Sunday, September 22, 2019

விடுமுறைப் பயணம்

திங்கள் வரை பள்ளி உண்டு என்று சொல்லவும் ஒரே நாளுக்காக ஊருக்குப் போக வேண்டாமே என்று நினைத்து சுக்ரீவன் அம்மாவிடம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் போகப் போகிறேன் என்றேன்..நானும் வரேன்.போற வரவு செலவு அவரவர் உடையது தண்ணீர் வாங்கினால் கூட அவரேர் காசுல வாங்கிக்கலாம் டீல் ஓகேயா என்றாள்..

சரி..தனியா போறதுக்கு துணையா இருக்குமேனு ஓகே சொன்னேன்

சிறிது நேரத்தில் விமலா போன் செய்து நானும் வரேன் டி என்றாள்

சனிக்கிழமை இரவே பரமேஸ்வரி எங்கள் வீட்டில் வந்து தங்கிக் கொள்ள ..காலையில் 5.30 க்கு கிளம்பினோம்

வாசலில்.பார்த்தால் 20 பேர்..

பின்னாலிருந்து பரமேஸ்வரி நான் தான் எல்லோரிடமும் சொன்னேன் என்றாள் பெருமையாக...

( என் கூடத் தானே படுத்திருந்தாள்..🤔🤔இது எப்ப நடந்தது?)

அவரேர் காசுல வரோம்.ஆனா ஒன்னாப் போறோம் என்றனர்

முதலில் பிரம்மபுரீஸ்வரர் கோயில்

அங்கிருந்து அரேங்கேற்ற அய்யனார் கோயில்...அங்கிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் வந்து சாப்பிட்டு வெக்காளியம்மன் கோயில் ..அங்கும் தரிசனம்.செய்து விட்டு பஞ்சவர்ணேஸ்வரர் ்..உடனுறை காந்திமதியம்மை கோயில்...அங்கிருந்து வராஹி தனி ஸ்தலம் குழுமணி ரோடில் மங்கள் நகரில் இருப்பதாகச் சொல்லவும் அங்கு கிளம்பினோம்

அங்கும் போய் வராஹி அம்மனை வழிபட்ட பின் மீண்டும் சத்திரம் பேருந்து நிலையம் வந்து...அங்கு ஒரு ஹோட்டலில் மேனேஜர் வரை அனைவரையும் அலற வைத்து...உரிமையாளரையே சாப்பாடு பரிமாறவைத்து..அங்கிருந்து மத்திய பேருந்து நிலையம் வந்து...அங்கிருந்து புதுகை வந்துவிட்டோம்..

பேருந்தில் பத்மாவதி க்கு தான் எங்கும் முகம் கழுவி மாலையில் பூ வைத்துக் கொள்ளவில்லை என்ற குறை..( நெற்றி நிறைய குங்குமமும் மஞ்சளும் இருந்ததால், அதனை அழிக்க மனமில்லாமல் மாலை கோயிலில் நேரம்.இருந்தும் தண்ணீர் வசதி இருந்தும் தன்னை அழகாக்கிக் கொள்ளவில்லை என்று மூன்று முறை சொன்னார்

எப்போதும் முடி முதல் கால் வரை வலிக்குது என்று தினம் என்னிடம் புலம்பும் தன்வந்திரி அம்மா அவ்வளவு நடந்தும் ஒன்றுமே சொல்லவில்லை

இடையில் யாருக்குமே வீட்டு நினைவு வரவே இல்லை..நான் மட்டுமே என் அம்மா.அப்பாவும் என் மகள்களுக்கும் ஒவ்வொரு கோயில் சன்னதியிலும்.தொடர்பு கொண்டு பேசினேன்

பொதுவாக எந்த கடையில் சாப்பிட்டாலும் யார் வீட்டில்.கல்யாணத்தில் எங்கு சாப்பிட்டாலும் சாப்பாட்டைக் குறை சொல்லும்.நகுலன் அம்மா சாப்பாட்டை பற்றி மூச்சு விடவில்லை..

பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் அமர்ந்துருக்கும் வேளையில் சப்தமாக பாடினார்கள்..அங்கு வந்திருந்த அனைவரும் நாங்கள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதாக நினைத்துக் கொண்டனர்

பேருந்தில் என்னை டீச்சர் டீச்சர் என்று எல்லோரும் அழைக்க பஸ் கண்டக்டரும் டிரைவரும் கூட அப்படியே அழைத்தனர்..

பரமேஸ்வரி நேற்றே என் வீட்டிற்கு வரக் காரணம் ஏற்கனவே அஷ்டமு அன்று பைரவர் கோயிலுக்குக் கூட்டிப் போவதாகச் சொல்லி பத்து நிமிடம்.கால தாமதமாக வந்ததால் அவளை விட்டு விட்டு  கிளம்பிட்டேன்..அதனால் தானாம்.

கடைசி வரை எனக்கு நிறைய தமிழ் தெரிவதாகவும் எனக்கு பலத்த ஞானம் இருப்பதாகவும் நம்பினர்..

( உண்மையில் பட்டிமன்றம்.பேசவும்..பதவி உயர்விற்காகவும் பிறரை இம்பிரஸ் பண்ணவும்..தேவாரத்தில் பத்து பாடல்கள். திருப்புகழில்.ஐந்து பாடல்கள்.அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்துவில் இரண்டு பாடல்கள்.பாரதியார் பாடல்கள்.பத்து...பாரதிதாசன் பாடல்கள்.பத்து கண்ணதாசன் பத்து இவை மட்டுமே தெரியும் என்பதை ஒரு முறை நான் சொல்லியும் நம்பவில்லை


கடைசி வரை கேசவய்யர் மனைவி என்னோடு கோபத்துடன் இருந்தாள்..வெக்காளியம்மன் கோயிலில்.இருந்து துலுக்க நாச்சியார் கோயில் பக்கம்.அங்கு நான் கூட்டிப் போகவில்லையாம்.

ஆனால் இது புரட்டாசி மாதம் என்பதால் மதியம் ஸ்ரீ ரங்கம் செல்வதாய் தான் முதலில் சொன்னேன்..ஆனால் ப்ளான் மாறியதும்  ஒரு காரணம்.( அழுத்தக் காரி என்னை மாமி என்று அழைக்கக் கூடாது என்றும் சுவா என்று அழைக்கக் கூடாது என்றாலும்.கேட்காமல் வேண்டுமென்றே அப்படியே அழைப்பாள்.எனக்கு.கனகாம்பர்ம்.தலையில் வைக்கப் பிடிக்காது என்று தெரிந்தும் என் தலையில் வலுக்கட்டாயமாய் வைப்பாள்)
அதனால் என்ன லீவில் ப்ளான் பண்ணி போய்ட்டு வாங்க என்றேன்.என்னோடு தான் வரணுமாம்..சரி சரஸ்வதி பூஜைக்கு கூட்டிப் போறேன் என்றேன..அப்ப தான் உங்க அம்மா வீட்டுக்குப் போறீங்களே. என்று எப்படியும் ஒரு நாள் கூட்டிப் போறேன் என்று சொல்லி இருக்கிறேன்..


வழக்கம் போல் வசந்தா ..பிரேமா..பானுப்பிரியா..கலைச்செல்வி எதுவும் பேசவில்லை..

என்னை சமத்து என்றும்..நல்லபடியாக் கூட்டிப் போய் வந்தீர்கள் என்று சொன்ன போது "ஙே" என்று விழித்து..ஹி என்று சிரித்து வைத்தேன்..( அவரேர் காசுல போனது எப்படி நான் கூட்டிப் போனதாகும்??)

நீண்ட நாளுக்குப் பின் நான் மகிழ்வாய் இருப்பது போல் உணர்ந்தேன்.


சிப்காட் நகர்..பழனியப்பா நகர்.சண்முகா நகர்..பாலன் நகர்..கம்பன் நகர்.பெரியார் நகர்..என்று ஒன்பது நகரிலிருந்து ஒரே இடத்தில் குவிந்து பயணித்திருக்கிறோம்

கீரனூர் வந்தவுடன் மழை பார்த்ததும் தான் எல்லோருக்கும் வீட்டு நினைவே வந்தது..

ஏதோ தேவலோகத்துக்கு அழைத்துப் போனதுமாதிரி இரண்டு மூன்று முத்தங்கள் வேறு தந்தார்கள் பிரியும் வேளையில்..

இன்னமும் எனக்கு ஒரு சந்தேகம்

நான் முதலில் சொன்னது சாவித்திரியிடம்.அவள் வரவில்லை..நான் பரமேஸ்வரி.கலைச்செல்வி மூன்று பேர் மட்டுமே போக திட்டமிட்டிருந்தோம்.

அதுவும் சனிக்கிழமை மதியம் தான் சொன்னேன்
.எப்படி அதற்குள் எல்லோரும் இணைந்தார்கள் என்பது ஆச்சர்யம் தான்

பிஸ்கெட்..பேரீட்சை..கடலை மிட்டாய்..கல்கண்டு..கொய்யா...திராட்சை என்று ஆளுக்கு ஒன்றே ஒன்று என்று பகிர்ந்து உண்டது மறக்க இயலாது..

இறங்கும் போது சுவா மாமி  ஸ்ரீரங்கம் எப்போனு சொல்லுங்க என்று கத்தி ச் சொல்லி என் கோபத்தை ரசித்து விட்டிச் சென்றாள் கேசவய்யர் மனைவி..

Sunday, April 24, 2016

இயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்

பிரபாஸ் படத்தின் இசை வெளியீடு ஏப்ரல் 20..

திரை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கக் கூடிய மனிதர்கள் எல்லோரும் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

கிட்டத்தட்ட 56 தொலைக்காட்சிகளுக்கு மேல் வந்து எங்களை பேட்டி எடுத்து சிறப்பித்தார்கள்..

ராஜாராஜா இயக்குநர்...இப்படத்தின் வசனகர்த்தா இவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.

எங்கள் இருவருக்கும் ஒரே வயது

அதனால் இவரைப் பார்த்தே அன்றே என்னை தோழி என்றும் சகோதரி என்றும் சொல்லி விட்டார்.

திரை உலகில் பெண்களுக்கு பயம் என்றெல்லாம் ஒரு மாயை ஏற்படுத்தியது யாரோ.....அக்கருத்தை குப்பைக்குள் தள்ளியவர்.

பழகுவதற்கு மிகவும் எளிய நபர். இனியவர். எல்லோரையும் அரவனைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதே சமயம் தன் உழைப்பு முழுமையாகவில்லை என்றால் மிகச் சரியான நேரத்தில் சரியான நபரிடம் மட்டும் கோபம் கொள்ளும் உள்வியல் அறிந்தவர்.

டப்பிங் தியேட்டரில் யார் யார் எந்த கேரக்டருக்கு பேச முடியும் என்பதை உணர்ந்து அவரவர்களை அழைத்து பேசவைத்தார்.

இன்று பத்ரகாளி பிலிம்ஸ் தனது அனைத்துப் படத்தையும் தமிழகத்தில் இவருடைய ரசி மீடியாவில் மட்டுமெ தன் பணிகளை மேற்கொள்ளும், அந்தளவிற்க்கு தன் பணிகளை மிகவும் சிறப்பாக செய்வதில் சூரர்.

நல்லோர்களுக்கு எல்லாம் நல்லவிதமாக அமையும் என்பது போலவே இவருடைய உதவியாலர் திரு கார்த்தி அவர்கள், அற்புதமாக பணி ஆற்றக்கூடியவர். இவர் நினைத்தனை அவர் செய்யும் அளவுக்கு இருவருக்கும் ஒரு வேதியல் பொருத்தம்.

அதே போல் ஸ்கைரவி சார் பணீகளை நமக்கு நன்கு தெரியும்..எல்லாவற்றௌயும் பார்த்து பார்த்து செய்பவர்.

இசை கோர்ப்பு அன்று ரெக்கார்டிங் தியேட்டரில் திரு செந்தில் குமார் அவர்களின் பணி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒரு சின்ன பிசிர் த்ட்டினாலும் தன் கூர் புத்தியால் கண்டுபிடித்ததோடு எந்த இடத்தில் எதனால் ஏற்பட்டது? அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு வரியையும் ரசித்து கோர்வையாக்கினார். அவரின் ரசனை எங்கள் வார்த்தைகளை பாடல்களாக்கியது என்றே சொல்ல வேண்டும்..

இயக்குநர் ராஜராஜாவைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நல்ல மனிதர் எனக்கு நண்பராகக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..

நட்பு விஷயத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்றே சொல்ல வேண்டும்

என் பிரியத்திற்குரியவர்கள் எப்போதும் என்னை விட்டு விலகுவதுமில்லை. மாறுவதுமில்லை.

அதற்கு சான்று...ராதா, பிரபா, வானதி, பாத்திமா, கருணாநிதி அண்ணா, ராகவன் டாடி,

ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதில்லை. எப்போதும் பேசிக் கொண்டே இருப்பதும் இல்லை. ஆனால் எங்கள் குடும்பத்தின் நபர்களுக்காக அவரவர்கள் பிரார்த்தனை செய்து கொள்வோம்...

ஆறு மாதம் கழித்துப் பேசினாலும் அதே அன்பு எங்களுக்குள் எப்போதும் ஊற்றெடுக்கும்

அப்படித்தான் என் பிரியத்திற்குரிய அண்ணா திரு கருணாநிதி அவர்கள்...

கல்லூரி காலங்களில் அவர் நிறைய கவியரங்கம் செல்வார். முதுநிலைப் படிப்பில் தங்க மெடல் வாங்கியவர்..அந்த சிறு வயதில் என் அம்மாவிடம் தன் கவிதைகலை அழகாக சப்தமாக, உச்சரிப்பு சுத்தமாக வாசித்துக் காண்பிப்பார்.

இதெல்லாம் விட எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவர்.

யார் யாரிடமோ அவரின் இணைப்பு எண் வாங்கி அண்ணா நான் சென்னைக்கே வந்துவிட்டேன் அண்ணா என்று சொன்னேன்..அதே அன்பு...அதே பிரியம்..என்னடா செல்லம் என்றே எங்கும் அழைப்பவர். திருமணத்திற்கு முன் கவியரங்கம் செல்லும் போது கருணா அண்ணா வந்தால் அம்மா துணைக்கு வருவதில்லை. அதான் அண்ணா வரான்ல என்பார் அந்தளவுக்கு பிரியமானவர். நேயமானவர்.

இன்று பல பாடல் கள் எழுதி இருப்பதோடு பல பேச்சாளர்கள் கவிஞர்கள் தலைவர்கள் எல்லோரும் விரும்பும் ஒரு நபராக இருப்பது புதுகைக்குக் கிடைத்த பெருமை என்றே சொல்ல வேண்டும்

அன்று நாங்கள் பாடல் ஒலிப்பதிவு முடித்து சாலிகிராம் வழியாக வந்த போது ஒரு பெரிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் தான் போன ரெனால்ட் டஸ்டர் காரை நிறுத்தி என்னப்பா நன்றாக இருக்கியா? என்று விசாரித்ததோடு தன்னை எனக்கும் அறிமுகம் செய்து கொண்டார்.(அவரைத் தெரியாதோர் யார்)

கவிஞர் வைரமுத்து அவர்கள் அண்ணன் மேல் அன்பும் அக்கறையும் அதிகம் உள்ளவர்..

அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளங்களோடு எனக்கு திரை உலகம் தன் இரு கைகளை நீட்டி வரவழைத்திருக்கிறது...

கருணா அண்ணா மூலம் தான் எனக்கு இயக்குநர் ராஜராஜ அவர்களின் அறிமுகம் கிடைத்தது..

இந்த நன்றியை அன்பை என்றும் மறவேன்...

நல்ல உள்ளங்களின் துணையோடு இன்னும் நிறைய சாதிப்பேன்...

பின் குறிப்பு...எனது பாடல்கலை ரசித்துப் பாடினார் தம்பி ஜெகதீஷ்

திருமலை சோமு, மீனாட்சி சுந்தரம், அருண்பாரதி இவர்களும் இப்படத்தில் தங்கள் பங்குக்கு அற்புதமான பாடல்கள் தந்துள்ளனர்...அவர்களுக்கும் என் வாழ்த்தும்,,,வணக்கமும் உரியதாகுக





Tuesday, February 2, 2016

கைப்பைக்குள் இருந்ததை கவர்ந்து சென்றவள்

நானும் ஆசிரியர் என்றாள்
சினேகமாய் சிரித்து வைத்தேன்

தனியார் பள்ளிகள் சில வற்றின்
அராஜகங்களையும்
அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
அன்பையும் அடுக்கினாள்
அதிகமான
அன்பை உணர்ந்தேன்

பையத்தான் என் பையைக் கேட்டாள்
நீ போய் வா என்றாள்
இயற்கை உபாதை தனித்து
இறங்கி வந்தேன்

கைப்பையில் இருந்ததை
பாதியைக் கவர்ந்திருந்தாள்
அவள் எடுத்தது தெரியாமல் இருக்கவே
பேருந்துகளின் திருட்டுகள் பற்றி
சிறு விளக்கம் கூடக் கொடுத்தாள்

நான் அப்படி சந்தித்ததில்லை என்றேன்
சந்திக்க வைத்து விட்டாள்

நல்லவேளை
சென்னை வந்தபின்
என் இருப்பிடம் போக
கொஞ்சம் சில்லறை வைத்திருந்தாள்

ஆனாலும் அவள் பாவம்
இருக்கும் இரண்டு வங்கி அட்டைகளில்
ஒன்றில்
சம்பளம் போக
மீதிக் கடனிருப்பதை
எப்படி சமாளிப்பாள்??

மற்றொன்றில் பத்திரிக்கைகள்
எப்போதேனும் போடும்
எளிய தொகையை வைத்து என்ன செய்வாள்??

பதிப்பகங்கள் நிராகரித்த
அந்த
கவிதைக் காகிதங்களை
பண்டமாற்று முறையில்
பஜ்ஜி வாங்கித் தின்பாளோ???


அறுந்து விழுந்து நான் சேகரித்து வைத்திருந்த
கொலுசு
ஏற்கனவே ஆறுமுறை பத்த வைத்த கதை
அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை
வட்டியைக்கூட கட்டவில்லை என
என்னை மிரட்டி அல்லது திட்டி
இரண்டு வங்கிகளிருந்து வந்த
கடிதங்களை என்ன செய்வாள்??

பிள்ளைகளின் படிப்பிற்கும்
தவணை முறையில் தான்
கட்டணம் செலுத்துகிறேன் என்பதறிந்து
எள்ளி நகையாடுவாளோ?

அடைக்க இயலாத
வீட்டுக்கடன் ரசீதுகள்
கட்டிய வீட்டையும்
கட்டாத கடனுக்கென
அடகு வைத்த ரசீதுகளை வைத்து
என்ன செய்யப் போகிறாள்???

என்
கம்பீரத் தோற்றமும்
கவர்ந்திழுக்கும் பேச்சும்
அவளையும் கவர்ந்திருக்கலாம்
ஆனால்
அதில் கடன் இருக்கும் என்பது
அவள் அறியாதது தானே???

மகளுக்கென
மருத்துவர் தந்த மருந்து சீட்டில்
பாதியை மட்டுமே வாங்கி
மருத்துவரையும், மருத்துவத்தையும் நான்
ஏமாற்றிய கதை தெரிந்து போயிருக்கும் தானே???

ஒவ்வொரு மாதமும்
வாங்க வேண்டும் என நினைத்து
நான் போட்ட பட்டியல்களில்
பலவற்றை பல மாதங்கலாய்
 வாங்காமலேயே
காலம் கடத்துவதைச் சொல்லும்
பட்டியல்கள் பார்த்து
என்ன நினைத்திருப்பாள்???

செத்துப் போன அப்பாவுக்கு
என்று நான் தொடங்கி எழுதியிருந்த
கடிதங்களைப் பார்த்து
பைத்தியக்காரி
என்று கூட நினைத்திருக்கலாம்

இதன் மூலம்
அவள் ஒன்றை அறிந்திருக்கலாம்
பெண்கள்
தூக்கிச்செல்லும் கைப்பையில்
காசுகளோடு
கவலைகளையும் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று

ஒன்றே ஒன்று நிச்சயம்
இவ்வளவு கடன்களையும்
தூக்கலான சில துயரங்களையும் தூக்கிக் கொண்டு
இவள் எப்படி உயிரோடு இருக்கிறாள்?
என்று யோசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது

இருந்த கொஞ்சப்பணம் அவளுக்கு
இரண்டு நாள்
அரிசிக்கும் மளிகைக்கும் பாலுக்கும் காய்கறிக்கும்
அவளுக்கு உதவி இருக்கக்கூடும்

அவள் வரையில்
என் மானம் போய் விட்டது
என்
கம்பீரம் பார்த்தவள்
இப்போது
கடன்களையும் பார்த்திருப்பாள்

ஆனால் அந்த அட்டைகள்
ஒரு நாளும்
அவளுக்கு உதவப்போவதில்லை

ஆனாலும்
அவளுக்கென் ஆழ்ந்த அனுதாபங்கள்

உடலும் முகமும்
பணக்காரத்தனம் காட்டியதால் தான்
வந்து பக்கத்தில் அமர்ந்திருக்க வேண்டும்

அகத்தின் அழகு முகத்தில் தெரிந்த
அவளுக்கு
வாழ்க்கையின் கடன்கள்
வார்த்தைகளில் கூட இல்லை
என்பதை அவள் உணரவே இல்லை

அவளுக்கு என்
ஆழ்ந்த அனுதாபங்கள்..
அடுத்த முறை

உனக்கு
இன்னும் கொஞ்சம் அதிகமாய் வைக்க முயல்கிறேன்
அதுவரை
அதிகம் உள்ளவர்களிடம் திருடு
**************************************************************



Wednesday, December 23, 2015

போய் வருகிறேன் புதுகையே

போய் வருகிறேன் புதுகையே
என்
 தாயின் கருவறை தாங்கியதை விட
நீ
தாங்கினாய்
என் சோகங்கள் - உள்
வாங்கினாய்

இங்குள்ள்
ஒவ்வொரு நபர்களும்
என்
பிரியத்திற்குரியவ்ர்கள்
எனக்கான எதிர்பையோ
மறுப்பையோ
கொண்டிருந்தாலும்

எனக்கான
 பள்ளங்கள் தோண்டியோருக்கும்
இந்நேரத்தில் நான்
என் பாசங்களை
வழங்கக் கடமைப்பட்டிருக்கிறேன்

திருமணம் ஆனதும்
திருப்பூர் சென்ற போது
அடர் காட்டில்
அமிழ்த்தப்பட்டதாய் உணர்ந்து
குற்றம் சாட்டி,,,,,
பேரம் பேசி,
வாதாடி,
போராடி,,,,
மீண்டும்
புதுகையே வந்துவிட்டேன்
ஆனால் இப்போது?????

நாற்றுகள்
ஒரே இடத்தில் இருந்தால்
வளர்ச்சியும் இல்லை
முதிர்ச்சியும் இல்லை
எனவே தான்
இந்த மாறுதல்

கை கூப்பி அழைக்கும் சென்னை
என்னை
ஆதரிக்குமா?
அபகரிக்குமா ?
ஆற்றுப்படுத்துமா?
எதுவும் தெரியவில்லை.
இப்போதைக்கு
அதன்
அழைப்பின் அணைப்புக்குள் கிடக்கிறேன்


பரந்து விரிந்த மாநகரத்தில்
எனக்கான
பிரியங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இயல்பில் பிரியமானவளுக்கு
நிறைய நிறைய்ய
பிரியங்களைக் கோர்த்திருக்கிறேன்
நட்பால் வார்த்திருக்கிறேன்


எங்கும் விதைத்திருக்கிறேன்
எனக்கான
பிரியங்களையும்
கருத்து வேறுபாடுகளையும்
நல்ல வேளை
இது வரை
நான்
பகைமைகளைச் சந்திக்கவே இல்லை
பகைமையென யாரையும் உணரவே இல்லை
இறைவனுக்கு நன்றி

இப்போது
எல்லோரிடமும் கொட்டிச் செல்கிறேன்
எனக்கான அன்புகளை மட்டும்


என் பிரியத்திற்குரிய புதுகையே
உன்
பாதம் தொட்டு வணங்கி
விடைபெறுகிறேன்
என்னை
ஆசிர்வதித்து அனுப்பு


என் மூச்சுக்குள் நிறைந்த புதுகையே
உன்னை
என் உயிருக்குள் வைத்து
ஆரத்தழுவுகிறேன்
என் நெற்றியில் முத்தமிட்டு
விடைகொடு!!!!!!


இனியும் வருவேன்
உன்னைக் காண
விருந்தினர் போல
ஒருநாள்...இருநாள்...
பயணத்திட்டங்களுடன்


என் பணிகள் சிறக்க செழிக்க
உன்னிலிருந்து
எடுத்துச் செல்கிறேன்
ஊக்கங்களை
ஆக்கங்களை
அன்புகளுடனும்,
நன்றிகளுடனும்


இந்த ஊர்குருவி
பருந்தாக ஆசைப்பட்டு
பறந்து செல்கிறேன்


வல்லூறுகளின்
வலிமை பழகவில்லை நான்,,,
எனினும்
எனக்கான
வளிமண்டலத்தில்
வாகைசூடுவேன்
அழுத்தமாய்...ஆழமாய்...

என் பாதைகளில்
பன்னீர் தெளிப்பார்களா?
கண்ணீர் தெளிப்பார்களா?
என அறியவில்லை நான்


ஆனால்
கண்ணீரையும்
பன்னிர் ஆக்கிக் கொள்ள
பழக்கு!!!!

நினைவின் கூடுகளில்
நீயே நிறைந்திருப்பாய்!


உன்
சேமநலநிதிக்கணக்கில்
எப்போதும்
எனை வரவில் வை


வரலாற்றுப்பக்கத்தில்
எப்போதும்
எனை
உறவில் வை...!!!!


அழுத்தமாய்....ஆழமாய்...!!!

உன் சுவாதி...


**************************************************************************

Tuesday, December 8, 2015

இது கட்டுரை அல்ல....கண்ணீர்

* ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் ஒரு வேனில் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழ்த்தளத்தில் இருப்பவர்கள் உடனடியாக காலி செய்து விட்டு போகவும் என்று கத்திக் கொண்டே தான் சென்றனர்.

* அவர்களே மிகத் துரிதமாகத்தான் கத்திக்கொண்டு சென்றனர். தீபாவளியை ஒட்டி வந்த மழையில் எல்லோர் வீட்டிலும் மூன்றடித் தண்ணீர்.எனவே, காவல் துறையினர் அறிவிப்பு செய்தும் சில பொருட்களைப் பரணில் பத்திரப்படுத்தி விட்டு படுக்கச் சென்று விட்டனர். அறிவிப்பு செய்த போது மணி 11.30..மூன்று நாட்களாய் ஒரு விநாடி கூட நிற்காத மழை. சாலையில் முழங்கால் அளவுக்குத் தான் தண்ணீர்.

அரைமணி நேரத்தில் மழை கட்டிலைத் தாண்ட சில குடும்பங்களில் லாப்டில் ஏறி அமர்ந்துள்ளனர். ஆனால் அடுத்த இருபது நிமிடத்தில் மேற்கூரையைத் தாண்டி விட்டது நீர்.வெளியேயும் வர இயலாமல் அப்படியே சில குடும்பங்களோடு இறந்து கிடந்தது எல்லோர் மனதையும் குலைத்தது.

புதிதாய் மராமத்து பணி செய்யப்பட்ட வீடு. தன் சேமநலநிதிக் கணக்கு மற்றும் வீட்டுக்கடன் பெற்று கட்டிய வீடு 20 ஆண்டுக்கடனில் 5 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்திருக்க , கட்டுமானப் பணியில் என்ன கோளாறு என்று அறியாமலேயே குடும்பத்தோடு இடித்துத் தள்ளிக் கொண்டே போய்விட்டது.

அறிவிப்பு  வந்த நேரத்தில் ஒரு சில கடைகள் இயங்கிக் கொண்டு தான் இருந்தன. ( இரவு 2 மணிக்குப் போனாலும் எல்லா சாலைகளிலும் வாகனங்களும் மனிதர்களும் நகர்ந்த வண்ணமிருப்பர்.) முன்பே மழை மூன்றடிக்கு வந்து போயிருந்ததால் அவர்கள் இந்த அறிவிப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

சர சர வென்று நீர்மட்டம் ஒரு பேய் வேகத்தில் உயர, திறந்திருந்த கடைகள் மட்டுமல்ல சாலைகளில் பயணித்தோர் அனைவரும் நீரோடு போராட முடியாமல், போய்ச் சேர்ந்தனர்.

இருசக்கரவாகனங்கள், கார்கள், லாரிகள், வேன்கள், பஸ்கள், என்று அனைத்து வகை வாகனங்களும் உருட்டிக் கிடந்தது.

சைதாப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒரு கணினியாளர் அன்று வேலை இருந்ததால் திடீரென்று அறிவிப்பும் அதைத் தொடர்ந்து கூச்சல், எல்லாம் கேட்க மாடியில் நின்று பார்த்தவர் உறைந்து போயிருக்கிறார். தன் கண்ணால் மரணங்களின் தொகுப்பைப் பார்த்து இன்னும் எந்த மிரள்வில் இருந்து மீளாமல் காணப்படுகிறார்.

மாணவர்களுக்கு தண்ணீரின் அடர்த்தி பற்றி வேகம் பற்றி கற்பிக்க ஒரு பவுடர் டப்பாவில் மூன்று துளையிட்டு அதில் அடியில் இருக்கும் துளையில் தண்ணீர் அதிகமாக வருவதைச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று வகுப்பெல்லாம் தண்ணீராக்க்கி, ஆயாம்மாவிடம் கொஞ்சம் முனகல் பெற்று, ஆனாலும் விடாமல் அவர்களை தண்ணீர் ஊற்ற சொல்லிகிறேன் என்று நானே ஊற்றி ஊற்றி விளையாடி இருக்கிறேன். நீரின் வேகமும் அடர்த்தியும் இவ்வளவே நான் அறிந்தது. ஆனால் இழுத்துக் கொண்டு போன பலரை நேரில் பார்த்ததும் இன்னும் ரீங்கரிக்கிறது பயத்தின் அலறலும், உயிரின் பீதியும், கடைசியாய்க் கத்திய மரணவலியும்.

மண்டபங்களில், பள்ளிகளில், பாதுகாப்பில் உள்ளோர் எண்ணிக்கையும் மரணத்தைத் தழுவியோர் எண்ணிக்கையும் குறைவாகத்தான் வெளியிடப்படுகிறது. ஏனெனில் உண்மைக் கணக்கு யாருக்குத் தெரியும்,,(அந்தந்த பகுதியில் பார்த்தவர்கள் தான் சாட்சி)

இடுப்பு அளவையும் தாண்டி தண்ணீர் உள்ளே வந்ததால் இனி ஆபத்து நேரலாம் என்று உணர்ந்த ஒரு சகோதரி, தன் மகனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு(மூன்றாம் வகுப்பு) மற்றொரு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் சற்று பெரியவள் என்பதால் தனியே நடக்கவிட்டுக் கூட்டி வர தன் மகள் தண்ணீருக்குள் கரைவதைப் பார்த்த பின்னும் தன் மகளை இழுக்கப் போனால் கையில் இருக்கும் குழந்தையும் சிறுவனையும் கூட இழக்க நேரிடும் என்று உணர்ந்து இவர்களைக் காப்பாற்றி விட்டு தன் மகளின் சடலமாவது கிடைக்குமா என்று என்று கதறிய காட்சியைப் பார்த்த போது என் இதயம் சுக்கு நூறாகி வெடிக்கும் ஓசையை நானே கேட்டேன்,

அறிவிப்பு வந்தபின் சாப்பிட்டு விட்டு நிதானமாக கிளம்ப கொஞ்சம் துணிகள், உணவுப் பொருளுடன் கிளம்பிய குடும்பம் மொத்தமும் அடித்துச் செல்லப்பட்டனர்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் சுற்றிலும் நீர் என்பதால் வெளியே வர இயலவில்லை. மின்சாரம் இல்லை. எனவே சுற்றி தண்ணீர் இருந்தும் குடிக்கத் தண்ணீர் இல்லை.

கழிப்பறை வசதி இல்லாததால் உணவு உண்டால் தான் அந்தத் தொல்லை என்றே உணவே எடுத்துக் கொள்ளாமல் காலம் தள்ள முயற்சித்தோம்

ஒரு தாய் தன் குழந்தைகளைப் பார்த்து சாப்பிடு என்று சொன்னது போக , கொஞ்சம் சாப்பிடாமல் இருக்க முயற்சி செய் மா என்று சொல்ல ஆரம்பித்தோம்.

திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் தான். ஆனால் ஆறு நாட்களும் நரகவேதனையில் 600 ஆண்டுகள் போல் நீண்டது

முதல் தளத்தில் இருப்போர் கீழ்த்தளம் வரைதான் தண்ணீர் வரும் என்றும் மேலே வரை எட்ட வாய்ப்பே இல்லை என்று எண்ணிய எண்ணத்தில் விழுந்தது நீர்

மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் நான்காம் நாள் மின்சாரம் வந்து விடக்கூடாது என்றே பயந்தோம். வந்தால், பூட்டப்பட்ட வீடுகளின் வழியாகவும் நீரால் சூழப்பட்டு உள்ளேயே இறந்து கிடந்தோரின் வீட்டின் மூலமாகவும் பல பகுதிகளில் மின்சாரம் வந்தால் தண்ணீர் வெளியேறாத நிலையில் தாக்கப்படுவோம் என்றே பயந்தோம். அதற்கு இருட்டு வாழ்வே தேவலாம் என்று தோன்றியது.(திங்கள் முதல் சனி வரை மின் இணைப்பும் வழங்கப்படவில்லை)

கீழ்தளத்தில் சிலர் வண்டியை வைத்துப் பூட்டி சென்றிருந்தாலும் அது அடித்துச் செல்லப்பட்டு எங்கு போனதென்ற சுவடே தெரியவில்லை.

அடித்து வரப்பட்ட இருசக்கர வாகனங்கள் பல இடங்களில் தேங்கிக் கிடந்தன. ஆனால், அவைகளை சுமந்தவர்களை,??

வீட்டுக்குள் சுழற்றி அடித்த்  தண்ணீர் அதுவாகவே பீரோவைத் திறக்க வைத்து, மிக்ஸி, கிரைண்டர், அடுப்பு சிலிண்டர், வாஷிங் மிசின்,பிரிட்ஜ் என்று அனைத்துப் போருட்களையும் சேதப்படுத்தி அல்லது அதனையும் அடித்துச் சென்றிருந்தது.

நான்கு நாட்கள் கழித்து வீடு பார்க்கும் போது மாநாகராட்சிக் கழிப்பரையைவிட அலங்கோலமாகக் கிடந்தது.

இன்னும் மேல் மாடி வரை எட்டியத் தண்ணீரின் அதிசயத்தை பே

சிப் பேசி மாளவில்லை. மேல் தளத்திலும் 5 அடிக்குத் தண்ணீர்

சுதாரித்தோர், மொட்டை மாடிக்கு சென்று நடுங்கும் குளிரில், மழையில் நனைந்து கொண்டே இருந்ததால் மொட்டை மாடிகளிலும் பிணங்களின் குவியல்கள்

சர சரவென இடிந்த வீடுகளை வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே வந்த நிமிடத்தில் தண்ணீரால் இழுக்கடிக்கப்பட்டு மரணித்தனர்

சென்னையின் பிரதான் சாலைகள் அனைத்திலும் தண்ணீர்..( அளவின் விகிதம் தான் கூடியதும் குறைவானதாகவும் இருந்ததே யன்றி எங்கும் நீரால் சூழ்ந்தது உலகு

தீபாவளியை ஒட்டி வந்த மழையில் இடுப்பளவு மட்டுமே வீட்டுக்குள் புகுந்த்தால், பலர் வீட்டைவிட்டு போகாததாலும் இறந்தனர்

கழிப்பறை அளவு உள்ள இடத்தையும் வீணாக்காமல் வீட்டாய் மாற்றி வாடகை பெற்ற சென்னை இன்று மொத்தமாகவே கழிப்பறை ஆனது

சாலைகள் அனைத்தும் ஆங்காங்கே பிளவு பட்டு கார் முங்கும் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டதால் மறுநாள் வந்த கார்கள் மூழ்க சில சாலைகள் மூடப்பட்டு போக்குவ்ரத்தை தடை செய்து உத்தரவு போட்டிருந்தனர்.

சென்னையின் மழை தாக்கத்தை மீம்ஸ் ஆக்கி மகிழ்ந்தோருக்கு உணமையில் மழையின் இறப்பு சதவீதமும் இழப்பு சதவீதமும் தெரியவில்லை

எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர்தான். தனது ஊதியத்தில் வாங்கிய பொருட்கள் தான் அவ்வளவும். இனி அடுப்பிலிருந்து ஒவ்வொரு குடும்பமும் ஆரம்பிக்க வேண்டும். பாத்திரங்கள், சமையல் பொருட்கள், படுக்க, இருக்க என்று ஒவ்வொரு பொருளும் இனி வாங்கிச் சேர்த்துவிடலாம். ஆனால் இந்த மனபாரத்தைத் தான் எப்படித் தாங்குவது எனத் தெரியவில்லை

அப்பா, அம்மாவை விட்டு இங்கே வேலை பார்த்தவர்கள், மனிவியை விட்டுப் பிரிந்து இருப்போர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பிரிந்து வந்தோர் தான் பெரும்பாலும். ஆனால் யாரும் யாருடனும் தொடர்பு கொள்ள இயலாம் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற தகவலுக்குக் கூட தொலைபேசிக்கு மின்சாரம் இல்லை. நெட்வொர்க்கும் இல்லை.

வெளியூரிலிருந்து பால் பிஸ்கட், பிரட் போன்ற பொருட்கள் மக்கள் தங்கியிருந்த  பள்ளிகள், மண்டபங்களை எட்டினாலும் பாதிப்பே இல்லாதோர் தான் முண்டி அடித்துக் கொண்டு வாங்கினர்.

இதிலும் வியாபாரம் பார்க்க நினைத்த சிலர் அந்தப் பொருட்களையும் வாங்கி விற்றனர்.

ஒண்ணாம் தேதியே மழை பெய்ததால் ஊதியத்தை ஏடிஎம் லிருந்து நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருந்த பணத்தையும் செலவு செய்து விட பாங்குகளில் எல்லாம் தண்ணீர் சூழ எந்த வங்கிகளும் இயங்கவில்லை. ஏடிஎம்மில் பணமும் எடுக்க இயலவில்லை. இதனால் அட்டைகளில் பணம் இருந்தும் எடுக்க இயலாத கொடுமையும் நேர்ந்தது

இரவு இரண்டு மணியானாலும் காலை நான்கு மணியானாலும் போக்குவரத்து வாகனங்களாலும் மக்களாலும் தூங்காமல் விழித்திருக்கும் சென்னையில் அனைத்துக் கடைகளும் மூடியே கிடந்தன. வியாபாரிகள் பாடு கொண்டாட்டமாகவும் மக்கள் பாடு திண்டாட்டமாகவும் இருந்தது

எங்கும் போக இயலவில்லை. எல்லாவற்றுக்கும் விலை வைத்தார்கள்.

பால் 200 கத்தரி 200 மற்ற பொருட்கள் அதன் மடங்குகளில்

சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் குறைந்ததும் நாங்கள் கேட்ட ஒலி எல்லாம் ஹெலிக்காப்டர் சத்தமும், ஆம்புலன்ஸ் சத்தமும்

வேளச்சேரி பகுதியின் ஹவுசிங் யூனிட், கல்கி நகர், ராஜலட்சுமி நகர், விஜய நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, தண்டீஸ்வரம் நகர் தான் மற்ற பகுதிகளை விட பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது

அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் இரண்டு நிமிட நடையில் எட்டும் தூரம் எல்லாம் 6 மணி நேரம் பிடித்தது. வெளியில் போனால் உயிரோடு மீண்டும் வீட்டுக்குள் வருவோம் என்ற உத்திரவாதமே இல்லை

மண்டபத்தில் உணவு வழங்குகிறோம் என்ற போர்வையில் பெண்கள் கையைத் தடவி, வருடி, உணவு வழங்கிக் கொண்டது சில மனித மிருகங்கள்

சில இடங்களில் தங்கும் போது மோசமாக நடந்து கொண்டிருக்கின்றனர்

வெளியூரிலிருந்து வந்த பொருட்களை வியாபாரிகள் பிடிங்கி விலை வைத்து விற்றனர்.

பிஸ்கட், பால், பிரட் என்று என்ன பொருட்கள் வழங்கினாலும் போட்டோ எடுத்துக் கொண்டனர் கொடுத்தவர்கள், அதில் அழகாய் இருப்பவர்கள் புறக்கனிக்கப்பட்டனர். அவர்களுக்கு சோக எஃபக்ட் பத்தலையாம்

பலரின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளிருப்போர்களை மீட்ட கொடுமையும் நடந்தது.

அனைத்து இடங்களிலும் கழிவுநீர் பாதாள சாக்கடைகள் மூடி தானே திறக்கப்பட்டு இரண்டும் ஒன்றாகக் கலந்து பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது

இவ்வளவு அழிவுகளைத் தந்த நீர் தனக்காக காவுகளை எடுத்துக் கொண்ட நேரம் அரை மணி நேரம் தான்

முதல் நாள் முதல் தளம் வரை எட்டிய நீர் இரண்டு நாட்கள் கழித்து தான் சாலையில் இடுப்பளவில் நடக்கும் அளவில் குறைந்தது

சாலையோரங்களில் மிக உயர்ந்த மரஙகளில் எல்லாம் முதல் நாள் அடித்துக் கொண்டு போன பாலிதீன்கவர்கள் தொங்கியது

ஒரு மனநல்ம் குன்றியோர் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், டோனர்கள் கொடுத்த பணம், மளிகைப் பொருட்கள், அக்குழந்தைகளுக்குப் பயன்படுத்தப் பட்ட வேன் எல்லாம் எல்லாம் ஒட்டு மொத்தமாக அழிந்தது

எல்லோருடைய வீட்டிலும் பள்ளிப் புத்தகங்கள் நீரோடு போய் விட்டது

இப்போது எங்கள் வீடுகளில் அடுப்பு,  மற்ற் சமையல் உதவி சாதனங்கள், மளிகைப் பொருட்கள் என்று எதுவும் இல்லை

இதில் நான் குறிப்பிட்டுருப்பது 0.000000000001 சதவீதம் கூட முழுமையாய் சொல்லவில்லை.

இன்னமும் மழைநீர் சூழ்ந்து வீடுகள் நிறைய இருக்கின்றன். உணவு பால் பொருட்கள் இல்லாமல் மின் இணைப்பும் இல்லாமல் என்ன செய்ய இயலும்?

இன்னும் முழுமையாக நீர் வடியாததால் எங்கே ம்ன் கம்பிகள் ஷாக் அடிக்குமோ என்று பயந்து ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் விடப்படுகிறது

இன்னும் பெரும்பான்மையான் கடைகள் திறக்கப்படவில்லை. காரணம் உள்ளே இருந்த பொருட்கள் இனி விற்பனைக்குகந்தவையாக இருக்காது

இப்போது பலரின் மனது உதவியை விட ஆறுதலைத்தான் எதிர் பார்கிறது

அன்பான வார்த்தைகளால் இழந்த பொருட்களை மீட்டெடுப்போம் என்று நான் நம்புகிறேன்

ஆனால் உயிர்கள்???

அதே போல் இதைச் சாக்கிட்டு பெண்களைத் தவறான முறையில் அணுகியோர்கள் அழுகிச் சாக வேண்டும் என்று சாபமிட்டாலும் இறைவா அவர்களுக்கு நல்ல மனதைத் தா என்று வேண்டுகிறேன்

இனி வரும் ஊதியத்தில் ஒவ்வொன்றாய் வாங்கலாம். பிறக்கும் போதே எல்லாம் கொண்டா வந்தோம்??????







Monday, November 30, 2015

இதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)

குழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை விட்டு தலை நகரம் நோக்கி நகர்ந்திருக்கிறேன்..

மாறுதல் கிடைக்க வில்லை ( கிடைக்கவே கிடைக்காது) என்பதால் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறேன்.

ஒருநாள் அல்லது இருநாட்கள் மட்டுமே புதுகையில் என்பதால், புதுகை செல்வது தான் எனது பயணக் கட்டுரை..( வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் எழுத வேண்டுமா என்ன? என் நாடு புதுகை தான்...)(இம்முறை திங்கள் முதல் சனி வரை)

இதனை வருத்தங்கள், ஏக்கங்கள்,பெருமைகள், வேலைகள், பார்வைகள், செய்திகள் என்ற உணர்வுகளில்...வரிசையாக...அல்லது வரிசையற்று..

வருத்தங்கள்
**************
1.புவனேஸ்வரி கோயில், புதுக்குளம், பிரகதம்பாள் கோயில், நார்த்தாமலை, குமரமலை, போக நினைத்தேன்...போகவில்லை.

2.புதுக்குளக்கரையில் தனிமையில் அமர்வது மிகவும் பிடிக்கும்..ஆனால் நேரம் ஒதுக்க இயலவில்லை.

3,பெரியார் நகர் பூங்காவில் அமரவும், ஆரோக்கியசாமி அம்மாவிடம் பேசவும் நினைத்தேன்.

4. வாணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது . பார்க்க வில்லை.

5. கார்த்திகை தீபம் அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மேன்மைமிகு சரஸ்வதி ராமநாதன் அம்மா தலைமையில் பட்டி மன்றம் சென்று விட்டதால் உள்ளூரில் முருகன் கோயில்களுக்குச் சென்று சொக்கப்பனை பார்க்க இயலவில்லை.( கோயில்கள் செல்லவில்லை என்று நான் எழுதுவதைப் பார்த்து நான் மிகப் பெரிய பக்திமான் என்று என்னை நினைத்து விடாதீர்கள்..தயவு செய்து)

6. எனக்கு தினமும் சிகப்பு ரோஜாக்களைத் தரும் சீதா அக்காவை ( உடல்நல குறைவாய் இருக்கிறார்) பார்க்கவில்லை.

7.நீலா,குணா,வசந்தி,வளர்மதி,ரேவதி,அருணா,டயனா,தேவகி,பாத்திமா,பஷீரா,நிஷா ஆகியோர்களைப் பார்க்கவில்லை

8. சேமநலநிதிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும்..இயலவில்லை. அரியர் ஒன்று மூன்று வருடங்களாய் கிடப்பில் இருக்கிறது.அதற்கான ஏற்பாடுகள் செய்ய இயலவில்லை.

ஒரு வாரம் இருந்தும் பள்ளி சென்று மீதமான நேரத்தில் நிறைய பணிகள் இருந்ததால் என் பயணத்திட்டத்தில் இவையெல்லாம் இருந்தும் என்னால் செயல் படுத்த இயலவில்லை.

இன்னொரு வருத்தமும், பார்த்த எல்லோரும் கொஞ்சம் குண்டாகி வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

பெருமைகள்
*****************
1. ஒரு பட்டிமன்றம் பேசி விட்டேன்

2. த.மு.எ.க.ச. திருக்கோகர்ணம் கிளை கூட்டம் நடத்தி விட்டேன்..

3.பள்ளியில் குழந்தைகள் தின விழா நடத்தி விட்டேன்.

4, ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தி விட்டேன்

5. பள்ளிக்கு எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரையும் பள்ளிக் கருத்தாய்வாளர்களையும் வரச்சொ ல்லி ஒரு சிறிய பெற்றோர் சங்கக் கூட்டம் நடத்தி விட்டேன்

6. பசுமைப் படைக்கு தாவரங்கள் சிலவற்றை ஊருக்குள் நட்டு (வேப்பம் கன்றுகள்) அதனை பராமரிக்க ஆட்கள் நியமித்து விட்டேன்.

7. நான் வரும் சனிக்கிழமை( கிளம்பும் நாள்) என் மாணவர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற தலைப்பில் என்னை மகிழ்விப்பதாய் நினைத்து தங்கள் தனித்திறமைகளைக் காட்டி அவர்களே திறம்பட ஏற்பாடு செய்து நடத்தினார்கள்..( என் பிள்ளைகளை நான் நல்லா வளர்த்திருக்கே ன்னு உணர்ந்த தருணம் அது..என் பிள்ளைகள் என்று நான் சொன்னது என் மாணவர்களை)( இந்த அன்புக்கு நான் இன்னும் இரண்டு ஜென்மங்கள் எடுத்து நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்)

8. கண்ணதாசன் விழாவிற்கு சென்று கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் பேச்சையும் திரு முத்துநிலவன் அவர்களின் பேச்சையும் கேட்டு வந்தேன்..(கிளம்பும் போது..அங்கிருந்து அப்படியே பேருந்து ஏறிவிட்டேன்)விழாவில் முபா,கஸ்தூரிநாதன்,கஸ்தூரிரெங்கன்,முருகபாரதி,பொன்க,திருப்பதி,குருநாதசுந்தரம்,முத்துசீனிவாசன்,சம்பத்குமார்,பாரதி,இளங்கோ எல்லோரையும் பார்த்தேன்..( எல்லாப் பெயர்களுக்கு முன்னால் திருவும் பின்னால் அவர்களும் போட்டுப் படிக்குமாறு வேண்டுகிறென்)

அன்புகள்...ஆதரவுகள்..நெகிழ்வுகள்
***********************************

1. என் மாணவர்கள் என்னைச் சுற்றி நின்று கொண்டே இருந்தனர். ( வகுப்பறை சத்தமாகவே இருந்தது..ஆனால் நான் ரசித்தேன்.நேசித்தேன்.

2. வாயே திறக்காத முத்து, நல்லாருக்கியாப்பா, எப்போ வந்த, எப்போ போறே, இனி எப்ப வ்ருவ? என்று 4 கேள்விகள் கேட்டுவிட்டான்..(பள்ளித் தோழன்)

3. நான் இங்கே இருந்ததை விடவும் அதிக நட்பையும் அன்பையும் பெற்றிருக்கிறேன்.

4. முதல் நாள் (திங்கள் கிழமை ) தலைமைஆசிரியர் கூட்டத்தில், ஆறு கூட்டங்களாக வராதது கண்டு அனைவரும் நலம் விசாரித்தனர். சென்னையில் வெள்ளம் பற்றி கேட்டறிந்தனர்.

5. நான் புதுகையில் இருக்கும் போது என்னைக் கண்டு கொள்ளாதவர்கள் எல்லாம் வாகனங்களை  நிறுத்தி நலம் விசாரித்தனர்.(நான் தான் உயிர் என்று வசனம் பேசியவர்கள் வாய் திறக்கவில்லை)

6. வேளச்சேரியில் வெள்ளம் பற்றி கேட்டறிந்து கொண்டனர். மீனா, வத்சலா, குழுவினர்

7. எதிரில் நடந்து போனாலும் கண்டு கொள்ளாத கதிரேசன் தன் மனைவியோடு பள்ளிக்கு வந்து பார்த்துச் சென்றான்...

8. நலமா சுவாதி என்ற விசாரிப்பில் ஸ்டாலின் குரலில் அவ்வளவு அன்பு(உணர்ந்தேன்.உணர்ந்தேன்)

9. இம்முறை தொலைபேசியில் பேசியதை விட அதிகம் பேசினார் தோழர் மதியழகன்

10. சக்ஸஸ் புத்தகக் கடையும் எஸ்.பி.எம் புத்தகக் கடையும் சென்றதில் விசாரிப்புகள். ( இங்கே தான் புத்தகங்கள் வாங்க வேண்டுமாம்..தொலைபேசியில் சொல்லச் சொன்னார்கள்)

11. முருகேசன்,வசந்த்,காளியப்பன்,இசாக்,இஸ்மாயில் ( என் வகுப்புத் தோழர்கள் இதில் இருவர் ஆசிரியர்கள் மற்ற மூவரும் மளிகைக் கடை சொந்தமாக வைத்திருக்கிறார்கள்..) புதுகை என்னை மிஸ் செய்வதாகச் சொன்னார்கள்.

12 நண்பன் சுரேஷ், தம்பி சுரேஷ், அண்ணன் சுரேஷ் மூவரையும் பார்த்தேன்..பேசினேன்.(கடைவீதிகளில்)(எங்கள் ஊரில் சுரேஷுகள் அதிகம் என் பள்ளியில் 6 சுரேஷ்)

13. கலா, மீனா, சுந்தரி, பாமா வோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்..( ஒரே சிரிப்பு..( கான்பிரன்ஸ் கால்)

14 சுரேஷ் அதிகமாகவே நலம் விசாரித்து, என் வருங்காலத் திட்டம், வாழ்வியல் சிந்தனை என்று பேசி என்னை மகிழ்வில் ஆழ்த்தினார்( இது வேறு சுரேஷ்...அட நீ இவ்வளவு பேசுவியா சுரேஷ்????)

15. இப்போது என்னும் அதிகமாக நெருக்கத்தையும் அன்பையும் உணர்கிறேன்.

எஸ்.இளங்கோ சார் புதுகையில் நான் வராத வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறியதோடு, அவரின் சில கருத்துக்கள், ஆதங்கங்கள் ஆகியவற்றை சொன்னார். (நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட நட்புரை)

16. பேரா,மாதவன், நிறைய பேசினார் பல செய்திகளை, நினைவுகளை, பகிர்ந்து கொண்டார்.. ( இப்போது அவர் வீட்டருகே அல்லவா?)

17. நிர்வாக ரீதியாக அருள் அண்ணாவுடன் ஒன்றரை மணிநேரம் பேசினேன்..(அதில் கொஞ்சம் என் குடும்பம் பற்றியும்)(எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்

18.தொலைபேசியில் ஏற்கனவே என் தன் விருப்ப ஓய்வு பற்றி விவாதித்த திரு கவிஞர் தங்கம்மூர்த்தி நேரிலும் மறு ஒளிபரப்பு செய்தார் சற்று கூடுதலான அக்கரையுடனும், அன்புடனும்`

19ஆக்ஸ்போர்டு சுரேஷின் கருத்தும் இதே தான்..(நிறைய பேசினோம்)

20.ஒரு நண்பனின் குறுஞ்செய்தி..பட்டிமன்றம்,பள்ளி, கூட்டம் நடத்தல், கூட்டம் செல்லல், நட்பு வட்டங்கள் சேர்த்தல் என்று எல்லாவகையிலும் மிளிர்ந்தாய் நன்று வாழ்த்துக்கள் என்று இருந்தது..அவனுக்கு நன்றி..

வேலைகள்
*************
என் சொந்த வீடு சென்று பார்த்து வந்தேன்.

2. நான் வளர்ந்த வீட்டையும் பார்த்து வந்தேன்..( அதிக மன பாரத்துடன்..அது விற்கப்பட்டதால் ,கொஞ்சம் கலக்கமானது,சிறிது நேரம் தான்..)

3. நகைக் கடன் வாங்கியிருந்த இரு வேறு வங்கிகளில் கடனின் வட்டியை கணக்கிட்டு வந்திருக்கிறேன்

4. பெரியவள் அவள் ஆசிரியருக்கு கடிதம் வழங்கியிருந்தாள்.( சமர்த்தாகக் அதனை அவர்களிடம் சேர்த்து விட்டேன்...அந்த ஆசிரியரின் கண்களில் சிறு கண்ணீரையும் கண்டேன்..அவருடைய கணவரை அழைத்து சத்தமாகப் படித்துக் காண்பித்தார்...ஒரு ஆசிரியராக நானும் அந்த மகிழ்வை உணர்ந்தேன்)

5. குழந்தைகளுக்கு மணப்பாறை முறுக்கு, மறமடக்கி கடலை, அங்கே இனிப்பகத்தில் இனிப்புகள், அவள் வழக்கமாக சாப்பிடும் காரசேவ் போன்றவை வாங்கிக் கொண்டு, முறுக்கு மாவும் அரைத்து எடுத்து வந்துள்ளேன்,

6. செட்டியார் கடையில் எண்ணெய்க்கு செட்டியார் அய்யா தொலைபேசி செய்திருந்தும் வாங்க நேரம் இல்லை.

7. புதுகையில் அடுப்பு இல்லாததால் காலையில் ஆச்சி கடையில் மாலை நேரம் பிருந்தா,வீரமணி,சங்கர் கபே என்றும் சாப்பிட்டுக் கொண்டேன்

8. வற்புறுத்தி சாப்பிட அழைத்த தோழிகளை மறுதலித்து விட்டேன். என் வீட்டில் அடுப்பு இருக்கும் போது கூப்பிட்டால் அது விருந்தோம்பு. அது இல்லாத நிலையில் என்னைக் கூப்பிடுவதால் அதுக்குப் பேர் (?) அதனால் அவர்கள் அழைப்பை புறக்கணித்தேன்,( என்னை மன்னிப்பார்களாக)


நான் இனி சந்திக்கவே கூடாது என்று நினைத்த இருவரைச் சந்தித்தேன்..அவர்களோடு பேசவும் நேர்ந்தது...(பிரியமாய் பேசுவது போல் நடித்தனர்)(ஒரு ஆண்..ஒரு பெண்)


பின்குறிப்பு:
*************

இதில் புதுகையில் இருந்த போது பலர் பேசாதவர்கள் கண்டு கொள்ளாதவர்கள், மெல்லிய புன்னகை மட்டும் தருவோர்கள் என்று அனைவரும் அடக்கம்..ஆனால், ஒவ்வொருவரின் பேச்சிலும், அன்பை உணர்ந்தேன்...நன்றி .புதுக்கோட்டை...

பெரும்பான்மையானவர்கள் இன்னும் எனக்கு 15 வருடம் சர்வீஸ் இருப்பதால் நான் வி.ஆர்,எஸ் கொடுப்பது வேண்டாம் என்றே சொன்னார்கள். (ஏ.இ.ஒ உள்பட)

அடுத்த முறை என் பயணத்திட்டங்கள் மிகச் சரியாக வடிவமைத்து ஒவ்வொன்றுக்கும் மிகச் சரியான நேரப் பங்கீடு கொடுக்க வேண்டும்..
நேர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்..

I MISS YOU PUDUKKOTTAI

*********************************************************************************











Tuesday, November 17, 2015

மழ...மழ...மழ..மழ...மழேய்...

முதல் நாள் மழை கொஞ்சம் விருப்பமாய்த்தான் இருந்தது. ஆனால் அடுத்த நாள் கொஞ்சம் சலிப்பைத் தந்தது. ஆனால் அடுத்த அடுத்த நாட்க\ளின் மழை முற்றிலுமாக பயத்தைத் தந்துவிட்டது.

சென்னையின் தனித்தீவாக ஆகிவிட்டது வேளச்சேரி பகுதி..

ஒரு கதையில் படகுக்காரனும் படித்தவனும் பேசுவது மாதிரி..எல்லாம் கற்றதற்கு நிஜம்மாவே நீச்சல் கற்றிருக்கலாம் என்றே தோன்றியது..

நான் பார்த்தவை...

1. கீழ்தளத்தில் இருந்தவர்களும், தரைதளம் மட்டுமே கொண்ட வீட்டுக்காரர்களும் வீட்டுக்குள் தண்ணி போகப் போகிறது என்று தெரிந்ததும் எல்லோரும் மண் மூட்டைகளை விலைக்கு வாங்கினார்கள். அவரவர் பாத்ரூமில் மூட்டைகளைப் போட்டு அடைத்து விட்டு வேறு இடம் சென்றனர்.( கிருமி தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்களாம்)

2. மழை ஊரே வெள்ளம். ஆங்காங்கே நடைபெற்றன.பஜ்ஜி,பக்கோடா விற்பனை..( எங்கேர்ந்து வந்தீங்க? எப்ப சுட்டீங்க?)

3. கடை வைத்திருந்தோர் மூடி விட்டனர். தள்ளு வண்டிகள் , மற்றும் ஒரு டி.வி.எஸ் பிஃப்டி கூட தற்காலிக தேநீர் கடையாக மாறியது.( அட பாருங்கய்யா அங்கயும் ஆண்கள் கொத்தா நின்னு டீ குடிச்சிட்டு, பாரிஸ் கதைகளையும், பிரிட்டன் நடைமுறைகளையும் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.)( எப்பவுமே இப்படியா அல்லது இப்படித்தான் எப்பவுமேமா என்பதை என் மூளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.)

4. அந்தத்தந்தப்பகுதியின் கட்சிக்காரர்கள் வந்து இவர்கள் அவர்களைப் பார்த்து அவர்கள் வைத்து விட்டுப் போன லட்சணங்களால் தான் தமிழகமே தடுமாறுகிறது என்று சொல்லி திட்டித் தீர்த்தனர்.`பிறகு வேறு ஒரு பெரிய்ய்ய கட்சி அண்ணாச்சியும் இவர்கள் ஆட்சியில் எல்லாமே இப்படித்தான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டனர். ( கடைசி வரை தண்ணீர் வெளியேற்ற ஆக்கப்பூர்வமாக ஒன்றும் செய்ய வில்லை)

5. கழிவு நீர் ஊர்தியாளர்கள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மணிநேரம் என்று பேரம் பேசி, தண்ணீர் எடுத்து விட்டனர்.

6. கோயம்பேடு தண்ணீரில் நிரம்பியதால் காய்கறிகறியே கிடைக்காமல் வீட்டில் என்ன இருந்ததோ அதனை சாப்பிட்டு பசி போக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். அசைவர்களுக்கு மீன் கிடைத்தது. ( அவர்களே அவர்களுக்குத் தேவையானதை பிடித்துக் கொண்டனர்.)

7. எங்கள் வீட்டின் முன்பாக காட்சி அளிக்கும் ஏரி.....இந்த வேளச்சேரி ஹவுசிங் யூனிட் பகுதி முழுமையுமே ஏரியின் இடம் தானாம்..( அதான் , பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஏரி...என் இடத்தை எனக்குத் தா என்று கேட்க வந்தது போல் இருந்தது..வெள்ளம்)

8. பிரதான சாலையில் வழக்கமாய் ஒரு தோசை 80 ரூபாய்க்குத் தரும் ஹோட்டல்கள் அன்றைய தினம் 150 ரூபாய் என்றது.( அதனையும் மக்கள் உண்டார்கள்)( வீட்டில் அடுக்களை வரை தண்ணீர் புகுந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதனையும் புசித்து பசியாறினர்.)

9. 25 ரூபாய்க்கு தோசை தந்தவர்கள் 80 ரூபாய் என்றார்கள். சோளம், கடலை என்று தின்பதற்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது...( ஒரு மாதத்திற்கு ஆகும் செலவை மூன்று நாட்களில் செலவாக இருக்கும் போல் ஒரு காட்சிப்பிழை அல்லது கருத்துப் பிழை எனக்கு மட்டும் தோன்றியது)

10 .பால் இருந்தாலும் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்திற்கே பால் தந்தனர். அவர்கள் தான் கேட்ட விலையையும் தந்தனர். பாலின் விலை லிட்டருக்கு 100 ரூபாய்

11. காய்கறிகள் , பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை. கிடைத்தாலும் இரட்டிப்பு மடங்கு வைத்து விலை பேசப்பட்டது.

12. பள்ளிப் பிள்ளைகள் தண்ணீருக்குள் நடந்து நடந்து தங்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொண்டனர். (பெரும் பாலும் ஆண்பிள்ளைகள்)
(இனி எப்போது தண்ணீரைக் காண்பார்களோ)

13. அலுவலர்கள் வேலைக்குப் போக வேண்டியிருந்தது . ஆனால் சாலை போக்குவரத்து சில இடங்களின் வழியாக செல்வதை தடை செய்யப்பட்டிருந்ததால், எப்படியும் போக முடியாமல் தவித்தனர். சில ஆட்டோ ஓட்டுநர்கள் நிறைய சம்பாதித்தனர். சிலர் சவாரி கிடைக்காமல் ஆனால் கிடைக்கும் என்ற  ஆசையில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தனர்.

14. எங்கள் பகுதியில் இருக்கும் தியேட்டரில் கடந்த மூன்று தினங்களும் 6 ஷோக்கள் ஓடியது.( மழையின் காரணமாக வெளியே இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டவர்கள் வீட்டுக்கு வராமல் இருக்க என்ன செய்வது என்பதால் அப்படி நிரம்பி வழிந்தது என்றும், தல” படம் என்பதால் என்ன மழை கொட்டினாலும் பார்ப்பது தான் ரசிகர்களின் இலக்கணம் என்பதாலும் அப்படி வழிந்ததாகப் பேசிக் கொண்டார்கள்.( உண்மை நான் அறியேன்)

15. கழிவு நீர் வெளியேற்றும் பாதாள அல்லது திறந்த நிலை சாக்கடைகளில் பாலீதீன் கவர்களும், பெப்ஸி கோக் போன்ற பாட்டில்களும், மதுபாட்டில்களும் அதிகம் தென்பட்டு அவற்றாலும் விரைவில் தண்ணீர் வெளியேற்றப்படுவது தாமதமானது.

16. எல்லோரும் எல்லோரையும் திட்டிக் கொண்டனர். பாலிதீன்களை ஒழிக்க வேண்டும் என்று சபதம் ஏற்றனர். கையில் பாலிதீன் கவர்களில் இருந்த பால் அல்லது மற்ற பொருட்கள் வாங்கிக் கொண்டே,..

17. கார் தண்ணீரில் மூழ்கும், காட்சியைப் பார்த்த டூ வீலர் காரர்கள், அல்லது அதை வாங்க இயலாமல் பொறாமையோடு பார்த்தவர்கள் எல்லோரும் அந்தக் காட்சியைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்`

18. குப்பைகளை ஆங்காங்கே வீசிவிட்டுச் சென்றனர். தண்ணீரில் அதுவும் மிதந்து வந்தது. எல்லோரும் அதனைப் பார்த்துக் கொண்டே அதனை செய்து கொண்டே அதனைக் கடந்தனர்.

19. இன்னும் சென்னை கழிவு நீர் வெளியேற்றத்தில் விழிப்புணர்வு பெற வேண்டும். என்று ஆளாளுக்கு, சாலமன் பாப்பையாவாக மாறி தீர்ப்பளித்தனர்.

20..மூன்று நாட்கள் முற்றிலுமாக மின்சாரம் தடை செய்யப்பட்டது..( மாவு அரைத்தால் தானே தோசை, சட்னி..தண்ணீர் வந்தால் தானே குளிப்பு துவைப்பு...ஏதும் நடக்கவில்லை)


21. தண்ணீர் சற்று வெளியேற்றப் பட்ட நிலையில் (இப்போது)சாலைகளில் தார் எல்லாம் தண்ணீரோடு போய் வெறும் சரளைக் கற்களாகக் காட்சியளிக்கிறது சாலைகள்...( சில பகுதிகளில் இன்னும் கூட தண்ணீர் வெளியேற்றப்படவில்லை)


இவ்வளவு நடந்தும்..
**********************


. துணி காயப் போட முடியவில்லை என்று இரண்டாம் தளத்தின் இந்திரா அலட்டிக் கொண்டது தான் இன்னும் கண்ணுக்குள்ளே நிற்கிறது.


மற்றொரு விஷயம் சரவணாஸ்டோர்ல இப்பவும் கூட்டமாம்