Monday, November 30, 2015

இதுவும் பயணக் கட்டுரை தான்( ஆனா நீங்க நம்பணும்)

குழந்தைகளின் படிப்பிற்காக புலம் பெயர்ந்து இருக்கிறேன்..நான் பிறந்தது முதலே எனை தாலாட்டியும், கொஞ்சம் வாலாட்டியும் வளர்த்த புதுக்கோட்டையை விட்டு தலை நகரம் நோக்கி நகர்ந்திருக்கிறேன்..

மாறுதல் கிடைக்க வில்லை ( கிடைக்கவே கிடைக்காது) என்பதால் தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கிறேன்.

ஒருநாள் அல்லது இருநாட்கள் மட்டுமே புதுகையில் என்பதால், புதுகை செல்வது தான் எனது பயணக் கட்டுரை..( வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் எழுத வேண்டுமா என்ன? என் நாடு புதுகை தான்...)(இம்முறை திங்கள் முதல் சனி வரை)

இதனை வருத்தங்கள், ஏக்கங்கள்,பெருமைகள், வேலைகள், பார்வைகள், செய்திகள் என்ற உணர்வுகளில்...வரிசையாக...அல்லது வரிசையற்று..

வருத்தங்கள்
**************
1.புவனேஸ்வரி கோயில், புதுக்குளம், பிரகதம்பாள் கோயில், நார்த்தாமலை, குமரமலை, போக நினைத்தேன்...போகவில்லை.

2.புதுக்குளக்கரையில் தனிமையில் அமர்வது மிகவும் பிடிக்கும்..ஆனால் நேரம் ஒதுக்க இயலவில்லை.

3,பெரியார் நகர் பூங்காவில் அமரவும், ஆரோக்கியசாமி அம்மாவிடம் பேசவும் நினைத்தேன்.

4. வாணிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது . பார்க்க வில்லை.

5. கார்த்திகை தீபம் அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மேன்மைமிகு சரஸ்வதி ராமநாதன் அம்மா தலைமையில் பட்டி மன்றம் சென்று விட்டதால் உள்ளூரில் முருகன் கோயில்களுக்குச் சென்று சொக்கப்பனை பார்க்க இயலவில்லை.( கோயில்கள் செல்லவில்லை என்று நான் எழுதுவதைப் பார்த்து நான் மிகப் பெரிய பக்திமான் என்று என்னை நினைத்து விடாதீர்கள்..தயவு செய்து)

6. எனக்கு தினமும் சிகப்பு ரோஜாக்களைத் தரும் சீதா அக்காவை ( உடல்நல குறைவாய் இருக்கிறார்) பார்க்கவில்லை.

7.நீலா,குணா,வசந்தி,வளர்மதி,ரேவதி,அருணா,டயனா,தேவகி,பாத்திமா,பஷீரா,நிஷா ஆகியோர்களைப் பார்க்கவில்லை

8. சேமநலநிதிக்கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும்..இயலவில்லை. அரியர் ஒன்று மூன்று வருடங்களாய் கிடப்பில் இருக்கிறது.அதற்கான ஏற்பாடுகள் செய்ய இயலவில்லை.

ஒரு வாரம் இருந்தும் பள்ளி சென்று மீதமான நேரத்தில் நிறைய பணிகள் இருந்ததால் என் பயணத்திட்டத்தில் இவையெல்லாம் இருந்தும் என்னால் செயல் படுத்த இயலவில்லை.

இன்னொரு வருத்தமும், பார்த்த எல்லோரும் கொஞ்சம் குண்டாகி வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

பெருமைகள்
*****************
1. ஒரு பட்டிமன்றம் பேசி விட்டேன்

2. த.மு.எ.க.ச. திருக்கோகர்ணம் கிளை கூட்டம் நடத்தி விட்டேன்..

3.பள்ளியில் குழந்தைகள் தின விழா நடத்தி விட்டேன்.

4, ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தி விட்டேன்

5. பள்ளிக்கு எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரையும் பள்ளிக் கருத்தாய்வாளர்களையும் வரச்சொ ல்லி ஒரு சிறிய பெற்றோர் சங்கக் கூட்டம் நடத்தி விட்டேன்

6. பசுமைப் படைக்கு தாவரங்கள் சிலவற்றை ஊருக்குள் நட்டு (வேப்பம் கன்றுகள்) அதனை பராமரிக்க ஆட்கள் நியமித்து விட்டேன்.

7. நான் வரும் சனிக்கிழமை( கிளம்பும் நாள்) என் மாணவர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற தலைப்பில் என்னை மகிழ்விப்பதாய் நினைத்து தங்கள் தனித்திறமைகளைக் காட்டி அவர்களே திறம்பட ஏற்பாடு செய்து நடத்தினார்கள்..( என் பிள்ளைகளை நான் நல்லா வளர்த்திருக்கே ன்னு உணர்ந்த தருணம் அது..என் பிள்ளைகள் என்று நான் சொன்னது என் மாணவர்களை)( இந்த அன்புக்கு நான் இன்னும் இரண்டு ஜென்மங்கள் எடுத்து நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்)

8. கண்ணதாசன் விழாவிற்கு சென்று கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் பேச்சையும் திரு முத்துநிலவன் அவர்களின் பேச்சையும் கேட்டு வந்தேன்..(கிளம்பும் போது..அங்கிருந்து அப்படியே பேருந்து ஏறிவிட்டேன்)விழாவில் முபா,கஸ்தூரிநாதன்,கஸ்தூரிரெங்கன்,முருகபாரதி,பொன்க,திருப்பதி,குருநாதசுந்தரம்,முத்துசீனிவாசன்,சம்பத்குமார்,பாரதி,இளங்கோ எல்லோரையும் பார்த்தேன்..( எல்லாப் பெயர்களுக்கு முன்னால் திருவும் பின்னால் அவர்களும் போட்டுப் படிக்குமாறு வேண்டுகிறென்)

அன்புகள்...ஆதரவுகள்..நெகிழ்வுகள்
***********************************

1. என் மாணவர்கள் என்னைச் சுற்றி நின்று கொண்டே இருந்தனர். ( வகுப்பறை சத்தமாகவே இருந்தது..ஆனால் நான் ரசித்தேன்.நேசித்தேன்.

2. வாயே திறக்காத முத்து, நல்லாருக்கியாப்பா, எப்போ வந்த, எப்போ போறே, இனி எப்ப வ்ருவ? என்று 4 கேள்விகள் கேட்டுவிட்டான்..(பள்ளித் தோழன்)

3. நான் இங்கே இருந்ததை விடவும் அதிக நட்பையும் அன்பையும் பெற்றிருக்கிறேன்.

4. முதல் நாள் (திங்கள் கிழமை ) தலைமைஆசிரியர் கூட்டத்தில், ஆறு கூட்டங்களாக வராதது கண்டு அனைவரும் நலம் விசாரித்தனர். சென்னையில் வெள்ளம் பற்றி கேட்டறிந்தனர்.

5. நான் புதுகையில் இருக்கும் போது என்னைக் கண்டு கொள்ளாதவர்கள் எல்லாம் வாகனங்களை  நிறுத்தி நலம் விசாரித்தனர்.(நான் தான் உயிர் என்று வசனம் பேசியவர்கள் வாய் திறக்கவில்லை)

6. வேளச்சேரியில் வெள்ளம் பற்றி கேட்டறிந்து கொண்டனர். மீனா, வத்சலா, குழுவினர்

7. எதிரில் நடந்து போனாலும் கண்டு கொள்ளாத கதிரேசன் தன் மனைவியோடு பள்ளிக்கு வந்து பார்த்துச் சென்றான்...

8. நலமா சுவாதி என்ற விசாரிப்பில் ஸ்டாலின் குரலில் அவ்வளவு அன்பு(உணர்ந்தேன்.உணர்ந்தேன்)

9. இம்முறை தொலைபேசியில் பேசியதை விட அதிகம் பேசினார் தோழர் மதியழகன்

10. சக்ஸஸ் புத்தகக் கடையும் எஸ்.பி.எம் புத்தகக் கடையும் சென்றதில் விசாரிப்புகள். ( இங்கே தான் புத்தகங்கள் வாங்க வேண்டுமாம்..தொலைபேசியில் சொல்லச் சொன்னார்கள்)

11. முருகேசன்,வசந்த்,காளியப்பன்,இசாக்,இஸ்மாயில் ( என் வகுப்புத் தோழர்கள் இதில் இருவர் ஆசிரியர்கள் மற்ற மூவரும் மளிகைக் கடை சொந்தமாக வைத்திருக்கிறார்கள்..) புதுகை என்னை மிஸ் செய்வதாகச் சொன்னார்கள்.

12 நண்பன் சுரேஷ், தம்பி சுரேஷ், அண்ணன் சுரேஷ் மூவரையும் பார்த்தேன்..பேசினேன்.(கடைவீதிகளில்)(எங்கள் ஊரில் சுரேஷுகள் அதிகம் என் பள்ளியில் 6 சுரேஷ்)

13. கலா, மீனா, சுந்தரி, பாமா வோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்..( ஒரே சிரிப்பு..( கான்பிரன்ஸ் கால்)

14 சுரேஷ் அதிகமாகவே நலம் விசாரித்து, என் வருங்காலத் திட்டம், வாழ்வியல் சிந்தனை என்று பேசி என்னை மகிழ்வில் ஆழ்த்தினார்( இது வேறு சுரேஷ்...அட நீ இவ்வளவு பேசுவியா சுரேஷ்????)

15. இப்போது என்னும் அதிகமாக நெருக்கத்தையும் அன்பையும் உணர்கிறேன்.

எஸ்.இளங்கோ சார் புதுகையில் நான் வராத வரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தொகுத்துக் கூறியதோடு, அவரின் சில கருத்துக்கள், ஆதங்கங்கள் ஆகியவற்றை சொன்னார். (நீண்ட நாட்களுக்குப் பின் கேட்ட நட்புரை)

16. பேரா,மாதவன், நிறைய பேசினார் பல செய்திகளை, நினைவுகளை, பகிர்ந்து கொண்டார்.. ( இப்போது அவர் வீட்டருகே அல்லவா?)

17. நிர்வாக ரீதியாக அருள் அண்ணாவுடன் ஒன்றரை மணிநேரம் பேசினேன்..(அதில் கொஞ்சம் என் குடும்பம் பற்றியும்)(எங்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்

18.தொலைபேசியில் ஏற்கனவே என் தன் விருப்ப ஓய்வு பற்றி விவாதித்த திரு கவிஞர் தங்கம்மூர்த்தி நேரிலும் மறு ஒளிபரப்பு செய்தார் சற்று கூடுதலான அக்கரையுடனும், அன்புடனும்`

19ஆக்ஸ்போர்டு சுரேஷின் கருத்தும் இதே தான்..(நிறைய பேசினோம்)

20.ஒரு நண்பனின் குறுஞ்செய்தி..பட்டிமன்றம்,பள்ளி, கூட்டம் நடத்தல், கூட்டம் செல்லல், நட்பு வட்டங்கள் சேர்த்தல் என்று எல்லாவகையிலும் மிளிர்ந்தாய் நன்று வாழ்த்துக்கள் என்று இருந்தது..அவனுக்கு நன்றி..

வேலைகள்
*************
என் சொந்த வீடு சென்று பார்த்து வந்தேன்.

2. நான் வளர்ந்த வீட்டையும் பார்த்து வந்தேன்..( அதிக மன பாரத்துடன்..அது விற்கப்பட்டதால் ,கொஞ்சம் கலக்கமானது,சிறிது நேரம் தான்..)

3. நகைக் கடன் வாங்கியிருந்த இரு வேறு வங்கிகளில் கடனின் வட்டியை கணக்கிட்டு வந்திருக்கிறேன்

4. பெரியவள் அவள் ஆசிரியருக்கு கடிதம் வழங்கியிருந்தாள்.( சமர்த்தாகக் அதனை அவர்களிடம் சேர்த்து விட்டேன்...அந்த ஆசிரியரின் கண்களில் சிறு கண்ணீரையும் கண்டேன்..அவருடைய கணவரை அழைத்து சத்தமாகப் படித்துக் காண்பித்தார்...ஒரு ஆசிரியராக நானும் அந்த மகிழ்வை உணர்ந்தேன்)

5. குழந்தைகளுக்கு மணப்பாறை முறுக்கு, மறமடக்கி கடலை, அங்கே இனிப்பகத்தில் இனிப்புகள், அவள் வழக்கமாக சாப்பிடும் காரசேவ் போன்றவை வாங்கிக் கொண்டு, முறுக்கு மாவும் அரைத்து எடுத்து வந்துள்ளேன்,

6. செட்டியார் கடையில் எண்ணெய்க்கு செட்டியார் அய்யா தொலைபேசி செய்திருந்தும் வாங்க நேரம் இல்லை.

7. புதுகையில் அடுப்பு இல்லாததால் காலையில் ஆச்சி கடையில் மாலை நேரம் பிருந்தா,வீரமணி,சங்கர் கபே என்றும் சாப்பிட்டுக் கொண்டேன்

8. வற்புறுத்தி சாப்பிட அழைத்த தோழிகளை மறுதலித்து விட்டேன். என் வீட்டில் அடுப்பு இருக்கும் போது கூப்பிட்டால் அது விருந்தோம்பு. அது இல்லாத நிலையில் என்னைக் கூப்பிடுவதால் அதுக்குப் பேர் (?) அதனால் அவர்கள் அழைப்பை புறக்கணித்தேன்,( என்னை மன்னிப்பார்களாக)


நான் இனி சந்திக்கவே கூடாது என்று நினைத்த இருவரைச் சந்தித்தேன்..அவர்களோடு பேசவும் நேர்ந்தது...(பிரியமாய் பேசுவது போல் நடித்தனர்)(ஒரு ஆண்..ஒரு பெண்)


பின்குறிப்பு:
*************

இதில் புதுகையில் இருந்த போது பலர் பேசாதவர்கள் கண்டு கொள்ளாதவர்கள், மெல்லிய புன்னகை மட்டும் தருவோர்கள் என்று அனைவரும் அடக்கம்..ஆனால், ஒவ்வொருவரின் பேச்சிலும், அன்பை உணர்ந்தேன்...நன்றி .புதுக்கோட்டை...

பெரும்பான்மையானவர்கள் இன்னும் எனக்கு 15 வருடம் சர்வீஸ் இருப்பதால் நான் வி.ஆர்,எஸ் கொடுப்பது வேண்டாம் என்றே சொன்னார்கள். (ஏ.இ.ஒ உள்பட)

அடுத்த முறை என் பயணத்திட்டங்கள் மிகச் சரியாக வடிவமைத்து ஒவ்வொன்றுக்கும் மிகச் சரியான நேரப் பங்கீடு கொடுக்க வேண்டும்..
நேர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்..

I MISS YOU PUDUKKOTTAI

*********************************************************************************











10 comments:

  1. சொந்த ஊர் பயணமும் கொண்டாடப் பட வ்ஏண்டியதே

    ReplyDelete
    Replies
    1. கொண்டாடிட்டோம்ல

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  3. மனதில் உள்ளதை எல்லாம், மழையைப் போல் கொட்டித் தீர்த்து விட்டீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..ஆமாம்..இப்போ அவ்வளவு சுகமாருக்கு..நன்றி டி.டி.சார்

      Delete
  4. சொந்த ஊருக்கு வந்தமைக்கே அருமையான பயணக் கட்டுரை
    அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. அதானே...என்னல்லாம்..வேறெங்காச்சும் கூட்டிப்போனா எவ்வளவு அழகா எழுதுவேன்..உங்க நண்பர்ட்ட சொல்லுங்க.நல்லா.

      Delete
  5. தங்களின் அக்கறைக்கு பலனாய் உங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்து, தங்களை போன்றே பண்பாளர்களாய் சிறக்க வாழ்த்துகிறேன்.

    ..வெளிநாடுகளுக்குச் சென்றால் தான் எழுத வேண்டுமா என்ன? என் நாடு புதுகை தான்...

    உண்மைதான் ! வெளிநாட்டில் வாழும் எங்களின் வருத்தங்ளையே ஒட்டியிருக்கின்றன தங்களின் வருத்தங்களும் !

    தங்களை சுற்றியுள்ள அன்பான ஆதரவுகளின் அரவணைப்புடன் தங்களுக்கு இன்னும் பல பெருமைகள் கிட்டும்.

    நன்றியுடன்
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. நன்றி..நன்றி. என்ன தான் இருந்தாலும் நாம் பொறந்த இடத்தை விட்டு போறதுனா சும்மாவா...? மனம் துள்ளு துள்ளுச்சு பாருங்க..அடடா...அப்படி அனுபவித்தேன்.

      Delete