்மைசெய்வோம்
ஆளுமையில் புதுமையினை புகுத்தி வைப்போம்
பண்டையநல் பழமையினை மதித்துக் காப்போம்
பரவிவரும் மதவெறியை ஒழித்து நிற்போம்
மண்ணகத்தில் நம்நாடு உயர்வைப் பெற்று
மாப்புகழில் உயர்ந்துவிட உழைப்போம் என்றும்
விண்ணகத்தில் முழுமையுமாய் பெருமை செய்து
வீணரையும் ஒழித்திடலாம் தமிழின் பண்பால்
ஆக்கங்கள் பலசெய்து அறிவு செய்து
அறிவினையும் தெளியவைத்து மடமை கொன்று
தாக்குதல்கள் இல்லாமல் தரணி போற்ற
தண்டமிழாய் பனிந்துநாமும் வீரம் காப்போம்
போக்கிடுவோம் பழமையினை; புதுமைசெய்வோம்
புத்துணர்வில் நாடுவாழும் பொலிவு பெற்று
தீக்கிரையாய்ச் செய்திருவோம் தீமை எல்லாம்
தேசத்தின் நலனுக்காய் உயிரும் ஈவோம்
***************************************************
அருமை
ReplyDeleteசந்தமும் பொருளும் அருமையாக இணைந்த
ReplyDeleteஅற்புதமான மரபுக் கவிதை
வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
அருமையான கவிதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete