Friday, June 13, 2014

நாட்களை நகர்த்தியாச்சு

எங்கும் சுதந்திரம்
என்பதே பேச்சு
எல்லோருக்கும் வெற்றி
என்பதே உறுதியாச்சு

வீதிக்கு வீதி சாதிச்சங்கங்கள் ஏற்படுத்தியாச்சு
சாதிக்குச் சாதி
கட்சிகளும் வெச்சாச்சு

நெய்யும் துணிகள் எல்லாம்
கொடிகளுக்கே போயாச்சு
நெய்தவரின் பிள்ளைகளோ
அம்மணமாய் விளையாடலாச்சு

காடுகளைத் திருத்தி
கழனி திருத்த நினைச்சாச்சு
அதனால்
வயல்களெல்லாம் வீட்டுமனைகளாச்சு

விதவைகள் பொட்டு வைக்கலாம்
என கொள்கை பரப்பியாச்சு
சொன்னதைக் கேட்டு
மகிழ்வதற்குள்
நடுரோட்டில்
நாலுவயது சிறுமியும்
ஏழுவயது சிறுமியும் பாலியல் பாலாத்காரம் என்ற
செய்தி கேட்டு செவியெல்லாம் புண்ணாச்சு

எதிர்கால இந்தியா என்றே
இளைஞர்களைச் சொல்லியாச்சு
எனவே
அவர்கள்
பாக்கெட் மணிக்கு
பழுது வராமல் இருக்க
கூட்டுறவுத் துறையிலேயே
மதுக்கடைகள் உருவாச்சு

வரதட்சிணை அழியட்டும் என்று
வாய் கிழிய பேசியாச்சு
பேசிய பேச்சு காய்வதற்குள்
வண்டி தராமல் கல்யாணமா என
முறுக்கிக்கொண்டு போயாச்சு

பிரியமில்லாமல்பேசிக் கொண்டிருக்கும்
பக்கத்து வீட்டுக்காரன் மாதிரி
சக ஊழியன் மாதிரி
சமத்துவம் சகோதரத்துவம்
மேடைகளுக்கு மட்டுமே
பயன்படுத்தும் முக்கியச் சொல்லாச்சு

வேலையில்லாத் திண்டாட்டம்
குறைய வேண்டுமேனக் கூக்குரலிட்டு
இருந்தவர்களையும் எடுத்தாச்சு

உழைப்பு சர்வமயமாக்கல் என்ற பெயரில்
அந்நியப்பொருட்களை
மலிவு விலைக்கு த் தருவித்து
உள்ளூர் பொருள் உற்பத்தியை
முற்றிலுமாக முடக்கிப் போட்டாச்சு

சென்ற நூற்றாண்டுத் தலைவர்கள்
கனவுகளில் கூட
புதிய நூற்றாண்டு எழுப்பினார்கள்
இந்த நூற்றாண்டுத் தலைவர்கள்
புதிய உலகம் கனவைக்கூட
கரைத்து விடலாச்சு

கலப்படமே இல்லாத பொருள்
என்ற விளம்பரங்கள் போய்
கலப்படங்கள் குறைந்த பொருள்
என்றே விற்பனைகள் தொடங்கியாச்சு

பாலுக்கு நூலு இலவசம்
நூலுக்கு கோலு இலவசம்
என்றுஎவற்றுக்கு எது இலவசம்
என்று  தொலைக்காட்சி
விள்ம்பரங்கள் உன்னிப்பாய்
நோக்குவதே
 விவேகம் என்று பேசியாச்சு

புடவை சுடிதார் ஜீன்ஸ்
என்பது மாறி
பட்டு சுடிதார், பட்டு ஜீன்ஸ்
என்றுஎங்கள் பகுத்தறிவுகளும் பல்கிப் போச்சு

என்ன செய்தும்
பணம் பிழிந்து
பணம் கடைவது
என்பதே வாழ்க்கையாச்சு

அறிவை அப்புறப்படுத்தி
பணத்தை வைத்தே பண்பை
மதிக்கலாச்சு
எல்லாம் போய்
எல்லாம் இருந்து
என்ன பயன்??

பிஃஎப் லோனுக்கு நூறு ரூபாயும்
சொசைட்டி லோனுக்கு
இருநூறு ரூபாயும்
என்ற அளவிலேயே
அரசாங்க அலுவல்கள்
அன்றாடம் நடந்தேறியாச்சு

எதுக்கும்
பொறுமைகாட்டி பழகிப்போச்சு
பஸ் எரிச்சாலும்
மனுசன் எரிஞ்சாலும்
அலட்டாமல் நாட்களை
நகர்த்தியாச்சு
*****************************************************************



2 comments:

  1. ஸ்டெல்லாமேரிJune 13, 2014 at 7:50 AM

    நன்று

    ReplyDelete
  2. முகத்தில் அறைகிற நிஜம் சுடுகிறது அக்கா!
    மனிதன் எரிந்தாலும்// மனங்கள் பழகி கொண்டுவிட்டனவோ?!:(

    ReplyDelete