Sunday, October 25, 2015

அழகின் விழுது

கனவுக்காட்சிகள்.......கவிஞர் சுவாதி...04
*********************************************


வணிகன் மகள் தான்....ஆனால், வாழ்க்கையை விற்கவோ வாங்கவோ தெரியாத வணிகன் மகள். நலமாகவும் வளமாகவும் வாழ வேண்டுமென எண்ணி கோவலனுடன்  ஊர் போற்ற திருமணம்நடக்கிறது. காலச் சூழலால் மாதவியின் கலையில் மயங்கி, மாதவியிடமே தஞ்சம் புகுகிறான் கோவலன்.

கண்ணகி, கவலைகள் துரத்தக் காத்திருக்கிறாள். கனவு கண்ட வாழ்க்கை கிடைக்காமல், கனவாய் நடக்கும் கனவு வாழ்வு, பிரிவு, சோக வளையங்களை மட்டுமே சுற்றிச் சுற்றித் தருகிறது.

நினைவு அடுக்குகளில் இருக்கும் இன்பப் பொழுதுகளை அசை போட்டுக் கொண்டே இருக்கிறது மனம்.ஆனாலும், அவ்வப்போது அடம் பிடிக்கிறது.

சோர்ந்துபோன நிலையில் கண்ணகியைப் பார்க்க தோழி தேவந்தி வருகிறாள். “கணவனைப் பிரிந்தே தான் தானும் வாழ்கிறோம்’ என்ற நினைவின்றி, கண்ணகியின் கவலை குறித்தே கவலை கொள்ளும் நட்பு கோபுரம் அவள்.

கண்ணகியின் தனிமையைத் தகர்க்க வந்த மருந்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வாயின் வார்த்தைகளை தெருப்பாய்க் கக்குவோம். மத்தியில், பன்னீராய் அபிஷேகித்த பனிமலர் அவள். துள்ளலோடு வந்த தேவந்திக்கு, துவண்டு போன கண்ணகியின் முகக்கவலை, அகக்கவலையை அதிகப்படுத்துகிறது.

உண்மையான அன்பில் தான் அடுத்தவர் வலியின் முகவரியை அப்படியே படிக்க  முடியும். கண்ணகியின் முகமாற்றத்தை முற்றிலும் அறிந்தவள். பேசுகிறாள்: “வாயேன்...சாத்தன் கோயிலுக்குச் செல்வோம். சோமகுண்டம், சுரகுண்டம்முங்கி எழுந்தால் கணவனைப் பிரியவே மாட்டோம். ஒருவேளை விதியால் பிரிந்திருந்தாலும் மீண்டும் விரைவில் இணைவோம்”.

பன்மையில் விழுகின்றன  வாக்கியங்கள். சொல்லாமல் சொல்கிறாள்," நானும் பிரிந்திருக்கிறேன்,” என்று. அப்போதும் கவலை படர்ந்த முகத்துடனா  இருப்பது? என்ற அன்பின் நெடி, அன்யோன்யத்தின் வாசம் வீசுகிறது.

கேட்டவுடன் கண்ணகிக்கு மனதுக்குள் மறு ஒளிபரப்பானது தான் கண்ட கனவு. குழப்ப ரேகைகளைக் கொட்டியபடியே விவரிக்கிறாள்: “தீய கனவொன்று கண்டேன் தோழி. என் கணவன், என் இரு கைகளையும் பற்றி என்னை அழைத்துப் போகிறான், அழைத்துப்போகும் அந்தக் கைகளில் நிகழ்காலப் பிரியமும்,எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும், கடந்தகாலத் தவறின் கூச்சமும் தெரிகிறது. பெரிய நகரத்துள் நுழைந்தோம். நானும் பழைய வாழ்வைக் கனவாக்கி, புதிய வாழ்வைத்தொடங்கலாம் என நினைத்தேன். அந்நியர்கள் என்று எண்ணியோ, அவமானம் என்று வெறுத்தோ, அம்மக்கள் பொய் தேள் காட்டி,வீண்பழி சுமத்தி பயங்காட்டினர்.கோவலனுக்குத் தீமை விளைந்தது. ஆனாலும், நாங்கள் நற்பேற்றை அடைந்தோம்”. என்றாள். சொல்லி முடிக்குமுன் முகத்தின் நிலவரம், நெஞ்சத்தின் கலவரம் சொன்னது.

பேசுவதற்குப் பிடி கிடைத்துப் போனது தேவந்திக்கு.” பார்த்தாயா? சாத்தன் கோயில் என்று சொன்னவுடன் உன் கணவன் வந்துவிட்டான். அவன் திருந்துவான். உனக்காக வருந்துவான். வா, உடனே போகலாம்” என்கிறாள்.

தேவந்தியின் நட்பு மனதுக்குத் தெரிந்ததெல்லாம் கண்ணகியை ஆற்றுப்படுத்துவதுதான். என்ன வித்தைகள் செய்தும் அவள் இயல்பை மாற்ற தவியாய்த் தவித்தது நெஞ்சம். அவசரமாக உதிரும் வார்த்தைகளில் தெரிகிறது ஆற்றுப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.

கண்ணகியின் மனம் கலங்கியது. இவர்கள் கோவலன் என்னை விட்டுப் பிரிந்ததாகவே நினைக்கிறார்கள். உடல்கள் பிரிந்தால் பிரிதல் என்று நினைக்கும் இவர்களுக்கு எப்படி உணர்த்துவது?

எனக்குள் ரீங்கரிக்கும் “மாசறு பொன்னே, வலம்புரி முத்தே” என்கிற சொல்லிசை அனுபவத்தை, இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? வெறும் காமமா அவனை மாதவியிடம் கடத்தியிருக்கும்?  கலையின் ஈர்ப்பு அல்லவா? யாழை மீட்டுவதும் இனிய பாடல்களைப் பாடுவதும் கோவலனுக்குப் பிடித்தமான விஷயம். அவனுக்கும் மேம்பட்டு நடனத்திலும் சிறந்தவள் மாதவி...கோவலனை ஈர்த்ததும் அதுதான்.

அவன் பெண் பித்தனாய் இருந்திருந்தால், எத்தனையோ பெண்கள் அவன் வாழ்வில் இடைப்பட்டிருக்க வேண்டுமே,...அப்படி ஏதும் இல்லையே...

என்னை நெருங்கிய போது அவர் வெளிப்படுத்திய அன்பு நிஜம்...அவர் காட்டிய பிரியம் நிஜம்...காதலும் அப்படித்தான். அமுத நிலவின் கிரண்ங்களில் சூடியிருக்கும் என்று, பொய்யாகக் கூட சொல்ல முடியாது. ஆனால், அவர் அருகே இல்லாத  நேரங்களில் மனதுக்குத் தெரியத்தான் செய்கிறது அந்த வெம்மை.

இருந்தாலென்ன? கோவலன் நலமாயிருக்க வேண்டும். அதுதான் இப்போது முக்கியம்.

காமத்தையும் காதலையும் பிணைத்தே பார்ப்பவர்களுக்கு எப்படித் தெரியும் என் இதயத்தின் ஓசைகள்? ஆடலும் பாடலும் ரசித்த கோவலன் அங்கிருப்பதைத் தப்பென்று பிறர் பேசுவதை, தப்பென்று இவள் நினைத்தாள்.

கோவலன் விஷயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை ஒத்தி வைத்தாள். அவன் அன்பை மட்டுமே தனக்குள்ளே பொத்தி வைத்தாள். அன்பின் நோக்கமே அனைத்தையும் கொடுப்பது. ஆதிக்கம் செலுத்துவதில்லை. இது தேவந்திக்குமா தெரியாமல் போகும்?வெறும் வார்த்தைகளா வந்து வாழ்க்கையின் வலியை வாங்கும்?

தேவந்திக்கும் தெரிந்து போனது; கண்ணகியின் உள்ளுணர்வின் ஓசைகளும் பாஷைகளும், மதுராபதி தெய்வத்தையே மயங்க வைத்த கண்ணகி அல்லவா?

நெற்றியின் சுருக்கங்கள் அவர்கள் காதல் வாழ்க்கையின் நெருக்கங்களைச் சொன்னது.

கோவலன் வருவான் என்ற தேவந்தியின் கூற்று ஒரு நொடிதான் இனித்தது. மறு வினாடியே வலித்தது. அவன் எங்கிருந்தாலும் நலமாக இருக்க வேண்டும். காதலின் விதியே காதல் துணை எங்கிருந்தாலும் வாழ நினைப்பது. ஒருவேளை இங்கு வந்து ஏதேனும் நடப்பதற்கு மாதவியிடமே இருக்கட்டுமென்று ஏங்குகிறது மனம்.

எனக்கு வருத்தம் தெரிவிப்பதாக நினைத்து அவனைப் பழிக்கவும் வேண்டாம். இங்கே வந்து வார்த்தைத் தேள்களோ, வாழ்க்கையின் தேள்களோ, எதுவுமே கொட்ட வேண்டாம் என்றே தோன்றுகிறது. வரவேண்டும் என்று இருக்கும் இயற்கைகளிடமெல்லாம் தன் உணர்வைப் பதித்தவள்,, வரவே வேண்டாம்”என்று தனக்குள் தவம் கொள்கிறாள்.

என் இனியவன் தனக்கான இடத்தில் இருக்கட்டுமே, இது எனக்கு மட்டும் புரிந்தால் போதும்.இடையில் இவர்கள்யார்? மாதவியை அடைந்தான் என்று பேசுபவர்கள் பொறாமைக்காரர்கள். அழகின் விழுதான அவளை அவர்களே விழுங்க நினைத்தவர்கள். தண்ணீருக்கு எப்படித் தெரியும் தான் எங்கே இருக்கிறோம் என்று?இருக்குமிடத்தில் தன்னை அதாகவே ஆக்கிக் கொள்வது போலவே தான்,கோவலனும் பாத்திரத்தின் வடிவம் கொண்டான். அவனுக்குப் பொய்மைகள் பழக்கமில்லை. முகமூடி அவனிடம் இல்லை.முகம்மட்டுமே இருக்கிறது. நான் என் பிரியத்தைத் தொலைக்க விலை. எனவே, என் காதல் நிஜம்: அதுபோல், என் மீதான அவன் காதலும்நிஜமே.

அவன் அண்மையை விட ஆருயிர் எனக்கு முக்கியம். இங்கு வந்தால் ஏதோ நடக்குமென்றால் எப்படிப் பொறுப்பேன்? என்று நினைவலைகளுக்குள் மூழ்கித் திடமாய் முடிவெடுக்கிறாள்; இனி , கோவலன் அங்கேயே இருக்கட்டுமென்று. மனதுக்குள் நடந்த போராட்டங்களுக்கு விடையாய் கேட்கிறது வாசலில், கண்ணகி” என்றொரு குரல்.

திரும்பிப் பார்க்கிறாள், கோவலம் நிற்கிறான்: அன்பைக் குழைத்துக்கொண்டு.

(காண்போம்) 

3 comments: