Friday, May 30, 2014

தோழிகள்

   நாகலெட்சுமி என்று எனக்கொரு தோழி. நல்ல கருப்பு நிறம்.மிக மிக கவர்ச்சியான உருவமும், முகமும், தோற்றமும் கொண்டவள். பார்த்ததும் மீண்டும் பார்க்கத்தூண்டும் முகமும் புன்னகை தவழும் சிரிப்பும் அவளிடம் எப்போதும் இருக்கும்.

    கல்லூரி காலங்களில் மிக நன்றாகப் பழகுவாள் , அதைவிட நன்றாகப் படிக்கக்கூடியவள்.எல்லாப் போட்டிகளிலும் அவள் பெயர் இருக்கும். சிலவற்றில் தான் பரிசுகள் பெறுவாள். ஆனால் போட்டிகளில் கலந்து கொள்வதை நிறுத்த மாட்டாள். சலிக்க மாட்டாள். அப்படி ஒரு விடா முயற்சிக்காரி.

   நாங்கள் பி.காம் முடித்ததும் எங்கள் வகுப்பில் இருந்த எல்லோரும் எம்.காம். சேர்ந்து விட்டனர். என்னைப் போன்றவர்கள் தொலைதூரக்கல்வி வழியாகவும் மற்றவர்கள் அதே கல்லூரியிலும் படித்தார்கள்.அவளும் கல்லூரியிலேயே படித்துப் பட்டம் பெற்று போட்டித் தேர்வுகள் அனைத்தும் எழுதியதில் வங்கித்தேர்வில் தேர்ச்சி பெற்று வங்கியில் பணிபுரிகிறாள்.


   பிறந்ததும், வளர்ந்ததும், திருமணம் ஆனதும் ஒரே ஊர் என்பதால்  எனக்கு என் பழைய நட்புகளைப் பார்க்கும் வாய்ப்பும் கொடுப்பினையும் இருக்கிறது. (பெண்கள் மட்டும் தானெ திருமணம் ஆனதும் பிறந்த ஊர் துறப்பவர்கள்..என்வே அவர்களைத் துறவி என்று அழைக்கலாமோ....?)

   வங்கியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவளை நினைத்து எப்போதும் பெருமையும் மகிழ்ச்சியும் எப்போதும்எனக்கு  உண்டு. ( எளிதாக லோன் வாங்கிவிடுவேனோ என்றெல்லாம் சந்தேகப்படக்கூடாது) அவளுக்கும் நான் தலைமைஆசிரியராக இருப்பதில் பெரிய மகிழ்வாம்..( நாங்கள் எப்போது சந்தித்துக் கொண்டாலும் எங்கள் தலைமை ஆசிரியர்களை நினைவு கூர்ந்து மகிழ்வோம்.மாடர்ன் வார்த்தையில் சொல்லப் போனால் கலாய்ப்போம்)

   பார்த்தே நீண்ட நாட்கள் ஆனதாலும் இப்போது எனக்கு விடுமுறை என்பதாலும் வற்புறுத்தி என்னை அவள் இல்லத்திற்கு அழைத்தாள். ( நான் மறந்தும் கூட யார் வீட்டுக்கும் போகவேமாட்டேன். அதென்னவோ அது எனக்குப் பிடிப்பதில்லை)

   பங்களா என்று சொல்லக்கூடிய வீடு அது. அவளுக்கு இரண்டு பெண்கள். ( அவளுக்குமா?) பள்ளியில் படிக்கிறார்கள். அவள் கணவனும் அரசுப்பணியில் இருக்கிறார்.

   எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும், வயித்தெறிச்சலாகவும் இருந்தது. அவள் பேசி வாங்கிய நினைவுப்பரிசுகள் (ஷீல்டு) எல்லாம் ஒரு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு  வைப்பு அறை (ஸ்டோர் ரூமில்) கிடந்தது அந்த வீட்டின் முகப்பில் அவள் பெயர்ப் ப்லகை இல்லை. இவள் எம்.காம்.,எம்.பில்.,பி.ஹெச்.டி., படித்தவள். அவள் கணவர் பெயரோடு பி.ஏ. என்று எழுதிய பெயர்ப்பலகை இருந்தது. சம்பளமும் கூட கண்டிப்பாக இவளை விடக் குறைவாகத்தான் இருக்கும்.

   அந்த வீட்டில் அந்தக் கணவருக்கு தனிஅறை, அந்தக்குழந்தைகளுக்குத் தனிஅறை , கணவரின் அம்மாவிற்குத் தனி அறை இருந்தது. இவளுக்கென்று தனிஅறை இல்லை. ஏன்? (எல்லா அறைகளிலும் குழியலறை,கழிப்பறை இணைக்கப்பட்டிருந்தது. இது போக ஒரு படுக்கையறையில் உறவினர் வந்தால் தங்குவார்களாம். இவள் சில நாள் கணவர் அறையில் தூங்குவாளாம். சிலநாட்கள் தன் மகள்களுடன், சில நாட்கள் மாமியாருடன். )

   அந்தக் கணவர் ஏதோ ஒரு விழாவிற்குப் போய் நினைவுப் பரிசு வாங்கியிருக்கிறார். அது கூடத்தின் ஷோ கேஸை அலங்கரித்திருந்தது. ( அந்த ஷீல்டு அந்தக் கூட்டத்திற்கு வந்த எல்லோருக்கும் வழங்கப்பட்டது. (அநேகமாக அன்று மேஜை துடைத்தவருக்குக் கூட அது வழங்கப்பட்டிருக்கலாம். 150 ரூபாய் கொடுத்தால் நமக்கும் கிடைக்கும்)
 
   ஆனால் இவள் பேசி வென்று வாங்கிய ஷீல்டுகள் சாக்குகளுக்குள் அடைபட்டிருக்க வேண்டுமா என்ன? ஏன்??

அவர்கள் வீட்டில் துவைக்க , பாத்திரம் கழுவ, வீடு துடைக்க, என்று பணியாளர்கள் வருகிறார்கள். ஆனால் சமையலை இவள் தான் செய்யவேண்டுமாம். செய்கிறாள். காலையில் வேலைக்குப் போகும் அவசரம். இரு பெண் குழந்தைகளுக்கும் தலை சீவி, கிளப்பி, மாமியாருக்கு காபி, டிபன், கொடுத்து, கணவருக்கு குழந்தைகளுக்குக் கொடுத்து மதிய சமையலும் செய்து வைக்கிறாள்

    அந்த மாமியாரோ, கணவனோ அவரவர் அறைகளை விட்டு வெளியே வரவில்லை. 8 மணிக்கு எழுந்து குளித்து, காபி டிபன் சாப்பிட்டு உடன் சென்று விடுகிறார். வணிகவியல் படித்த என் தோழிக்கு தமிழின் மீது தீராத பற்றும் காதலும் உண்டு. கம்பராமாயணம், சிலப்பதிகாரம், போன்ற நூல்களோடு யாப்பெருங்கலக்காரிகை தண்டியலங்காரம், போன்றவற்றை எல்லாம் ஆர்வத்துடன் படிப்பாள். பேசுவாள். விவாதிப்பாள்.

   ஆனால் இன்று அது பற்றி கேட்டவுடன் தன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டு வேறு பேச்சுக்கு நம்மை மாற்றுகிறாள். துடிப்பான அந்தப் பெண் எங்கே? வெறும் சமையலுக்கும் , உழைத்து, பணம் தரும் ஏ.டி.எம். மிஷினாகவும் இருக்கும் அவளின் நிலை பரிதாபத்துக்குறியதாக இருந்தது.

    வெளியில் இருந்து பார்த்தால், நிறைய நகைகள், வங்கியில் பணம், அழகிய குழந்தைகள், நல்ல கணவன், சொந்த வீடு, கார், என்று எல்லாம் நிறைந்த வாழ்க்கையாகத்தான் தெரிகிறது,

   ஆனால் இதில் என்தோழி எங்கே? எங்கே ஒடுங்கிக் கொண்டாள்???? எங்கே ஒதுங்கிக் கொண்டாள்??? ஏன்???? அவள் ஏன் தன் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளவில்லை??? ஒரு வங்கியைக் கட்டிக் காக்கும் நிர்வாகத்திறன் கொண்ட அவளால் தன் திறனைக் கட்டிக்காக்கும் திறன் அற்றுப் போனது ஏன்???? அவளீன் பேச்சாளர் கனவை சிதைத்தது யார்? அவளின் குரல்வளையை நெரித்தது யார்??//

   அவள் சம்பாதிப்பதற்காகவாவது அவளுக்கென்று ஒரு தனியறை இருக்கக்கூடாதா? நான் வசதியே இல்லாத வீடுகளைப் பார்த்துக் கேட்கவில்லை. ஆனால் இருக்கும் வீடுகளிலும் பெண்களுக்கென மறுக்கப்படுவது ஏன்??? அவள் புத்தகமே படிப்பதில்லை என்று சொன்னது தான் மற்றொரு அதிர்ச்சி . அவள் கணவனுக்கு பெண்கள் புத்தகங்கள் படிப்பது பிடிப்பதில்லையாம். (இவள் விடாப் பிடியான இந்தியாடுடே வாசகி)

    அப்படியானால் அவருக்குப் பிடித்தது தான் இவளுக்குப் பிடிக்க வேண்டுமா? இவளுக்குப் பிடித்தது அவருக்குப் பிடிக்கக்கூடாதா?இது ஏதோ வேண்டாத வீணான ஆசை யில்லையே. படிப்பது தானே? இந்தக் கேள்விகள் என்க்குள் தான் இருந்தன். எந்தவித வார்த்தைகளையும் சொல்லி அவளின் அழகான குடும்பத்தைப் குலைக்கவிருப்ப வில்லை.

   அவளுக்குச் சிவப்பு நிறம் எப்போதும் பிடிக்கும். இப்போது அந்த நிறத்தில் அவளிடம் ஒரு புடவை கூட இல்லை. ஏன் என்றால் அவள் கணவருக்குப் பிடிக்காதாம். அவளுக்கும் இரண்டு பெண் குழந்தைகள். எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி. வாழ்க்கையில் தோற்றுப் போன பெண் எப்படி வெற்றியான பெண்களை உருவாக்க முடியும்???. அந்தப் பெண்களைக் கராத்தேக்கும் நீச்சல் பயிற்சிக்கும் அனுப்பும் அவள் கணவர் அந்தக் குழந்தை
களின் கணவர்கள் அதை மறுதலித்தால் ஏற்றுக்கொள்வாரா? அதிலும் அவளின் சிறிய மகள் மேன்மைமிகு பாடகி பி.சுசீலா போலவே பாடுகிறாள். அவளீன் தனித்திறன் வருங்காலத்தில் மதிக்கப்படுமா? மிதிக்கப்படுமா? பெண்கள் எங்கே மாறிப்போகிறார்கள்??? ஏன் மாறி ப் போகிறார்கள்?????

8 comments:

 1. ///பெண்கள் எங்கே மாறிப்போகிறார்கள்??? ஏன் மாறி ப் போகிறார்கள்?????///
  விவாதத்திற்கு உரிய கேள்விதான் சகோதரியாரே

  ReplyDelete
 2. வருத்தமான ஒன்று! குடும்பத்தளைகள் வரும்போது பெண்கள் தன் விருப்பங்களை விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள்!

  ReplyDelete
 3. விரைவில் புதுமலர்ச்சி உருவாகட்டும்... உருவாகும்...

  ReplyDelete
 4. ''நான் மறந்தும் கூட யார் வீட்டுக்கும் போகவேமாட்டேன். அதென்னவோ அது எனக்குப் பிடிப்பதில்லை'' - இப்படி இருப்பதே தவறு. இதைப் பெருமையாக வேறு சொல்லிக்கொள்வது நல்லதா கவிஞரே? அன்பு கூர்ந்து யோசியுங்கள். இதைவிட நீங்கள் உங்கள் தோழியைப் போல ஒரு கூட்டுக்குள் ஒடுங்கிவிடலாமே? நான் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் நண்பர்கள் வீடுகளுக்குப் போவேன். இன்னும் சொன்னால், என்னை நண்பர்களாகக் கொண்டிருப்பவர் எல்லாருக்கும் என் மனைவி குழந்தைகளைத் தெரிந்திருக்க வேண்டும் அதுபோலவே, என் நண்பர்களின் வீட்டுப் பிள்ளைகள் எல்லாருக்கும் என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதை உண்மையான நட்பின் அடையாளம் என்று நினைப்பேன். உதாரணமாக, உங்கள் வீட்டுக்கு நான் வந்து வாசலில் நின்று அழைத்தாலோ, வீட்டுத் தொலைபேசியில் உங்களை அழைத்தாலோ உஙக்ள் மகள் “யாரோ முத்துநிலவனாம்.. அம்மா உனக்குத் தெரிந்தவராம்..” என்றால் அதைவிட எனக்கு வேறு அவமானம் வேறுண்டா? தனக்குத்தானே கட்டுவது வீடல்ல கூடு!

  ReplyDelete
 5. மாறும் என நம்புவோம்

  ReplyDelete
 6. ஆணின் ஜீனில் இருக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளான ஆணாதிக்க ஆணவத்தை எந்த சோப்பு போட்டு கழுவினால் தீர்ந்துபோய் விடும் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 7. மனைவிக்காக செய்யாததை மகளுக்காக நிச்சயம் செய்வார் என்றே நம்புகிறேன். சிறந்த கணவனாக இருப்பதில் தவர் விடுபவர்கள் சிறந்த தந்தை என்ற நிலையில் மாறுபட்டவர்களாக காட்சி அளிப்பதை பார்த்திருக்கிறேன். அடுத்த தலிமுரையை இப்படிக் கட்டிப் போட முடியாது.

  ReplyDelete
 8. நாகப்பன்June 5, 2014 at 4:15 AM

  உங்கள் தமிழ் நடை நன்று... எத்தனை புத்தகங்கள் வெளியிட்டு உள்ளீர்கள். இந்த உரை நடைக்கு எள்ளல் என்று பேர். உங்களுக்கு திரு முத்துசீனிவாசன் அவர்களைத் தெரியுமா?

  ReplyDelete