Thursday, June 12, 2014

காக்கை குருவி எங்கள் சாதி( என் இளைய மகள்)

   என் இளைய மகள் யாரோடும் அதிகம் பேசமாட்டாள். பேசினாலும் “நறுக்” கென்று இருக்கும். சில விடுமுறை தினங்களில் ( காலாண்டு, அரையாண்டு,விடுமுறைகளில் ) ஏதாவது பாரதியார், பாரதிதாசன், போன்றவர்களின் பாடல்களைப் பற்றிக் கூறுவதுண்டு.

அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது பாரதியார் மாதிரி ஒரு மனிதாபிமானமிக்க மனிதரைப் பார்க்கவே முடியாது . சாப்பிட சாதம் இல்லாமல் இரண்டு நாள் பட்டினிக்குப் பின் அவரது மனைவி செல்லம்மாள் இரவல் அரிசி வாங்கி வைத்து விட்டு உலை வைக்கப் போயிருந்தார். அந்த நேரம் பாரதி வர அந்த அரிசிகளை குருவிகளுக்கு உணவாக வீசி வீசி எறிந்து விட்டு செல்லம்மாள் வந்து பார்க்கும் பொழுது “பாரேன், செல்லம்மா, இந்த்க் குருவிகளை, எவ்வளவு அழகாக இவைகளைச் சாப்பிடுகின்றன என்று ஆனந்தமாகக் கூறினாரம். தன் குழந்தைகளுக்கு உணவு இல்லாத நிலையில் குருவிகளுக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தார். என்று கூறினேன்.

இது நடந்து ஒரு மூன்று நாள் கழித்து என் இளைய மகள் காலை வேளையில் காப்பி குடித்து விட்டு அரிசி டப்பாவில் இருந்த குறைவான அரிசியை மாடிக்குக் கொண்டு போய்  அள்ளி அள்ளி இறைத்துக் கொண்டிருந்தாள். வீடு நகரத்தை விட்டு தள்ளி இருந்ததாலும் , அருகில் கடைகள் இல்லாததாலும், நான் நீண்ட தூரம் பயணம் செய்தே வேலைக்குச் சென்று வரவேண்டி இருந்ததாலும் மாதம் ஒருமுறை மட்டுமே மளிகை வாங்கும் வழக்கம் வைத்திருந்தேன். காய்கறிகூட வார சந்தைகளிலும் ஞாயிறுகளில் உழவர் சந்தையிலும் மட்டுமே வாங்க இயலும் .

கஷ்ட்ப் பட்டு காசு கொடுத்து வாங்கியதை இப்படி தெரியாமல் விளையாட்டுப் பொருள் ஆக்கிவிட்டாளே என்று வருந்தி என்னம்மா என்ன செய்றே என்று நான் பதறி ஒருவாறாக அவளீடமிருந்து அந்த அரிசி அளக்கும் படியைப் பிடுங்கி வாங்கிக் கொண்டு போய் சேமிப்பு அறையில் வைப்பதற்குள் எனக்கும் போதும் போதும் என்றாகி விட்டது..

மீண்டும் மீண்டும் நான் விளையாடுகிறேன் என்று நினைத்து அதனைப் பிடுங்கியதாக நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் என் மகள் சோகமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகீறீர்கள் என்றாள். சொன்னேன். அப்பா? இது அடுத்த கேள்வி. சொன்னேன். ஒரு கிலோ அரிசி விலை எவ்வளவு என்றாள், சொன்னேன். அது நல்ல நாட்டுப் பொன்னிடா அதன் விலை அதிகம் என்றேன்

.இந்தக் குருவிகள் ஒரு கிலோ அரிசியையுமா சாப்பிட்டு விடும்? ஒன்றுமே இல்லாத பாரதி தன் சாப்பாட்டு அரிசியை குருவிகளுக்குத் தந்தார். ஆனால் நீங்களோ இவ்வளவு சம்பளம் வாங்கும் போதும் உங்களுக்கு ஒரு ட்ம்ளர் அரிசி த ர மனம் வரவில்லை நீங்கள் எப்படி மஹாக்கவி ஆவீர்கள் என்றாள். எனக்கு திக்கென்றது. அப்போது அவளுக்கு ஐந்துவயது மட்டுமே .

இப்படித்தான் இவள் எப்போதும் என்னை நேருக்கு நேர் நிறைய கேள்வி கேட்டிருக்கிறாள் குழந்தைகள் நல்லவர்களாகத்தான் வளர்கிறார்கள் நாம்தான் அவர்களை பிறருக்குக் கொடுக்காத கருமிகளாக மாற்றிவிடுகிறோம் என்று தோன்றியது

6 comments:

  1. ஐந்து வயதில் இப்படி ஒரு கேள்வியா?
    குழந்தை நன்றாக வரவேண்டும்.
    http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html

    ReplyDelete
  2. விளையும் பயிர் அல்லவா
    தங்கள் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்
    தம 1

    ReplyDelete
  3. நாம் தான் (பெரியவர்கள் ) நம்மை பல
    விஷயங்களில் பரிசீலனை செய்து கொள்ளவேண்டும்
    என நாசூக்காகச் சொல்லிச் செல்லும் பதிவு
    அருமையிலும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வந்தனாJuly 2, 2014 at 4:08 AM

    அவள் வாழ்க பல்லாண்டு. இந்தியாவின் பெரும் பதவிகளில் அவள் அமர என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆமாசாமிJuly 7, 2014 at 8:41 PM

    முகத்தாலும் அழகான அச்சிறுமி மனதாலும் அழகாய் இருக்கிறாள். அந்த என் மருமகளுக்கு வாழ்த்துக்கள் உங்கள் உதவிஆசிரியரில் ஒருவன்

    ReplyDelete
  6. உண்மைதான்..நாம் தான் அவர்களைக் குழப்பி விடுகிறோம்.
    மதிப்பீடுகளை சூழ்நிலையால் தளர்த்தி விடுகிறோம் நாம், குழந்தைகளுக்கு மதிப்பீடுகள் மட்டுமே பிரதானமாய்!
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் அவளுக்கும்!

    ReplyDelete