Monday, January 6, 2014

தமிழ் வாழ்த்து (எண்சீர் விருத்தம்) மரபுக் கவிதை

கன்னலிடை சாறெடுத்து குவித்து வைத்து
  கருத்தெல்லாம் கொண்டாங்கே வந்த பூவே
அன்னமென மென்மையென என்னில் பூக்க
 அருந்தமிழாய் வந்தவளே இனிய ராகம்
தென்றெலெனப் பேரெடுத்து வந்த கோதை
  தெள்ளமுதாம் தீந்தமிழே இனிக்கும் தேனே
உன்னையுமே உள்மனமும் விரும்பி ஏற்க
  ஊற்றாக பிறந்து வரும் கவிதை தானும்


உவகையிலே செல்லுகின்ற மனமும் கூட
  உன்வரவை நினைத்துநிதம் மகிழ்வு பூக்க
நவமணிகள்போல நிதம் மிளிரும் பெண்ணே
  நலமுறுவேன் உன்னாலே ஏற்றுக்கொள்வாய்
தவமதுவும் செய்தே நான் வேண்டி நின்றேன்
  தமிழமுதே தவறாமல் வருவாய் அம்மா
குவலயமே மகிழ்வடையக் கவிதை செய்வேன்
  குற்றமிலாக் குளிர்தென்றல் நீயிருந்தால்

வெற்றியதன் மகுடத்தை எனக்கு ஈந்து
  வினையெல்லாம் தீர்த்து வைப்பாய் தமிழே! தாயே!
பற்றிவிட்டேன் உன்னையுமே! பாதம் தொட்ட
  பாவையெனை நீபார்க்கப் பொலியுன் வெற்றி
கற்றவர்முன் களங்கமிலாக் கவிதை செய்து
  கருத்தினிலே பேச்சினிலே இனிமை பெய்து
முற்றில்லா மேன்மையோடு வாழ்வும் கண்டு
  மோகனமாய் மலர்ந்திடநீ பார்கண் கொண்டு

பண்ணெடுத்துப் பாட்டாகப் பாடி வைத்தேன்
  பைந்தமிழே உன்னைநான் போற்றி வைத்தேன்
தண்ணெனவே வந்தவளே! என்னை ஏற்று
  தரணிக்குக் காட்டிவிடு கவிஞர் என்று
விண்ணெட்டும் எட்டட்டும் எனது பாக்கள்
  வீடெல்லாம் மலரட்டும் எனது பூக்கள்
மண்டலமே எழுந்து வந்து நடனம் ஆட
  மாத்தமிழே மனதில்நீ ஆணை செய்க!
*****************************************


2 comments:

  1. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சேதுராமன்June 13, 2014 at 4:43 PM

    ஏங்க இதுக்கெல்லாம் இரண்டாம் பாகம் இல்லையா? அடி பின்றீங்க

    ReplyDelete