Sunday, June 1, 2014

மதிப்பெண்கள்

இன்று அலுவலகத்தில் மாணவர்களுக்கான விலையில்லா குறிப்பேடுகள், (நோட்டு) ,விலையில்லா சீருடைகள் கொடுத்தார்கள். சீருடை ஒரு பள்ளியிலும், குறிப்பேடுகள் ஒரு பள்ளியிலுமாக வழங்கப்பட்டது. அதிகமான நெருக்கடியைத் தவிர்க்கவும், ஒரே இடத்தில் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்கவும் இது போன்ற ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்வார்கள்.(முன்பெல்லாம் முண்டி அடித்துக் கொண்டு யார்   ( வரிசையின் பலர் நின்று கொண்டு இருந்தாலும்) முன்னால் போகிறார்களோ அவர்களுக்கும் சத்தமாகப் பேசி காரியம் சாதிப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதெல்லாம் தனிக் கதை.)

   ஆனால் தற்போது அவரவர்க்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில் யாருக்கும் சிரமம் இல்லாது மிகவும் சரியான முறையில் சரியான நேரத்திற்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. (என்னைப்போன்ற வாயில்லாப் பூச்சிகளுக்குதான் சிரமம் இல்லை.பந்தா பார்ட்டிகளின் எந்தப் பப்பும் வேகலைல)

   குறிப்பேடுகளும் சீருடைகளும் வேறு வேறு இடங்களில் என்பதாலும் ஒரே வழித்தடத்தில் ( ஒரே ரூட்டில் ) இருக்கும் பத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இணைந்து ஒரு சரக்கு உந்து ( லோடு ஆட்டோ) எடுத்து அதற்கான செலவுகளைப் பிரித்துக் கொண்டு எங்கள் பள்ளிகளில் கொண்டு போய் வைத்து விட்டு வருவது வழக்கம். இதற்கும் யாரேனும் ஒருவரோ அல்லது இருவரோ பொறுப்பேற்றுக் கொள்வோம்.எனவே லோடு ஆட்டோ முழுவதும் ஏற்றி முடிந்ததும் தான் அந்தந்த தலைமை ஆசிரியரகளும் செல்வோம். அவரவர் பள்ளிக்கு பொருட்கள் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டுமல்லவா? இதில் கொஞ்சம் நேரம் வீணாகும் தான் ஆனால் சரியான முறையில் நடக்கும்.

   எனவே அவரவர் பகுதிக்குச் செல்லும் மற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்காகவும் லோடு ஆட்டோவுக்காகவும் கொண்டு செல்ல ஒத்துக் கொண்ட ஆண் அல்லது பெண் த.ஆசிரியர்களுக்காகவும் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்த்தது. ( என்ன பண்றது? இந்த கொடுமையான வெயிலில் தான்)

   முன்பெல்லாம் இவர்களின் பேச்சுக்கள் ஆட்சி, நடிகைகள், திரைப்படம், ஆடைகள், திருமணங்கள், போன்ற வகையில் சென்று ஏதாவது ஒன்றில் நிறைவடையும். ஆனால் இன்று நடந்த பேச்சு அனைத்தும் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றித்தான். முன்பெல்லாம் அம்மா, அப்பாவை வைத்து பிள்ளைக்ளை மதிக்கப்படுவார்கள். ஆனால் இன்றோ பிள்ளைகளின் மதிப்பெண்களை வைத்து பெற்றோர்களை மதிக்கிறார்கள் என்று இவர்களின் பேச்சின் மூலமாகத் தான் அறிய முடிந்தது.

 

ஒருவரின் மகள் 493ம், மற்றவரின் மகள் 486ம் மற்றவரின் மகன் 477ம் பெற்றிருந்தனர். வந்திருந்தவர்களின் பிள்ளைகளில் பெரும்பான்மையானவர்கள் 450 க்கு மேல் தான் எடுத்திருந்தனர் என்று அவர்களின் பேச்சு வாயிலாக அறிய முடிந்தது. இதில் சென்ற வருத்திற்கு முந்தைய வரும் ஒருவரின் மகள் 470 எடுத்திருக்கிறாள். அதை அவர் இவரிடம் பெருமையாக பேசியிருப்பார் போல. 470 எடுத்தவரின் தந்தையை 486 எடுத்தவரின் தந்தை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். அவர் மகள் 400 எடுத்திருந்தாலும் அவர் கொண்டாடுவார். ஏனென்றால் அந்தக் குழந்தையின் தகுதி அவ்வளவு தான் என்றார். 465 எடுத்த மற்றவரைப் பார்த்து இவருக்கு குழந்தைகள் என்றால் உயிர். மார்க்கே எடுக்கவில்லை என்றாலும் கோவிக்கவே மாட்டார் என்றும் பலரின் குணநலன்களையும் குறைநலன்களாகக் கருதி சப்தமாக சிரித்து வம்பு செய்து கொண்டிருந்தார்.

   ஒரு குழந்தை அவரவர் மனநிலைக்கு ஏற்ப , சூழக்கு ஏற்ப மதிப்பெண்கள் எடுத்திருப்பார்கள். அதனை பெரும் கர்வமாகக் கொண்டு மற்றவரைத் தாழ்த்துவது எந்த விதத்தில் நியாயம்?  மதிப்பெண்கள் எடுத்தால் போதுமா? வேறு பல திறன்கள், ஆற்றல்கள், இருந்தால் தானே வாழ்வை வெற்றி கொள்ள முடியும்? இதெல்லாம் விளங்காமல் இவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பிள்ளைகளின் மதிப்பெண்களை உயரமாக வைத்துப் பேசியதும் இகழ்ந்ததும் நல்ல நிகழ்வாகத் தெரியவில்லை .

   இவர்களே இப்படி என்றால் இவர்களிடம் படிக்கும் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள்? இந்தப் போக்கு நியாயம் தானா? இது போன்ற அவலங்களை நாம் எப்போது குறைப்போம்? மேலும் ஒரு சர்ச்சையும் அங்கு நடந்தது.நான் அந்த மதிப்புமிகு பள்ளியில் சேர்த்தேன். இவ்வளவு கட்டணம் கட்டினேன். ஆனால் அவரோஇதே ஊரில் குறைவான கட்டணம் உள்ள பள்ளியில் சேர்த்தார். என்றெல்லாம் கூட கிண்டல்கள் தொடந்தது. பிள்ளைகளை தனக்க்குப் பிடித்த துறையில், தன் குழந்தைக்குப் பிடித்த துறையில் சேர்த்து விடாமல் மதிப்புக்காக இஞ்ஜினியரிங் (தமிழ்நாட்டில் மட்டும் 535 கல்லூரிகள் இருக்கிறதாம்)  போன்ற காசுப் படிப்புகளில் சேர்த்து விடுவதும் இதனால் தானோ என்று திகைக்கும் வகையில் இருந்தது அந்த கிண்டல்கள். ஒருவர் கலைக் கல்லூரியில் தன் பிள்ளையைப் படிக்க வைக்கிறாராம் அவரை நோக்கித் தான் இந்தக் கிண்டல்..

   அங்கிருந்த சிலர் அவர் நகைச்சுவையாக பேசுவது போல் இருக்கிறதே என்று ரசித்துச் சிரித்தாலும் பலரின் முகம் அவமானத்தாலும் வேதனையாலும் சுருங்கியது. மனசு அருவருத்தது. நாம் எங்கே வசிக்கிறோமோ அங்கேதானே பள்ளியில் சேர்க்க வேண்டும்? வேன் வருகிறதே எனபதற்காக தொலை தூரங்களில் கொண்டுபோய் சேர்த்து என்ன பயன்? என்று கிண்டலடிக்கப்பட்ட ஆசிரியர் புலம்புக் கொண்டுந்தார்.

   நமக்குப் பிள்ளைகளின் பாதுகாப்பும் மனநலனும், தானே முக்கியம். அதைவிடுத்து அதிக காசு கேட்கும் இடம் தான் கெளரவமான இடம் என்றும் அதில் சேர்ப்பதில் தான் தனக்குப் பெருமை என்றும் மருத்துவமும் பொறியியலும் தான் உயர்ந்த படிப்பு என்றே பேசிய அவரைப் போன்றவர்களை என்ன செய்வது? ஒரு நடுத்தரமான பள்ளியில் தன் பிள்ளைகளை சேர்த்திருந்த ஒருவரும் அரசுப் பள்ளியில் சேர்த்திருந்த ஒருவரும் தலை தொங்கி அவமானமாக உணரும் அளவுக்கு இருந்த்தது. அவரது கிண்டல். இதையும் என்ன செய்வதென்று தெரியவில்லை. 

3 comments:

  1. ஆசிரியர்களே இப்படி மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வேதனைதான்! மார்க்கு ஒன்று மட்டுமே பெரிதல்ல!

    ReplyDelete
  2. தவறு எங்கே ஆரம்பிக்கிறது என்று புரிகிறது...

    வருத்தப்பட வேண்டிய கிண்டல்...

    ReplyDelete
  3. பிள்ளைகளின் மதிப்பெண்களை வைத்து பெற்றோர்களும் மதிப்பிடப் படுகிறார்கள் என்பது உண்மை. சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete