Friday, June 20, 2014

பூமிப்பந்து...பூப்பந்து

பெளர்ணமி புறப்படப்போகிறது
ஆயத்தமாய் இரு!

உறவுக்கூண்டை விடுத்து
வீதிக்கு வந்து
கவிதைகளால்
பொங்கல் வை!

அழுக்கை பொசுக்கு
பொறாமை கருக்கு

எல்லா நீர் நிலைகளையும் ரசி
அழுக்கு குளமாயினும்
அதன் அழகை நின்று புசி

ஆடுகள் மேய்வதும்
மாடுகள் அசைவதும்
கவிதைதான்

கண்களால்
யாகம் நடத்து

புல்வெளியெல்லாம்
 உன்
பெயர் சொல்லட்டும்

வீசும் தென்றலுக்கு
மேனியைத் தியாகம் செய்

காற்றில் அசையும் மரங்களுக்கு
இசை சொல்லிக்கொடு

ஊமத்தம் பூவுக்கும்
உன்னதம் உண்டு

பூமிக்குச் சொல்லிக்கொடு
பூக்களின் புகழை

வெயில் தாங்கு
வியர்வை வாங்கு

துன்பத்தை
 துவைத்துப் போடு

இன்பத்தை
இரவலாவது வாங்கு

உழைப்பு செய்
களைப்பு தவிர்

இப்போது பார்
பூமி ஓர்
உல்லாசப் பூப்பந்து

3 comments:

  1. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ////துன்பத்தை
    துவைத்துப் போடு

    இன்பத்தை
    இரவலாவது வாங்கு///
    அருமை சகோதரியாரே

    ReplyDelete