Wednesday, June 18, 2014

என்னுரை

என்னுரை

(போதிமரம் என்ற எனது நூலில் நான் எழுதியது)

   இந்தப்புத்தகம் எவ்வளவுக்கெவ்வளவு நம்பிக்கை கொடுக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு பயத்தையும் தருகிறது. 16 புத்தகங்கள் இயற்றியவள் எனும் போது கர்வம் பிறக்கவில்லையா?” என்கிறார்கள் நண்பர்கள். “இல்லை, கவலை பிறக்கிறது” என்கிறேன் நான். தொடரவேண்டிய கவலையில்.


பழைய கனவுகளும் பழைய சோகங்களுமே இப்புத்தகத்தை நிறைக்கின்றன. இவைகள் அடைகாக்கப்பட்ட கற்பனைகள்.


பெண் என்பவளுக்கான அகராதியை அச்சிட்டு வைத்தோர் மத்தியில் நடப்பது எனக்குள் எப்போதும் எச்சரிக்கையைத் தருகிறது. அந்த எச்சரிக்கை எனது நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அரசு மணிமேகலை, செளந்திரா கைலாசம், சரளா இராஜகோபாலன் என்ற விருச்சங்களின் விழுதுகளாய் இரா.ஆனந்தி, நீலா.....எனப் பெண்களின் எழுத்துக்கள் பிரகாசிக்கும் போது மகிழ்ச்சியே என் மனதுக்கு மகுடம் சூட்டுவதாய் அமைகிறது.


கனவுகளற்று கவலைகளற்று தூங்கும் குழந்தைகள் போலவே விரிந்த வானத்தின் கீழ் மாலை நேரத்தின் மெல்லிய தென்றலை சுவைத்துக் கொண்டே புத்தகங்கள் சூழ வாழத்தான் ஆசை பிறக்கிறது. எழுத வேண்டும், எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கை குறுகுறுக்கிறது.


நான் எழுதுகிறேனோ இல்லையோ ஜுன் மாதத்திலிருந்தே ‘சுதந்திர தின விழா சுவாதி நலமா?’ என்று கேட்டுக்குவியும் கடிதங்கள் தொலைபேசி பேச்சுக்கள் என்னை இந்த வருடம் ரொம்பவும் தான் பயமுறுத்தி விட்டது. இல்லத்தில் கிடைத்த பதவி உயர்வோடு பள்ளியில் கிடைத்த பதவி உயர்வும் சிறிதாக , மிகச் சிறிதாக இடர் செய்தாலும் எதுவும் எதையும் தடை செய்து விட முடியாது என்ற நிதர்சனத்தை புரிந்து கொண்டதால் தொடர்ந்து தொடர்ந்து எழுத முடிகிறது.

நினைவுக்கூடுகளில் பதிந்தவைகளைப் பதிப்பது சிரமமாயில்லை.விடியலின் பதிவுகள் இரவுகளில் தெரியும். வேதனைகளின் சோர்வு வெற்றிகளில் மலரும். எனவேதான் எனக்கான வெற்றி எனது தேடுதலில் இருப்பதை உணர்கிறேன். எனைச் சுற்றிலும் மலர்வதாய் மகிழ்கிறேன்

என் மீது எப்போதும் பிரியம் வைத்திருக்கும் வென்னரசு ஐயா, திரு.கவிதைப்பித்தன், கடவூர் மணிமாறன் அவர்கள், திரு v.e.s. வெங்கடாசலம் அவர்கள், புதுகை தர்மராஜன் அவர்கள், ஏர்வாடி இராதாகிருஷ்ணன், இரா.சம்பத்குமார் அண்ணன், புலவர் பூங்கோதை, கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர்கள் மு.முருகேஷ், வெண்ணிலா, முகிலரசு, பூவண்ணன், திரு.முத்துநிலவன்,கம்பன் கழக கோவிந்தராஜன் ஐயா, சு.ம.சரளா, வந்தை சிவக்குமார், சந்திரா ரவீந்திரன், பாண்டியன் புத்தகம் முத்துப்பாண்டியன் அவர்கள், தமிழ்கோட்டம் பே.க.வேலாயுதம் , பாலா தமிழரங்கத்து ராமையா அவர்கள், எனது இனிய நட்புகளான வானதி, தானம்மா, செந்திலா, பிரபாகரன், ராதாகிருஷ்ணன் என ஒரு பட்டியல் நீள்கிறது. என் தன்னம்பிக்கையை வளர்த்த பெற்றோருக்கும் அந்த நம்பிக்கையை உயிர்ப்பித்து ஊக்கமளிக்கிற என் இனிய அன்பான கணவர் செல்வக்குமார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்களும் வாகைகளும் உரித்தாகுக.

இப்புத்தகத்தை அழகுற அச்சமைத்துக் கொடுத்த ஓவியா கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸுக்கு நன்றி! முகப்போவியம் வரைந்து தந்த தம்பி பூபதிக்கும், புத்தகத்தின் உள்வடிவமைப்பை சிறப்பாக செய்து கொடுத்த ஓவியா வரதராஜன் அவர்களுக்கும் நன்றி

குறைகளைச் சுட்டுங்கள்
கூர்தீட்டிக்க்கொள்கிறேன்

நிறைகளைப் பாராட்டுங்கள்
நிமிர்ந்து செல்கிறேன்

நேசங்களுடன்
சுவாதி

No comments:

Post a Comment