Friday, February 14, 2014

என் ஊர் (கவிதை)

தொலைபேசாவிட்டாலும்
கடிதமிட நேரமில்லை என்றாலும்
குறுஞ்செய்திகளையாவது அனுப்பு
என்று குற்றம் சாட்டும்
என் இனிய தோழி
இங்கே
 எழுதுவதற்கு ஒன்றுமேஇல்லை

நீ
விட்டுச் சென்றது போலவே தான்
இருக்கிறது ஊர்
எந்த மாற்றமும் இல்லாமல்
ஐந்திலிருந்து மூன்றாக
குறுகிய புத்தகக் கடைகள்,
இருபதிலிருந்து
அறுபதாகப் பெருகிய உணவகங்கள்
ஒரே ஒரு கீழ ராஜவீதியில்
எங்கும் வியாபித்திருக்கும் துணிக்கடைகள்
புதிது புதிதாய் முளைக்கும் நகைக்கடைகள்
மளிகைக்கடைகள்
சிமெண்டுகடை, பாத்திரக்கடை
என்று
கடைகள் பெருத்து கிடக்கின்றன

எப்போதும் போல்
கூட்டமின்றி கிடக்கிறது
புத்தகக்கடைகள்
வாங்குவோரின்றி
திரையரங்குகள்
கேளிக்கை விடுதிகள் என்று
புதுக்கோட்டை பெரிதாய் போனதுதான்
மக்களின் மனங்களைக் குறுக்கி

வேறென்ன அனுப்பச் சொல்கிறாய் தோழி

எப்போதும் போல்
எல்லா ஊரையும் போல
பெண்கள் அடுப்படியிலும்
ஆண்கள்
தேநீர் கடைகளிலும்
தெருவோரங்களிலும் திரிகிறார்கள்
நேரம் இலை என்று சொல்லிக்கொண்டு!

புதுமை செய்கிறோம் என்று நினைத்து
யார் பெண்கள்
வேலைக்குப் போக வேண்டும் என்றார்களோ?

இல்லற சுமையோடு
இதையும் புகுத்திய
அந்த இதயம் வாழ்க

மற்றபடி
கோயில்களில் விழாக்களும்
வீடுகளில்
இணையங்களும், தொலைக்காட்சிகளும்
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன!

இங்கும் நடக்கின்றன
பிறப்புகளும் இறப்புகளும்!
எல்லா ஊர்களையும் போலவே
அநியாயமோ, அவதியோ
தொலைக்காட்சிக்குள் மூழ்கிப்போவதை
பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை
கற்றுக்கொண்டார்கள்

திருமணங்கள் சடங்குகளாகவும்
உறவுகள் வெறும்
சம்பிரதாயங்களாகவும் மாறி
பல காலமாகி விட்டன

ஆனாலும்
நடக்கின்றன
அரசியல் கூட்டங்கள்
போற்றியோ? தூற்றியோ?
இலக்கியக் கூட்டங்களும்
நடக்கின்றன
அவ்வப்போது

இங்கேயும் மக்கள்
ரசனையானவர்களாகவும்
உழைப்பாளிகளாகவும்
தேசப்பற்றுள்ளவர்களாகவும்
எப்போதும்
காட்டிக்கொள்கிறார்கள்

வேறென்ன இருக்கிறதென்று நினைக்கிறாய்
விசேஷமாய் எழுத!
***********************************************



1 comment:

  1. யதார்த்தமான உண்மை வரிகள்...

    அதானே...! மக்களின் மனங்கள் (எங்கும்) சுருங்கி விட்ட போது என்னத்த சொல்ல...?

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete