Thursday, October 22, 2015

கடவுளின் கடவுள்

கனவுக் காட்சிகள்....03.....கவிஞர் சுவாதி
******************************************


வாசல்  புறத்தில் மங்கலப் பேரொலி கேட்கிறது. அந்த வாத்திய கோஷத்தையும் கடந்து மனிதர்களின் ஆராவாரம். ஆம்; அவனே தான் வந்து கொண்டிருக்கிறான். பச்சைப் பசுங்கொண்டல் போன்ற திருமேனி, பவளத்தை வெட்கச் செய்யும் அதரங்கள்; தாமரைகளுக்கு ஏக்கத்தை ஏற்படுத்துகின்ற திருவடிகள்.

மனமெல்லாம் ஆர்ப்பரிக்கிறது.வெட்கத்தில் கன்னம் சிவக்குமென்பார்கள். ஆனால் உள்ளமும் சிவந்ததை யார் அறிவார்? ஆயிரம் யானைகள் சூழ வருகிறான் என் நாராயணன். தன் தோழர்களின் துணை கொண்டு திருவில்லிப்புத்தூர் வீதிகளை வலம் வருகிறான்

பொதுவாக, திருமணம் நடப்பது போல் கனவு கண்டால், துக்கத்தின் அறிகுறி என்று சொல்வார்கள். ஆனால், திருமணம் யாரோடு நடக்க வேண்டும் என்பதையும், அது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் கனவு கண்ட ஆண்டாள், தன் கனவை தன் தோழியரோடு இப்படிப் பகிர்ந்து கொள்கிறாள்.

உனக்குத் தெரியுமா? என் இதயத்தின் துடிப்புகளை எப்படி கண்ணனை நோக்கியும் கண்ணனாகவும் மாறியது என்று?

கற்பூரம் நாறுமோ?கமலப்பூ நாறுமோ? என்று, அவன் அண்மைகளிடம் மட்டுமல்ல, வெண்சங்கையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவன் வாயமுதை உச்சமாய்த் தொட்ட அவற்றுக்குத் தெரியும்...என் காதலின் வேகம் அறிந்தாயா? என் காதலின் மொத்தமும் அறிந்தாயா?

கண்ணனுக்குச் சூட்ட வேண்டிய மாலைகளை எனக்குச் சூட்டிப் பார்த்ததும், மனத்தின் அதே ஆர்ப்பரிப்பு தான். காதல்..வேர் பிடிப்பு ஒன்று தான்.ஒன்றுதல் ஒன்று இல்லாமல், ஒன்றுதல் எவ்வாறு நடக்கும்?

அழகாய் இருக்கிறேன் என்பதாலேயே பணம் படைத்த பலரும் மணம் முடிக்க வருவர். ஆனால்,கண்ணனுக்குரியதை எப்படி பிறருக்கு அளிக்க முடியும்? அப்படி ஒருவர் விரும்புவதைத்தான் எப்படி அனுமதிக்க முடியும்?

எல்லோரும் பூஜைகள் செய்வது தனக்கு ஏதேனும் வேண்டுமென்றூ, நான் பூஜை செய்வதோ கண்ணனே வேண்டுமென்று. ஆலயத்தின் வாசங்கள் எல்லாம் என்னை அவன் வாசலுக்கே கொண்டு செல்கின்றன.

உள்ளத்தில் உள்ளவற்றை உன்னிடம் சொல்லி விட்டேன். நீ ஊருக்கு சொல், எங்கும் சொல், எப்போதும் சொல், யாவரிடமும் சொல்....எனக்கு கண்ணனே மணமகன், கண்ணனே மனமகன்”.

பரிபூரணமான காதல் என்பது பக்தி மார்க்கத்தில் ஆத்ம சமர்ப்பணம். அதைத்தான் தொடர்கிறாள். ஆண்டாள்.

“நீ மற்றும் நம் தோழிகள் அனைவரும் சூழ்ந்து மகிழ்வாக மங்கல ஒலியெழுப்பு, தங்கப் பூர்ண கும்ப மரியாதையுடன் என் நாதனை வரவேற்கிறீர்கள். நாளை திருமணம் என்று நாள் குறித்தாயிற்று. பாக்கு மரங்களால் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலின் கீழ், இனிமை ததும்ப நரசிம்மனைப் போல் மிடுக்குடன் நுழைகிறான் என் மாதவன்.

அப்பா, அவனை விஷ்ணுவாகவே பாவித்து கால் அலம்பி பூஜிக்கிறார். தயிர், தேன், நெய், கலந்த மது வர்க்கத்தை வேத மந்திரம் சொல்லி வழங்கி அருந்தச் செய்கிறார்.

அப்போது கண்ணனைப் பார்க்க இயலாமல் வெட்கம் என் ரத்த திசுக்கள் வரை ஊடுருவிச் செல்கிறது. இந்திரன் தலைமையில் தேவர்கள் பலர்வந்திருக்கின்றனர். நன்கு வேதம் ஓதத் தெரிந்த அந்தணர்கள் பல திசைகளிலிருந்தும் வந்திருக்கின்றனர். அவர்கள் தான் என்னை கோவிந்தனுக்கு மணம் செய்விக்க முடிவு செய்கிறார்கள்

வானத்தில் பூ பூத்தது. வானவில் தோன்றி தன் மகிழ்வைக் காட்டியது. பறவைகள் கிறீச்சிட்டு வாழ்த்துச் சொல்லின.பசுமையான புல் கூட்டம் தலையசைத்து தன் மகிழ்வைத்தெரிவித்தது.

இந்திரன், வருணன், சூரியன் ஆகியோரை மந்திரம் சொல்லி வணங்கி பத்து புத்திரர்கள் கேட்கிறேன். பதினொன்றாவதாக நாராயணனையே கேட்கிறேன். எப்போதும் எனக்கு அவன் முதல்வன் தான். ஆனால், புதல்வனாகவும் அவனே வேண்டும்.

இப்போது கண்ணன் என் தோஷங்களை நீக்க மந்திரங்கள் சொல்லி தர்ப்பைப் புல்லால் என் புருவங்கள் தடவினான. தோஷங்கள் மட்டுமா விலகின? எனக்குள் அரூபங்கள் எல்லாமும் மறைந்தன. என்னைச் சுற்றிலும் உள்ள ரூபங்கள் எல்லாமும் மறைந்தன. இவன் மாயக்கண்ணன் அல்லவா? அவனை நினைப்பதைத் தவிர வேறொன்றும் இல்லாத வாழ்வை .நேரத்தை , எனக்கே தந்து விட்டான்.

புதிய ஆடைகளை என் நாத்தி அந்தடி என்ற துர்க்கை மூலம் அணிவிக்கப் படிகிறேன்.ம்...புடைவையா? புடைவையாய் என்னுடலைச் சுற்றியதும் கண்ணன்...கண்ணன்...கண்ணனே,

மணமாலை அணிவிக்கப்பட்டு, நிச்சயதார்த்தம் முடித்து, வலது கை பிடித்து அக்னி குண்டத்தின் மேற்குபுறம் மனையில் அமரச் செய்தனர். மங்கல மேளங்கள் முழங்க, மாங்கல்யம் தருகிறான் கண்ணன். இந்த வினாடியில்தான்....நான் கடவுளின் கடவுள் ஆனேன். நான் வண்ங்கியோர், இனி என்னை வணங்குவர்.

இந்த பூமி எங்கும் எனக்குக் கண்ணன் வடிவம் தான் இந்த மனிதரெல்லாம் கண்ணன் இல்லை. ஆனால் கண்ணனுக்குள் அனைத்தும் அடக்கம், இந்தப் பூலோகத்தையே  என் அன்பாகச் சுருட்டி நான் கண்ணனுக்குத் தருவேன். நீங்கள் அவனை கர்ப்பத்துள் பார்க்கிறீர்கள் தெய்வமாய், நான் என் இதயத்துள் கர்ப்பம் த்ரிக்கிறேன் கணவனாக, காதலனாக...

உங்களுக்கு, கண்ணன் உயிரைக் காப்பவன், எனக்கு கண்ணனே உயிராய் இருப்பவன்.சடலமாய் மாறப்போகும் இந்த உடலும் உயிர்க்கும். கண்ணன் கை பட்டால், மற்றோர் தொட்டால், தொட நினைத்தால்...உள்ளமே சடலமாகும்.

எனவே தான் தோழிம் என் நினைவில்முங்கி, என் கருத்தில் நிறைந்து எனக்குள் நிறைந்த கண்ணனே என்னை மணக்கிறான். மணப்பான், மணக்க வைப்பேன் என்பது சூளுரையாக வெடித்தது: துடித்தது.

இவை கனவாக இருக்குமென்று தோன்றவில்லை. ஆனால் வெறும் கனவாகி விடக்கூடாது என்ற ஆண்டாளின் வேண்டுதல் ,...பிரார்த்தனை,..

தன்னுடைய சித்தத்தைக் கவ்ர்ந்த கண்ணன் வெறும் மானுடன் அல்ல,மானுட்டத்துக்கெல்லாம் உயிரூட்டவல்ல மகாபுருஷன். அவனுக்குரியவள் நான் என்று உணர்த்தத் தான் இத்தனை பிரயத்தனங்கள்.

பிற மானிடர்க்கு என் அவயங்களைப் பார்க்கும் உரிமை கூட கிடையாது என்று சொல்லும் போது கண்ணனின் மீதான் தீராக்காதல், மணம் முழுவதும் மட்டுமல்ல; தேகமெல்லாமும் கூட பரவி, பரவசமாக்குவதால் தான் கனவு சொல்வது போல் காட்சியாகப் படைக்கிறாள்.

எழுவதை, எழுதுவதை, பேசுவதை என்று பிற செயல்பாடுகளை பழக்கமாக்குவார்கள் மனிதர்கள். ஆனால், ஆண்டாளோ காதலையே, காதலிப்பதையே பழக்கமாக்குகிறாள்.

நான் கண்ணனின் பூந்தோட்டம். பூக்களாய்ப் பூத்துக் கிடக்கிறேன், கண்ணனுக்கு மட்டுமே பறிக்கவும், பராமரிக்கவும் உரிமை, இந்தப் பாடல்களைப் பாடி நான் கண்ணனை அடைந்தேன். நீங்களும் பாடுங்கள். உங்கள் வழித்துணையை, வாழ்க்கைத் துணையை அடைவீர்கள்”என்று சொற்களுக்குள்ளே சூட்சுமம்வைத்தாள்: சொற்களின் மேலே ஆட்சி செய்தாள்.

ஒரு கனவுக் காட்சியை இயக்கியதும் அவளே; இயங்கியதும் அவளே: இயக்க வைப்பதுவும் அவளே,. ஆண்டாள், நம் மனதை ஆள்வாள்.

காண்போம்....
*********************************************************************************

2 comments:

  1. நீங்கள் புதுக்கோடடையில் குடியிருந்தது பெரியார் நகர் தானே? நன்றி.

    ReplyDelete