Saturday, October 11, 2014

புத்தகம் இல்லாத் திருநாள்

இன்று புதுகையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் (NO BOOK DAY) புத்தகம் இல்லாத் திருநாள் கொண்டாடப்பட்டது.
புத்தகம் இல்லாமல் ஆனால் அறிவு விரிவு செய்ய வேண்டும், ஆற்றல் பெருக வேண்டும் என்ற நோக்கோடு நாணயவியல் சங்கத்தின் நிறுவனர் தலைவர் திரு எஸ்.டி.பஷீர் அலி அவர்கள் மூலம் அஞ்சல்தலை,நாணயங்கள், கண்காட்சியும் புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் தலைவர்,திரு எஸ்.இளங்கோ அவர்கள் மூலம் குறும்படங்கள் திரையிடலும் நடந்தது.

திரு.பஷீர் அலி
*****************

நான் திரு பஷீர் அலி அவர்களுடன் பேசும் வரையிலும் நாணயம், அஞ்சல் தலை போன்றவற்றை சேகரிப்பவர்கள் பொழுதை வெட்டியாகக் கழிப்பவர்கள் என்றே நம்பிருந்தேன்.

அவருடைய நாணயங்கள். அஞ்சல் தலை சேகரிப்பு பார்த்து பிரமிப்பு ஏற்பட்டது. அந்த அற்புதமான பணி என்னை மிகவும் கவர்ந்ததால் அவரிடம் பேசினேன். பிறகு தான் அவர் எவ்வளவு வரலாற்று சான்றுகளை பாதுகாக்கும் அற்புதப் பணியை செய்கிறார் என்று புரிந்தது.

நம் தமிழர்கள் , இந்தியர்கள் பல விஷ்யங்களை ஆவணப்படுத்துவதே இல்லை. அதனால்தான் நமது சித்தர்கள், மூதாதையர்கள் கூறிய தியான முறைகளை வெளிநாட்டவர்கள் உணர்ந்து கூறும் போது தான் அதன் மேல் பிரியமும் ஈடுபாடும் அதிகம் ஆகிறது.

அவரும் அதனை வலியுறுத்து வது போல் இந்தியர்களைப் போல் ஒழுங்கு, மேன்மை, பண்பாடு,வணிகம், ஆளுமை, திறமை கொண்டவர்கள் யாரும் இல்லை. எந்த நாட்டிலும் பாருங்கள்...எங்கேனும் ஒரு இந்தியன் பணிபுரிவான் என்றார். யோசித்தபோது ஆம் என்று தோன்றியது.





எனவேதான் அந்தந்த காலங்களில் வெளியிடப்படும் நாணயங்கள் நமது வளம், மேன்மை,மனம் போன்றவற்றை பிரதிபலிக்கும் என்றார். நான் புரியாமல் பார்க்க அந்தக் காலத்தில் தங்கத்தால் ஆன நாணயங்கள் இருந்தன, அதன்பின் வெள்ளிக்கு மாறியது. பின்னர் செம்பு, பித்தளை போன்ற உலோகங்களில் தயாரிக்கப்பட்டது.அதன் பின் அலுமினியத்தால் ஆனது, தற்போது சில்வரில் வருகிறது . தங்கத்தால் நாணயங்கள் செய்தவர்கஎன்றால் நாம் எவ்வளவு செல்வ வளம் கொண்டவர்கள்,  பண்பாடு கொண்டவர்கள் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள் என்றார்.

இது இந்தியர்களின் உலகத்தின் அழகிய வரலாறு...ஒரு 100 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் எப்படிப்பட்டவர்கள் என்பது நம் சந்ததிக்குத் தெரிவிக்கும் பணியை யார் தான் செய்வது?
நாமெல்லாம்  அவரவர்க்குத் தேவையான உணவு, மேம்பாடு, என்று தானே அலைகிறோம்? இவைகளை சேர்ப்பதும் பராமரிப்பதும் யார்?

அந்த அற்புதமான பணி செய்து வரும் திரு.பஷீர் அலி அவர்களைப் பாராட்ட வேண்டும்.
( எனக்கு புத்தி புகட்டியதற்கும் சேர்த்து )

திரு எஸ்.இளங்கோ
*************************
திரு எஸ் இளங்கோ அவர்கள்  மிக அற்புதமான திரைப்படங்களின் ரசனையாளர். ( நானும் என் மகள் ராகசூர்யாவும் இவரது ரசனைக்கு ரசனையாலர்கள் ) புதுகை பிலிம் சொசைட்டி என்று அமைப்பைத் தொடங்கி எங்களுக்கு பல்வேறு மொழிப்படங்களை மாதாமாதம் திரையிட்டுக்காட்டுவார்.

ஆனால் அவர் இன்று இந்தக் குழந்தைகளோடு பேசியதும் அவர்களுக்குத் திரையிட்டுக் காட்டிய படங்களைப் பார்க்கும் போது எனக்கு வியப்பாய் இருந்தது. ஏனெனில் இவர் ஒரு அரசுடமை வங்கியில் காசாளராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.

எனக்கு திரைப்படம் ஓடிக்கொண்டு இருந்த போது இந்த மாணவர்களின் முகம் பார்க்க ஆசையாக இருந்தது. பிடித்திருந்தது. ரெட் பலூன் என்ற படத்திற்கு...வாவ்...ஓஓஓஓஒ.....ஹே......என்று சிறு ஒலிகள் எழுப்பிக் கொண்டே பார்த்து ரசித்தார்கள்...

தாளாளர் கவிஞர் தங்கம் மூர்த்தி  மானவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஒரு பகுதியினர் கண்காட்சியில் இருக்கும் போது ஒரு பகுதியினர் படம் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தார்.

இதனைப் மிக அழகாக பயன் படுத்திக் கொண்டார் திரு எஸ்.இளங்கோ. அவரவர் வயதுக்கேற்றபடி படங்களைப் பிரித்திருந்தார்...சார்லின் சாப்ளின் படங்கள் கூட பிரிக்கப் பட்டது தான் மிகப் பெரிய விஷேசம்.
1.தி ரெட் பலூன் 2.ஸ்வாட்சா 3.தி எர்த் 4.நோ காட்  போன்றவை

திரு. கவிஞர் தங்கம்மூர்த்தி
*******************************
உண்மையில் ஒரு மாணவன் அதிக மதிப்பெண் எடுப்பதால் மட்டும் உயர்ந்து விட மாட்டான். அவனுக்கு பல விஷயங்களை அறிமுகப் படுத்த வேண்டும் என்று நினைப்பவர்.
திரு பஷீர் அலி அவர்களைப் பாராட்டும் போது தன் பள்ளியின் மாணவன் ஆதவ் குகன் (தமிழாசிரியர்திரு துரைக்குமரனின் மகன்) என்பவனை அறிமுகம் செய்து கை தட்டச் சொல்லி பாராட்டினார்.
ஒரு பாராட்டு ஒருவனை எவ்வளவு மேன்மைப் படுத்தும் , உயர்த்தும் என்ற உளவியல்  நன்கு அறிந்தவர்.
குழந்தை நேசிப்பாளராகிய அவருக்கு குழந்தை நேசிப்பாளராகிய எனது அன்பின் வாழ்த்துக்கள்...

மற்றபடி விழாவிற்கு வந்திருந்த அஞ்சலி தங்கம் மூர்த்தி, டாக்டர்கெ.ஹெச்.சலிம், நண்பர்பேரவை முத்துசாமி, திருவி.என்.எஸ்.செந்தில், திரு.கருணாகரன், எம்.செந்தில்குமார். எல்லோருக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் உரியதாகுக...

2 comments:

  1. நிறய தகவல்கள் கொண்ட பதிவு ..
    தொடர்க ..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete