Tuesday, November 17, 2015

மழ...மழ...மழ..மழ...மழேய்...

முதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\ளின் மழை முற்றிலுமாக பயத்தைத் தந்துவிட்டது.

சென்னையின் தனித்தீவாக ஆகிவிட்டது வேளச்சேரி பகுதி..

ஒரு கதையில் படகுக்காரனும் படித்தவனும் பேசுவது மாதிரி..எல்லாம் கற்றதற்கு நிஜம்மாவே நீச்சல் கற்றிருக்கலாம் என்றே தோன்றியது..

நான் பார்த்தவை...

1. கீழ்தளத்தில் இருந்தவர்களும், தரைதளம் மட்டுமே கொண்ட வீட்டுக்காரர்களும் வீட்டுக்குள் தண்ணி போகப் போகிறது என்று தெரிந்ததும் எல்லோரும் மண் மூட்டைகளை விலைக்கு வாங்கினார்கள். அவரவர் பாத்ரூமில் மூட்டைகளைப் போட்டு அடைத்து விட்டு வேறு இடம் சென்றனர்.( கிருமி தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்களாம்)

2. மழை ஊரே வெள்ளம். ஆங்காங்கே நடைபெற்றன.பஜ்ஜி,பக்கோடா விற்பனை..( எங்கேர்ந்து வந்தீங்க? எப்ப சுட்டீங்க?)

3. கடை வைத்திருந்தோர் மூடி விட்டனர். தள்ளு வண்டிகள் , மற்றும் ஒரு டி.வி.எஸ் பிஃப்டி கூட தற்காலிக தேநீர் கடையாக மாறியது.( அட பாருங்கய்யா அங்கயும் ஆண்கள் கொத்தா நின்னு டீ குடிச்சிட்டு, பாரிஸ் கதைகளையும், பிரிட்டன் நடைமுறைகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.)( எப்பவுமே இப்படியா அல்லது இப்படித்தான் எப்பவுமேமா என்பதை என் மூளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.)

4. அந்தத்தந்தப்பகுதியின் கட்சிக்காரர்கள் வந்து இவர்கள் அவர்களைப் பார்த்து அவர்கள் வைத்து விட்டுப் போன லட்சணங்களால் தான் தமிழகமே தடுமாறுகிறது என்று சொல்லி திட்டித் தீர்த்தனர்.`பிறகு வேறு ஒரு பெரிய்ய்ய கட்சி அண்ணாச்சியும் இவர்கள் ஆட்சியில் எல்லாமே இப்படித்தான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டனர். ( கடைசி வரை தண்ணீர் வெளியேற்ற ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய வில்லை)

5. கழிவு நீர் ஊர்தியாளர்கள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மணிநேரம் என்று பேரம் பேசி, தண்ணீர் எடுத்து விட்டனர்.

6. கோயம்பேடு தண்ணீரில் நிரம்பியதால் காய்கறிகறியே கிடைக்காமல் வீட்டில் என்ன இருந்ததோ அதனை சாப்பிட்டு பசி போக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். அசைவர்களுக்கு மீன் கிடைத்தது. ( அவர்களே அவர்களுக்குத் தேவையானதை பிடித்துக் கொண்டனர்.)

7. எங்கள் வீட்டின் முன்பாக காட்சி அளிக்கும் ஏரி.....இந்த வேளச்சேரி ஹவுசிங் யூனிட் பகுதி முழுமையுமே ஏரியின் இடம் தானாம்..( அதான் , பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஏரி...என் இடத்தை எனக்குத் தா என்று கேட்க வந்தது போல் இருந்தது..வெள்ளம்)

8. பிரதான சாலையில் வழக்கமாய் ஒரு தோசை 80 ரூபாய்க்குத் தரும் ஹோட்டல்கள் அன்றைய தினம் 150 ரூபாய் என்றது.( அதனையும் மக்கள் உண்டார்கள்)( வீட்டில் அடுக்களை வரை தண்ணீர் புகுந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதனையும் புசித்து பசியாறினர்.)

9. 25 ரூபாய்க்கு தோசை தந்தவர்கள் 80 ரூபாய் என்றார்கள். சோளம், கடலை என்று தின்பதற்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது...( ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை மூன்று நாட்களில் செலவாக இருக்கும் போல் ஒரு காட்சிப்பிழை அல்லது கருத்துப் பிழை எனக்கு மட்டும் தோன்றியது)

10 .பால் இருந்தாலும் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்திற்கே பால் தந்தனர். அவர்கள் தான் கேட்ட விலையையும் தந்தனர். பாலின் விலை லிட்டருக்கு 100 ரூபாய்

11. காய்கறிகள் , பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. கிடைத்தாலும் இரட்டிப்பு மடங்கு வைத்து விலை பேசப்பட்டது.

12. பள்ளிப் பிள்ளைகள் தண்ணீருக்குள் நடந்து நடந்து தங்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொண்டனர். (பெரும் பாலும் ஆண்பிள்ளைகள்)
(இனி எப்போது தண்ணீரைக் காண்பார்களோ)

13. அலுவலர்கள் வேலைக்குப் போக வேண்டியிருந்தது . ஆனால் சாலை போக்குவரத்து சில இடங்களின் வழியாக செல்வதை தடை செய்யப்பட்டிருந்ததால், எப்படியும் போக முடியாமல் தவித்தனர். சில ஆட்டோ ஓட்டுநர்கள் நிறைய சம்பாதித்தனர். சிலர் சவாரி கிடைக்காமல் ஆனால் கிடைக்கும் என்ற  ஆசையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தனர்.

14. எங்கள் பகுதியில் இருக்கும் தியேட்டரில் கடந்த மூன்று தினங்களும் 6 ஷோக்கள் ஓடியது.( மழையின் காரணமாக வெளியே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டவர்கள் வீட்டுக்கு வராமல் இருக்க என்ன செய்வது என்பதால் அப்படி நிரம்பி வழிந்தது என்றும், தல” படம் என்பதால் என்ன மழை கொட்டினாலும் பார்ப்பது தான் ரசிகர்களின் இலக்கணம் என்பதாலும் அப்படி வழிந்ததாகப் பேசிக் கொண்டார்கள்.( உண்மை நான் அறியேன்)

15. கழிவு நீர் வெளியேற்றும் பாதாள அல்லது திறந்த நிலை சாக்கடைகளில் பாலீதீன் கவர்களும், பெப்ஸி கோக் போன்ற பாட்டில்களும், மதுபாட்டில்களும் அதிகம் தென்பட்டு அவற்றாலும் விரைவில் தண்ணீர் வெளியேற்றப்படுவது தாமதமானது.

16. எல்லோரும் எல்லோரையும் திட்டிக் கொண்டனர். பாலிதீன்களை ஒழிக்க வேண்டும் என்று சபதம் ஏற்றனர். கையில் பாலிதீன் கவர்களில் இருந்த பால் அல்லது மற்ற பொருட்கள் வாங்கிக் கொண்டே,..

17. கார் தண்ணீரில் மூழ்கும், காட்சியைப் பார்த்த டூ வீலர் காரர்கள், அல்லது அதை வாங்க இயலாமல் பொறாமையோடு பார்த்தவர்கள் எல்லோரும் அந்தக் காட்சியைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்`

18. குப்பைகளை ஆங்காங்கே வீசிவிட்டுச் சென்றனர். தண்ணீரில் அதுவும் மிதந்து வந்தது. எல்லோரும் அதனைப் பார்த்துக் கொண்டே அதனை செய்து கொண்டே அதனைக் கடந்தனர்.

19. இன்னும் சென்னை கழிவு நீர் வெளியேற்றத்தில் விழிப்புணர்வு பெற வேண்டும். என்று ஆளாளுக்கு, சாலமன் பாப்பையாவாக மாறி தீர்ப்பளித்தனர்.

20..மூன்று நாட்கள் முற்றிலுமாக மின்சாரம் தடை செய்யப்பட்டது..( மாவு அரைத்தால் தானே தோசை, சட்னி..தண்ணீர் வந்தால் தானே குளிப்பு துவைப்பு...ஏதும் நடக்கவில்லை)


21. தண்ணீர் சற்று வெளியேற்றப் பட்ட நிலையில் (இப்போது)சாலைகளில் தார் எல்லாம் தண்ணீரோடு போய் வெறும் சரளைக் கற்களாகக் காட்சியளிக்கிறது சாலைகள்...( சில பகுதிகளில் இன்னும் கூட தண்ணீர் வெளியேற்றப்படவில்லை)


இவ்வளவு நடந்தும்..
**********************


. துணி காயப் போட முடியவில்லை என்று இரண்டாம் தளத்தின் இந்திரா அலட்டிக் கொண்டது தான் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது.


மற்றொரு விஷயம் சரவணாஸ்டோர்ல இப்பவும் கூட்டமாம் 

20 comments:

 1. வணக்கம்

  எல்லாம் ..இறைவன் துணை... மனிதர்கள் என்னதான் செய்ய முடியும் இது இயற்கை.. செய்திகளை பார்த்த போது கவலைதான்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஏரிப்பகுதியை பிளாட் போட்டு விற்று இருப்பது அரசின் பிழையும் தான்...( அது எந்த அரசாக இருந்தாலும்)

   Delete
 2. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போலத்தான் நமது மக்கள் மனிதநேயம் என்பது என்றோ இறந்து விட்டது வேதனையான விடயங்கள் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. போட்ல சும்மா கூட்டிப் போனதாக தொலைக்காட்சியில் காட்டி இருப்பார்கள்..ஆனால் பெரியவர்களுக்கு சலுகைவிலை, வேலை பார்ப்போருக்கு ஒரு விலை வைத்து பணம் வாங்கிக் கொண்டார்கள்...( அப்படி காப்பாற்றினோம் என்று மார்தட்டுவோரும் பணம் பெற்றனர்.) வருகைக்கு நன்றி

   Delete
 3. Ithu than chennai lifea😟😟😟

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி...ஆமாம்...டாம்பீகமான சென்னை தனக்குள் இப்படி ஒரு முகத்தையும் வைத்துக் கொண்டுள்ளது

   Delete
 4. இந்த பதிவை படித்ததும் மனதில் தோன்றியது இதுதான் இந்திய மக்கள் மிக அறிவுபூர்வமாக சிந்திக்கிறார்கள் பேசுகிறார்கள் ஆனால் அவர்கள் அறிவிப்பூர்வமாக செயல்படத்தான் மாட்டேன் என்கிறார்கள்

  ReplyDelete
 5. Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 6. பாதிக்கப் பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் யாவருமே
  பாதிப்பை ஒரு செய்தியாகத்தான் பார்க்கிறார்கள்.
  கர்நாடகா தண்ணீர் தரவில்லை என்று கொதிக்கிறோம்
  ஆனால் இதுபோன்ற காலங்களில் பொருட்களின் விலையை ஏற்றி
  கொள்ளை லாபம் பார்க்கத் துடிக்கிறோம்
  நமது மனிதர்கள் ,நாமும் உதவுவோம் என்னும் உணர்வு இல்லாமல் போய்விட்டதே

  ReplyDelete
  Replies
  1. மனதுக்கு வேதனையாக இருந்தது..வருகைக்கு நன்றீ

   Delete
 7. வெந்த வீட்டில் பிடுங்கிய கம்பு லாபம்தான் ...இது வியாபாரிகளின் இன்றைய தத்துவம் ...! வெள்ளமும் அதில் மக்களின் வாழ்வும் ,,,,நல்லா சொல்லிட்டீங்க கண்ணால் காண்பதுபோல் இருக்கிறது தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி...தங்கள் வருகைக்கும் நன்றி

   Delete
 8. எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் மனோபாவம்! நீங்க சென்னையிலேயா இருக்கறீங்க?

  ReplyDelete
  Replies
  1. ஆம்.குழந்தைகளை இங்கே படிக்க வைப்பதற்காக இந்த வருடம் தான் இங்கே வந்தேன்

   Delete
 9. இடுக்கண் வருங்கால் நகுக என்பதை மிகத்தெளிவாக புரிந்து இருக்கின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 10. இது யார் தவறு சகோ??? யார் மாறனும்????????? நம் விரல்கள் எப்பவும் நீட்டியே பழகிவிட்டன.

  நல்ல பகிர்வு நன்றி சகோ,

  ReplyDelete
 11. சுந்தரம்November 20, 2015 at 1:06 AM

  இங்கு இன்னும் தண்ணீருக்குள் தான் கிடக்கிறோம்..நான் வெளியூரிலிருந்து வேலைக்கு வருகிறேன், பையன் பள்ளி நல்லவேளை விடுப்பு. என்ன செய்வதோ

  ReplyDelete
 12. கொடுமையினும் கொடுமை கேள்...கேட்கவில்லை படித்தேன்

  ReplyDelete