Wednesday, September 30, 2015

செங்கலில் செவிசாய்த்து...

செங்கல்லில் செவி சாய்த்து... எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை..எனது சொந்தப் படைப்பே எனச் சான்றளிக்கிறேன். இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும் போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்


 “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது

வகை 1 



ஊரே அலைபேசி வாங்கிவிட்டது. கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் அதனை வைத்திருப்போர் இடையில் ஹாங்...ஹலோ...என்றவாறு வெளியே எழுந்து செல்வார்கள். சில நேரம் காமெடியாகவும், சில நேரங்களில் அவர்களை நோக்கிப் பொறாமைப் பார்வைகளும் படியும். அப்போதெல்லாம் ஓரிருவர் கையில் தான் அலைபேசி இருக்கும்.

அப்போது தலைமை ஆசிரியர் கூட்டத்தில் ஒரு பெண்மணி செங்கல் போல இருந்த ஒரு வஸ்துவைக் கொண்டு வந்து (சிக்னலே இல்லாமல் அதன் லைட்டைத் தட்டி விட்டு) பேசிக் கொண்டிருப்பார். அப்போது ஆண் ஆசிரியர்கள்(ளே) வாங்காத நிலையில் , பல ஆசிரியர்களுக்கு அவள் பெரிதாய் அலட்டுகிறாள் என்றே பேசிக் கொண்டனர். ( அவரவர்கள் வாங்கும் வரையிலும் நாம என்ன பிஸினஸ்ஸா பண்றோம் நமக்கு எதுக்கு போனு? என்று ஒரு ஆசிரியர் பெரியதாய் அவரை தாக்கும் நோக்கத்தோடு பேசிக்கொண்டிருந்தார்...அந்தப் பெண் இவரை பார்த்தாலே நடுநடுங்கி ஓடிப்போய்விடுவார் என்பது வேறு விஷயம்)


நாங்கள் அப்போது தான் வீடு கட்டியிருந்தோம் ஆதலால் ஒழுங்காக சாப்பாடு வாங்கிச் சாப்பிடுகிறோமா என்பதே பெரிய வினாவாய் இருக்க நாங்கள் போன் பயன் படுத்துவது என்பது கனவு என்று தான் நினைக்கத் தோன்றியது. ஒருவாறாக பல்வேறு ஆதாரங்கள் மற்றும் தேவைகளுக்காகவும் எங்கள் வீட்டில் லேண்ட் லைன் போன் வாங்கப்பட்டது. அப்போது என் மகள் அடிக்கடி அதனை எடுத்து தன் காதில் வைத்து அதில்” டுர் ”வரும் ஒலியை ரசித்துச் சிரிப்பாள்.(அதன் பின்னர் அந்த போனே சின்னவள் பிறந்ததும் ஒரு விளையாட்டுப் பொருள் ஆனதெல்லாம் வேறு விஷயம்)

அப்படி உள்ள சூழலில் என்னிடம் செங்கல் போன்ற கருப்பான ஒரு திடப் பொருளைக் கொடுத்து இது தான் கைபேசி என்று என் கணவர் தனக்கு த் தெரிந்ததெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ( அவர் அடித்த கப்ஸாவை எல்லாம் நான் அப்படியே நம்பினேன் என்பது ஆஃப் த ரெக்கார்டு) (அதை ஒரு நாள் என் பள்ளிக்குக் கொண்டு போய் என் அஸிட்டெண்டை அழைத்து அவரிடம் எனக்குத் தெரிந்ததெல்லாம் பற்பல பொய்கள் கலந்து சொன்னேன் என்பதும் ஆஃப் த ரெக்கார்டு).

புதுக்கோட்டை டவுனிலேயே எடுக்காத போன், நான் ஆறு கடல் தாண்டி,  ஏழு மலை தான் தாண்டி , அம்புலி மாமா ராணியாய் வேலைக்குச் சென்ற இடத்திலா எடுக்கும்?  யாராவது போன் பண்ண மாட்டார்களா என்று ஏங்கித் தவித்து, அது வந்தால் , அந்த ஊரே கேட்ட்கும் படி ஹலோஓஓஓஓ என்று கத்திக் கொண்டே வயலுக்குள் ஓடி விழுந்து, ஐயோ!பெரிய டீச்சர் ஏதோ கருப்புப்பெட்டியப் பாத்து பேசிக்கிட்டே போவுது..துன்னூறு மந்திரிக்கணும் என்று கூட வதந்தி பரவிவிட்டது. அப்போது வரும் அழைப்புக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனாலும் யாராவது பண்ண மாட்டார்களா என்று மனசு ஏங்கும். சினிமாவே பார்க்காத நான் ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் போனில் பேசுகிறான் என்பதற்காக ஒரு ----திரைப்படத்தை 3 முறை பார்த்து வந்தேன்..( இப்போது இந்த போனே வேண்டாம் என்று நினைத்தாலும் முடியவில்லையே)

பிறகொரு நாளில் ஏதோ ஒரு கம்பெனி இன்கமிங் ஃபிரி என்று அறிவிக்க என் கணவர் அதனை வாங்கிப் பயனடைய வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று மறு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று நகையை அடகு வைத்து ஆளுக்கு ஒரு போன் வாங்கிக் கொண்டு புளங்காங்கிதம் அடைந்தோம்.

எப்போதாவதேனும் இருவரும் சேர்ந்து பேசி குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு வாழ மாட்டோமா என்ற ஆசை இருவருக்குள்ளும் இருந்தாலும் பொருளாதாரத்தின் அசுரக் கைகளுக்குள் கட்டுண்ட படியால் ஓடிக் கொண்டே இருந்த நாங்கள் எங்காவது தனித்தனியாகப் பிரிந்து போய் போனில் பேசமாட்டோமா என்ற ஆவல் வந்து விட்டது. ( அப்போதும் போன் பற்றி அவர் கூறும் அளவிட முடியாத கப்ஸாக்களை நம்பி வந்தேன்). ஆக ஒன்றாய் இருக்க வேண்டும் என்ற ஆசையை பிரிய வேண்டும் என்று கொண்டு வந்தது இந்த போன் தான் என்பது தான் உண்மை.

வீட்டின் வறுமை அசுரன் தலைவிரித்து ஆட, அவர் கட்டாயம் வேறு நாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட, சிங்கபூர் போய் அவர் முதலில் எனக்கு ஒரு போன் தான் அனுப்பினார். ( அவர் அங்கே போவதற்காக வாங்கப்பட்டக் கடனைக்கூட அடைக்காத நிலையில் தான்) சி.ஆர்.சி.கூட்டங்களில் அந்த போனை வாங்கும் ஆசிரியர்கள் மீண்டும் தரவே மாட்டார்கள். ஏனெனில் சிங்கப்பூர் என்ற மாயையும் அப்போதே அவர் அதனை 14000 கொடுத்து வாங்கியிருந்ததும் தான்.நாங்கள் மிகப்பெரிய பணக்காரராகவே கருதப்பட்டொம். பிறகு படிப்படியாக குடும்பச் சூழலும் மாறியது.அதன் பின் இவர் புதிதாய் நகை,பிளாட்,வேறு சேமிப்பு என்று நடுத்தரக்குடும்பங்கள் செய்யும் ஏதும் செய்யாமல் போன் மட்டும் மாற்றுக் கொண்டே இருந்தார். அவர் வாங்கிய போன் காசுக்கு 200 பவுன் நகை வாங்கியிருக்கலாம்.

போனில் பேச மட்டுமே தெரிந்த எனக்கும் என் மகள் அதில் இருக்கும் விளையாட்டுகள் குறுஞ்செய்தி அனுப்புதல் எடுத்துப் படிப்பது போன்றவற்றைக்கற்றுத் தர அவளுக்கும் ஒரு நவீன போன் அவசியம் என்பதனை வலியுறுத்தி அவளுக்கும் கூட ஒரு போன் அங்கிருந்து அனுப்ப அது தான் புதுகையின் பேச்சு செய்தியானது. ஏனெனில் அப்போது தான் அவள் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

என் மாமியார் நான் அப்படி பேசும் போது என் எதிரில் நிற்கவே மாட்டார். அது ஒரு மதிப்பான செயலாகவே கருதப்பட்டது. அதனைச் சாக்கிட்டு அவர் திட்டத் தொடங்கும் வேளையில் நான் பேசாத போனில் ரிங் டோனை அமுக்கி சும்மா பேசிக் கொண்டிருந்ததும் உண்டு. ( ரிங் டோன் இல்லாமல் பேசினால் கண்டு பிடித்து விடுவார்களாம்) ஆசிரியர்  கூட்டங்களில் போனே வராமல் பல ஆசிரியர்கள் இந்த டிர்க்கைக் கடைபிடித்து நழுவிச் சென்றதும் நடந்தது. செங்கல் உருவில் இருந்த போன்கள் படிப்படியாக மெலிந்து காணப்பட்டது. பின்நாளில் செங்கல் போல் போன் வைத்திருந்தால் அவர்கள் நகைப்புக்கு உரியவர்கள் ஆனார்கள்.

அதன்பின் அனைத்து ஆசிரியர்களும் அதன் அத்தியாவசியம் உணர்ந்து தன் சேமநலநிதியைப் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளூக்கு கட்டணம் (ஃபீஸ்) செலுத்துகிறார்களோ இல்லையோ, இந்த போன்களை வாங்கிக் கொண்டனர். இந்தக் கம்பெனி சலுகை அளித்தால் இந்த சிம். இல்லாவிட்டால் அந்த சிம். பி.எஸ்.என்.எல். ல் 1000 ரூபாய் செலுத்தி ஒரு மாதம் கழித்து ஒரு சிம் தந்தார்கள். அந்த சிம் வைத்திருந்தால் பெருமை என்றே கருதப்பட்டது. 944 என்று வந்தால் ஒரு கம்பெனி, 98 என்று வந்தால் ஒரு கம்பெனி, 93 என்று வந்தால் ஒரு கம்பெனி என்று மனப்பாடம் ஆகிவிட்டது.

போன் கருத்தாளர்களுக்கு, ஆங்காங்கே ஆலோசனைகள் எந்த சிம் போட்டால் எதில் லாபம், எது கட்டணம் குறைவு என்றெல்லாம் எல்லாக் கூட்டங்களிலும் அலசப்பட்டது பல ஆசிரியர்களால். அதில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. ஆனால் என்னை மட்டும் சேர்த்துக் கொள்வார்கள் காரணம் சிங்கப்பூரிலிருந்து வரும் போன் மற்றும் என்னை அவர்கள் போன் பற்றி அறிந்த மிகப் பெரிய அறிவாளியாகக் கருதியது தான்.

 பலர் அந்த போனைக் கழட்டி சிம் மாட்டித்தரச் சொல்லி க்கேட்க, அதனையும் பலர் முன் செய்து கொடுக்க நான் ஒரு பேரறிவாளியாக அங்கீகரிக்கப்பட்டேன்
.
நடுவில் தன் உருவில் மிகவும் குறைந்த அளவில் போன போன்-கள் மீண்டும் தன் (கோபம் கொண்டிருக்குமோ) உருவில் டாப் வடிவத்தில் பெருத்தது. மீண்டும் பொதுக்கூட்டங்களில் அதனை வைத்து போட்டோ எடுப்பவர்கள் வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கப்பட்டனர். எங்கே போனாலும் தங்களுக்கென ஒரு நட்பு  வட்டத்தை உருவாக்கிக் கொண்டு அவர்கள் மூலமாக போட்டோஎடுத்துக்கொண்டனர். அவர்கள் போனில் போட்டோ எடுக்க வேண்டுமென்பதற்காகவும் இல்லாதவர்கள் அவர்களோடு நட்பு கொண்டார்கள் என்பதும் வேறு விஷயம்.

இன்று ஆண்ட்ராய்டு வரை வளர்ந்த போன்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்கள் அதனை வாங்குமுன் பெரிய கதை இருக்கத் தான் செய்கிறது என்றாலும் குடும்பத்தை பிரித்த பெருமையும் அதனுள் தான் இருக்கிறது. ஒரு தலைமை ஆசிரியர் தன் மகன் தன் அறையில் இருந்து ஹாலில் அமர்ந்திருந்த அம்மாவிடம் தண்ணீர் கேட்க குறுஞ்செய்தி அனுப்பினான் என்று மிகப் பெரிய ( இடையில் மானே தேனே பொன் மானே என்றெல்லாம் போட்டுக் கொண்டு தான் ) கூட்டத் தில் பிரசங்கிப்பதாய் நினைத்து உணவு இடைவேளையின் போது பரிமாறிக் கொண்டார்.

அவரவர்கள் எப்படி குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்பதையும் எப்படி அழகாக செல்போனில் அதனை விரைவாக பயன்படுத்த தெரிந்தவர்கள் எல்லம் அதிகம் டெக்காலஜி தெரிந்த டீச்சர் என்று பெயர் பெற்றனர். நானும் அதற்குள் அடங்கினேன். (பேட்டடி கழட்டி மாட்டத் தெரிந்ததற்காகவே அப்படிக் கருதப்பட்டேன்)

ஆனால் இன்றைய நாளில் என் மகளிடம் கூட அப்படி பீற்றிக் கொள்ள முடியவில்லை. நான் ஒரு சிறு விஷயத்தைக் கற்றுத் தேறும்முன் அவள் அதன் படிநிலைகளில் பல படிகளைத் தாண்டி விடுகிறாள். போன் சமுதாயமாக மாறிப் போன இவர்களுக்கு  நமது தபால் முறை, தந்தி முறை எல்லாம் மிக மிக கற்காலம் என்ற அளவில் மாறிப் போனது.
********************************************************************************

2 comments:

  1. அருமை, வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. நிறைய பதிவுகள் எழுதுங்கள். இது போட்டிக்கு அனுப்பப்பட்ட பதிவுதானா என சிறு ஐயம் எழுகிறது. என்னமோ போங்க. உங்கள் பதிவை நான் படித்தேனென பதிவு செய்ய கடமைப் பட்டிருக்கிறேன்.
    இப்படிக்கு,
    உங்கள் வாசகன்.

    ReplyDelete