Thursday, June 12, 2014

தோழி....2

எனக்கு மற்றுமொரு தோழி . பெயர் ஜீவஜோதி. மிகப்பெரும் சுடராய் வாழ்ந்திருக்க வேண்டியவள். நல்லபடியாக ஆகமவிதிகளுக்கு ஏற்பத்தான் திருமணம் நடந்தது.ஆனால் திருமணமான 6 மாதங்களில் கணவன் ஒரு சாலை விபத்தில் இறந்து போனார். மீண்டும் 3 வருடம் கழித்து அவளுக்கு அவள் பெற்றோர் மறுமணம் செய்து வைத்தனர்.

இவளும் இவளைப்பார்ப்போர் எல்லாம் எப்போதும் துக்கத்துடனேயே பேசுவதாலும், சில ஆண்களின் பார்வைகளைத் தவிர்ப்பதற்காகவும் இவளும் ஒத்துக் கொண்டாள். இன்றளவும் அவளின் பழைய மாமியார் இவள் வீடு வந்து பணம் வாங்கிக் கொண்டு வயிறெரிய சண்டை போட்டுக் கொண்டு செல்கிறாள் என்பது தனிக்கதை. சம்மந்தமே இல்லாமல்  தொலைபேசியிலேயே என்னையும் அவர்களின் பஞ்சாயத்து தலைவராக்கி விடுவாள் என்பதும் தனிக்கதை.

இவள் ஒரு அரசுப்பணியில் இருக்கிறாள். கணவனும் அரசுப்பணியில் இருக்கிறார். ஆனால் மாதந்தோறும் முதல் தேதியன்று நிறைய மது அருந்திவிட்டு வருகிறார்.. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. அவன் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறான்.

இவள் ஏதாவது கேட்டால் அவளின்நடத்தை பற்றி மிகத் தாறுமாறாக பேசி மனவேதனைக்கு ஆளாக்குகிறார் அவள் கணவன். அவருடைய பணம் இல்லாமல் இவளுடைய ஊதியம் மட்டுமே வைத்துக் கொண்டு குடும்பம் ஓடுகிறது. அதிலும் ஒரு சிறிய வீட்டை வங்கியில் கடன்பெற்று வாங்கியிருக்கிறாள். அநாவசியமாக புடவை வாங்க மாட்டாள். நகைகள் என்று பெரிதாய் ஏதுமில்லை. தன் மகன் நன்றாகப் படித்து பெரிய டாக்டர் ஆகவேண்டும் என்பது அவள் கனவு. அதற்கு கிளினிக் கட்ட அவன் இந்த வீட்டை விற்று எடுத்துக் கொள்ளவேண்டும் என்பது அவளது திட்டம்.

 ஆனால் இவள் கணவரோ வங்கிக் கடன் செலுத்தும் பணத்தையும் களவாடிச் சென்உ மது அருந்தி வருகிறார். அவள் கணவர் மட்டுமல்ல. கணவரின் தங்கை, மாமனார், மாமியார் என்று அந்தக் குடும்பமே இவளைக் கரித்துக் கொட்டிக் கொண்டு இருக்கிறது.இவளுக்கு இது இரண்டாவது திருமணம் என்பதாலும் . மேலும் சில ஆண்களின் கொடூரப்பார்வைகளிலிருந்து தப்புவதற்காகவும் மகனின் எதிர்காலத்தை முன்னிட்டும் அவன் மனதளவில் எந்த பாதிப்பும் அடைந்துவிடக் கூடாது என்றும் அனைத்து வசைகளையும் பொறுமையுடன் வாங்கிவருகிறாள்.

இவளுக்கு தன் இயல்பில் வாழ ஏன் இத்தனை பயம்? இதே ஒரு ஆண் மகன் என்றால் உடனே விவாகரத்து பெற்றிருப்பான் தானே? இவள் அந்த்க் கணவனை மீறி வந்து விட்டால் 4 நாட்கள் பேசும் சமூகம் தொடர்ந்து பேசுமா? அப்படி பேசுவோர்கள் சோறு போடுவார்களா? சமூகத்தில் இருக்கும் யாருக்கும் இரக்கம் இல்லையா? இதைவிடவும் அவள் மனதில் வேதனை புகுத்த வேறு ஒன்றுமே இலலையெனத் தோன்றுகிறது.

 இவள் பத்தாம் வகுப்பில் பள்ளி முதலாவதாக வந்தவள். இனிய குரலில் பாடுவாள். இவள் குரல் கேட்டால் கல்லும் கரையும் . எந்த ஒரு ராகத்தையும் எளிதாக மனனம் செய்வதும் அதனை இது இந்த ராகம் எனப் பகுத்தறியவும் அறிந்தவள்.திரைப்படங்களுக்கு மட்டும் பாடியிருந்தால் மிகப் பெரிய புகழைப் பெற்றிருப்பாள். இந்நேரம் இவள் புகழை உலகம் பாடிக்கொண்டிருக்கும். 5வது படிக்கும் அவள் மகனுக்கு இவள் பாடுவாள் என்று கூடத் தெரியாதாம். அனைத்து சங்கீதப் போட்டிகளில் முதற்பரிசு வென்றதோடுசங்கீதத்திற்க்கான பட்டமும் பெற்றவள்.

இவள் குரலை முறித்தது யார்? இதற்குத் தீர்வென்ன? முறித்தது இந்த சமுதாயம் எனில் நானும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக இருக்கும் பட்சத்தில் வெட்கித் தலை குனிகிறேன். தடைகள் பல தாண்டி வெற்றி பெறும் பெண்கள் இருக்கிறார்கள் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஒரு பெண்னை அவள் நடத்தையின் பால் பேசி விட்டால் அவள் தன் கூடுக்குள் ஒடுங்கிப் போவாள் என்று ஆண்சமூகம் அவளை இப்படித்தான் அடக்குமா? ஏன், ஏன்? ஏன்?

1 comment:

 1. வணக்கம்
  நாட்டில் தலையோங்கும் வன்முறை பற்றி நன்றாக எடுத்துரைத்துள்ளீர்கள் இறுதியில் ஆண் சமூகம் என்ற வார்த்தைக்கு பதிலாக (சில ஆண்சமூகம்) என்றால் நன்றுஇது என்னுடைய கருத்து

  ஆண் சமூகம் என்றால் .இப்படி செய்யாதவர்களும் இதில் அடங்க வாய்ப்புள்ளது. சில என்ற வார்த்தையை பிரயோகிக்கும் போது சம்மந்தப்பட்டவர்கள் அடங்குவார்கள்.பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete