Tuesday, April 8, 2014

நான் கலந்து கொண்ட விருந்து

   ஒரு சமயம் நான் வேலை பார்க்கும் பள்ளியின் ஊர்த்தலைவர் என்னை ஒரு விழாவிற்கு அழைத்தார். அழைப்பிதழ் இன்றி வீட்டுக்கு வந்து சந்தனம்  குங்குமம், மஞ்சள் , வெற்றிலை, பாக்கு வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து அவர்கள் ஊரில் இருக்கும் (ஒரே மண்டபம் தான்) மண்டபத்திற்கு இத்தனை மணியிலிருந்து இத்தனை மணிவரை வர வேண்டும். ஆனால் நீங்கள் தான் நிகழ்ச்சி தொடங்கி வைப்பதால் மிகச் சரியாக வரவேண்டும். உங்கள் இலக்கியக் கூட்டங்கள் போல 6 மணி போட்டு 7 மணி அல்லது நோக்கம் போல் வருவாகளே அப்படியில்லை சரியான டயத்துக்கு (டைம் என்று சொல்வது டயம் என்று சொல்வதே பெரும்பாலும் புழக்கத்தில் உள்ளது) வரவேண்டும் என்றார். நிகழ்ச்சி மதியம் 12 மணிக்கு என்றார்.
 
   த்லைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றதும் போனது அந்த கிராமம் என்பதால் அந்த ஊரின் மீதும் அந்த மக்களின் மீதும் எப்போதும் தனி அன்பும் பற்றும் நேசமும் எனக்கு உண்டு . பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளி 12 கி.மீ தூரம் என்பதால் நான் நிறுத்தத்தின் அருகே ஒரு வீட்டில் இரு சக்கர வாகனம் (ஸ்கூட்டிபெப்) போட்டிருந்தேன்.நான் அந்த வாக்னதில் பள்ளியில் இருந்து கிளம்பும் போது ஒரு ஹாரன் ஒலியோடு சாலைகளைக்கடக்கும் போது அந்தந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கும் பெரியோர்கள் எழுந்து நிற்பார்கள்.அவர்கள் என்னைவிட வயதில், அனுபத்தில் மிக மிகப் பெரியவர்கள். ஆனால் எழுந்து நிற்பார்கள். வயதான அவர்கள் சுருட்டு பிடிக்கும் போது அந்த வழியாக நான் செல்லும் போது கையை பின்னால் மறைத்து வைத்துக் கொள்வார்கள்

   அந்த ஊரில் என்ன நிகழ்வென்றாலும் பள்ளி ஆசிரியர்களை அழைக்காமல் அவர்கள் செய்வதில்லை ...முதல் நாற்று, அம்மன் திருவிழா, வீட்டில் நடக்கும் விழாக்கள் ஊர் பொது விழாக்கள் என்று அனைத்திற்கும் நமை வந்து பேசச் சொல்லி சிறப்பு செய்வார்கள். கல்வியாளர்களை, கல்வியைப் போற்றி ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கும் ஊர் அது. அதனாலும் எனக்கு அந்த ஊரின் மீது தனியாத பிரியம் உண்டு.

   சரி விஷயத்திற்கு வருகிறேன். சரி சரி மிகச் சரியாக வந்து விடுகிறேன் என்றேன்( சரியாகச் சென்று விட்டேன். எப்படி பயமுறுத்தி இருக்காரு பாருங்க. இப்படி கிண்டல் பண்ற அளவுக்கு இந்த இலக்கியக் கூட்டங்கள் நடக்குதே...இனிமேலாவது எல்லோரும் சரியான நேரத்திற்கு வாங்கப்பா)

   உற்றார் உறவினர் மற்றும் சுற்றத்தினர் அனைவரையும் அழைத்திருந்தார் போல. அவருடைய ஒரே மகள் திருமணம் ஒரு மாதன் கழித்து நிகழ இருக்கிறது . அதற்கு முன் அந்தப் பெண்ணுக்கு முறை செய்யும் எல்லோரும் (மொய் விருந்து மாதிரி) செய்வதற்காகவும் அழைத்திருந்தார். ( பின் குறிப்பு... யாருக்கும் அழைப்பிதழ் தரவில்லை. ஏனென்றால் அவர் அழைப்பிதழே அடிக்கவில்லை.வெற்றிலை , பாக்கு சந்தன்ம்.மஞ்சள், குங்குமம் வைத்தே அனைவரையும் அழைத்திருந்தார்)

  மண்டபம் உறவினர்களால் நிரம்பி வழிந்தது மேடையில் (மேடை போன்ற ஒன்றை பெஞ்ச் வைத்து கட்டி உருவாக்கியிருந்தனர்.( (பெஞ்ச் உபயம் பள்ளி தான்)

  நல்லவேளை நிகழ்ச்சி தொடக்கம் என்பதால் குத்து விளக்கேற்றி விட்டு நானே பேசினேன். நான் பேசியதைக் கொஞ்சம் கேட்டார்கள்.( அந்த ஊரின் முன்னால் தலைமைஆசிரியர் என்பதாலும்..ஏதோ சிரிப்பாய் பேசுவேன் என்பதாலும்.) ஆனால் எனக்கு பின்னால் பேசிய பேச்சாளர்களின் பேச்சை ஒருவருமே கேட்கவில்லை. ( வாழ்க்கையில் ஒரே ஒரு முறை பேசினாலும் பேச்சாளர்கள் தானே)

   மேல்சட்டை மட்டும் அணிந்திருந்த குழந்தைகள் மேடைகருகே சப்தமிட்டுக் கொண்டிருந்தன. ஒருவர் தங்கள் வீட்டுக் கல்யாணத்தில் நடந்ததை சிறு சிறு கற்பனைகள் சேர்த்து சுவராசியமாக மைக் அலறுவதை விட ச்ற்று அதிகமாகவே கத்தி பிரதாஸ்பித்துக் கொண்டிருந்தார். ஒரு பெண் அதிரசத்துக்கு பக்குவம் கேட்டுக் கொண்டிருந்தாள்.. கேட்பவள் மறு நாளே செய்துவிடப் போகிற தோரணையில் அமர்ந்திருந்தாள். கல்லூரிகளில் பள்ளிகளில் படிக்கும் பெண்கள் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.( சப்பை மேட்டருக்கெல்லாம்)

   12 மணியிலிருந்து 1.30 மணி வரை தான் பேச்சாளர்கள்(????!!!!!) அனுமதிக்கப்பட்டார்கள். அதன் பின் உணவருந்தும் இடத்திற்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். பெரும்பாலும் அசைவ விருந்தில் சைவச் சாப்பாடு ஒதுக்கப்பட்டுருந்தாலும் நான் சாப்பிடுவதில்லை.ஒரு மாதிரியான வாடை, எனக்கு வாந்தி, மயக்கம் மற்றும் இன்னபிற தொந்திரவுகளைத் தருவதால் அவர்களில் நலன் கருதி நான் தவிர்த்து வந்தேன்..

   என்னிடம் அந்தத் தலைவர் எங்கள் வீட்டு மாடிக்கு தலை அம்மா ( தலைமை ஆசிரியரைத் தான் அவர் அப்படி அழைக்கிறார்) வந்து போக வேண்டும் என்றார். நான் கிளம்புகிறேன். வேறு நிகழ்ச்சிக்கு கந்தர்வக்கோட்டையில் இருக்கிறது. வேறு நிகழ்ச்சி என்றால் தவிர்க்கலாம். இது புத்தக வெளியீட்டு விழா என் பெயர் வேறு போட்டிருக்கிறார்கள் எனவே நான் கிளம்புகிறேன் என்றேன்.நீங்கள் கிளம்பலாம். ஆனால் மாடிக்கு வந்து என் பெண்ணுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று பார்த்து விட்டு உங்கள் ஆலோசனைகளையும் தாருங்களேன் என்றார். நான் எவ்வளவோ மறுத்தும் விடாத்தால் சரிதான் என்று மாடிக்குப்போனால் பெரிய கூடம் அதன் பின்புறம் ஒரு அறையில் அழகாக அடுக்கி வைத்திருந்தனர். இதில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்களேன் என்றார். எனக்கென்ன தெரியும்? நாம் கல்யாண வீட்டுக்குப் போனால் சாப்பாட்டுக் கூடமும் மொய் எழுதும் இடமும் தானே தெரிகிறது வேறெங்கே செல்ல முடிகிறது?.. ஒவ்வொரு கல்யாணத்திற்கும் விடுப்பு எடுக்க முடியாதல்லவா?  .எனவே சீர்வரிசைகள் பார்க்கும் பாக்கியங்கள் எனக்குக் கிட்டியதில்லை. அந்த அளவுக்கு பாத்திர அறிவும் எனக்கில்லை என்றே தோன்றியது. ஏதேனும் பெரியவர்களைக் கேளுங்களேன் என்று சொல்ல வார்த்தை இல்லாமல் நெளிந்தேன். பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் என்றால் எவ்வளவு தெரிந்து வைத்திருக்க வேண்டியிருக்கிறது என்று ஆயாசமாக இருந்தது எனக்கு.

   இவர்கள் என்னை ஒரு சாதாரணப் பெண்ணாகப் பார்க்காமல் எல்லாம் தெரிந்த மாமேதையாகப் பார்க்கிறார்களே என்ற பெருமையும் கூடவே எழுந்த்து. உங்கள் மனதைப் போல உங்கள் மகளும் நல்ல பெருவாழ்வு வாழ்வாள், பாத்திரங்களா பெரிய விஷயம் பண்பாடல்லவா முக்கியம் . அவளிடம் நல்ல பண்பும் அறிவும் இருக்கிறது எனவே பாத்திரங்கள் பற்றி நீங்கள் ஏதும் கவலைப்படத்தேவை யில்ல்லை என்றேன்.  ( அப்பாடா. ஒரு வாறாக சமாளித்து விட்டேன்) சரிவிடுங்கள் உள்ளே வாருங்கள் என்று தான் வாங்கிய புடவைகள், இரவு அங்கிகள் (நைட்டிதான்)  என்று அனைத்தையும் காண்பித்தார். வீடும் அவர் மனதைப் போலவே விசாலமானதாகவும் நேர்த்தியாகவும் சுத்த்ச்மானதாகவும் இருந்தது.

   எனக்குக் கவலை வேறு வந்துவிட்டது. அந்த வீட்டில் அவர், அவருடைய மனைவி, மகள்,மகன், அவருடைய அம்மா அவ்வளவுதான். அத்தனை பேரும் என் அருகில் நிற்கிறார்கள் கீழே விருந்து நடந்துகொண்டிருக்கிறது. கிராமம் ஆயிற்றே. வந்திருந்தவர்களைக் கவனிக்காவிட்டால் மரியாதை தெரியாதன் என்பார்களே என் மனதிற்குள் அவர் மீதான அக்கறையும் பயமும் கூட இருந்தது. ஆனால் அந்தக் குடும்பமே அது பற்றி ஒரு சிறு விநாடி அளவுக்குக்கூட கவலைப் படவில்லை.

   மேலும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள் அங்கே. புதிதாக வாங்கப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பில் புதிய புதிய பாத்திரங்களை வைத்து சாதம், கத்திரிக்காய் சாம்பார், மிளகு ரசம், சுரைக்காய் கூட்டு, உருளைக்கிழங்கு வறுவல்,வாழைத்தண்டு பொறியல், தக்காளிக்கூட்டு, மல்லி இலைத்துவையல், அப்பளம் , பாயாசம், வடை எல்லாம் இருந்தது. சாப்பிடச் சொன்னார்  தலைவர். நான் இல்லை ஐயா அது ...வந்து... என்று வார்த்தைகளையும் எச்சிலையும் விழுங்கிக் கொண்டிருந்தேன். நா தழு தழுக்க நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கனு தெரியும் தலை அம்மா... அதனால தான் இது வரை நாங்கள் சமைத்த பாத்திரங்களில் அசைவம் செய்திருப்போம் என்பதால் தான் அதில் சமைக்காமல் மாடியில் வந்து பாப்பாவுக்குக் கொடுக்கவேண்டுயா புதிய பாத்திரம் அடுப்பு முதற்கொண்டு புதியத்ய் கரண்டிகளும் புதியது தான். நீங்கள் கவலையோ அருவருப்போ கொள்ளத் தேவையில்லை என்றார்.பதறி விட்டேனெ நான்.

   சீர் கொடுக்க வேண்டியவற்றையா எடுத்து விட்டீர்கள் அடடா? இப்படியா செய்வது? என்று வருத்தத்தோடு கேட்டேன். இல்லை தலை அம்மா.. (எந்த இக்கட்டிலும் இந்த தலையை விட மாட்டார் போல) நீங்கள் ஒரு கல்வியாளர் மட்டும் இல்லை. ஒரு கவிஞர் எழுத்தாளர்.பேச்சாளர்.சமூக ஆர்வலர்...( அட அப்டியா யாரும் ஜொள்ளவே இல்ல) உங்கள் மனம் குளிந்து என் மகளை வாழ்த்துங்கள் அவள் வயிற்றில் வளர்வதும் நல்ல கல்வியாளராகவும் அதனால் தான் இந்த ஏற்பாடு எனவே தயவு செய்து சாப்பிடுங்கள் என்றார் மிக பவ்யமாய்.

   அவரின் வயதைப் போலவே அவருடைய அன்பும் என்னைவிட பல மடங்கு உயந்ததாய் இருந்தது. என்னால் மறுக்க இயலவில்லை. சாப்பிட்டேன். எல்லாம் பாப்பா செய்த சமையல் தான். அவங்கம்மா கொஞ்சம் சொல்லிக் கொடுத்தாங்க என்றார். சாப்பாடு உங்க வீட்டு அளவுக்கு இல்லாட்டாலும் சாப்பிடலாம் தான் அப்படித்தானே தலை அம்மா என்றார். ( என்னவோ என் வீட்டில் நான் தினமும் விருந்து சாப்பிடுவது போல)

   நான் மகிழ்வின் உச்சத்திற்கே சென்று விட்டேன். இத்தனை வயது வரை எத்தனையோ விருந்துகளில் கலந்து கொண்டாலும் இந்த விருந்து தான் என் வாழ்நாளில் நான் சாப்பிட்ட உன்னத உயர்வான விருந்து என்று எனக்குத் தோன்றியது  ஏனென்றால் இதில் எனக்கு மட்டுமேயான அன்பும் கவனிப்பும் கலந்திருந்தது. நான் சாப்பிடும் வரை என் அருகிலேயே எல்லோரும் நின்றார்கள்... தலைவரை உட்காரச் சொல்லியும் உட்காரவில்லை. அவரோடு அந்தக் குடும்பம் மொத்தமும் என் அருகில் இருந்த்துதான் எனக்கு ....சங்கடமாக இருந்தது. கேட்டுக் கேட்டுக் பரிமாறினார்கள் இத்தனைக்கும் நான் அந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு மாறுதலாகி வந்துவிட்டேன்.  ரூபாய் 500 மட்டும் எழுத நினைத்த நான் ரூபாய் 1000 எழுதிவிட்டு வந்தேன்

   மற்றுமொரு கவனிக்கத் தக்க விஷயம் அங்கே நடந்தது. உறவினர் எல்லோரும் அந்த மொய் ஏட்டில் வரிசையில் நின்று தங்கள் மொய்களை எழுதினர். அங்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 10000...20000 என்று எழுதினர். ஆனால் அவர்களோ மிகவும் எளிய மக்கள்

    அந்தப் பகுதியில் மட்டும் திருமணம் நடக்கும் ஒரு மாதன் முன்பு இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்வார்களாம். தன்னிடம் உள்ள பணம் போக மீதிப் பணத்தை இதிலிருந்து எடுத்துக் கொள்வார்களாம்.. இதே போல் அடுத்தவர்கள் திருமணம் என்றால் மொய் எழுதி விருந்து உண்டு செல்வார்களாம். தலைவர் நிறைய பேருக்கு நிறைய செய்திருந்தாராம். அதனால் இனி மகன் கல்யாணம் வைக்க 10 வருசாமாவது ஆகும் என்பதால் எல்லோரும் இப்போதே எழுதுகிறார்களாம். காதுகுத்து போன்ற விஷேஷகங்கள் பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் தான் நடக்குமாம.

  ரொம்பவும் பணத்திற்கு முடை என்றால் பெண்ணிற்கு சடங்கு வைப்பார்களாம் அல்லது ஆண் குழந்தைகளுக்கு காது குத்து வைப்பார்களாம். மரியாதையில்  மட்டும் அல்ல கொடுத்து உதவுவதிலும் நல்ல ஊர்தான் என்று தோன்றியது.

   ஆனால் இவர் கொஞ்சம் பணக்காரர் இவருக்கு எதுக்கு இவ்ளோ மொய் என்று என் மனதில் தோன்றியதை அங்கு இருந்த பெரியவரிடம் கேட்டே விட்டேன்

   அவர் மகனை வேளாண்மைக்குப் படிக்க வைத்து மிக நவீன முறையில் இயற்கை உரம் வைத்து விவசாயம் செய்ய வைக்க வேண்டும் என்பது தான் அவரின் + அவர் மகனின் லட்சியமாம்... இதற்காக இப்போதே நிலங்கள் விலை பேசப்பட்டு விட்டதாம்.. (அவர் மகன் ப்ளஸ் 2 படிக்கிறான் அதுவும் பயோ மேத்ஸ் எடுத்து...  அதீத ஆவலில் நீ நல்லாப் படிப்பியே..ஏதாவது நல்ல அரசு வேலைக்கு அல்லது டாக்டருக்கு...இஞ்சினியருக்குக் படிக்கக் கூடாதா என்று கேட்டேன்... அவனோ நல்லா படிக்கிறவங்க எல்லாம் இப்படி வேலைக்குப் போவதால் தான் உழவுத்தொழில் இப்படிப் போனது என்றான்... அவனையும் சேர்த்து வாழ்த்தினேன். மனதிற்குள் நம்மாழ்வார் ஐயா வந்து போனார்.. கொஞ்சம் கண்ணீரும் வந்தது...

  இப்படி வெள்ளந்தியான மக்களும் பழகுவதற்கு இனியவரான மனிதர்களும் இருக்கும் வரை மழை பெய்யும் தானே?

   ( அதற்காக நீங்கள் அது தான் மனிதர் இருக்கிறார்களே மரமே நட வேண்டாம் என்று இருந்து விடாதீர்கள் அவசியம் எல்லோரும் மரம் நடுவோம் மழை பெறுவோம்...)
   

6 comments:

 1. நல்ல நகைச்சுவையுடன் கண்முன் காட்சிகளை கொண்டு படைத்துள்ளாய் சுவாதி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மொய் விருந்து சினிமாக்களில் பார்ப்பதற்கும் நீங்கள் சொல்வதற்கும் எவ்வளவோ வித்தியாசங்கள்! கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி மனசை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பதிவு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. இது தான் அம்மா கிராமங்களின் எதுவுமே எதிர்பார்க்காத உண்மையான அன்பு, இது போல இன்னும் நிறைய கிராமங்கள் இருக்கின்றன இத்தமிழ்நாட்டில். உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை!

  http://pudhukaiseelan.blogspot.in/

  ReplyDelete
 4. இப்படி வெள்ளந்தியான மக்களும் பழகுவதற்கு இனியவரான மனிதர்களும் இருப்பதால்தான் உலகம் இன்றும் சீராய் சுற்றிக் கொண்டிருக்கிறது

  ReplyDelete
 5. இவர்கள்தான் உண்மை மனிதர்கள்.

  ReplyDelete
 6. நாகப்பன்June 5, 2014 at 4:26 AM

  நல்ல தலைவர். ஆனால் உங்களுக்குத் தான் கூடுதலாக ரூ 500 செலவு வைத்து விட்டாரே. ஆனால் என்ன? உங்கள் குழந்தைகளின் திருமணத்தின் போது வாங்கிக் கொள்ளுங்கள். ( உங்கள் பெண் புகைப்படம் பார்த்தால் இப்போது அவள் 3வது படிக்க வேண்டும் சரியா?)

  ReplyDelete