Friday, October 16, 2015

கனவுக் காட்சிகள்

கல்கியின் தீபம் இதழில் வெளியான “ கனவுக்காட்சிகள்” என்னும் இக்கட்டுரைத் தொடரை இங்கே பகிர்வதில் பெருமையும் மகிழ்ச்சியும்
 பகுதி 1
***********
கனவுகள்... இதைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைத் தங்களுக்குத் தோன்றியவிதத்தில் கூறியிருக்கின்றனர். ஆனால்.அதற்கென்று ஒரு விதி, வரைமுறை, வரையறை போன்றவை அறவே இல்லை. வரலாற்றில் பார்த்தோமானால், பாபிலோனியர்கள் தெய்வத்திடமிருந்து வரும் செய்திகளே கனவுகள் என்றனர். எகிப்தியர்கள் கடவுளின் செய்தியாகக் கருதினர். ஆசியர்கள் எதிர்காலத்தை எடுத்துரைக்கும் வழி என்றார்கள். கிரேக்கர்கள் நோய் போன்ற வற்றுக்குத் தீர்வு தரும் ஆய்வு எனப் பார்த்தார்கள். ஜப்பானியர்களோ தெய்வத்தின் ஆசிகள் என்றே கூறினர்.

கனவுகளைப் பற்றிய கருத்துக்கள் இவை என்றால் கனவுகள் எப்போது ஏற்படுகின்றன என்பது பற்றியும் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. தூங்கியபின் 30 முதல் 90 நிமிடங்களுக்குப் பிறகே கனவுகள் வரும் என்றும் அப்போதுஅட்ரீனலின் ஹார்மோன் அளவு அதிகமாகும் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.

சிக்மெண்ட்ஃபிராய்டு எழுதிய இண்டெர்ப்ரெஷன் ஆஃப் டிரீம்ஸ் (interpretation of dreams) ஆல்பிரட் ஆட்லர் மற்றும் கார்ல் ஜங்க் எழுதிய நூல்களும், கனவுகள் எவ்வளவு தூரம் மனிதனுடன் ஒன்றியிருக்கின்றன என்பதற்கான அடையாளங்கள்.

1321ல் காலமான பிரபல எழுத்தாளர் தாந்தோ என்பவர், “டிவைன் காமெடி” என்ற நூலை எழுதி விட்டு இறந்து போனார். அவர் மகன் ஜாகபோ வறுமையால் வாடியபோது, மகனின் கனவில் தோன்றி அந்த நூல் உள்ள இடத்தைக் கூறி, இன்னாரிடம் கொடுத்து பணம் பெற்று வாழ் என்று கூறியதாகவும் அதன் பின் “ஜாகபோ” நினைத்துப் பார்க்க இயலாத அளவு உயர்ந்ததாகவும் உண்மைக்கதை இருக்கிறது

கம்பர் நடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு கூர்மையான ஆயுதத்தால் நிலத்தைப் பண்படுத்திக் கொண்டிருக்கும் உழவனைப் பார்த்தார். வரும் வழியெல்லாம் இதென்ன கருவி என்று குழம்பிப் போய் வீடு வந்தாராம். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் அம்பிகாபதி எழுந்து, அந்தக் கருவியின் பெயர் கோடாரி’ என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினார். என்றும் செய்தி உண்டு

நமது இந்தியாவில் அமானுஷ்யம் கலந்து பல கனவுக்கதைகள் உலவினாலும், கனவுகளின் பலன்கள் பற்றி அறிவிப்பதும் தெரிவிப்பதும் பெரும்பாலும் ஒன்றாகவே காணப்படுகிறது. ஆலயம், அரண்மனை,கிளி, வாழை இலை, பிறரை அலங்கரித்தல், நிலவு, விவசாயி உழுதல், வானவில், சிறு குழந்தை, பாம்பு கடித்து ரத்தம் வருவது போன்றவை நல்ல கனவுகள், உடனடியாக நமக்கு நன்மை வருகிறது என்று அறிவிக்கக் கூடிய கனவுகள், பூனை, தேனி, எறும்பு, எலி, குடி, பசு விரட்டுதல், புயல், குதிரை விழுதல் போன்றவை தீக்கனவுகள் என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக, மாலை 6 முதல் இரவு 8 மணி வரை கனவு வந்தால் ஒரு வருடத்திலும் இரவு 8 முதல் 10 மணி வரை வந்தால் மூன்று மாதத்திலும், 10 முதல் 1 மணிக்குள் காணும் கனவுகள் ஒரு மாதத்திலும், 1 முதல் 3 என்றால்  பத்து தினங்களிலும், 3 முதல் 6 மணிக்குள் கண்ட கனவுகள் உடனேயும் பலிதமாகும் என்கிறார்கள். அதே சமயம், பகலிலே கனவு வந்தால் பலிக்கவே பலிக்காது என்று சத்தியம் செய்கிறார்கள்

காசி நகர் புலவர் பேசும் உரையை காங்சியில் கேட்க வேண்டும் என்று பாரதி கூறியது ஒரு அழகிய எதிர்காலக்கனவு . அது பலித்து விட்டது. பேசுவது மட்டுமல்ல. பார்க்கவே ஆரம்பித்து விட்டோம். பட்டனைத் தட்டி விட்டா தட்டுல இட்லியும் பக்கத்துல காப்பியும் வந்துடணும் என்ற கலைவாணரின் கனவும் வெகு சீக்கிரம் பலிக்கக் கூடிய ஒன்றாகவே தெரிகிறது. பட்டனைத் தட்டினால், இப்போது காபி வருவதைப் பார்க்கிறோம். அடுத்து இட்லியும் வரக்கூடும்

அணுவைத்துளைத்து எழுகடலைப் புகட்டி....என்ற ஔவையின் கனவு பிரமிப்பூட்டக்கூடியது. அணுவைத் கண்டே பிடித்திராத நாளில், அதை துளைக்க நினைத்தது மட்டுமல்ல, அதற்குள் எழு கடலை நிரப்பப் பார்த்தாளே...அது ராட்சஸக் கனவு. அந்த அணுவை நூறு துண்டுகளாக்கி, அந்தப் பரமாணுவுக்கு “கோண்” என்று நாமகரணம் செய்வித்தானே கம்பன், அவனையும் இங்கே நினைவு கூற வேண்டியிருக்கிறது. வாழும் முறையைப் பற்றி பல்வேறு அதிகாரங்களை அடுக்கிய வள்ளுவனையும் கனவு விட்டு விடவில்லை. தன் பங்குக்கு அவனும் கனவு நிலையுரைத்தல் என்றொரு அதிகாரத்தை வழங்கியிருக்கிறான். பென்சீனின் வடிவம் கூட கனவில் உணரப்பட்டது தான் என்பதையும் அறிவியல் வழியாகவே அறிகிறோம்

கனவு சார்ந்தே ஜோதிடவியல், உளவியல்,அறிவியல், புவியியல், வானவியல்,குவாண்டம் இயற்பியல், ...என்ற பல இயல்கள். தூங்கும் போது வருவதல்ல கனவு: நம்மைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு என்றார். மேதகு ஏ.பி.ஜே.அப்துல்கலாம். 

சரி கனவுகள் எப்படி வரும்?வண்ணமயமாக வருமா?கருப்புவெள்ளையா? என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது. ஆனால் கனவுகள் வாழ்வை வண்ணமயமாக்கும் என்பது மட்டும் உண்மை. கனவுகள், அவரவர்களுக்கான நன்மை அல்லது தீமையான விளைவுகளைப் பற்றித் தான் முன்னறிப்பு செய்கின்றன என்பது தான் பொதுவான நம்பிக்கை. ஆனால் இன்னொருவருக்கான பலனை அறிவிக்கும் கனவை, நாம் காண்பது என்பது சாத்தியமாகுமா? நாமறிந்தவரை இல்லை.

ஆனால் ஒருவர் காணும் கனவு அவருக்குத் தீய செய்திகளைத் தான் உணர்த்துகிறது. ஆனால் அந்த எதிர்மறைக்கனவு, இன்னொருவருக்கு நேர்மறைக்கனவு ஆகிவிடுகிறது. அது எப்படி சாத்தியம்? அதை அடுத்த இதழில்....(காண்போம்)  

6 comments:

  1. Is Benzene's structure created by dream? This is new information.

    ReplyDelete
    Replies
    1. ஆம்...அவருடைய வாழ்க்கைவரலாறு படித்தால் தெரிகிறது...

      Delete
    2. தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  2. வித்தியாசமாக உள்ளது. நேர்மறைக்கனவை பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.
    வாய்ப்பு கிடைக்கும்போது மகாமகத் தீர்த்தவாரி கோயில்களைக் காண அழைக்கிறேன்.
    http://drbjambulingam.blogspot.com/2015/10/2016.html

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக வருகிறேன்...அப்படிக் கோயில்களைப் பற்றியும் தொடர் எழுதக் கேட்டுள்ளனர். எனவே அவசியம் அது எனக்கு உதவும் என்று நம்புகிறேன்

      Delete
    2. வரலாறு நெடுகிலும் நேர்மறைக் கனவுகளும் எதிர்மறைக் கனவுகளும் நிரம்பிவழிகின்றன்...தங்கள் வருகைக்கு நன்றி

      Delete