Friday, October 30, 2015

யாதுமாகி நின்றாள்.

கல்கியின் தீபத்தில்....கனவுக்காட்சிகள் தொடர்...06...கவிஞர் சுவாதி
*********************************************************************

அரண்மனை முற்றத்தில் அமர்ந்திருக்கிறாள் ஜீஜாபாய். அவள் முகத்தில் அசாதாரண கம்பீரமும், நிறைவும் ததும்பியிருந்தன. ராஜமாதா என்ற எல்லோரும் போற்றிக் கொண்டாடுகிறார்கள்.மைந்தனோ, அன்னையின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல், அவள் கருத்தை நிறைவேற்றுகிறான். இப்படியொரு மகனை பெற்ற மணி வயிறு எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று எல்லோரும் போற்றுகிறார்கள்.

மலை எலி என்று கேலி செய்தவர்கள் எல்லாம் திக்குத் தெரியாமல் தடுமாறுகிறார்கள். அப்சல்கான், செயிஷ்டகான் என்று எதிரிகளால் அனுப்பப்பட்ட வஞ்சகர்கள் மடிந்த பிறகுதான், எதிரிகளின் ஆர்ப்பாட்டம் அடங்கியிருக்கிறது. ம், என் மகன் இப்போது சத்ரபதி. ஆனாலும், அதே பண்பு, அதே பாசம், அதே அடக்கம், நான் கொடுத்து வைத்தவள் தான்.” தன்க்குள்ளாகவே முணுமுணுத்தாள் ஜீஜாபாய்.

எந்தத் தாய்க்கும் இல்லாத அல்லது ஒரு சில தாய்களுக்கே அமைகிற , கிடைக்கிற பெரும் பேறு ஜீஜாவுக்குக் கிடைத்தது. தன் மகன் சிவாஜியை மகனாய் மட்டுமல்ல, தோழனாகவும் பார்த்தாள். யாருமற்ற பெருவெளியில் அவளோடு பேசுவதும், அளவளாவுவதும் சிவாஜியும் அன்னை பவானியும்தான்.

மராட்டிய மாநிலத்தில்,லோகோஜிராவ் ஜாதவின் மகளாகப் பிறந்த ஜீஜாபாயின் கணவன் ஷாஹாஜி போஸ்லே,பீஜப்பூர் சுல்தானான அடில்ஷாவின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னன், ராணுவத் தளபதி, நம்முடைய மக்களன்னிய ஆட்சிக்கு ஆட்பட்டிருப்பதா? அதற்கு தன் கணவவே துணை செல்வதா?”என்றெல்லாம் ஏராளக் கேள்விகள் ஜீஜாவுக்கு, என்ன செய்ய? ஆனால், தன்னுடைய குழந்தைகள் அப்படி இருக்ககூடாது என்று தீர்மானித்தாள். ஆனால் விதி அவளுக்கு எதிராக பலசோதனைகளைச் செய்தது. ஆறு பெண் குழந்தைகள், இரண்டு மகன்கள் என்று பிறந்தும், பிழைத்தது இரு மகன்கள் மட்டுமே.

(காலப்போக்கில்,மூத்தவன் தந்தையாருடனும், இளையவன் சிவாஜி அம்மாஜீஜாவுடனும் வள்ர்ந்தார்கள்.ஷாஹாஜி இன்னொரு பெண்ணை மணந்தார். அவள் மூலம் பிறந்த குழந்தைகள் தான் தஞ்சையில் மராட்டியர் ஆட்சிக்குக் காரணம் என்கிறது வரலாறு)

சிவாஜிக்கு ஒரு பழக்கம். தனக்கான வெற்றியையும் தனக்கான சோகத்தையும் முதலில் தன் அன்னையிடம் தான் சொல்வான். அப்படிப் பழக்கினாள் என்பதைவிட,அன்னையே தோழியானால், சொல்வதில் என்ன தடை? அப்படித்தான் ஒரு நாள்...

”அம்மா நான் வெற்றி பெற்றேன்” என்று நிலங்களின் பெயர்களை அடுக்குகிறான் அன்பு மகன். அன்னை திரும்பாமல் வேறெங்கோ பார்ப்பதைக் கண்டு அவன் மனம் பதைக்கிறது. “தவறாகச் சொல்கிறேனா?” சிவாஜிக்குக் குழப்பம். “என்ன ஆயிற்று அம்மாவுக்கு? ஏதும் கோபமா? பல்வேறு கேள்விகள் மனத்தில் புரள, மீண்டும் கேட்கிறாள்.

“அம்மா நான் ச்ல்கிறேன்: நீங்கள் வேறெங்கோ பார்க்கிறீர்கள்.என் தோழி, என் தாய் என்பதைவிடஎன் தெய்வம் இல்லையா நீங்கள்? என் தெய்வம் என்னைப்புறகணிக்கலாமா” கேட்கும் போதே அந்த மாவீரனின் கண்கள் கலங்குகின்றன. வீரர்கள் உடலால் திடமானவர்கள். ஆனால், அவர்களையும் இதயத்தோடு தானே இறைவன் படைத்தான்?

ஜீஜாபாய்க்கு மகனின் தழுதழுத்த குரல்கேட்டது. சாளரத்தருகே மகனை அழைத்தாள். தொலைவில் கையைக் காட்டி,”எனக்கு அது வேண்டும்” என்றாள். அவள் காட்டிய திசையில், மிகப்பலமானதும் பாதுகாப்புமான சதாரா கோட்டைகள் தென்பட்டன. அதைப் பார்த்த மறுகணம், சிவாஞி சொன்னான்.

“ அம்மா விரைவில் அவை உங்களுடையதாயிருக்கும்.” ஆம், சொன்னபடியே செய்யவும் செய்தான். அடுத்த சில நாட்களில் அவற்றையும் வெற்றி கொண்டான். அன்னைக்கு முகமெல்லாம் புன்னகை, பெருமிதம்.” என் வளர்ப்பு...என்று மனம் துள்ளியது.

இப்படியெல்லாம் சிவாஜியைப் பக்குவப்படுத்த அமைந்தது ஒரு கனவு தான். எல்லோரும் கனவாய் போகும் வாழ்வை வாழ்வார்கள். அவள் தான், முதன் முதலாக, கனவில் இருந்து வாழ்வை பக்குவமாகப் பிரித்தெடுத்தாள். அந்தக் கனவை திடப்படுத்தினாள்.நிறம் கூட்டினாள்.உரம் ஊட்டினாள்.

அவள் கண்ட கனவு இது தான்.” அவளுக்குச் சொந்தமான ஆடையை வேறு யாரோ அணிகிறார்கள். மிகச் சிறியதாகக் காணப்பட்ட விளை நிலத்தில் புதிய புதிய பயிர்கள் பற்பல முளைத்து கண்களுக்கு எட்டும் வரையில் வயல்வெளிகள் விர்கின்றன. மாடுகள் ஒரு பக்கம் பயிரை மேய்ந்தாலும், மீண்டும், மீண்டும் அசுர வளர்ச்சியாய் பயிர்கள் வளர்கின்றன.

இவ்வளவுதான் அவள் கண்ட கனவு, என்ன பொருள் இதற்கு? யாரிடம் விளக்கம் கேட்பது?கேட்டுக் கேட்டுகுழம்பிப் போனது மனம்: குலைந்து போனது அறிவு.

தங்கள் மத குருவிடம்சொல்ல நினைத்து, வேண்டாம் என்று முடிவு செய்கிறாள். பிறகு தோழியரிடம் சொல்லலாமா என யோசனை .பிறகு தன் கணவனிமே சொல்லலாமாஎன்றும் எண்ணம். கடைசியில் யாரிடமும் சொல்லவில்லை: கேட்கவும் இல்லை தானே மீண்டும் தன் கனவை ஆய்வு செய்து பலன்கள் உணர வேண்டுமென நினைக்கிறாள்.கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

தன்னுடைய ஆடையை இன்னொருத்தி அணிகிறாலென்றால், தன் உரிமை பங்கு போடப்படும் சூழல் வருகிறது என்று புரிந்தது. அவள்கணவன் இன்னொரு பெண்ணை மணக்கப் போகிறான். தனக்கு சமதையாக இன்னொருத்தி வரப்போகிறாள் என்று உணர்த்தியது அறிவு.

அது மட்டுமல்ல: மிகச் சிறியதான  தான் வாழும் பகுதி, அன்னியர் பிட்யிலிருந்து விடுபட்டு, மேலும் விரிவடையும்: அத்தகைய வளர்ச்சியை எதிர்ப்புகளை மீறிய வெற்றியை என் மகள் அடைவான் என்றெல்லாம் அர்த்தப்படுத்திக் கொண்டாள். அதற்கேற்ப தன் மகனை உருவெடுக்கச் செய்ய வேண்டுமென்றும் தீர்மானித்தாள்.

“ என் மகன் எனக்குக்கிடைத்த பொக்கிஷம், அவன் விளையாட்டுப் பொருள் அல்ல> விளையாடப் பிறந்தவனும் அல்ல. வினையாற்றப் பிறந்தவன். நிச்சயம் அவன் வெற்றி பெறுவான்.தோல்விகளில் கற்றுக்கொள்வான். ஒவ்வொரு முறையும் மீண்டெழுவான், என்று உறுதியாக நம்பினாள். அவனை பண்புள்ளவனாக, பாரம்பரியத்தை மதிப்பவனாக, கலாசாரத்தை மீட்டெடுப்பவனாக வளர்த்தாள்.

சிவாஜி தன் வெற்றிகளாலவள் மனதை நிறைக்கும் போதெல்லாம், அந்தக் கனவின் துளிகள் அவளை கொஞ்சமேனும் சலனப்படுத்தாமலில்லை. அன்பு என்பது திடமானது தான். ஆனால், அவை தரும் உணர்வுகள் அதற்கு மாறானதல்லவா? அதனால் தான் மாவீரன் என்றுபோற்றப்பட்ட சிவாஜி அன்னையிடம் குழைந்தான். எவ்வளவு வளர்ந்தாலும், அன்னைக்கு முன் குழந்தைதானே?

அந்த மாதா, பிதாவாகி நின்றாள். குருவாகத் தோன்றினாள்.எனவே, தெய்வமாகவும் மாறினாள். உலகின் அன்புகளை ஒரு பக்கமாய் வைத்தாலும் ஜீஜாவுக்கு இணையில்லை.இந்தப் பிணைப்பும் பிரியமும் இயல்பானதா?தோற்றுவிக்கப்பட்டதா? ஏற்படுத்தி வைத்ததா? யாருக்கும் தெரியாத அற்புதம்.

கனவின் நெடி அடிக்கடி வந்து ஜீஜாவை கலைக்கும். அவளேகூட மயங்கியிருக்கிறாள். “என்னால் முடியுமா? நான் அப்படி வாழ்வேனா” என்று .அவள் கண்ட கனவு அந்த இரவு தந்தது. அந்தக் கனவை பிற கனவோடு ஒப்பிட்டு துச்சமாக ஒதுக்கியிருந்தல்..?

வரலாறு வாடிப்போயிருக்கும், ராஜ்கர், சிந்துதுர்க், சதாரா கோட்டைகளின் பெருமை என்று சொல்லிக் கொள்ள ஏதுமிருக்காது. சத்ரபதி, என்ற சொல் வார்த்தையாகவே வலுவிழந்து நின்றிருக்கும். ஆனால், காலம் காத்திருந்தது. அவளை வரவேற்று பூத்தூவி புளகிப்பதற்காக,அதுதான் ஜீஜாவுக்கு கனவாக வந்து காட்சி பட்டது.கணவன் இறந்ததும் தானும் உடன் கட்டை ஏறியிருந்தால், மகன், “சத்ரபதி” ஆன வைபவத்தை பார்த்திருக்கத்தான் முடியுமா?

அந்திம காலத்தின் அந்திப் பொழுதில், தான் கண்ட கனவை, அது என்னவென்று அறிய தான் பட்ட இன்னல்களையும் நினைத்து உணர்ச்சிமயமாய் நின்று கொண்டிருந்தாள் ராஜமாதான்வான ஜீஜாபாய்.

“தங்கள் தனைமையை கலைத்து விட்டேனா?” எப்போதும் மனததை நிறைக்கும் சங்கீதம் போன்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் கனவே உயிர் பெற்றதாக, எதிரே நின்று கொண்டிருந்தான்,அவளின் அன்பு மகன் - மராட்டிய மண்டலத்தின் மன்னன் , மாவீரன் சிவாஜி.

காண்போம்...

****************************************************************************1 comment:

  1. சிறப்பான கனவு! நினைவாக்கிய தாய்- மகன்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete