Wednesday, December 24, 2014

கே. பாலச்சந்தர் என்னும் திரையுலக சிற்பி

இயக்குநர் சிகரம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட,,,,புகழப்பட்ட,,,(வாங்கிக் கொள்ளப்பட்ட அல்லது தானே சொல்லிக் கொண்டு...பிறகு காசு கொடுத்து பிறரை சொல்ல வைத்த பட்டம் அல்ல) திரை உலக சிற்பி திருமிகு கே.பாலச்சந்தர் அவர்கள் 1930 ஜுலை 9 தஞ்சாவூர் மாவட்டத்தின் நன்னிலம் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தவர்.

இயற்பெயர் கூத்தபிரான்

மத்திய அரசு நிறுவனமான ஏ.ஜி.அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டே நாடகங்கள் இயக்கி, மிக தைரியமாக வேலையை ராஜினாமா செய்து விட்டு திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்.

இயக்குநராக (தொலைகாட்சி நாடகமும், திரைப்படங்களும்), வானொலி அண்ணாவாக, எழுத்தாளராக, திரைக்கதை எழுதுபவராக, நடிகராக, மேடை நாடகங்கள் அமைப்பவராகவும், இயக்குபவராகவும் பல்வேறு முகங்கள் கொண்டவர். (இராவணனுக்கு பத்து தலை என்று சொன்னது இப்படி பன்முகத் திறமையாக இருக்குமோ?)

கலைமாமணி, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே, தேசிய விருது,  அண்ணா விருது, கலைஞர் விருது,ஃபிலிம்ஃபேர் விருது,எனப் பல விருதுகளுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. தமிழ் தெரிந்த உள்ளங்களுக்கெல்லாம் சொந்தக்காரர்.

மிக உயர்ந்த நிலையை எட்டிய ரஜினி காந்த், ஜெய்கணேஷ், டெல்லி கணேஷ், விஜயகுமார்,சரத்பாபு, பிரகாஷ்ராஜ்,திலீப், அனுமந்து, எஸ்.வி.சேகர், மௌலி, ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, மேஜர் சுந்தர்ராஜன், ராதாரவி,பூர்ணம் விஸ்வநாதன், சார்லி, விவேக்,எஸ்.பி.பி,

 படாபட் ஜெயலெட்சுமி, ஸ்ரீ பிரியா, ஸ்ரீ தேவி, சுஜாதா, ஷோபா, சரிதா, ஜெயப்ரதா, ஜெயச்சித்ரா, ஜெயசுதா,கீதா, ஸ்ரீ விதயா, ஜெயந்தி, சுமித்ரா, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என்று ..இப்படி ( 66 பேரைஇ அறிமுகப்படுத்தியிருக்கிறார்.)பலரின் திறமைகளைக் கண்டறிந்து, ஊக்கப்படுத்தி, திரையில் அறிமுகப்படுத்திய சாதனையாளர்.

இரண்டுஆஸ்கார் விருதுகளை இரு கைகளாலும் அள்ளி வந்த ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகம் செய்ததும் இவரே. (ரோஜா)

கமலை அறிமுகம் செய்யவில்லை என்றாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்ததோடு இளைஞர்களின் நாயகனாக உருவாக்கியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. (அந்தப் (நடிப்பு)பிசாசு தான் பால் வடியும் முகமாக பச்சைப்புள்ளய இருந்தப்பவே நடிக்க ஆரம்பிச்சுருச்சே)(களத்தூர் கண்ணம்மா)

நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன்அவர்கள் இவருடைய எதிரொலி என்ற படத்தில் நடித்தார்.

ஏனோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இயக்கவே இல்லை. ஆனால் தெய்வத்தாய் என்ற படத்திற்கு வசனம் எழுதியதோடு சரி. ( அது தான் அவர் வசனகர்த்தாவாக முதன் முதலில் அடியெடுத்து வைத்த படம்)

இவரின் மெழுகு வர்த்தி என்ற ஒரு நாடகத்துக்கு தலைமை தாங்க வந்த எம்.ஜி.யார். இது போன்ற இளைஞர்கள் திரைத் துறைக்கு வந்தால் அதன் இயக்கம் மிக பிரமாணடமாக இருக்கும் என்ற எம்.ஜி.ஆரின் ஆசி, ஆசை, வாழ்த்து பொய்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

மக்களின் முதல்வர்     ( ஏன் சொல்லிட்டுப் போவமே...இதனாலே என்ன வந்தது?)       ஜெ.ஜெயலலிதா நடித்து இவர் இயக்கிய படம் மேஜர் சந்திரகாந்த். (இந்தப் படத்திலிருந்து தான் மேஜர் சுந்தரராஜனுக்கு மேஜர் என்பது பெயரோடு ஒட்டிக் கொண்டது)

மறைந்த முதல்வர் அண்ணா அவர்களின் குரலை மட்டும் வைத்து  இருகோடுகள் என்ற படத்தில் இணைத்திருப்பார்


கவிதாலயா என்றாலே திரைப்படங்களின் ஆலயம் என்னுமளவிற்கு தன் தொழிலை, தொழில் வல்லுனர்களை, ஆதரித்தவர், நேசித்தவர்,

தனது கவிதாலயா நிறுவனத்திற்கு வள்ளுவர் உருவத்தையே தன் இலச்சினையாக வைத்திருந்தார்.

முதல் படம் நீர்குமிழி...கடைசிப் படம் பொய்

சிந்துபைரவி, உன்னால் முடியும் தம்பி, நினைத்தாலெ இனிக்கும், புன்னகை மன்னன், போன்ற படங்கள் அகிலத் தமிழ் உலகத்தின் முத்திரை படைத்தது.

ஏக் துஜே கேலியே, மரோசரித்ரா, வறுமையின் நிறம் சிகப்பு, போன்ற படங்கள் அப்போதைய இளைஞர்களை இவரின் வாழ்நாள் அடிமையாக மாற்றி வைத்தது.

மலை அருவியும் கடற்கரையையும் தனது எல்லாப் படங்களிலும் படமெடுத்து விடுவார். அது வித்தியாசமான கோணமாகவும் இருக்கும். அச்சமில்லை அச்சமில்லை படத்தில் மலையருவியையும் டைட்டிலில் சேர்த்திருப்பார்.

பொய், ரெட்டைசுழி, உத்தம வில்லன் என்ற 3 மூன்று படங்களில் மட்டுமே நடித்தார்.

நடிகர்கள் மட்டுமே புகழ் அடைய முடியும் என்று இருந்த காலத்தில் அவர்களை இயக்கும்  இயக்குநர்களும் வெளியே பேசப்படுவார்கள் என்று எடுத்துக்காட்டாகவும் , முன்னோடியாகவும் இருந்து பேசப்பட்டார்; செயல்பட்டார்;புகழ்பெற்றார்;

திரைப் படங்களில் மட்டுமல்லாமல் தொலைகாட்சித் தொடர்களிலும் சரித்திரம் படைத்தவர் இவரே. இவர் இயக்கிய ரயில் சினேகம் ஒலி.ஒளிபரப்பப்பட்ட பின்பு தான் இப்படியும் தொலைக்காட்சியில் நாடகங்களைப் போடலாம் என்று ஒரு புரிதலே பலப்பட்டது.

இன்றைய  மகா, மெகா, சீரியல்கள் தன் புனிதத் தன்மையை என்றோ இழந்து போனாலும் ரகு வம்சம் என்ற மெகா டிரண்டை துவக்கி வைத்தவரும் இவரே.

மனித உறவு முறைகள், சமூகச் சிக்கல், மேம்பாடு, அரசியல், காதல், கட்டமண்ணு, என்று அனைத்துக் கருப் பொருளிலும் படங்களாக 100 படங்களை எடுத்துத் தள்ளியவர். 56 படங்களைத் தயாரித்தவர்.

சினிமா மக்களை மயக்கும் மந்திரம் என்ராலும் அதில் எப்போதும் புதிய செய்திகளை, நுணுக்கங்களை, கோணங்களை காட்டியவர். பிற இயக்குநர்களின் திரைப்படங்களில் தண்ணி அடிப்பது போல் வந்ததற்காகவும் வருவதற்காகவும்  ஒரு மேடையில் வருத்தப் பட்டார்.

ஒரு பேட்டியில் ஒரு நடிகன் கேமராவைத் தாண்டி நடிக்கக் கூடாது என்று கூறியவர்.

காதல் படம் பார்த்துவிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேலை நேரடியாகபாராட்ட வேண்டும் என்று மூன்று தளங்கள் ஏறி வந்து வாழ்த்தியவர்.

எந்த இயக்குநர் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தாலும் தன்னுடைய நீண்ட கடிதத்தால் அவர்களை பெருமையாக்கியவர். மேம்படுத்தியவர். வழிநடத்தியவர். தற்பெருமை பாராதவர். பிறரின் திறன்களை மதிக்கத் தெரிந்தவர்.

அதேசமயம் தற்போதுள்ள படங்களில் வன்முறை, தண்ணி அடித்தல் போன்ற விஷயங்கள் காட்டப்படுவது குறித்து தமிழ் சமுதாயத்திற்காக வருத்தப்பட்டவர்.

ஆங்கிலப்புலமை மிகுந்தவர்.

யாரைபற்றியும் புரண் பேசாத அவதூறு சொல்லாத அதிசயமனிதர். அன்னம் மாதிரி மனிதர்களின் நல்லவைகளை மட்டும் எடுத்து பிறரிடம் சிலாகிக்கும் தன்மை வாய்ந்தவர்.

தனக்கு தாதா சாகேப் விருது கிடைத்த போதும் தான் அறிமுகப் படுத்திய நாகேஷ் க்கு கிடைக்க வில்லை என்று வருத்தப்பட்ட அற்புதமான மனம் கொண்ட படைப்பாளி.

எழுத்தாளர் சுஜாதாவின் மரணத்திற்காக நிறைய வருத்தப்பட்டவர்.


16 வயதினிலே எடுத்ததற்காக பாரதிராஜாவின் காலில் விழுவேன் என்று ஒரு மேடையில் சொல்ல பாரதிராஜா பதறிப்போனாராம்.

அக்ரஹாரத்து அதிசய மனிதரான பாரதியாரின் மேல் மிக மிக நேசமான பற்று கொண்டு தனது படங்களில் அவரின் பாடல்களைக் கையாண்ட இவரும் அக்ரஹாரம் தந்த அற்புத மனிதர் தான்

தன் கல்லறையில் இவன் டேக் டூ கெட்கிறான் என்று எழுதுங்கள் என்று சொன்னார்.

நாங்கள் கடவுளிடம் கேட்கிறோம் அவரின் கடைசிப் படத் தலைப்பான “பொய்” என்று ஆகட்டுமே அவர் இறப்பு செய்தியும். நாங்களும் கேட்கிறோம்   “ டேக் டூ ”பாலசந்தர் சார்.( பின் குறிப்பு......

இவரைப்பற்றி நான் எழுதக் காரணம் இவர் என்னைப் போல் ஒரு பள்ளி ஆசிரியராக தன் வாழ்வைத் துவங்கியவர். அது மட்டு மில்லீங்....நானும் 9 ம் தேதி பிறந்தேனுங்கோவ்....)

(இம்பூட்டு சோகத்திலயும் உனக்கு இது தேவையா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழவே இல்லை)


4 comments:

 1. அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

  ReplyDelete
 2. //மக்களின் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ( ஏன் சொல்லிட்டுப் போவமே...இதனாலே என்ன வந்தது?)//
  அதனால் எதும் இல்லை. ஆனால் இந்த ம(மா)க்கள் மிதப்புதான் அவரைக் குப்புறத் தள்ளியுள்ளது.
  எவருக்கும் இவ்வளவு மிதப்புக் கூடாது. அதுவும் அடிமடியில் கனத்துடன்!

  ReplyDelete
 3. வைரமுத்துவுக்கு “சின்னச்சின்ன ஆசை“ பாடலுக்காக தேசியவிருது பெற்றுத்தந்த ரோஜா இயக்குநர் மணிரத்னம். அதற்கு இசையமைத்தவர் ஏஆர்ரகுமான். அதற்கு முன்பே அவரைப் பயன்படுத்தியவர் கேபி. என்பதுதான் சரி. சரியா டீச்சர்?

  ReplyDelete
 4. ஆமாசாமிDecember 25, 2014 at 11:07 AM

  வாழ்நாள் அடிமை ஆக்கியது...நன்று...

  ReplyDelete