Monday, January 27, 2014

ஏமாந்த கதை{ அடக் கொடுமையே}

மழை காலமில்லை அது அல்லது மழை தொடங்கிய காலம் என்று கூறலாம். கடைவீதிக்கு நானும் என் தோழியும் சென்ற பிறகு திடீரென்று மழை பிடித்துக் கொண்டது,. எனவே நானும் என் தோழியும் ஒரு வீட்டில் ஒதுங்கினோம். அந்த வீட்டில் போர்டிகோ கொஞ்சம் பெரியதாக இருந்தது

. கதவின் முன் நின்ற பெண்மணி எங்களைப் பார்த்ததும் காம்பவுண்ட் கேட்டைத்தறந்து போர்டிகோவுக்குள் வந்து நிற்குமாறு கூறினாள். நாங்களூம் நன்றி தெரிவித்து விட்டு நின்றோம்

உள்ளே போன அந்த பெண்மணி இரண்டு நாற்காலிகளை கையில் எடுத்து வந்தாள்.பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தாள். ஐம்பது வயதிருக்கலாம். கழுத்தில் தடிமனாக ஒரு செயினும் மெல்லியதாக ஒரு செயினும் அணிந்திருந்தாள். ஒரு கையில் மட்டும் வளையல் அணிந்திருந்தாள். காட்டன் புடவை கட்டியிருந்தள். அதுவும் அவளுக்கு கச்சிதமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது.

 நாங்கள் முடிக்க வேண்டிய வேலைகள் பற்றி பேசினோம். என்னை குறுகுறுவென்று பார்த்த பெண்மணி என்னை எங்கேயோ பார்த்த நினைவென்றாள். சும்மாயிராத என் தோழி இவளைத் தெரியாமலா இருப்பீர்கள். இவள் பெரிய கவிஞர். மேடைபேச்சாளர்.. தொலைக்காட்சியில் பேசியிருக்கிறாள். எனவே பார்த்திருப்பீர்கள் என்றாள்.அவள் உடனே பலமாக இடது புறமும் வது புறமும் தலையைத் தலையை ஆட்டி இல்லை இல்லை என்று யோசிப்பதான பாவனையில் ஆட்காட்டிவிரலை நாடியில் வைத்துக் கொண்டாள்.(ஏன் இல்லை என்றாள்? ஒருவேளை நான் மேடையில் பேசமாட்டேன் என்று நினைத்தாளா? அல்லது இனி பேசக்கூடாது என்றாளா என்னும் தோரணையில் நான் அவளையே பார்க்க நீயார்...உன் அப்பா யார்? என்றெல்லாம் கேட்டாள். என்னை பதிலே பேச விடாமல் என் தோழி எல்லாவற்றையும் விலாவாரியாக எடுத்துரைத்தாள்...( யாரேனும் அவளுக்கு தொலைக்காட்சியிலோ ரேர்டியோவிலோ தொகுப்பாளினி போஸ்ட் வாங்கிக்குடுங்கப்பா....)

 பிறகு என்ன இனம்என்று கேட்டாள்...  என் இனம் ப ற்றித் தெரிந்ததும் குதூகலித்தது போல் துள்ளு துள்ளென்று துள்ளினாள் அந்தப் பெண்மணி... இதோ இரண்டே நிமிடம் என்று உள்ளே போனாள். (மனசுக்குள் இரண்டு நிமிடத்தில் நூடுல்ஸ் தானே தயாராகும்?... தருவாளோ? மறுத்து விடலாமா? என்று யோசித்த நேரத்தில் இரண்டு சிறிய டம்ளர்களில் டீ போட்டு எடுத்து வந்தாள்.

 என் தோழியைப் பற்றியும் விசாரித்தாள்.எனக்கே தெரியாது இவ்வளவு நாளும்  என் தோழியும் என் இனம் தான் என்று. அவளுக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி போல க் காட்டிக்கொண்டாள். 15 நிமிடங்கள் கரைந்து போயிருந்தது.

 ஆனால் மழை விட்ட பாடில்லை.. வீட்டின் உள்ளே அழைத்தாள். யார் வீட்டுக்குள்ளும் போய் அறியாத நாங்கள் சற்று தயங்கவே என்னை மகள் என்றாள்.. என் தோழியை மருமகள் என்று முறை வைத்தாள். நான் சிறிய வியாபாரம் செய்கிறேன். நீங்கள் ஒன்றும் எடுக்க வேண்டாம் என் உறவினர் நீங்கள் இருவரும் என் வியாபாரத்தைப் பார்த்து விட்டு நன்றாய் இருந்தால் உங்கள் தோழிகளுக்குச் சொல்லுங்கள் அப்புறம், என்னை வாழ்த்துங்கள். சிறியவர்களின் வாழ்த்தாயினும் அன்போடு வந்தால் அது தான் வாழ்வை உயரச் செய்யும் என்றும் கூறினாள்.

ஏற்கனவே அவள் பேச்சில் மெழுகாய் உரிகியிருந்தாள் என் தோழி...( நானும் கூட) மேலும் நானும் அவளும் ஒரே இனம் என்று இந்த 13 வருடப் பழக்கத்தில் தெரியாததைக் கண்டுபிடித்து விட்ட இரட்டிப்பு மகிழ்ச்சி வேறு என் தோழியின் முகத்தில் உடனே அவள் அழைப்புக்கு மறுப்புக் கூறாமல் என் கையையும் சேர்த்து ( இழுத்துக்கொண்டு ) அழைத்துச் சென்றாள் . அங்கு விதவிதமாகப் புடவைகள். சும்மா சொல்லக்கூடாது அனைத்தும் மிக அழகாக இருந்தன.

 என் தோழி ஒரு புடவை பைத்தியம் வேறு .ரூபாய் 400 வீதம் 5 புடவை எடுத்தாள். எனக்குத்தேவையே இல்லை என்று கூறியும் கேட்காமல், “நான் மட்டும் என்ன புடவையே இல்லாமலா இருக்கிறேன். இரண்டாவது எடு என்று என் கைப்பை திறந்து அதிலிருந்து எனது பர்ஸ் எடுத்து  800 ரூபாய் எடுத்து அவ்ளிடம் கொடுத்து அவளுக்குப் பிடித்த கலர், டிசைன், இரண்டு எடுத்து விட்டாள்.

 அந்தப் பெண்மணி விட்டபாடில்லை. இதற்குள் நான் ஆட்டோகார அண்ணனை போன் செய்து வரச் சொல்லியிருந்தேன். வளையல் , தோடு, மற்றும் கவரிங் நகைகள், உள்ளாடைகள் என்று அனைத்தையும் காண்பித்தாள்.இன்னொரு  முறை வாங்குகிறோம் என்று அழகாய் மறுதலித்தோம்...
மீண்டும் மீண்டும் அதுதானே எங்கேயோ பார்த்த ஞாபகம் பாத்து பழகுன புள்ளகளா இருக்குனு நினைச்சேன்...\


இன்னைக்கு நல்ல நாள்... என் சொந்த்க் கார புள்ளைகள பாத்துட்டேன் என் மகன் வந்ததும் சொல்லணும். என் கணவர் வந்ததும் சொல்லணும்.. டைரில எழுதணும் என்று புலம்பிய வாறே இருந்தார். எங்கள் முகவரி தொலைபேசி எண் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டாள்...

இதற்குள் ஆட்டோ வந்து விடவே நான் ஆட்டோவிலும் என் தோழி அவள் வண்டியிலும் ஏறி விடைபெற்றோம்.. அடுத்த தெரு வந்ததும் தான் ஞாபகம் வந்தது நான் வாங்கியிருந்த மளிகை சாமான்கள் பையை அங்கேயே வைத்து விட்டு வந்திருந்தேன். மீண்டும் அவர்கள் வீடு போய் பையை எடுத்து வர நினைத்தேன், ( இல்லாவிட்டால் வீட்டில் யார் திட்டு வாங்குவது (மாமியார்))ஆட்டோ அண்ணனிடம் சொல்ல ஆட்டோவைதிருப்பி அங்கே சென்றோம்.


அதற்குள் இன்னொரு ஜோடி அந்த போர்டிகோவில் நுழைய எங்களிடம் எப்படியெல்லாம் பேசினாளோ அப்படியே ஒரு அடித்தல் திருத்தல் இல்லாமல்  வரி மாறாமல் பேசிக் கொண்டிருந்தள். நான் வெளியே நின்று கேட்டு விட்டு சற்று அதிர்ந்தேன். இப்படியும் ஒரு வியாபார தந்திரமா என்று?.. என்னைப் பார்த்ததும் இது என் அக்காமகள்... பெரிய பேச்சாளர்.. தலைமை ஆசிரியர் தெரியுமோ ? என்றாள்... என் அதிர்ச்சியைக் கவனிக்காத பாவனையில்... அவளும் தன் அதிர்வைக் காட்ட வில்லை...( அதிர்ந்தாளா... என்றும் தெரிய வில்லை.) அந்த புதிய கிராக்கிகளுக்கு( அப்படித்தானே சொல்லணும்)
 என்னை  அறிமுகம் செய்து வைத்தாள். நான் செய்வதறியாது நெளியவும் பையை உன் சித்தப்பா வந்ததும் கொடுத்து விடலாம் என் று இருந்தேன்  நல்லவேளை நீயே வந்து விட்டாய் என்று பையை எடுத்து என் கையில் கொடுத்தாள்

. ஆர்வம் குறுகுறுக்க வாசலில் நின்றேன். வழக்கம் போல் எங்களிடம் முறை வைத்து என்ன பேசினாளோ அப்படியே தான் அவர்களிடமும் பேசிக்கொண்டிருந்தாள்.. மறுநாள் .என் தோழியை பேருந்தில் பார்த்து விவரம் சொன்னேன்.. அவளுக்கே மனம் தாங்கவில்லை... ஆதங்கப்பட்டுக் கொண்டே வந்தாள். அவள் நிறுத்தம் வரும் வரை...

ஒரு வாரம் கழித்து அதே போல் புடவையை ப் பார்த்தேன். வேறு ஒரு தோழி கட்டியிருந்தாள். கழிவு விலையில் ரு.350 என்றாள்.. எங்களுக்கு பகீர் என்றது. ஒரு டீக் காக நாங்கள் ஏமாந்த விஷயம் இன்றளவும் எங்களை முள்ளாய்க் குத்திக் கொண்டிருக்கிறது. வியாபார ஏமாற்றம் இன்னும் பல விதம் ....இன்னொரு முறை இது போல் நானும் என் அம்மாவும் அரிசியில் ஏமாந்த கதை சொல்றேன்.. அது வரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் சுவாதி சுவாதி சுவாதி சுவாதி......

1 comment:

  1. அடடா...!

    ஏமாற்றம் - தவறு நம் மீது தான்...

    ReplyDelete