Monday, July 7, 2014

நஞ்சென்ன........

நஞ்சென்ன வாழ்க்கையிலே நாதா நாதா!
   நடுநடுங்கி ஏங்குவதோ சொல்கநீயும்!
நெஞ்சமெலாம் அன்பென்னும் தீபம் ஏந்தி
   நித்தம் நித்தம் போற்றுகிறேன் எந்தன் இறைவா
பஞ்சமெலாம் போகத்தான் பாட்டு வைத்தேன்
   பாதையையும் காட்டிடுவாய் செந்தில் முருகா!
வஞ்சனைகள் செய்தோரே வாழ்ந்தார் என்றால்
   வரம் எதற்கு? தவம் எதற்கு? திருப்பதிவாசா!


பொங்குமன ஆசையினை அடக்கி முடக்கி
   பொறுமையுடன் ஏற்கின்றேன் போதும் போதும்
எங்குமுள லஞ்சங்கள் அழிப்பாய்! ஒழிப்பாய்!
   ஏழைகளின் வேண்டுதலைக் கேட்பாய்! வருவாய்!
வங்கமென ஆர்ப்பரிக்கும் எமது உள்ளம்
   வாழும் வகை தெரியலையே என்ன செய்ய?
தெங்கிளநீர் கேட்கவில்லை திருப்பதிவாசா
   தேனமுதம் கேட்கவில்லை வெங்கிடநாதா

மந்தையென வாழுகிறோம் என்ன மாற்றம்?
   மகிமைகள் புரியாயோ எங்கள் நாதா
சிந்தையிலே உன்னையுமே நானு(ளு)ம் நிறுத்த
   சிறப்புகள் தருவாயோ எங்கள் நேசா
தந்தையென உன்னிடமே சரண் புகுந்தோம்
   தரித்திரத்தை ஒழித்திடவே வாராய் இங்கே
பந்தமென பணத்தை மட்டும் நினைக்கும் எண்ணம்
   படக்கெனவே மாறிடவே அருள்புரிவாய்

பணமென்னும் தாள்கள்தான் குறியென்றே
   பறக்கின்றார் துறக்கின்றார் சொந்தம் தன்னை
பிணம் கூட வாய்பிளக்கும் என்ற மொழியும்
   பின்னாலே தெரிந்ததய்யா உண்மை என்று
மணம் கொண்ட மனமெல்லாம் தூக்கியெறிந்து
   மரித்துவிட்டார் உயிருடனே பணத்தை எண்ணி
குணமென்னும் கோயிலைத்தான் மறந்தார் அய்யா
   குன்றேறி உன்னையுமா தேடப்போறார்?

நொந்த மனம் வெந்து வெந்து பாடுகின்றேன்
   நொந்தமனம் மாற்ற நீயும் வாராய் இந்ங்கே
வெந்தமனம் நொந்துபோக தாமதம் ஏனோ?
   வேடிக்கை விளையாட்டோ இந்தக்கண்ணீர்?
முத்துத்தமிழ் துணைகொண்டு வணங்குகின்றேன்
   முனைப்புடனே வந்திடுவாய் திருப்பதி மலையா
வந்தாங்கே தொழுதிடவே மகிழ்வு பூக்க
   வரமதையே தந்திடுவாய் திருப்பதி வாசா

முற்றுமுனை நம்பிவிட்டேன் திருப்பதிவாசா
   முதற்செயலாய் வந்திடுவாய் குறைகள் தீர்க்க
கற்றதெலாம் காசாக்க எண்ணம் இல்லை
   காசில்லா வாழ்க்கையிலோ மதிப்பே இல்லை
பற்றெனவே உனைப்பற்றிப் பாடுகின்றேன்
   பற்றாத உனைப்பற்றிப் பாடுகின்றேன்
முற்றுமாக மாறட்டும் எமது ஏழ்மை
   முத்தமிழும் முக்கடவுள் துணையில் என்றும்

***********************************************
3 comments:

 1. ஆமாசாமிJuly 7, 2014 at 8:39 PM

  உங்களுக்கு ஏழ்மையா ???????நம்ப முடியவில்லை....எமது என்று முடித்திருப்பதால் சமுதாயத்திற்கு எழுதியிருப்பீர்கள் என்றே நம்புகிறோம்...அப்படித்தானே தலைமை ஆசிரியரே? இப்படிக்கு உங்கள் உதவிஆசிரியரில் ஒருவன்

  ReplyDelete
 2. பாடுபொருளாய் வேங்கடவனை நீங்கள் அமைத்த விதம் அருமை!
  எண்சீர் விருத்தத்திற்கு ஒரு இரகசியம் உண்டு கவிஞரே!
  “காய் - காய் - மா - தேமா “ என வருமாறு அமைத்தீர்கள் என்றால் ஓசையும் சிறக்கும்.
  நஞ்சென்ன வாழ்க்கையிலே நாதா நாதா!
  நடுநடுங்கி ஏங்குவதோ சொல்க நீயும்!
  நெஞ்சமெலாம் அன்பென்னும் தீபம் ஏந்தி
  நித்தம் நித்தம் போற்றுகிறேன் எந்தன் இறைவா
  பஞ்சமெலாம் போகத்தான் பாட்டு வைத்தேன்
  பாதையையும் காட்டிடுவாய் செந்தில் முருகா!
  வஞ்சனைகள் செய்தோரே வாழ்ந்தார் என்றால்
  வரம் எதற்கு? தவம் எதற்கு? திருப்பதிவாசா!
  நஞ்சென்ன வாழ்க்கையிலே நாதா நாதா!
  நடுநடுங்கி ஏங்குவதோ சொல்கநீயும்!
  நெஞ்சமெலாம் அன்பென்னும் தீபம் ஏந்தி
  நித்தம் நித்தம் போற்றுகிறேன் எந்தன் இறைவா
  பஞ்சமெலாம் போகத்தான் பாட்டு வைத்தேன்
  பாதையையும் காட்டிடுவாய் செந்தில் முருகா!
  வஞ்சனைகள் செய்தோரே வாழ்ந்தார் என்றால்
  வரம் எதற்கு? தவம் எதற்கு? திருப்பதிவாசா!

  என்பதை

  நஞ்சென்ன வாழ்க்கையிலே நாதா நாதா!
  நடுநடுங்கி ஏங்குவதோ சொல்க நீயும்!
  நெஞ்சமெலாம் அன்பென்னும் தீபம் ஏந்தி
  நித்தம் நித்தம் போற்றுகிறேன் எந்தன் தேவா
  பஞ்சமெலாம் போகத்தான் பாட்டு வைத்தேன்
  பாதையையும் காட்டிடுவாய் செந்தில் நாதா!
  வஞ்சனைகள் செய்தோரே வாழ்ந்தார் என்றால்
  வரம்எதற்கு? தவம்எதற்கு? வெங்க டேசா!
  இங்கு இறைவா, முருகா, திருப்பதி வாசா என்ற மூன்று சீர்கள் தவிர ஏனைய வரிகள் யாவற்றையும் இந்த அமைப்பிலேயே படைத்துள்ளீர்கள்.
  இந்த சொற்களை மட்டும் பொருள் வேறுபடாமல் சற்று மாற்றியுள்ளேன்.
  இப்பொழுது பாட்டின் ஓசையைப் படித்துப் பாருங்கள்.
  கருத்து ஏற்குமேல் கொள்க!
  நன்றி!

  ReplyDelete
 3. கவிதை நல்லாத்தான் இருக்கு
  'முற்றுமுனை நம்பிவிட்டேன் திருப்பதிவாசா
  முதற்செயலாய் வந்திடுவாய் குறைகள் தீர்க்க' - அவன் என்றைக்கு வந்தான்?
  பணமிலலாதவர்களை வரிசையில் நிறுத்தி, பணம் தருவோரைத் தனியாகப் பார்க்கும் பாகுபாடுள்ள பகவான் நமக்கெங்கே வருவான் கவிஞரே!
  ”எட்டாக மடித்துப் போடப்பட்ட
  ஒத்த ரூபா நோட்டு,
  அருகிலேயே கட்டுக்கட்டாக
  கள்ள நோட்டு -
  இது என்ன உண்டியா?
  இல்லை இதுதான் இண்டியா” எனும் கவிதையைப் படித்திருக்கிறீர்கள்தானே?

  ReplyDelete