Wednesday, November 6, 2013

என் தோழிக்கு

எப்படி சொல்வதென்றே
தெரியவில்லையடி!
உன்
தோள் சாய்ந்து கொண்டே
என் சோகம் சொல்லவேண்டும்
!
உன்
கவலைகளின் போது
என் மடியிலிருத்தி
உன் தலை கோத வேண்டும்!

சின்னச்சின்னதாய்
நீ
மகிழும் தருணங்களில்
உன்
நெற்றி முத்தமிட வேண்டும்!

யாருமற்ற சாலையில்
கைகோர்த்துக்கொண்டே
காலாற நடக்க வேண்டும்!

எங்கேயேனும்
திடீரென்று பார்க்க நேர்ந்தால்
ஆர்பரித்து ஓடிவந்து
கட்டிக்கொள்ள வேண்டும்!

இப்படியாக
பயணிக்கிறது என் ஆசைகள்
ஆனால்.....ஆனால்.....
தோழி
எதுவும் இயலா பொம்மைகளாய்......
எனது
கைகளும் இதயமும்!

நேரம் காலம் தெரியாது
இரவிலோ அதி அதிகாலையோ
உன்னோடு
பேசும் தருணங்களில்
எனக்குத்தெரியாமலேயே
எனது தொலைபேசியை
சந்தேகித்துப் பார்க்கிறார்கள்
என் வீட்டில்!

இப்படியெல்லாமா தோன்றும்
என்று கேட்கிறாள்....
எனக்குப் பழக்கப்பட்டவள்
சற்று அருவருப்போடு!

இப்படி யெல்லாம்
இருக்கவே இயலாதென்ற கூற்றில்
இருக்க கூடாதென்ற
எச்சரிக்கை இருப்பதாகவே உணர்கிறேன்!

இவர்களின் வாதங்களில்
இடிந்து போகிறதென் மென் இதயம்!

எல்லோருடனும் பேசுவது போலவும்
எல்லோரையும் பார்ப்பது போலவும்
எதற்குத்தான் உன்னையும் என்றுதான்
நீ
தொடர்ந்து தொடர்பு கொண்ட அந்நாளில்
எந்த அழைப்பையும்
ஏற்காமல் இருந்தேன்!

உன்
தொடர்பெல்லைக்கப்பால்
தொலைந்து போகத்திட்டமிட்டு
எங்கெங்கோ சென்றாலும்
என் இதயம் மட்டும்
உன்
எல்லைக்குள்ளேயே இருந்து விடுகிறது!

எனது பேசியில் உனது
குறுஞ்செய்திகள்
குவிந்துபோய்கிடக்கிறது
அழிக்க மனமில்லாமல்
!
அதன் நினைவு தீர்ந்து போனதாய்
எச்சரித்துவிட்டது பலமுறை
ஆனாலும் இருக்கிறது
உனது
“ம்” என்ற செய்தியும்!

இந்த சமுதாயத்தில்
ஆண் பெண் நட்புக்கும் சாத்தியமில்லை
பெண்பெண் நட்புக்கும் சாத்தியமில்லை!

ஒரே துறை
பொறாமை வராதா என்றோ
வேறு தொடர்பும் இருக்குமோ
எனும் சந்தேகக்கணைகள்
இம்சிக்கிறது என்னை!

உன் இதயத்தில்
நான் இருக்கும் இடத்தை
சிம்மாசனமாகவே நினைத்துக்
கொண்டாடுகிறேன்!

சாலைகளில்
உனது சாயல்களில்
இரண்டொருவர்
என்னைக் கடக்கையில்
என்னில் இருக்கும்
உனக்கான பிரியத்தையும்
கடத்திச் செல்கின்றனர்!

நீ
அருகில் இருந்தால்
ஏதோ பூஞ்சோலைக்குள்
இருக்கிற சுகம் எனக்கு!

உன் பேச்செல்லாமே
என்
காயம் ஆற்றும் மருந்து தான்!

நீயும் தான்
சிலபொழுதுகளில்
மாமியாரகவும்.மகளாகவும்
மாறி மாறி பொழிகிறாய்!

உன்னைப் பார்த்ததும்
இயந்திரமாய் புன்னகைக்கவும்
எட்டி நின்று பேசவும்
கற்றுக்கொண்டேன் தான்!

அடி போடி!
இயல்பாய் என் பாசம் காட்ட இயலாத
இதுவும் போலிதானே
நீயும் உன் சமுதாயமும்
கிழித்துப்போடு
எல்லாவற்றையும்!
**********************************************************************

4 comments:

  1. வணக்கம்
    அருமையாக சொன்னிர்கள் கவிதையின் வடிவில் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சுவாதி சொல்ல வார்த்தையில்லை...”ம்” நெகிழ்வாய் உணர்கிறேன்.உன் கைகோர்க்க ஆசை வருகிறது இப்போது முடியாமல் நானும்...!

    ReplyDelete
  3. எழுதியவை கிழித்தால் அழியும்
    எண்ணங்கள் அழியாது கிழிக்கும் .

    ReplyDelete
  4. மலர்மகன்June 17, 2014 at 9:22 PM

    அடடா... நா பொண்ணாப் பொறக்கலையே....இல்லாட்டி கீதாவை தள்ளிவிட்டுட்டு நான் நிப்பேன்

    ReplyDelete