Monday, September 28, 2015

புராணகாலமும் நவீனகாலமும்....


..புராணக்காலமும் நவீனகாலமும்எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை.எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 3.பெண்கள் முன்னேற்றம்புராண காலமும் நவீனயுகமும்
********************************

     நளன் என்றொரு மன்னன் மகாராஜா என்றும் சமையல் கலையில் வல்லுநன் என்றும் வர்ணிக்கப்படுபவன். நட்டநிசியில் , அடர்காட்டில், தன் மனைவியான தமயந்தியை விட்டு நீங்கி வேறு நாட்டிற்குச் சென்று விடுவான். (அவள் பத்திரமாக தன் தந்தையை சேர வேண்டும் என்று சாமியிடம் வேண்டி விட்டானாம்) இத்தனைக்கும் அவர்கள் குழந்தைகளை தன் அம்மா, அப்பாவின் அரண்மனைக்கு அனுப்பி வைத்திருப்பாள். இவனுடனேயே போகவேண்டும் என்ற கட்டாயத்தால் அல்ல. மனம் நிறைந்த காதலால்...இவனுடன் பயணிக்க எண்ணியதால் தன் குழந்தைகள் துன்புறும் என்று இவன் அச்சம் கொள்ளக்கூடாதென்றும் மனம் வருந்தக்கூடாதென்றும் அவள் தன் விருப்பமின்றி அது போல் செய்தும் அவன் நடுக்காட்டில் விட்டுச் சென்று விடுவான்

     ராமனைப்போல எந்த மன்னனாலும் ஆட்சி செய்ய முடியாது என்று சொல்லி அவனைக் கடவுளாகவே கொண்டாடுகிறார்கள். ( அவன் மனிதனாய்ப் பிறந்து மன்னனாகி மக்களால் கடவுளாக ஆக்கப்பட்டானா? அல்லது கடவுளின் அவதாரமா? என்ற பட்டிமன்றம் இங்கே தேவை இல்லை.)ஆனால் அவனும் தன் மனைவியை கர்ப்ப காலத்தில் காட்டில் விடுகிறான். பிறகு தன் குழந்தைகளால் இணைந்த பின்னும் ஒரு துணி துவைக்கும் தொழிலாளி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதால் மீண்டும் வனவாசம் அனுப்புகிறான். ஆனால் அவளோ இராவணனிடம் சிறைபட்ட போது இவளாக தப்பிக்கும் தைரியம் அனைத்தும் இருந்தும் அவன் வில்லின் மகிமைக்கு  ”மாசு “ என்று நினைத்து வீசுகிறாள்.

     அடுத்து அகலிகை...இரவு நேரமா/ விடியும் நேரமா என்று தெரியாத ஆனால் முக்காலமும் உணர்ந்த கௌசிக முனிவன் இரவு வேளையில் சேவல் கூவ அது இறைவனைத் துதிக்கும் நேரம் என்று நினைத்து போகும் முனிவன் , வந்திருப்பது கணவனா? அல்லது கணவன் வடிவில் இருக்கும் இந்திரனா எனத் தெரியாமல் (அதுவும் தூக்கக் கலக்கத்தில்) கூடியதால் கல்லாக்கப்பட்டாள் அகலிகை. அகன்று சென்றவருக்கு இல்லாத தண்டனை வீட்டிலிருந்தவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ( நல்ல வேளை கல்லானாள். மனுசியாய் நீடித்திருந்தால் இவர்களின் வார்த்தை சவுக்கடிகளில் அழுகி நாறிப் போயிருப்பாள்.)
   
     தானே அழுகிக் கொழுகொழுத்த நிலையில் , அதுவும் நடக்கக்கூட இயலாமல் கூடையில் சுமந்து செல்லக்கூடிய நிலையில் இருந்து கொண்டு தான் வேறு ஒரு பெண்ணுடன் கூடிக்களிக்க வேண்டும் என்று அந்த முனிவன் சொன்னதும் சுமந்து சென்று விட்டாளாம் நளாயினி ..அதே நிலையில் நளாயினி இருக்க தான் வேறு ஒருவனுடன் கூட தன் கணவனைக்கேட்டிருந்தால்,,அவனைக் கற்பரசன் என்று ஏற்றுக் கொள்வார்களா? ஆனால் இங்கே அவனைப் போற்றுவது விடுத்து பெண்ணைத் தூற்றுவதில் தொடங்குவார்கள்.
     இன்னமும் கூட வைணவக் கோயில்களில் மற்ற ஆழ்வார்களின் பாடல்கள் ஒலிக்கும் அளவுக்கு ஆண்டாள் பாடல்கள் ஒலிப்பதில்லை. ஆடிமாதம் பூர நட்சத்திரமான அவள் பிறந்தநாள் என்பதால் போனால் போகிறதென்று ஒலிபரப்புவார்கள். அதுவும் திவ்யப்பிரபந்தம் நாலாயிரம் பாடல்களும் ஒருநாளைக்கு 400 பாடல்கள் வீதம் ஒலிபரப்ப வேண்டும் கட்டாயத்திற்காக மட்டுமே. அதுவும் “வாரணம் ஆயிரம்” என்று தொடங்கும் கனவுப் பாடல்கள் நீங்கலாக... ஒரு பெண் பக்தி மார்க்கத்தில் இருந்தாலும் அவளின் பக்தியைக் கூட அங்கீகரிக்க வில்லை இந்த் சமுதாயம். திருப்பாவைக்கு தரும் முக்கியத்துவத்தை நாச்சியார் திருமொழிக்குத் தரப்படவில்லை என்பதே மிகப்பெரிய கொடுமை.

     அரிச்சந்திரன்...சத்தியம், நேர்மை என்று அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனால் தன் நேர்மைக்கு தன்னை பலியிட்டுக் கொள்வது தானே ? ஆனால் மனைவியை அடிமையாய் விற்ற அவன் உண்மை ஏன் பாராட்டப்பட்ட அளவில் அவள் அதன் பின் எவ்வளவு கொடுமைகளைச் சந்திருப்பாள் என்று என்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

அச்சியத்தை மகள் நாகையார், ஔவையார்,அள்ளுரர் நன்முல்லை,ஆதிமந்தி - ,இளவெயினி - புறம் 157,உப்பை ஃ உறுவை,ஒக்கூர் மாசாத்தியார்,கரீனா கண்கணையார்,கவியரசி,கழார் கீரன் எயிற்றியார்,கள்ளில் ஆத்திரையனார்,காக்கை,பாடினியார் நச்செள்ளையார்,காமக்கணிப் பசலையார்,காரைக்காலம்மையார்,காவற்பெண்டு,காவற்பெண்டு,கிழார் கீரனெயிற்றியார்,குட புலவியனார்,குமிழிநாழல் நாப்பசலையார்,குமுழி ஞாழல் ,ப்பசையார்,குறமகள் ஃ இளவெயினி,குறமகள் ஃ குறிஎயினி,குற மகள் இளவெயினியார்,கூகைக்கோழியார்,தமிழறியும் பெருமாள்,தாயங்கண்ணி - புறம் 250,நக்கண்ணையார்,நல்லிசைப் புலமை மெல்லியார்,நல்வெள்ளியார்,நெட்டிமையார்,நெடும்பல்லியத்தை,பசலையார்,பாரிமகளிர்,பூ,கண்ணுத்திரையார்,பூங்கண் உத்திரையார்,பூதபாண்டியன் தேவியார்,பெண்மணிப் பூதியார்,பெருங்கோப்பெண்டு,பேய்மகள் இளவெயினி,பேயனார்,பேரெயென் முறுவலார்,பொத்தியார்,பொன்மணியார்,பொன்முடியார்,போந்தலைப் பசலையார்,மதுவோலைக் கடையத்தார்,மாற்பித்தியார்,மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி,மாறோக்கத்து நாப்பசலையார்,முள்ளியூர் பூதியார்,முன்னியூப் பூதியார்,வரதுங்க ,மன் ,வியார்,வருமுலையாருத்தி,வில்லிபுத்தூர்க் கோதையார்,வெண்ணிக் குயத்தியாரவெள்ளி ,தியார்,வெறிபாடிய காமக்கினியார்.என்று இத்தனை புலவர்கள் இருந்தாலும் ஆண் புலவர்கள் அளவுக்கு பெண் புலவர்கள் பெயர்கள் பிரசித்தி பெறவில்லை. என்பதே உண்மை.

    சுதந்திரப்போராட்டக் காலத்திலும் அவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தாலும் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு கூட்டங்கள், பொம்மலாட்டம், விவாதங்கள், கருத்தரங்கம், போன்றவைகலை நிகழ்த்தி மக்களிடையே புரட்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதோடு, 47 நாளிதழ், வார, மாத, இதழ்கள் நடத்தி வந்தனர் என்பது தான் வியக்கத்தக்க செய்தியாக இருக்கிறது.ஆனால் அவையெல்லாம் ஆண்களின் தியாக மனப்பானமைக்கு எதிரில் மறைக்கப்பட்டு விட்டன. 

     சரிதான். அவைதான் அப்படியென்றால் கட்டிடக்கலை, மருத்துவவசதி, சாலை போக்குவரத்து, என்று இன்றைய நாள் சிந்தனை போல் அன்றைய நாளிலேயே சிந்தித்து ராஜராஜனுக்கு அமைத்துக் கொடுத்ததோடு பெண்கள் படிக்க வேண்டும் என்று கல்விசாலை அமைத்து தானே ஆசிரியை ஆகி 500 ஆண்கள் படித்த போது 400 பெண்களையும் படிக்க வைத்து, தன் தம்பிக்கு ஆலோசனை வழங்கி, மேம்பாடு அடைய வைத்து, அவள் தம்பி அருண்மொழிவர்மனை ராஜராஜன் எனப்பெயரிட்டுசோழர்களின் காலம் பொற்காலமாய் மலர வைத்த குந்தவை நாச்சியாரை மறந்து ராஜராஜனைத்தானே கொண்டாடுகிறோம்?? இது வரலாற்றுப் பிழையில்லையா?

    முதற்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு, கணவன் இறந்தவுடன் இறந்தாள் பாண்டிய அரசி. எனவே அவள் முதல் நிலை கற்பரசி. அவன் இறப்பிற்கு நியாயம் கேட்டு இறந்தாள் கண்ணகி.அவள் இடைக்கற்பரசி..கணவன் இறந்தும் வாழ்ந்தால் அவள் கடைக் கற்பரசியாம்..ஆண்களில் உண்டா? கேட்டவுடன் இறப்பதும், நியாயம் கேட்டு இறப்பதும், மறுமணம் வேண்டுமானால் உண்டு. அதுவும் பலமுறை.

     சங்ககாலம், இடைக்காலம், கடைக்காலம், என்று எல்லாக் காலங்களிலும் பெண்களின் எழுத்தும் பேச்சும் அறிவும், திறனும், ஆற்றலும் முடக்கப்பட்டும், அடக்கப்பட்டும், தான் வந்துள்ளது.

     பெண்களுக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டு விட்டதாக நம்பப்படும் இந்த காலத்தில் தான் தன்னை காதலிக்க வில்லை என்ற காரணத்தினால் திராவகவீச்சு நடக்கிறது. வன்புணர்வுகளும், பாலியல் ரீதியான கொடுமைகளும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எது வந்தால் என்ன என்று பெண்களும் தங்களுக்கு கொடுத்த வாய்ப்பைப்பயன்படுத்திக் கொள்ள , பள்ளி, கல்லூரிகளில் முதன்மை பெறுவது, ஐ.ஏ.எஸ்.ஐ.பி.எஸ்.,வங்கித்தேர்வு, என்று பொதுத்தேர்வுகளிலும் முதன்மை பெறுவதும் நடந்துகொண்டே தான் இருக்கிறது.

     அதோடு இன்னும் வாய் ஓயாமல் விவாகரத்து பெற்ற பெண்களை அவர்கள் நடத்தை குறித்து பேசி, ஏசி, சீண்டுவதும், அவர்களுக்கு எதிராக, பெண்களையே பேச வைக்க என்றே கொம்பு சீவி விடுவதும் நடக்கத்தான் செய்கிறது.

     கணவனை இழந்தாலும் சரி பிரிந்தாலும் சரி, இங்கு தாக்கப்படுபவள் பெண்ணாக மட்டுமே இருக்கிறாள். 

     இவைகள் எல்லாவற்றையும் விட படைப்பாற்றல் திறனில் பெண்ணின் எழுத்துக்கள் எல்லாம் அவளின் அனுபவம் சார்ந்ததாகவும் ஆணின் எழுத்துக்கள் அவனின் கற்பனைத்திறன்  ஆற்றல் என்றுமே கணிக்கப்படுகின்றன். சமூகத்தில் நடக்கும் அவலங்களை ஒரு பெண் தான் பங்கேற்கும் மேடையில் குறிப்பிட்டுப் பேசினாலும் கூட அவள் குடும்பம் பற்றியும் அங்கு நடப்பவை பற்றியும் மூக்கை நுழைத்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு கொச்சையாகவும், பச்சையாகவும் பேசுவது தொடர்கிறது. இதையே ஆண் எழுதினால் அடடா!!அடடா!! என்று பாராட்டு மழைதான்.

     மருத்துவமனையில் கூட பெண் குழந்தை பிறந்தால் சுமாரான கொண்டாட்டங்களும் ஆண்குழந்தை பிறந்தால் வாரிசு என்றும் கூத்திடும் அவலத்தை மறுப்பதற்கில்லை.

     இன்னமும் கூட பட்டிமன்றங்கள், கருத்தரங்கம், விழிப்புணர்வுக் கூட்டங்கள், கவியரங்கங்கள், போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் ஆண்களின் சதவீதம் அதிகமாகவும் பெண்களின் சதவீதம் குறைவாகவும் தான் இருக்கிறது. என்பதையும் எவரும் மறுக்க இயலாது. 

    மேடையில் வாதிடும் பெண்களுக்குச் சாதகமாக கூச்சல் போடுபவர்களும் கூட அத்தகைய கூட்டங்களுக்கு தங்கள் பெண்கலை அழைத்து வருவதில்லை. கோவிலுக்கு அதிகமாகப் போகும் பெண்களும் ஏனோ பொதுக்கூட்டங்கள் வருவதை விரும்புவதில்லை, போலவே நடந்துகொள்கின்றனர்.

     தங்களைத்தாங்களே சிங்கம் என்றும், புலி என்றும், சிறுத்தை என்றும், வர்ணித்துக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்களுக்குள் இன்னமும் அந்த மிருகத்தன்மை மீதமிருப்பதைத்தான் அது காட்டுகிறது, 

     எஞ்சியிருப்பவர்கள் இப்படி பொதுக்கூட்டங்களுக்கு வரும் பெண்களை அறிவு சார்ந்து பார்க்காமல் அவள் உடல்சார்ந்து பார்ப்பதாலும் பெண்ணை எப்போதும் குடும்பத்துடன் ஒப்பிட்டே எண்ணுவதாலும், வெளியே வந்தாலும் மேடையில் பேசவோ, எதிர்த்து செயல்படவோ, எதிர்பது மாதிரி நடிக்கக் கூடத்தயங்குகிறார்கள் பெண்கள். 

    இப்போது நவீனப் பட்டிமன்றங்களில் ஆண்களே பெண்களை இழிவுபடுத்துவது போதாது என்று பெண்கள் தங்களைத்தாங்களே நகைச்சுவைஎன்ற பெயரில் அசிங்கத்தின் அலறல்கள் தான் அரங்கேறுகின்றன.
     ஒரு பெண்ணுக்கான பேச்சை, எழுத்தை, நடைமுறையை ஒரு ஆண் தீர்மானிக்கவும் ஆண் நிர்ணயம் செய்யவுமே பெரும்பான்மை வாழ்வைக் கடத்துகிறார்கள் பெண்கள்.

     ஒரு சிலர் தான் அவர்களுக்கான இலக்கை, அவர்களுக்கான பயணத்தை, அவர்களே திட்டமிடுகிறார்கள். அந்தப் பயணமும் இலக்கும் வெற்றி பெறுமோ என்ற பயத்தில் அவளின் நடத்தையின் மீது பழி சுமத்தி, அமுக்கி, அழவைத்து, முடக்கப்பார்க்கிறது சமூகம். ஆனாலும் பெண் இதெல்லாம் கடந்து, நடந்து, வருவாள். ஆம்
     கடந்தகாலங்களீல் அழிந்தது போதும்
      நடந்த காலங்களில் ஒழிந்தது போதும்
      இனி நடக்கும் காலங்கள் 
      நமது காலங்கள் என்று 


தனக்கான கோலத்தை தானே நிர்ணயம் செய்து இமயத்தை எட்டுவாள்` 

அந்த நாள் வெகுதூரம் இல்லை.

Image result for pencil drawings love ladies

3 comments:

 1. வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 2. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 3. தலைப்பு : அன்றும் இன்றும்...

  அல்லது

  புராண காலமும் நவீனயுகமும்

  ReplyDelete