Wednesday, October 22, 2014

பரிதாபமான தீபாவளி

பண்டிகையின் மகிழ்வில்
பள பளக்கிறது
 நமது முகங்கள்

ஆனால்
இதற்குள்
பதுங்கிக்கிடக்கும் முகங்களும்
பார்க்க இயலா முகங்களும்
நாம் அறிவதில்லை
அதற்கு ஆசைப்படுவதில்லை

விடிய விடிய
வியாபாரம் செய்தவர்கள்
காலையில் போய்
என்ன செய்வார்கள்?

இறைவனுக்குப் படைக்க என்று
எச்சில் படாமல்
நாம் பக்குவமாய் தயாரித்த
இனிப்புகளைப் போல்
அவர்கள் அதன்பின்
எப்போது தயாரிப்பார்கள்?

இன்றைய நாளுக்கென
விற்பனைக்கு வந்த ஆடுகள்
நேற்றுவரை
எந்த நிலத்தில் மேய்ந்திருக்கும்?

தொடர்மழையின் காரணமாக
கூலி வேலைக்கும் செல்லாதவர்கள்
புதுத்துணிகளை
எப்படி வாங்குவார்கள்?

விளையாட்டுக்காக
மாலைநேரத்தில்
தெரு முடிவில்
கூடும் குழந்தைகள்
பலகாரங்கள் பற்றியும்
பேசிச் சலிக்கின்றன

இல்லாத சிறுமிகள்
தங்கள்
இயலாமை காட்டவிரும்பாமல்
பழைய தீபாவளிகளைச் சொல்லி
பங்கு கொள்கின்றன

இறந்து போன முதியவர்களையோ
உறவினர்களையோ
சபித்துக் கொண்டேயும்
சில சிறுமிகள்
சிலிர்த்துக் கொள்கிறார்கள்
தங்களின்
இல்லாத தீபாவளியை

எல்லோரும்
புதிதாய் உடுத்தி
புதிதாய் சாப்பிட்டு
புதிதாய் வாழத்தானே
பண்டிகைகள்?

ஆனால்
பழைய கவலைகள்
பழைய கடன்கள்
பழைய வருத்தங்கள்
பழைய இடர்பாடுகள்
எல்லாம்
புதுப்பிக்கப்பட்டு விடுகின்றன
இன்றைய தீபாவளிகளில்

பட்டாசுகளின் சப்தத்தில்
ஒடுங்கி அழுகின்றன
அழகிய குருவிகள்

பயந்து பறக்கின்றன
உறவு சொல்லும் காக்கைகள்

மருண்டு
ஓடுகின்றன
குறும்பு செய்யும் குரங்குகள்

நம்மை மட்டும்
மகிழ்விக்கும் பட்டாசுகள்
பறவைகளையோ
தாவரங்களையோ
மகிழவைப்பதில்லை

கொன்றால் பாவம்
தின்றால் போச்சென்ற
பழைய பழமொழிகள் சொல்லி
புதிய பாவங்கள் செய்து கொள்கிறோம்

நாம்
நினைத்தால் எதுவும் செய்வோம்
விளைநிலங்களை
 விற்பனை நிலமாக்கினோம்

கடவுளுக்கே
இரண்டு பெண்டாட்டிகள்
கதை சொன்னோம்

வள்ளி திருமணம் நடத்தி
வருடா வருடம் ஒரு பெண்ணோடு
இணைவோம்

பக்தி என்ற பெயரில்
அலகு குத்திக்கொண்டு
நம் அங்கம் கிழிப்போம்

பண்டிகை தினங்களிலும்
அதற்கு முந்தைய
சில தினங்களிலும்
பம்பரமாய் சுழலும்
பெண்களின் மனமும் உடலும்!

எல்லாக் காலங்களிலும்
பல காரங்களோடு
வெந்து, உருகி
பொரிந்து வாடும் பெண்களின்
மனங்களை
எவரும்
கண்டு கொண்டதாய்
தெரியவில்லை

ஆண்சிங்கம் என்று
அலட்டிக்கொள்வார்கள்
இது இன்னும்
அவர்கள்
மனங்களுக்குள்
மிருகத்தன்மை
மீதமிருப்பதைத்தானே
காட்டுகிறது

இந்த தீபாவளியிலேனும்
அந்த எண்ணங்கள்
பட்டாசுகளோடு
பஸ்பமாய் போகட்டும்

எல்லாமும்மீறி
எல்லோரும் நினைப்போம்

உறவற்ற நிலைமையில்
யாருமற்ற தனிமையில்
எல்லா ஊர்களிலும்
ஒன்றிரண்டாவது இருக்கும்
அனாதை இல்லங்களை

நமது
மகிழ்ச்சியின் ஊடே
அவர்களின்
மகிழ்ச்சிக்கும்
ஏற்பாடு செய்வோம்

மாசு ஏற்படுத்தும்’
பட்டாசுகள் தவிர்ப்போம்

உயிர்களை கொல்லும்
உணர்வுகள் ததும்ப
உயிர்களை நேசிப்போம்

நடந்து முடிந்த
சங்கட சம்பவங்கள்
சந்தோஷங்களாய் மாறட்டும்

சிறிய சண்டையில்
தொலைந்த போன உறவுகள்
மீண்டும் துளிர்க்கட்டும்

காலம் வழங்கி வந்த
 காயங்கள் ஆறி
களிப்புகளாக மாறட்டும்

நீண்ட இரவுக்குப்பின்னும்
ஒரு
விடியல் இருப்பது போலவே
எல்லா
இருண்ட மனங்களுக்குள்ளும்
ஒரு
தெளிவு பிறக்கட்டும்

ஆறாத காயம்
மீளாத்துயர் என்று
எதுவுமே இல்லை
என்று உணர்வோம்

தீபாவளீகள்
தித்திப்புகளை மட்டுமல்ல
எல்லா சுவைகளையும் தரட்டும்

மீண்டு
வருகிற மனதை மட்டும்
வரமாய்க் கேட்போம்.
**********************************************************

3 comments:

 1. இந்த தீபாவளியிலேனும்
  அந்த எண்ணங்கள்
  பட்டாசுகளோடு
  பஸ்பமாய் போகட்டும்

  ReplyDelete
 2. payanulla padhivittamaikku nandri. surendran

  ReplyDelete
 3. எல்லாவற்றிற்கும் இன்னொரு முகம் உண்டு.
  பெரும்பாலோர்க்குத் தெரிகின்ற அந்த முகத்தை ஊடுருவித் தங்கள் கவிதைக்கண்கள் கண்டிருக்கின்றன.
  திருவிழாக்கள் காயங்களை உருவாக்க அல்ல அதை ஆற்றுவதாய் இருக்கட்டும் என்கிற தங்களின் சிந்தனை நெஞ்சம் தொடுகிறது.
  மனம் தொட்ட பதிவு!

  ReplyDelete