Tuesday, November 17, 2015

பாடாதே

கனவுக் காட்சிகள்....பாடாதே.....கவிஞர் சுவாதி...கல்கியின் தீபம் இதழில் தொடராக வந்து கொண்டிருப்பது....10
*********************************************************************************

அன்பிருந்தால் பாடாதே “ இந்த வார்த்தை காளிதாசனை நிலை குலையச் செய்தது. சொன்னது யார்? அவன் ஆராதிக்கும், அவனை ஆட்டுவிக்கும் காளிதான். காளிதாசனைப் பொருத்த வரை காளி தேவி கடவுள் இல்லை: ஒரு தோழி,தாய், தங்கை, மகள் என்று எல்லா விதமாகவும் இருந்தவள் அவள்தான். அவளா சொல்கிறாள் “பாடாதே” என்று.

மெலிந்த தேகமாகவும் தீட்சண்யமான கண்களும் கொண்ட காளிதாசன் எப்போதும் சூலம் வரைந்த பின்  வெளியில் செல்லும் பழக்கம் கொண்டவன். சூலமாய் இருந்து தனக்கு வரும் தீங்குகளைக் களைந்து, நன்மைகளைக் கொண்டு வருவாள் காளி என்றே நம்பினான்.

ருதுசம்ஹாரம், மேகதூதம், ரகுவம்சம், குமாரசம்பவம் என்று உலகளவில் ஒப்பற்ற இலக்கியம் படைத்தவன் காளிதாசன். இந்தப் பெயர் வரக் காரணமாய் இருந்தவள் காளி. காரியமாய் இயங்கியவளும் அவள் தான்.

காளிதேவிக்கும் காளிதாசனுக்குமான பிணைப்பை சொல்லி முடியாது. அந்தப் பிரியங்களின் வடிவைப் படைக்க, பகிர, வடிவமைக்க ஏதும் இல்லை. அதனால் தான் அவனுடைய எழுத்துக்களில் இறைமையின் எல்லையும் இருந்தது. இளமையின் துள்ளலும் இருந்தது. ஏனெனில், எல்லாவற்றுக்கும் காளிதேவியே மின்மொழிந்தாள்.

ஆடு மேய்க்கும் காலங்களில் மட்டுமல்ல: எப்போதும் இயற்கையுடன் இணைந்தவன், இயல்பாகவே மக்களோடு இயைந்து போகிறவன். காலம் அவனை உச்சத்தில் வைத்த போதும் இயற்கையை நேசிப்பது , மற்றவர்களை நேசிப்பது என எதுவும் மாறவில்லை: மாற்றிக் கொள்ளவே இல்லை. காளிதாசனிடத்தில் எது செய்த போதும் அதில் புதுமை இருந்தது. அவனது உழைப்பில் வேகமும், செயல்களில் விவேகமும் இருந்தது. குறைபாடுகள் உடையோர் மட்டும் தான் மனிதர்கள் என்ற வார்த்தைகளையும் உடைக்கத் தெரிந்தவன் அவன். உருவ அழகு சுமாராக இருந்தாலும் உள்ளத்தால் தேவாழகு பெற்றிருந்தவன். உருவ அழகைவிட உள்ள அழகை இந்த உலகம் கொண்டாடத் தவறுவதில்லை. 

உலகஎமே கொண்டாடும் போது போஜமன்னன் மட்டும் கொண்டாட மாட்டானா? எழுத்தால், இலக்கியத்தால் இணைந்த பிணைப்பு தான் இருவருக்கும். பொதுவாக, திருமணத்துக்குத்தான் பத்து பொருத்தம் பார்க்கப்படுகிறது. ஆனால், நாம் வாழ்க்கையில் பார்ப்போர், பழகுவோருக்கெல்லாம் பார்த்தால் ஆகுமா? அப்படியான பொருத்தங்களை உடையோர் தான் இருவரும். மற்ற கவிஞர்களைத் தாண்டி, படைத்தலைவவை, அமைச்சர்களைத்தாண்டி, மற்ற பணியாளர்கள், ஏன் பட்டத்தரசியையும் தாண்டிய ஒரு பிரியமும், பாசமும் கொண்டிருந்தான் மன்னன்.

அப்படி எத்தனை பேருடன் நமக்கான இணக்கம் இருக்கும்? எல்லாப் பாத்திரங்களிலும் பொருந்திப் போகும் தண்ணீராய் இருந்தான் காளிதாசன். அதே சமயம் தன் கொள்கைகளில் ஒன்றைக்கூட அவன் விட்டுத் தருவதில்லை. பிறரை மாற்றுவதில் காளிதாசனுக்கு நிகர் அவனேதான். ஒரே ஒருவன் திடமானவனாகவும், நெகிழ்தன்மை உடையவனாகவும் இருக்க முடியுமா? மன்னனுக்கு வியப்பு. இப்படி ஒரு மனிதனை , மகா கவிஞனை தன் வாழ்நாளில் சந்தித்திருக்கவில்லை. அவன் என் அரசவைக் கவிஞன் என்ற இறுமாப்பு, பெருமிதம் எல்லாமும் இருந்தது.

அவன் நட்பிலும், பேச்சிலும், செயலிலும், அப்படிப்பட்டவனைத்தான், “பாடாதே” என்கிறாள் காளி. 

காலை முதல் இரவு வரை எல்லா நேரங்களிலும் இலக்கியம் அன்றி வேறொன்றும் அறியாதவன, “பாடு, பாடு” என்று ஆற்றுப்படுத்தி மாளவிகாக்கினி மித்திரம், விக்கிரம ஊர்வசியம், அபிஞான சாகுந்தலம் என்ற புகழ் பெற்ற இலக்கியம் தந்த ஒருவனைத்தான் “ அன்பிருந்தால் பாடாதே” என்கிறாள் காளி

காளிதாசனுக்குத் தோன்றிய கனவு இது தான். அருள் பொங்கும் காளீதேவி, அன்பிருந்தால் பாடாதே” என்று சொல்வது போல், கீழே பச்சை தென்னை ஓலை காண்பிக்கப்படுகிறது. இந்தக் கனவால் தான் இந்தக் குழப்பம்.

பாடு என்றோ, செய் என்றோ ஊக்கம் கொடுத்துத்தானே காளிக்கும் பழக்கம், மாறாக, செயலற்று இரு என்று சொல்வாளோ என்று சிந்தித்துக் கொண்டே இருந்தவன் துள்ளிக் குதித்தான்.

கனவில் வந்தது காளிதேவியின் கருணை முகம் தாங்கிய உருவம் தான். ஆனால், குரல் தனக்குப் பழக்கப்பட்ட ஒரு குரல். யார் குரல்? ஆம்: அது மன்னனின் குரல்.

பச்சைத் தென்னை ஓலை காட்டப்பட்டதே...அப்படியானால் அது இறப்பைக் குறிக்கிறதே...நான் பாடினால் என் இனிய நண்பன் மன்னனுக்கு ஆபத்தா? என் பாட்டால் உற்சாகம் அல்லவா பெறுவான்?

சிந்தனை வலுப்பெற்று, கேள்விகள் மூளையை துளைத்தெடுத்தன.  ஒருவேளை பகலில் யாருடனாவது பேசியது, எதிர்மறையாக எனக்குள் கொண்டு வந்து அப்படி பிரமையாக்கியதோ? எதார்த்தமாக ஒரு சாதாரணக் காரணமாக இருக்கலாம். சரிதான். அதை மறந்து விட வேண்டியது தான் என்று நினைத்த வேளையில் மன்னன் அழைத்தான்.

“ நண்பா, உன் பாடல் எல்லாவற்றையும் கேட்கும் பாக்கியமும் அதிஷ்டமும் பெற்றேன். ஆனால், இரங்கற்பா கேட்கவில்லை.. எனவே, இரங்கற்பா பாடு” என்றான்.

நிமிடத்தில் புரிந்து விட்டது காளீதாசனுக்கு. கனவின் எச்சரிக்கை இதுதானா?

”என் தாயே! தக்க சமயத்தில் விழிப்புணர்வு தந்தாய். உன்னைத் தவிர வேறு யார் இப்படி உணர்த்த முடியும்” என உருகினான். போஜனிடம்,  ”பாட இயலாது” என மறுத்தான்.

கேலியாய் பேசியும், கிண்டலாய் உணர்த்தியும் மசியாத காளிதாசனை வழிக்குக் கொண்டு வர வேண்டி, “அப்படியானால் என் கண்ணில் விழிக்காதே போ...நான் இருக்கும் இந்த அரண்மனையில் கூட வாழாதே எங்கேனும் போ” என்று கத்தித் தீர்த்தான் போஜராஜன். நட்பை மீறி தன் ஆணைக்கேனும் பணிவான் என்ற ஒரு நப்பாசையிலும் எப்படியும் பாடல்களைக் கேட்டுவிட வேண்டும் என்ற துடிப்பிலும் அவன் வார்த்தைகள் தீயைக் கக்கின.

காளிதாசனுக்கு அவன் வார்த்தைகள் வலித்தன என்றாலும், மன்னன் இந்த மண்ணில் இருக்க வேண்டும், மண்ணுக்குள் இருக்க வேண்டியவன் அல்ல. இன்னும் பல கலைஞர்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். “ இன்னும் பல களைகளையும் எடுக்க வேண்டும். “ என நினைத்தான். நெஞ்சமெல்லாம் கனத்துடன் “ சரி நான் போகிறேன்” என்றான்.

காளிதாசனைப் பிரிந்த போஜனால் ஒரு நாள் கூட இருக்க முடியவில்லை, என்றுமே அன்பு காந்தமானது, அது அதன் ஒத்தவற்றை ஈர்த்தே தீரும், ஈர்ப்பு விசையால் இயங்குவது தான் அதன் அற்புதம்: அதன் நறுமணமும் உலகை ஈர்க்கும்.

இப்போது போஜனுக்கும் கவலை ஏற்பட்டது. “ நான் கேட்டது தவறோ? என் மேல் பிரியம் இருந்ததால் தானே மறுத்தான்? அந்த அன்பின் அடர்த்தியை நான் தான் உணரத் தவறினேனோ? “ என்றெல்லாம் குமைந்தான். யோசித்த வேளையில் மன்னனுக்கு ஒரு வழி புலப்பட்டது. மாறுவேடத்தில் காளிதாசனைப் பார்ப்பது. அது ஒன்றும் எளிதல்ல. காளிதாசன் பளிச்சென்று கண்டுபிடித்து விடக்கூடும். அதே சமயம் கடினமானதும் இல்லை. காரணம், தன்னைப் போல அவனும் வருத்தத்தில் இருப்பான் என்றும் தோன்றியது. நட்பை நோக்கிக் கிளம்பினான். ஆறு நாட்கள் தேடலில் கண்டடைந்தான். இப்போதும் மனதுக்குள் இரங்கற்பா ஆசை துளிர்விட்டது. “ சரிதான் முயற்சி செய்வோம். கிடைத்தால் பாடல்:இல்லாவிட்டால் நட்பு” என்று நினைத்தவனாய், அவன் பக்கம் போய், வேறு ஒரு வணிகனிடம் பேசுவது போல்  காளிதாசனுக்குக் கேட்குமாறு, “ மன்னன் மடிந்தான் தெரியுமா? “ என்றூ.

சொன்னது யார்? அது உண்மையா? பொய்யா? என்று எதுவும் கேட்கத் தோன்றவில்லை காளிதாசனுக்கு. இதென்ன கொடுமை? எப்படிப்பட்ட மன்னன்? எப்பேர்ப்பட்ட ரசிகன்? அவனா இறந்து போனான்? துக்கம் தொண்டையை அடைத்தது. நெஞ்சு கலங்கியது. கண்கள், அருவியின் தொடக்கத்தை அறிந்து கொண்டன. “ உன்னை இழக்கக்கூடாது என்று தானே இரங்கற்பா பாடாது வந்தேன்? இறக்கும் தருவாயில் உன் அருகில் இல்லாது போனேனே? என்னை நினைத்தாயோ? கர்வம் பிடித்த காளிதாசன் என்று நினைத்து என்னை வெறுத்தவாறே உயிர் விட்டாயோ? உயிரோடு இறந்த பாடல் கேட்டாய். ஆனால், இறந்து இந்த உயிர்ப் பாடலக் கேட்க வருவாயோ?

என் காளி எல்லாமும் தந்தாளே? எனக்கு என் நண்பனை மீட்டுக் கொடுப்பாளா? என்று கதறித் துடித்தான்.

அந்தக் கலக்கத்தின் எல்லையில் தன்னை மீறிப் பிறந்தது இரங்கற்பா. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவன், ஆனந்தமாகக் காளிதாசனை அணைத்துக் கொண்டான்.

அவனைக் கண்ட காளிதாசன் திடுக்கிட்டான். ஆம்: அவன் போஜராஜன். “நண்பா, தவறு செய்து விட்டாயே...இன்னும் 60 நாழிகைகள் தான் உன் ஆயுள். அதற்காகத் தானே, இரங்கற்பா பாட மறுத்தேன்” என்று துடித்தான்.

கதறலுடன், மன்னனை அணைத்தான். அந்தக் கண்ணீரில் வெளிப்பட்ட நட்பின் வாசலில் இரண்டு இதயங்கள் உதயமாயின: உறவாயின: ஒன்றின: இந்த நட்பில் ஏழ்மை, உயர்மை என்ற ஏற்ற தாழ்வுகள் இல்லை. அன்பும் அதனைச் சார்ந்த எண்ணங்களுமே வலிமை கொண்டிருந்தன.

மன்னனும் கலங்கினான். ஆனால், அஞ்சவில்லை. தெளிவாகச் சொன்னான். “ நண்பா, இன்றில்லா விட்டால், நாளை இறக்க வேண்டிய வாழ்க்கை தானே இது. அதைவிடு. நமக்கு இன்னும் 60 நாழிகை இருக்கிரது. அதற்குள் நாமிருவரும் ராமாயணத்தைப் பாடலாமா?” 

மரணகாலம் தெரிந்து விட்ட நிலையிலும் , மகாரசிகனாக போஜன் எழுப்பிய ஆசை காளிதாசனை உருக்கியது. சரி என்று போஉக் கொண்டான். இருவருமாக பாட ஆரம்பித்தார்கள். “ போஜ சம்பு” உருப்பெற்றது. காளிதாசனின் கனவும் பலித்துப் போனது.

காண்போம்

********************************************************************

3 comments:

 1. வணக்கம்

  மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் த.ம 1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete