Monday, September 28, 2015

பெண்களின் நிலை

பெண்களின் நிலை எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது


வகை 3 பெண்கள் முன்னேற்றம்

பெண்களின் நிலையும் சுதந்திரமும், பொருளாதாரமும் பல்வேறு வகைகளில் உயர்ந்துவிட்டன என்றே தான் பேசப்படுகின்றன், எழுதப்படுகின்றன, ஆனால் இண்மையில் இன்றைய சூழலைவிட அன்று, அன்ரைய சூழலைவிட இன்று என்று கொடுமையான அரசியல், வன்முறை நிறைந்த ஒரு சூழல் தான் காணப்படுகிறது.

பெண்கள் தனக்கென ஒரு முடிவு எடுக்க இயலாத நிலைதான் இன்றும் கூடத் தொடர்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் பாக்யா வார இதழில் பெண்கல்வியை வலியுறுத்துவதாக நான் எழுதிய சிறுகதையில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்பதற்காக தன் பெண் பிள்ளையை படிக்க விடாமல் செய்வார் அவள் அப்பா. அது போன்ற ஈனச் செயல்கள் சிறுகதைகளில் மட்டுமல்ல நேரிலும் தொடர்கின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி என்கிறார்கள். ஆனால் இங்கே ஒருத்திக்குத் தான் ஒருவன். ஒருவனுக்கோ பல ஒருத்திகள். பலதார முறை ஒரு பெண் செய்தால் அவதூறாகவும், கேவலமாகவும் பேசும் மக்கள் ஆண் செய்து கொண்டால் அவன் ஆம்பிளை அப்படி, இப்படித்தான் இருப்பான் என்றோ ஆம்பிளைச் சிங்கம் என்றோ கருத்துக்கூறி தன் பணியை முடித்துக் கொண்டு சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு அகன்று விடுகிறது.

புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே தங்கச்சிக் கண்ணே சில புத்தி மதிகள் சொல்லுறேன் கேளு என்று பாட்டு பாடி புத்திமதிகள் கூறி மடக்குகிறது. எங்கேனும் கல்யாணம் ஆகப்போகும் ஆண்களுக்கு இது போன்று அவளை அன்பாகப் பார்த்துக்கொள் என்று அறிவுரை கூறக்காணும்.

இழிசெயலாக மாப்பிள்ளை கடைசியாக ஒரு முறை சிரி என்று நாலாம் தர நகைச்சுவைகளைதான் இவர்கள் தருவார்கள். ஆண் சமையல் செய்தால் வீட்டு வேலைகள் செய்தால் அவன் கேலிப் பொருள் என்று மையப்படுத்தி அவனை வீட்டில் ஏதும் செய்ய இயலாமலேயே செய்து விடுகிறது.

கவியால், தன் திறத்தால், ஆற்றலால், மேன்மை கொண்ட அவ்வையாருக்குத் திருமணம் ஆகவில்லை. ( ஆகவிடவில்லை) அது போன்ற சமூக அக்கறை கொண்ட பெண்களைத் திருமணம் செஉது கொள்ள ஆண்கள் முன் வருவதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டாலும் அவர்கள் காலில்  விழுந்து வணங்கி இவள் அன்னை, தெய்வம், போன்றவள் என்று விலகி, விலக்கி, அவளை பேயுரு கொள்ள வைத்தது காரைக்கால் அம்மையாரை..(புனிதவதி)( சிவபெருமானே அம்மா என்று அழைத்தார் என்பதெல்லாம் ஒரு பாவலா..அவர்கள் பாவம் தெரியாமல் இருக்க செய்த சதி என்றே தோன்றுகிறது) அதே பக்தி ஆண்களுக்கு இருந்தால் அவன் போற்றப்பட வேண்டியவன், வணங்கத்தகுந்தவன். ஆனால் பெண்கள்...????

ஆண்டாள் மீதும் எப்போதும் சந்தேகம் மிகுந்ததுண்டு. அவள் பாசுரங்களை கண்ணன் என்று ஒரு படிமமாக வைத்துப் பாடியதால் தான் வெளி உலகுக்கு அறியப்பட்டாள் என்று கூடத் தோன்றும்

பெண்கள் தனித்து வாழ  உரிமை இல்லை. காலாகாலத்தில் திருமணம் நடக்க வேண்டும் இல்லாவிட்டால் நெருப்பை மடியில் கட்டி அலைகிறேன். பொண்ணு சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சாப் போச்சு, ( ஆக சிரிப்பதற்குக் கூட தடை)அடுக்கு மொழிகளின் ஊடாக இப்போது புது மொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன. சீறிவரும் பாம்பை நம்பினாலும் சிரித்து வரும் பெண்னை நம்பாதே என்று...உண்மையில் அப்படிப்பட்ட ஆட்டோக்களில் உலவும் வாசகங்களை உதிர்த்தோரிடத்திலும் செதுக்கியோரிடத்திலும் பாம்பைக்தொடுத்து தான் நம்பச் செய்யவேண்டும்( அப்போது தெரியும் அவர்கள் பாம்பை நம்புவார்களா என்று)

எந்தத் திரைப்படங்களை எடுத்தாலும் காதலித்தால் பெண்கள் ஏமாற்றி விடுவார்கள்..என்ற ரீதியில் இவர்கள் வயிற்ரில் குழந்தையைக் கொடுத்து விட்டு மறுதலிக்கும் காட்சிகளை எந்தப் பெண்ணும் படமாக்கத் துணியவில்லையே.பல படங்களில் வெளியில் படித்து பொதுக்கூட்டங்களுக்குப் போகும் பெண் பெரும்பாலும் குடும்பத்தைக் கவனியாதவளாகத் தான் காட்டப்படுகிறால். பல திரைப்படங்கள் படித்தாலே கர்வமாய் பேசுவதும், வேலைக்குப் போகும் பெண்கள் எல்லோரும் கர்வமாய் பேசுவதும் அகங்காரமாய் நடப்பதுமாகத்தான் காண்பிப்பார்கள். ஆனால் இயல்பில் வேலைக்குப் போகும் பெண்ணின் சம்பளம் ஏறும் ஏடிஎம் அட்டை கூட கணவர் தான் வைத்திருப்பார்.

இது போதாதென்று சின்னத்திரைகளிலும் பெண்கள் தான் அடுத்தவர் குடியைக் கெடுப்பார்கள் ,அடுத்த பெண்ணைக் கெடுப்பார்கள், நிறுவனத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள். இதை எந்தப்பெண்ணும் கேட்பதாய் இல்லை. இல்லை கேட்கத்திராணியின்றி விதியே என்று பார்த்துவிட்டு அகன்று விடுகிறாள்.

பெரும்பான்மையான பெண்கள் நகைக்கும், புடவைக்கும் அதிகமாக ஆசைப்படுபவர்களாகவும் பூ வைப்பதில் பெரும் பித்து பிடித்தவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்.ஆனால் நிஜத்தில் அந்தப் பெண்ணிற்கு எதற்குமே நேரம் இல்லை

எந்தக்குடும்பத்திலும் ஒரு பெண் நான் அந்த  ஆணைப் பார்த்தேன், ரசித்தேன், அவனுடைய திறமைகளை ரசித்தேன் என்று சொல்ல முடியாது. தனக்குப் பிடித்த நடிகனை, பாடகனை, ஆசிரியரை, தோழனை என்று எந்த ஆணையும் அவளால் சொல்ல முடியாது. ஆனால் ஒரு ஆணால் தைரியமாக தான் காதலித்தவளை தற்போது சைட் அடிப்பவளை என்று ஒரு பட்டியலே சொல்ல முடியும். ( சொல்கிறார்கள்)


இவையெல்லாம் ஆணாதிக்கச் சிந்தனை என்று சொன்னால் சில இடங்களில் நடக்கிறதே என்று சொல்கிறார்கள். எந்த இடம் அந்த சில இடம் என்று கேட்டால்? ஓடிவிடுவார்கள். ஆனால் பல இடங்களில் நடக்கும் பாலியல் வன்முறைகள் 60,6, என்று வயது வித்தியாசம் இன்றி நடக்கும் வன்புணர்வுகள், ஆசிட் வீச்சுகள் என்று பெண்கள் அடையும் துயரத்தை எந்த பால்வெளியில் பாகுபடுத்திப் பார்ப்பது என்று தெரியவில்லை.இவர்கள் தன் கன்னிமையை பறி கொடுத்தாலும் அமைதியாக அழுதுவிட்டு, தூக்கு, அல்லது அரளிவிதை, அல்லது வேறு யாருடனாவது திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்ற வையை கடை பிடிக்க வேண்டும் என்று எண்ணுவோர்கள், பெண்கள் ஒரு ஆண் தன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லி வாதாட காவல் நிலையம் , நீதிமன்றம் சென்றால் அவதூறு ஏற்படுவது ஆண்களுக்கு அல்ல, பெண்களுக்குத்தான்

ஒரு பெண் சிறு குழந்தையிலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதைக்கூட வெளியே சொன்னால் அவமானம் ஏற்படும் என்ற ரீதியில் தான் சமூகம் அவளை வளர்த்து வைத்துள்ளது. சில காலத்திற்கு முன் தன் பெண்ணை தானே ஆற்றில் போட்டு கொன்று விட்டு தன் மகள் ஆற்றில் குளிக்கப்போனபோது இறந்துவிட்டாள் எனச் சொல்ல , எப்படியோ பிணம் கிடைக்க , பல ஆண்டுகள் கழித்து ஆம் மானம் மரியாதை கருதி நான் தான் கொன்றேன் என்று ஒத்துக் கொண்டதாகச் செய்தி படித்தோம். தெரிந்து இந்த அப்பாவும், தெரியாமல் பல அப்பாக்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் இந்த சமூகத்தில்

சாதாரணமாக ஒரு பெண் விவாகரத்து கோரி விட்டாலே அவளைப்பற்றியான அபிப்பிராயங்களை அவளது அனுமதியின்றி சுற்றி சுழன்று விடுகின்றன. இன்னமும் கூட ஒரு மேலதிகாரியாக ஒரு பெண்ணும் கீழ் பணிபுரிபவர்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் அவளுடைய எந்த ஒரு சாதாரண் உத்தரவும் நியாயமாகவே இருந்தாலும் அது நிராகரிக்கப்படும். மறுதலிக்கப்படும். அதற்கு என்ன என்ன தீமைகள் இருக்கும் என்று அலசி ஆராயப்பட்டு அது முதலில் பரப்பப்படும். அதுவும் அவர்களின் வசதிகளைக் குறைப்பது போல் அமைந்தால் அவளுடைய நடத்தையின் மீது சந்தேகம் போல் பேசுவது தான் ஆகக் கொடுமையானது.

இங்கே ஒரு ஆணைத் திட்ட வேண்டும் என்றால் அவன் அம்மாவின் மீது உள்ள நடத்தையையும் அவன் தங்கை நடந்து கொள்ளும் நடத்தையும் தான் கணக்க்கில் கொள்ளப்படுகிறது. அவன் எப்படிப் போனாலும் இந்த சமூகத்திற்கு அக்கறையில்லை.

விவாகரத்து பெற்ற பெண்கள் ராட்சசிகளாகவும். குடும்பம் நடத்த லாயக்கற்றவர்களாகவும், மதிக்காதவர்களாகவுமே சித்தரிக்கப்படுகிறது. அதே சமயத்தில் விவாகரத்து பெற்ற ஆண்மகன் ஏதும் தெரியாதவனாக அப்பாவியாக தெரிவதும் இவர்கள் கண்களின் மாறுபாடுகள் தான்.

விதவை என்று சொல்லாதே கைம்பெண் என்று சொல் ஒன்றுக்கு இரண்டு பொட்டு வரும் என்று அங்கலாய்க்கும் அவர்களுக்கு மூன்று பெண்டாட்டிகள். ஆனால் அந்த விதவைக்கு மறுமணம் என்று சிந்திக்காமல் அந்த சொல்லை மாற்றி வெற்று சொல்லுக்கு பொட்டு வைப்பதில் தான் பெருமிதம் அடைகிறார்கள்.


பெண்களைச் சார்ந்து, பெண்களின் மூலம், பெண்களுடன் ஆண்கள் இருந்தாலும் அவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களுக்கு ஒரு நியாயமும் அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு ஒரு நியாயமாகவும் தான் நடந்து கொள்வார்கள்.

ஆனால் பெண்கள் எதனையும் தங்கள் கவனத்தில் கொள்வதில்லை. சுயபச்சாதாபம், கழிவிரக்கம், கொண்டு அழாமல், அறிவால், ஆற்றலால், தன் திறமையை மேம்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே அனைத்துப் பெண்களுக்கும் முன் உதாரணமாக அமையும் என்பதோடு தம்தமது வாழ்வும் மேம்படும்Image result for pencil drawing women working
1 comment:

 1. மரியாதைக்குரியவரே,
  வணக்கம். தங்களது கட்டுரை சிறப்பாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  என அன்புடன்,
  C.பரமேஸ்வரன்,
  http://konguthendral.blogspot.com
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்-638402

  ReplyDelete