Monday, June 2, 2014

பள்ளி துவக்கம்

   இன்று பள்ளி தொடக்கம். பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளி 9 ம் தேதி என்று கூறப்பட்ட வதந்தியால் ஊருக்குள் நான் நுழைவதைப் பார்த்த பிறகு அவசர அவசரமாக குளித்து விட்டு( நிறைய பவுடர் போட்டுக் கொண்டு ) வர ஆரம்பித்தனர். என்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டு அரைமணிநேரம் என்னைப் பேட்டி எடுத்தார்கள். நான் பார்த்த படங்கள், சென்ற ஊர்கள், கோயில்கள், வாங்கியவை, ( வாங்கிய திட்டுக்களை ஒருவரிடமும் சொல்ல வில்லையே)
 என்ன செய்தேன்? என்பதை எல்லாம் மாறி மாறி கேள்வி கேட்டு தொலைத்து எடுத்தனர். ( மனசுக்குள் எப்பவுமே நீங்களே கேள்வி கேட்டு எத்தனை நாட்கள் எங்களை திடு திரு நு முழிக்க வச்சுருப்பீங்கன்னு நினைச்சுருப்பாங்களோ???)


முதல் நாள் என்பதால் எல்லோருடைய நெற்றியிலும் விபூதி, குங்குமம், மஞ்சள், என்று நெற்றியில் இடமே இல்லாமல் பக்கிசிரத்தையாய் பூசி வந்தனர். பெண் குழந்தைகளில் பலர் பூ சூடி வந்திருந்தனர்.


   வெயில் என்றும் பாராமல் கருமமே கண்ணாக விளையாடியதால் பலருக்கு வெயில் உபாதைகளான கட்டிகள், வியற்குரு போன்ற சருமத்தொல்லைகள் பரவியிருந்தது.

   காலையே தலைவர் தொலைபேசி தன் சந்தேகம் தீர்த்துக் கொண்டார். ( இன்று பள்ளி உண்டா? நோட்டு வந்து விட்டதா? சீருடைகள் வழங்கி விடலாமா? என்பது தான்.)

   நான் என் மாணவர்களோடு அளவளாவிக் கொண்டிருக்கும் போதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பக் கடித்ததோடும், புதிய சேர்க்கைக்கு விண்ணப்பம் கேட்டும், இன்றே செர்க்கவா 9 ம் தே தி சேர்க்கவா என்று என்னிடமே ஜோதிடம் கேட்டுக் கொண்டும் இருந்தார்கள். மதியம் 12 மணி வரை எதற்கும் நேரமில்லை. சீருடைகள், குறிப்பேடுகள்,புத்தகப்பை,வண்ணக்கிரேயான்கள்,புத்தகங்கள் எல்லாம் வழ்ங்கி, அதற்கு கையெழுத்து வாங்கி அடேயப்பா...


   சீருடைக் கொடுத்து திரும்புவதற்குள் மாணவர்கள் எல்லோரும் அடுத்த அறைக்குச் சென்று பழைய சீர்டைகளைக் கழட்டிக் கக்கத்தில் வைத்துக்கொண்டு புதிய சீருடையுட்ன் நின்றார்கள், என்னவோ பெரிதாய் சாதித்த மகிழ்வில். ( நான் சொல்லவேயில்லையேப்பா)

   பள்ளி சுற்றுச் சுவரைச் சுற்றி கருவேல மரங்கள் அது ஒரு சுற்றுச் சுவர் எழுப்பியிருந்தது. நல்ல வேளை ( 3 வேப்பமரம், 1 புங்க மரம், 1 முருங்கை, 1 குல்மொஹர்) மரங்களுக்குத் தினமும் தண்ணீர் விடச் சொல்லி ஒரு இளைஞனிடம் சாவி கொடுத்து 100 ரூ கொடுத்து வந்தேன். அவன் நன்றாகவே நீர் ஊற்றிப் பராமரித்திருந்தான்.

   தளதள வென்று வளர்ந்து தலை அசைத்து என்னை வரவேற்பது போலவும் எனக்கு நன்றி கூறியது போல வும் இருந்தது, அந்த மரங்களின் அசைவுகள். எப்போதும் விடுமுறையென்றாலும் நான்கு முறையேனும் பள்ளி செல்வது என் வழக்கம். இம்முறை அதிக வேலைப் பளுவினாலும் உறவினர் வருகையாலும் செல்ல இயலவில்லை. 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடச் சென்றதோடு சரி. அதனால் பள்ளியைப் பார்க்க ஆவலாகவே இருந்தது.

 ஒரு நல்ல தியானத்தோடு வகுப்பைத் ஆரம்பிக்கலாம் என்றேன். உடனே ஒருத்தி எழுந்து தியானம் ஓ.கே. பட் நோ வகுப்பு என்றாள். ( ஐயோ என் பிள்ளைகள் இங்கிலீசு பேசுறாங்கப்பா)

    சர்தான். நாளையே அரம்பிக்கலாம் என்றேன். நாளை செவ்வாய்க்கிழமை. புதன் கிழமை தான் ஆரம்பிக்க வேண்டும் என்றாள்.(அவளே தான்) அதுவும் சரிதான் என்றேன்.( எல்லாம் என் நேரம் டா)

   பள்ளி மாணவர் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றேன். எவள் வகுப்பை புதன் கிழமை தொடங்கலாம் என்றாளோ அவளையே போட்டியேயின்றி ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள்.அவள் தான் மாணவர் தலைவி என்று அறிவித்ததும் என்னை ஒரு பார்வை பார்த்தாள். ( என்னவாக இருக்கும்?) அவளாகவே வந்து என் கை குலுக்கி வாழ்த்துக்கள் என்றாள். உண்மையில் நான் மிரண்டு போனேன்.முதலில் நான் தானே அவளூக்கு வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்????

   உணவு இடைவேளையின் போது எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோம் என்றாள். ( நான் வழக்கமாக அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் தான் சாப்பிடும் வழக்கம் வைத்திருந்தேன்) உங்கள் சாப்பாட்டை எடுத்து வாருங்கள் என்றாள். நான் போவத்ற்கு முன்பே எனக்காக பாய் விரிக்கப் பட்டிருந்தது.

 அவள் பெயர் மனோஜா. ( கடைசி எழுத்து ஜே வருதே அதனால் இருக்குமோ???) பள்ளியில் நிறைய கதைப் புத்தகங்கள் இருக்கிறது. எல்லோரும் அதனைப் படிக்க வேண்டும் என்றும் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என்றும் ஆணையிட்டாள். ஆண்பிள்ளைகள் எப்போதுமே கொஞ்சம் அடங்காமல் பேசிக்கொண்டோ விளையாண்டு கொண்டோ ஏதேனும்குறும்பு செய்து கொண்டே இருப்பார்கள். அதுவும் முதல் நாள் அவர்களை அடக்குவது என்பது...????


 ஒருவரும் சத்தம் கித்தம் எதுவும் போடலையே. “மூச்” ( நான் தான் சொன்னேனே அவள் பெயரில் “ஜே” இருக்குனு. ஒருவரைக் கூட வெளியேஎ விளையாட விடவில்லை வெயில் அதிகமாக இருக்குதாம். ( அவளே தான் சொன்னாள்) ( சரி சரி ஏதோ நல்லது நடந்தா சரிதானே?)

  முதல் நாள் இனிமையாக இருந்தாலே எல்லா நாளும் இனிமையாக இருக்கும் ( முதல் நாள் நல்லாயில்லாட்டாலும் நல்லா ஆக்கிடுவோம்ல....)

  முதல் நாளை வெற்றிகரமாகத்துவங்கியுள்ளேன். வெற்றி பெறுவேன். ( பெறுவேன்ல)
              ********************************************

பின்குறிப்பு1
*************

   இந்த் ஊரிலிருந்து 6 பேர் 10 வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்கள். எல்லோருமே 400 க்குமேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்களாம். ஒருவர் மட்டும் தொழில் நுட்பக் கல்வி மற்றவர்கள் மேற்படிப்பு. அனைவருமே அறிவியல் கணிதம் பிரிவை எடுத்துள்ளார்களாம். அதில் ஒருவனுக்கு மட்டும் மருத்துவராக விருப்பமாம். பேசப் பேச ஆசையாகவும் இன்று முழுவதும் மகிழ்வாகவும் இருந்தது போல் தோன்றியது.

பின்குறிப்பு2
**************

பற்பல சிற்சில தொழில் நுட்பக் காரணங்களால் புகைப்படம் எடுக்க இயல வில்லை.வருத்தம் மனோஜா வுக்கு மட்டும் இல்லை. தலைவருக்கும் வருத்தம் தானாம். புகைப்படம் எடுக்க நாளையும் வருவேன் என்று சொல்லியிருக்கிறார்.

   

5 comments:

 1. புதிய கல்வியாண்டு வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 2. குழந்தைகளிடம் மட்டும் குறும்பு இல்லை...! வாழ்த்துக்கள் ஆசிரியரே...!

  ReplyDelete
 3. இதேப்போன்று எல்லா நாளும் இனிய நாளாய் அமை வாழ்த்துகள்

  ReplyDelete
 4. அருமையான பிள்ளைகள் போல! எந்த ஊர் பள்ளி இது? சிறியவயது நினைவுகள் எழுகிறது இந்த பதிவை பார்த்து!

  ReplyDelete
 5. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 8:42 PM

  அருமை தோழி உங்கள் மேலான மதிப்பு கூடிக் கொண்டே போகிறது

  ReplyDelete