Wednesday, October 28, 2015

அன்பின் விருட்சம்

கனவுக்காட்சிகள்...கவிஞர் சுவாதி...05...
********************************************

திருத்தக்க தேவர் இயற்றிய காப்பியம் சீவக சிந்தாமணி காப்பிய நாயகனான சீவகனின் அன்னை விசயை காணும் கனவு இது..
********************************************************************************

விசயை மனமெல்லாம் தடுமாற்றம். சச்சந்தனுக்கும் ஒருவன் கொடுமை இழைக்க முடியும் என்று அவள் நம்பவேயில்லை. கனவை மறக்க நினைக்கிறாள். ஆனாலும், விடாமல் துரத்தும் கனவை எப்படித் துரத்த?

யார் இந்த விசயை? அன்பை மட்டுமே விதைத்து, அன்போடு கலந்த ஏமாங்கத நாட்டின் இராசமாபுரத்தின் மன்னன் சச்சந்தன் மனைவி.

இத்தனைக்கும் அவனுடைய மாமம் மகள் தான். பார்த்துப் பார்த்துப் பழகின முகம், பழகிப் பார்த்தே கிடந்த காலம்., என்றாலும் சச்சந்தனுக்கு விசயை அருகில்...அகிலம் சுழலுமா? உணவு வேண்டுமா? எந்தக்கேள்வியும் தெரிவதில்லை. அன்பினால் மட்டுமின்றி, அழகிய தோற்றத்தாலும் அவனைக் கவர்ந்தவள் விசயை. மாமன் மகளேதான் மனைவி என்றாலும், காதல் மனதில் அப்பிக்கொண்டால் அண்டம் முழுவதும் காதல் துணை மட்டுமே கண்ணில் தெரியும். அப்படித்தான் அவன் பார்வை படும் இடமெல்லாம் தோற்றப்பிழை போல அவளே தெரிந்தாள்.

அதோடு தன் மகவை கருவில் தாங்கியிருக்கும் மனைவி அருகிலேயே இருந்ததால் மனமெல்லாம் பூத்துப் பூத்துக் குலுங்குகிறது சச்சந்தனுக்கு.

நல்ல மனிதர்களை, பல வல்லமனிதர்கள் வென்று விடுகிறார்கள். அப்படித்தான் ஆனது சச்சந்தனின் வாழ்வும்.

எதிரி நாடு என்று எவரும் இல்லாமல் போனார்கள். போர் புரிய வந்தவர்கள் புன்னகையோடு போனார்கள். புரியாமல் திணறினான் அமைச்சன். மனதுக்குள் அந்த சூட்சுமம் தெரிய வேண்டி அலறினான். மந்திர சக்தியின் மகிமையோ என்று கூட எண்ணினான். எனவே. அழுக்காறு அவனுக்குள் அழுக்காய் முளைத்தது. அது நட்பைக்களைத்தது.

சிம்மாசனம் கிடைத்தால் சிந்தை மகிழுமென நினைத்தான். மந்தை ஆடுகள் போல் மனிதர்களைக் கவர்ந்தான்.ஊதியம் மட்டுமே வேண்டுவோர் உள்ளங்களை மதிப்பதில்லை. அப்படியே அமைச்சனுக்கும் கை கொடுக்க இருந்தனர் ஆயிரம் பேர் பிடித்தும் பிடிக்காமலும். அவனுக்குள் திட்டங்கள் பலவகுத்தான். மனதால் சிறுத்தான்.

நல்லவர்களுக்கு அவமானமும் அசம்பாவிதங்களும் அநீதியும் நடக்கும் தான். ஆனால் அதனைத் தவிர்க்கவும், தகர்க்கவும் சந்தர்ப்பமும் கிடைக்கும்.இறை சக்தி - அன்பு கொண்டவர் எவருக்கேனும் எச்சரிக்கும்.கொக்கரிக்கும் பகையை சொல்லி வைக்கும். கள்ளம் முளைக்கும் மனதை சொல்லி வைக்கும்.

விசயை கனவு கண்டாள். பதற்றம் தாளவில்லை. ஆட்சி முடியப் போவதும், காட்சி கலையப் போவதும் சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மறுப்பார்கள்.

இதைக் கணவனிடம் தெரிவிக்க வேண்டுமா? கனவின் கனத்தை அவன் தாங்குவானா? அதன் பின் தூங்குவானா? வாரிசை வயிற்றில் சுமக்கும் இந்த நிலையில் ஒருவேளை அது பொய்மையாக இருந்தால் அது குழந்தைக்கல்லவா பாவம் சேர்க்கும்?

இப்படி பல்வேறு எண்ணங்கள் எந்த வேலையும் இல்லாமல் இவளை மட்டுமே குறி வைத்து தாக்குகின்றன. வெறும்  கனவுதானே என்று ஒதுக்க முடியவில்லை. சொல்லாமலும் பதுக்க முடியவில்லை.

முடிவாய் தன் கணவனிடம் கனவை விவரிக்கிறாள் தலை குனிந்தவாறே> ஏன்?

கனவை விவரிக்கும் போது, தன் கலக்கம் கண்களிலோ,முகத்திலோ தெரிந்தால் காதல் கணவன் நைந்து போகக்கூடும். அவன் முகம் வாடினால் அவள் உயிரே கலங்கவும் கூடும். இரண்டுமே நடக்கக்கூடாது. அதனால், குனிந்த படியே பேசினாள்.

“பரந்து விரிந்த ஏமாங்கத நாட்டின் இராசபுரம் வீதிகள் கருப்பாய்த் தெரிகின்றன. சரயு நதியில் ரத்தம் உறைய வைக்கும் முதலைகள் கூட்டம். நரிகளின் ஊளைகள்.,” கனவில் அவள் காண்பது இவ்வளவுதான். அவை ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருந்தாலும் தனக்கும் கனவுக்கும் தொடர்பென்றே நம்பினாள். அதைத்தான் சொன்னாள்.

குரல்கள் தளர்ந்து, நாக்கு வறண்டு, இதயம் நொறுங்கும் ஓசை, இவளேகேட்டது போல் ஒரு சோக உணர்வு அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறது.

விசயை மீதான மையலுக்குள் மயங்கிக் கிடப்பவன் தான் சச்சந்தன்,என்றாலும் மதி நுட்பம்  வாய்ந்தவன்.

மனைவியின் கனவு தீமையின் வரவைக் குறிக்கும் சூசகமாக இருக்கட்டும்: இல்லாமல் போகட்டும். அதல்ல முக்கியம். இப்போது தேவை எச்சரிக்கை.

தன்னுடைய வம்சம் விளங்க வேண்டும். அது காக்கப்பட வேண்டும். அதற்கு வழி, மனைவியை பாதுகாப்பாக வெளியேற்றுவது தான். தன்னை விட்டுச் செல்ல அவள் ஒப்புவாளா என்றொரு கேள்வியும் எழுந்தது மனதில். வேறு வழியில்லை. அவள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு எங்கள்காதலின் விளைவாய் துளிர்த்த மகவும் முக்கியம். அந்த ராஜமுத்து எப்படி இருக்கப் போகிறது என்று, தான் பார்க்காவிட்டாலும் சரி, ஊரே பார்க்க வேண்டும். உலகம் போற்ற வாழ வேண்டும். இது, ஒவ்வொரு தந்தைக்குமான உணர்வல்லவா?

அன்பின் விருட்சங்கள் சச்சந்தனின் மனதை முற்றிலுமாக ஆக்கிரமித்திருந்தன. ஆம், ஒப்பித்தான் ஆக வேண்டும் என்று தீர்மானித்தான்.

சேர்ந்து இருப்பது காதல் தான் என்றால், இப்போது பிரிக்க நினைப்பதும் காதலால் தான், அவளை பாதுகாப்பாக அனுப்பி விட்டு, எதிர்ப்புகளை என்னவென்று விசாரிக்கலாம்” என்றும் முடிவு செய்தான்.

மறுகணம், அதற்கான வேலையில் ஈடுபட்டான். அவனுக்குள் இருந்த தொழில் நுட்ப அறிவு மயில் பொறியை சிருஷ்டித்தது. விசயை வியந்தாள். தன்னோடு தன் கணவனும் வரப்போகிறான் என்றே ஒரு கணம்சிலிர்த்துப் போனாள். ஆனால், தான் மட்டுமே போகப்போவதை அறிந்ததுமே தடுமாறிப்போனாள்.

உலகின் மிகப் பெரிய வலி, தன் கண் முன் தன் காதலை துணை கலங்கித் தவிப்பதைப் பார்ப்பது, என்ன செய்ய? கீழிருந்து மேல் நோக்கிப் பாயும் அருவியும், பின் நோக்கிச் செல்லும் காலமும் இயற்கையில் இல்லையே! தடுமாறத்தான் முடிந்தது அவளால்.

நடக்கவே வேண்டாம் என்றாலும், நடக்கக் கூடாதென்றாலும் நடப்பவற்றை மாற்றி நடக்க வைக்கவா முடியும்? அவள் பயந்தபடியே கனவின் காட்சிகள் கண் முன் நடக்கின்றன.

சச்சந்தனுக்குப் புரிந்தது.கட்டியங்காரன், நட்பு முகம் போர்த்திய நரியாய் இருந்துள்ளான் என்பதை தெளிவாய் அறிந்தது அறிவு. அதனால், உடனே செயல்பட்டது.மயிற்பொறி ஏறிப் போய் மறைந்தே வாழ்” என்றான்.

விசையின் பொறியை தட்டுத் தடுமாறித் தட்டி இயக்குகிறாள் விசயை.உயிர் கீழே இருப்பது போலவும், உடல் மேலே செல்வது போலவுமான பிரமை அவளுக்குள். சிறிது கடப்பதற்குள் சச்சந்தன் கூட வருவது போலவே ஒரு காட்சிப்பிழை.

அதெப்படி எந்தப் பொறியும் இல்லாமல்....? மதி நுட்பம் வாய்ந்த மாவீரன் தான். ஆனால், மந்திரவாதி இல்லையே என்ற எச்சரிக்கை மனதுக்குள் தோன்ற,கீழே பார்த்தாள். சச்சந்தன் உடல் ரத்த வெள்ளத்தில். ஏதும் செய்வதறியாது பொறி விசையையும் இயக்க இயலாமல் மயக்க நிலைக்குச் சென்றாள் விசயை.

சூழ்ச்சி, சச்சந்தனிடம் இருந்து நாட்டைப்பிரித்தது: கனவு அவன் வம்சத்தைக் காப்பாற்றியது...

காண்போம்
********************************************************** 

4 comments:

  1. இதுவரை படிக்காத காப்பியம். படிக்க ஆவல் எழுந்தது. நன்றி.

    ReplyDelete
  2. அருமையான விவரிப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete