Wednesday, March 5, 2014

யோசி ....மனிதவள மேம்பாட்டு மாத இதழ் மார்ச் 2014

யோசி..... என்ற மாத இதழில் வந்த பெண்கள் சிறப்பு மலரில் வந்த எனது கட்டுரை..... 

கவிஞர் முருகபாரதிக்கு என் நன்றிகளுடன்......   




எத்தனை யுகங்கள்? எத்தனை யுகங்கள்? எங்கே போயின உங்கள் முகங்கள்?  என்று ஒலி-ஒளி பரப்பாகும் முன்னால் தூர்தர்ஷனில்... அப்படித்தான் போகிறது பல பெண்களின் வாழ்க்கையும். குழந்தையை சுமப்பது தொடங்கி அவர்களுக்கு, உணவிடுவது, பாதுகாப்பது என் எல்லாவற்றுக்குமான பொறுப்பிலும் வளர்ச்சியிலும் , உணர்ச்சியாலும் உண்மையாலும் பெண்கள் நிரப்பிக் கிடந்தாலும் நகைச்சுவைஎன்ற பெயரில் எள்ளி நகையாடுவதும் ஏளனப்படுத்துவதும் மறைமுக வன்முறையாகவே தோன்றுகிறது.


            

     








 
 
                   

                   பெண்களுக்கு சவுக்கடியே அவள் நடத்தை பற்றி அவதூறாகப் பேசுவது தான். அதற்கு பயந்து தான் சர்வமும் ஒடுங்கிப் போகிறாள். தன் திறமை அடக்கி முடங்கிப் போகிறாள். தன் ஆர்வம் அழித்து, சிதைந்து உடைந்து உருக்குலைந்து போகிறாள்...( அந்த வேதனை சொல்ல இன்னும் சரியான வார்த்தை கிடைக்கவில்லை) பல நூற்றாண்டுகளின் சாபமும் கோபமும் வேகமும் பெண்ணின் மனதிற்குள் ஆழமாய் புதைந்து... பூட்டப் பட்டுக் கிடக்கிறது
                உலகில் பெண்கள் பல்வேறு விதமாய் வலிகளைப் பெற்றாலும் மேன்மை பெற்று விடுகிறார்கள். பெண்ணுக்கு எதிரான சம்பவங்கள், இந்தக் காலம் என்றில்லை எல்லாக் காலங்களிலும் எதிர்ப்புகள் இருந்த வண்ணமாய்.... அது பல வண்ணமாய் மாறி மாறி மாரியாய் பொழிந்து கொண்டே இருக்கிறது. முழுமையான திறமைகள் இருந்தும் வெளிவர இயலாமல்... வரத் தெரியாமல்... போகிறது. ஆனால் வலிமையான மனம் உள்ளவர்கள் வலியை மறந்து வழியைத் தேர்ந்தெடுத்து பிறருக்கு விழியாய் இருக்கிறார்கள்.அவர்களில் மூன்று முத்தான பெண்கள் குறித்து இங்கு சிந்திப்போம்
.
                    முதலாமவர் முத்துலெட்சுமி ரெட்டி.... பல “முதல்” களுக்குச் சொந்தமானவர். இவர் சென்ற நூற்றாண்டின் பெண்மணி முதல் மருத்துவப் பெண்மணி, முதல் சட்டமன்ற உறுப்பினர். முதல் பெண் பத்மபூஷன் விருது பெற்றவர். அகில உலகில் (பாரீஸ்)நடந்த பெண்கள் மாநாட்டில்கலந்து கொண்டவர். பெண்கல்வி மறுக்கப் பட்ட காலத்தில் படித்து தெளிந்து சமுதாயத்தின் அழுக்குகளைக் களைய முற்பட்டார். பால்ய விவாகம் சொத்துரிமை பெண்கல்வி என்று இவர் எடுத்த சாட்டைகளுக்கு எதிராய் வார்த்தைகள் இவரை வார்த்தைகள் காயப்படுத்தியிருக்கின்றன. எல்லாவற்றையும் தூசிகளாய் துடைத்து விட்டு தூணாய் நிமிர்ந்து நின்றார்.  குடும்பத்தையும் விடாமல் மருத்துவத்தொழிழையும் விடாமல் சேவையையும் விடாமல் மூன்று நிலைகளில் சாதித்துக் காட்டியவர்.

                         இந்து பிராமணக் குடும்பத்தில் பிறந்து பிரம்ம சமாஜம் தழுவியவர். ஆனால் இவர் விதைத்தது பெண்களுக்கான உயர்வான் சிந்தனையை... ஏனெனில் பெண்களே , தன் மனதில் தான் அடிமையாக வாழவே பிறந்தவள் என்று என்னும் படியாக செய்திருந்த காலமது. சமைக்கவும் துவைக்கவும் பாத்திர்ம் கழுவவும் குழந்தைகள் பெற்று பராமரிக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் என்று நினைத்த காலத்தில்  இது போன்று வாழவில்லையெனில் நடத்தை சரியில்லை என முத்திரை குத்தி தள்ளி வைத்த காலத்தில் பெண்களை மனிஷியாக பார்க்க வைத்தவர். 
  
                     இரண்டாமவர் சென்றநூற்றாண்டு கருணையின் தேவதை அன்னை தெரசா... ஆக்னஸ் கோஞ்சாபொயாஜியு யுகோஸ்லோவாகியாவின் பெண் இந்தியப் பிரஜையாய் மறைந்தார்.. தன் சகோதரன் இவளால் துறவற வாழ்க்கை மேற்கொள்ள இயலுமா என்ற சந்தேகத்தில் சந்தேகமாகக் கேட்ட பொழுது நீ 2 மில்லியன் மக்களைக் கொண்ட மன்னனுக்கு ஊழியம் செய்கிறாய்.. நான் உலகையே தனக்குள் கொண்ட கடவுளுக்கு ஊழியம் செய்யப் போகிறேன் என்றார். சத்யஜித்ரே அப்போது உயிருடன் இருந்தார். இலக்கியம் , அறிவியல், சினிமா, அரசியல் எத்தனயோ துறைகளில் ஆண்களும் பெண்களும் கோலோச்சிக்கொண்டிருந்தாலும் கொல்கத்தாவின் சின்னமாக இருந்தார் அன்னைத் தெரேஸா.. அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளால் குளீத்து பல தேர்தல்களை மட்டுமே கண்ட மக்கள் அன்னையின் அன்பில் திணறித்தான் போனார்கள்......மதமாற்றம் செய்கிறார் என்ற விமர்சனம் எல்லாம் காலப் போக்கில் அழிந்து போய் உள்ளூர் ரவுடிகள் முதல் அரசியல் வாதிகள் வரை மதத்தின் பேரால் சேவை செய்ய வந்தவர்களில் இவர் சேவையை தன் மதமாகக் கொண்டவர் என்று நினைக்க வைத்தார். எத்தியோப்பியாவில் பஞ்சத்தின் பிடியில் சிக்கிய மக்களை மீட்டதும் செர்னோபில் அணு உலை வெடித்து பல்லாயிரக்கணக்கானவர் உயிரிழக்க நேர்ந்த போது தோள் கொடுக்கச் சென்றது போன்ற சேவைப் பயணங்கள் பல செய்தவர். 


                    பெரிய வேதனை என்பதையெல்லாம் மிகச்சாதாரணமாய்  கடந்தவர். 23வது போப்ஜான் விருது, குட்சமரிட்டன் விருது கென்னடி விருது சர்வதேசப்புரிந்துணர்வுக்கான விருது, மெம்பிள்டன் விருது, இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம், சுதந்திரத்திற்கான பிரசிடென்சியர் விருது, அமெரிக்கநாட்டின் கெளரவப் பட்டம் பெற்ற இவரின் பாதைகள் மலர்களால் அலங்கரிக்கப்படவில்லை. வாழும் போது பலர் முள் கிரீடத்தைத்தான் பரிசாகத் தந்தார்கள். கடைசிவரை புன்னகையும் சேவையும் மட்டுமே இவரின்  சொத்தாக இருந்தது. 


                   மூன்றாமவர் மலாலா.... தலிபான்களால் சுடப்பட்டும் சூரியனாய் சுடர் விடும் சூரிய விருட்சம். இந்த நூற்றாண்டுச் சிறுமி... தற்போது 11 வயது தான் ஆகிறது. தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சுடப்பட்டு மரந்த்தின் விளிம்பு வரை சென்று, உயர் சிகிச்சையால் உயிர் பிழைத்துத தற்போது பிரிரிட்டனில் படிக்கிறார். உயிர் பிழைத்து நினைவு  வந்ததும் அளித்த முதல் பேட்டியிலேயே நான் மரணத்தையும் சந்தித்து விட்டேன் எனவே, எனக்கு அந்த பயமும் இல்லை. இனி இன்னும் பெண் குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடுவேன்...போராடுவேன் என்று துணிச்சலாகச் சொன்னவர்.               பெண்களுக்குக் கல்வியை மட்டும் தாருங்கள்... மற்றதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்கிறார்.நான் மலாலா என்று இவர் எழுதிய புத்தகத்தை பாக் அரசு தடை செய்துள்ளது. ஆனால் மனித உரிமைக்கான உயரிய விருதான ஐரோப்பாவின் சகாரோ விருது வழங்கப்பட்டதோடு த்ற்போது நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரக்கப்பட்டுள்ளத்து...டைம் பத்திரிக்கையின் நூறு சிறந்த மனிதர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இச்சிறூமியை உலகமே போற்றுகிறது.

 
முத்துலெட்சுமி, தெரேஸா , மலாலா இவை வெறும் பெயர்கள் மட்டும் தானா? 

இந்தப் பெயர்கள் எவற்றைச் சொல்லித்தந்தது? 

திடம் ...கருணை... போராட்டம்... இந்த சொற்களின் உள் அர்த்தங்களும் உறை அர்த்தங்களும் இவர்கள் அல்லவா? இவர்கள் மூன்று பேரின் எண்ணங்களும் ஆண்களை எதிர்க்க வேண்டும் என்பது அல்ல பெண்களுக்கு உரிமை வேண்டும் என்பதே..
.மரபு சொல்லியோ மதம் சொல்லியோ பெண்ணை உடலாக மட்டும் பார்த்து விடாதீர்கள் என்பது தான் இங்கே தெரிவிக்க விரும்புவது...
       ஒவ்வொரு பெண்ணும் பல வழிகளைச் சுமந்து தான் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது.. எந்தத்துறையும் சிவப்புக் கம்பளமிட்டுத தரவில்லை ஆனாலும் தன் உடல் வலி பொறுத்து உயிர் உதிரம் எல்லாவற்றையும் தந்தேனும் உயரத்தை எட்டி விடுகிறார்கள்... விருதுக்காக உழைக்கும் பலரை அந்த நேரத்து செய்திதாள்கள் வேண்டுமானால் தாங்கலாம். ஆனால் எந்தப் ப்லன்களையும் கருதாமல் தன் எண்ணமே இலக்காய் தீர்மானித்தவர்களுக்கு வாழ்வின் தீபங்கள் சூரியனாய் பிரகாசிக்கச் செய்கிறது... அடக்கப் பார்த்தவர்கள் கல்லறைக்குள் மட்டுமெ அடங்கிப் போனார்கள்... 


 தான் இயங்க , இயங்க வைக்க ஒரு இயக்கம் தேவை இல்லை மனதிற்குள் ஒரு இணக்கம் போதும் என்று நிருபித்தவர்கள் இவர்கள்
.
இவர்களிடம் இரும்பு மனதும் இளகிய குணமும் இருப்பது தெரிகிறது. 

இவர்கள் மெல்லியலாளர்கள் கடினமான பாதை நோக்கி பயணித்தவர்கள்..
ஒரு புன்னகையால் பல புயல்களை வீழ்த்தியவர்கள்.இவர்களைப் போல் 
இன்னும் எத்தனை சூரியர்களோ எங்களில் வீரியம் குறையாமல்....
விதையட்டும்...
.
வரும் சந்ததிக்கு இவர்களின் சேவை புதையலாய் புன்னகை தரட்டும்
 
கடந்த காலங்கள் போதும்
துயரில் கிடந்த காலங்கள்  போதும்-இனி
வசந்த காலங்கள்.... பெண்களுக்கு எல்லாம் வசப்படும் காலமாக அமையட்டும்...
*********************************************






3 comments:

  1. அருமையான கட்டுரை...

    மிக்க மகிழ்ச்சி "யோசி" இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. புதுக்கோட்டையில் நடந்த கணினி பயிலரங்கத்தில் பேசினதை இங்கே பேசுகிறேன்... + தங்களின் கருத்துரைக்காக...

    Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

    ReplyDelete
  3. கட்டுரை அருமை.... தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் எழுத வாழ்த்துகள். ஆனால், “தான் இயங்க , இயங்க வைக்க ஒரு இயக்கம் தேவை இல்லை“ - என்பது சரியல்ல. எல்லா இயக்கங்களும் தவறானவை அல்ல... சரியானவற்றோடு இணைந்து இயங்குவதும் அவசியம்தான்... அவசியமான இயக்கங்களில்.. நன்றி

    ReplyDelete