Sunday, January 11, 2015

குழந்தைகள்....... குழந்தைகளுக்காக


***************************************************************************

குழந்தைகள் குழந்தைகளுக்காக
*****************************************************



இப்போதெல்லாம் எந்த விடுமுறை தினங்களிலும் தெருக்களில் குழந்தைகள் விளையாடுவதைக் காணவே முடிவதில்லை. ஒன்று அவர்கள் தொலைக்காட்சிபெட்டியின் முன் கிடக்கிறார்கள் அல்லது கணிணி முன் இருக்கிறார்கள். ஓடி ஆடும் விளையாட்டிலிருந்து முற்றிலுமாக அவர்கள் ஓய்ந்தே போனார்கள்.

சாதாரண நடுத்தரக்குடும்பங்களில் கூட வீடுகள் சுற்றுச் சுவர் வைக்கப் பட்டு அதன் கதவை பூட்டி விடுகிறார்கள். அந்தக் கதவுகளும் சிறைக்கதவுகள் போல கம்பிகளால் தான் செய்யப்பட்டிருக்கின்றன்.

இது மதிப்பெண் காலம் . குழந்தைகள் பாடினால், ஆடினால், விளையாடினால், பேசினால், எழுதினால், சிந்தித்தால், எல்லாமும் மதிப்பெண். ஒரு குழந்தை ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் என்பது போய் ஒரே குழந்தை அனைத்து துறையிலும் முதலாக வரவேண்டும் என்றும் பயிற்சி எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் விரும்புவதோடு எதற்காக எவ்வளவு விலையையும் தரத் தயாராக இருக்கிறார்கள். எனவே குழந்தைகளுக்கும் குழந்தைகளுக்கான குழந்தைமை போய் ஏதோ அவர்களும் ஒரு மாய வலைக்குள் சிக்கிக் கொண்டது போலவேதான் தெரிகிறது.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பிறரிடம் அறிமுகம் செய்யும் போது யாரிடமும் அதிகம் பேசாதவன், தனது வேலையை மட்டும் செய்வான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்வதாலும் அவர்களுக்கு சமூகத்தின் மீது ஒரு பிடிப்பு என்பது அறவே போய்விட்டது. அதே போலவே சமூகத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய தாக்கங்களும் கூட அவ்வாறே நிகழ்ந்து விடுகின்றன. 3 வயது பெண் குழந்தைகள் கூட ஆண்களின் வக்கிரமனதிற்கு இரையாகி விடுகின்றன. இதுவும் கூட பெண் குழந்தைகளின் விளையாட்டிற்கு மிகப் பெரிய தடையாகப் போனது. 

இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு வல்லுனர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அவர்களின் பேச்சைத் திருத்துகிறோம் எழுத்தைத் திருத்துகிறோம் இன்னும் நன்கு படிக்க வைக்கிறோம், நிறைய மதிப்பெண் பெற வைக்கிறோம் என்று சொல்லி அவர்களின் விடுமுறைகளைக் கூட காவு வாங்கிக் கொள்கின்றனர்.

தனியார் பள்ளிப் பிள்ளைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை கொடுத்தாலே பெற்றோரும் சேர்ந்து செய்யும் அளவிற்கு அவ்வளவு செயல்பாட்டுத்திட்டங்கள் (project work) வழங்கப்பட்டு விடுகிறது.கடைசி வரை ஒரு குழந்தையை நாம் குழந்தையாக வாழ விடுவதேயில்லை. ஆனாலும் அதில் நீ இவ்வளவு வாங்கவில்லை, இதனை முறையாகச் செய்யவில்லை என்று அங்கலாய்த்து அவர்களைக் காயப்படுத்தும் பெற்றோர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்

தேர்வுகளும் இவர்களை ஒரு மனப்பாட இயந்திரமாக மாற்றி வைத்திருக்கிரதே தவிர அந்தந்தத் தலைப்புகளில் உள்ள பாடங்களின் மேன்மை, தன்மை, ஆழம், அடக்கம், என்று எதனையும் ஆழ்ந்து சிந்தித்துப் படிக்காமல் மேலோட்டமாகவே படித்து எழுதி விடுகின்றனர்.

இதனால் தான் பெரும்பாலும் மாநிலத்தில் முதலாவதாக வரும் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் எப்படி முதலாவதாக வருவது என்று தெரியாமல் திணறி விடுகின்றனர்.

தொலைக்காட்சி, திரைப்படங்கள், பத்திரிக்கைகள், கணிணி, அலைபேசி, என்று எல்லா ஊடகங்களையும் தாண்டி அவர்களின் அறிவும் திறமையும் மேம்பாடாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவர்களின் மென் இதயங்கள் மற்றொரு பக்கம் கிழிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. 

வாழ்க்கையின் கோட்பாடுகள், மனிதர்களின் போக்குகள் போன்றவற்றை சில குழந்தைகள் மிகச் சரியாக புரிந்து கொள்கின்ரன. எதிர் கொள்கின்ரன. ஆனால் அதனைப் புரிந்து கொள்ள வாய்ப்போ வசதியோ இல்லாத குழந்தைகள் எல்லாவற்றிலும் தோற்று கடைசி வரை மனம் புழுங்கி உடலால் மட்டும் பெரிய மனிதனாகி மனதால்எது வளர்ச்சி என விளங்காமலேயே மட்கிவிடுகின்றன்.

எல்லோரும் சங்கங்கள், , கழகங்கள் , என்று அமைப்புகள் வைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டும் கோரிக்கைகளை வைக்கிறார்கள் . போராட்டம் செய்கிறார்கள். ஆனால் எந்த அமைப்பு, கழகம், மன்றம் என்று வைக்க இயலாத குழந்தைகள் அவர்களின் மன உளைச்சல்களை ஏக்கங்களை எங்கும் சொல்ல இயலாதவர்களாகவே காணப்படுகிறார்கள். அவர்களின் வேண்டுதல்களும் விருப்பங்களும் நிறைய பணமோ பங்களா மாதிரியான வீடோ இல்லை என்பதை எந்தப் பெற்றோரும் புரிந்து கொள்வதில்லை அவர்களும் குழ்ந்தைகளாய் இருந்தே பெரியவர்கள் ஆனார்கள் என்பதை எப்படித்தான் மறந்து போகிறார்களோ? 

குழந்தைகளின் உலகம் விரிந்து கிடக்கிறது. ஆனால் விரிந்த உலகத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல யாருமில்லை. அவர்களாக வழி கண்டு பிடித்துச் சென்றாலும் அவர்கள் முடக்கப் படுகிறார்கள் என்பதே வேதனைக்குரிய உண்மை.

அறிவியல் முன்னேற்றம் பல மேம்பாடான செயல்களைச் செய்யட்டும் . ஆணால் அதே சமயத்தில் அதன் நோக்கம் குழந்தைகளின் மேன்மையையும் கொஞ்சம் புரிந்து கொள்ளட்டும்




2 comments:

  1. அருமை
    குழந்தைகளின் மேன்மை புரிந்துகொள்ளப்பட வேண்டும்
    தம 1

    ReplyDelete
  2. குழ்ந்தைகளாய் இருந்தே பெரியவர்கள் ஆனார்கள் என்பது மட்டுமா மறந்து போனார்கள்...? ம்...

    ReplyDelete