Sunday, November 17, 2013

அப்பா........ (17.11.2013 அன்று த.மு.எ.க.ச..திருக்கோகர்ணம் கிளைக் கூட்டத்தில் வாசித்த கவிதை

அப்பா
*********

எப்போதும்
 கோபப்படும் அப்பாவை
பிடிப்பதில்லை எனக்கு!

நாங்கள்
தண்டனைக்குரியவர்களாகவே
நடத்தப்பட்டோம் எப்போதும்

எங்களுக்கென உழைத்து
தான் உருக்குலைந்து போனதாய்
நம்பிக்கொள்வார்...
நடந்து கொள்வார்...
குளீருட்டப்பட்ட அறையில்
அமர்ந்து கொண்டு

யாரிடமாவது எங்களைப்பற்றி
சொல்ல நேரிடும் போது மட்டும்
எங்களுக்கான
பெருமைகளைச் சொல்வார்

அப்பாவிற்கு
நாங்கள் இருப்பதே
ஒரு
பெருமைக்குரிய பொருளாகவே
பரிமாறப்பட்டோம்
பழகப்பட்டோம்

எங்களிம் மூளைக்குள்
அப்பாவின் கொள்கைகள்
எப்போதும் திணிக்கப்பட்டிருக்கும்

எல்லாப் பிரச்சனகளுக்கும்
அப்பாவின் கோணத்தில் மட்டுமே
தீர்ப்பு வழங்கப்படும்

எங்கும் எதிலும் எப்போதும்
அப்பாவின் சர்வாதிகாரத்தில்
இயங்குவதாகவோ
அப்பாவே அனைத்தையும்
இயக்குவது மாதிரியாகவோதான் இருக்கும்
எங்கள் வீட்டின் போக்கும் வீச்சும்

ஒவ்வொரு பண்டிகையின் போதும்
அப்பாவின் காலில்
விழுந்து வணங்குவதை
வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள்
அக்காவும், அம்மாவும்

காலில் விழாத நான் கொஞ்சம்
கூடுதலாகக் கொடுமைப்படுத்தப்படுவேன்

கல்லூரி நாட்களில்
ஒரே ஒரு நாள்
கண்ணாடி வளையல்கள்
அணிந்ததன் பொருட்டு என்னால்
தன்
கெளரவம் கலைந்து போனதான
கட்டப்பஞ்சாயத்தே நடந்தது வீட்டில்
சித்தப்பாவுடனும், மாமாவுடனும்!

”அப்பாட்ட சொல்லவா”
என்ற அம்மாவின் ஒற்றை வார்த்தையில்
எங்களீன்
எல்லா செயல்களும்
துரிதப்படுத்தப்படும் அல்லது
செயலாக்கப்படும்

அப்பா
எங்களுக்கு
ஒரு
பூச்சாண்டியாகவும்,
ராணுவத்தலைமையாகவும்,
பயங்கரவாதியாகவும் மட்டுமே
அறிமுகப்படுத்தப் பட்டிருந்தார்

எப்போதும் அந்த
அந்நியத்துடனேயே தான் அணுகி வந்தேன்
அப்பாவை!

நான்
சம்பாதிக்கத்தொடங்கிய போதும் அந்த
சங்கடங்கள் அழியவில்லை

இப்போதும் கூட
எட்டி நின்று, தலைகுனிந்துகொண்டு
வார்த்தைகள் வாய்க்குள்ளேயே
முடங்கிக்கொள்கின்றன
அப்பாவைப் பார்த்த மாத்திரத்தில்!

அப்பாவின் தோள்மீதேறி
அப்பாவைக் கொஞ்சி
அப்பாவை அதட்டி
அப்பாவைத் தன்  தோழனாய் பாவித்து
அப்பாவிடமே வேலை வாங்கும்
என் மகளைப் பார்க்கும் போதெல்லாம்
பொறாமை பூக்கிறது!
எனக்கான அப்பாவையும்
அவளுக்கான
அப்பாவையும் நினைத்து!
******************************

2 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/11/Rupan-Diwali-Special-Poetry-Results.html

    ReplyDelete