Saturday, November 2, 2013

வந்துவிடு மாமா

நான் என்ன செய்ய வேண்டும்என்ற
 பக்கத்து வீட்டு அண்ணன்
கேள்வியில்
காமமும் தலை தூக்குகிறதோ என்று
கலவரப்படுகிறது மாமா.

நானே வண்டி ஓட்டுவேன் என்று தெரிந்தும்
கொண்டு வந்து விடவா என்று
அக்கறையுடன் கேட்கும்
அலுவலக நண்பனின்
வார்தைகளிலும்
சந்தேகமெனக்கு

பால்கார அண்ணனின் கைகள்
பால் ஊற்றும் போது
கைதவறிப்பட்டாலும் கூட
பரிதவிக்கிறது என் மனசு

இங்கு எல்லா மனிதர்களும்
நீ இல்லை என்பதால்
உதவ வருகிறார்களா/
உறவ வருகிறார்களா?
என்று வழக்காடுமன்றம் நடத்தி
மனசெல்லாம் புண்ணாகுது மாமா
சந்தேகக்கண்களூடனேயே சந்திக்கிறேன்
ஒவ்வொரு ஆண்களின்
கண்களையும்

பழகும் அண்ணன்களை எல்லாம்
அந்நியப்படுத்தி
நியாயமான உதவிகளையும்
நிராகரிக்க வைக்கிறது
உன் வெளிநாட்டுப்பயணம்

பெருமையாக சொல்வதாகத்
நினைக்கிறார்கள் தோழிகள்
நீ
அந்நிய மண்ணில் உழைப்பதை!
உயர்ந்து விட்ட நம்
பொருளாதாரம் நினைத்து
பொசுங்குகிறார்கள்
என்
மனப் பொருளின் ஆதாரமெல்லாம்
பொசுங்குவது தெரியாமல்

ஆண்கள் வந்து பேசிவிட்டாலே
உன்
அண்மை இன்மையோ என
அஞ்சுகிறேன்

எவரிடம் பேசினாலும்
துரத்தி விரட்டுகிறது
என்னுள் இருக்கும் பயம்

புத்தகங்கள் வாங்கவில்லை
கம்பன்கழகம் போகவில்லை
கூட்டங்கள் செல்லவில்லை
ஏதுமற்ற இயக்கத்தில் நான்....
நீயில்லாத சோகத்தைவிட
நீயில்லாததை
பெருமையாய்
என்னிடம் கேட்பதாலேயே
எல்லாம் தவிக்கிறேன்

காய்கறி வாங்கச் செல்லும் போதோ
 கடைவீதிகளில்உலவும் போதோ
ஆண்நண்பர்களைச் சந்திக்கும் போது
வெறும் நலம் விசாரித்தாலே
வேறு மாதிரிப் பார்க்கிறார்கள்
அருகில் உள்ளவர்கள்

யார் யாருடனெல்லாம் பேசுகிறேன் என்பதை
கவனமாய் கவனிக்கிறார்கள்
அது
உன்னிடம் சொல்லவோ
ஊரிடம் சொல்லவோ தெரியவில்லை

என் மீதான சந்தேகங்கள் வழிய வழிய
எங்கும் நடமாடுகிறார்கள்
உனக்குத் தெரிந்தவர்களும்
எனக்குப்பழக்கமானவர்களும்

நிமிடங்களில் என்
உரையாடல் முடிந்து விட்டாலும்
அது என்
கற்பை இழப்பதற்கான பேச்செனவே
கணிக்கப்படுகிறது

இவர்களின் எல்லாப் பார்வைகளிலும்
என் உடல் முன்னிறுத்தப்பட்டு
என் உள்ளம் பின்னிறுத்தப்படுகிறது

உன்னைக் காதலித்த காலங்களில்
கை பிடிக்க இயலுமோ
என்ற கவலையைக் காட்டிலும்
அதிகமாய் இருக்கிறது இந்த அவலங்கள்

என் மகன் வெளிநாட்டில் இருக்கிறான்
என்று பேசும்
உன் அம்மாவின் பெருமைக்கும்
என் அண்ணன்
சிங்கப்பூரிலிருந்து கொண்டாந்தது
என்று சொல்லும்
 உன் தங்கையின் வாக்குக்கும்
 என்வாழ்நாளெல்லாம்
வண்ணம் இழந்து போனேன் மாமா

நான் சாப்பிடும் போதும்
தூங்கும் போதும்
நீ
என்ன செய்வாயோ
என்ற கவலைகளில்
மரத்துப் போனது
மனசு மட்டும் இல்லை மாமா
உடம்பும் தான்....

உன் மகளுக்கு
முதல் பல் விழுந்திருக்கிறது
அவள் கேட்கும்
எல்லாக் கேள்விகளிலும்
நீ இருக்கிறாய்
உன் சட்டை உன் செருப்பு
உன் தட்டு உன் டம்ளர் என்று
உனது பொருள்கள் பயன் படுத்தியே
நீயாக முயல்கிறாள்
உன் செல்லமகள்
யார் எது சொன்னாலும்
அப்பாட்ட சொல்லிருவேன்
என்றூ தலையாட்டி பயமுறுத்துவது
என்னை
 நிராகரிப்பதாய் இல்லை மாமா
உன்னை
நினைவுறுத்தியே!

பணம் கொண்டுவந்தாலும்
பசித்தால் தானே மாமா சாப்பிடுவாய்
உன் மகள்,உனது நான், விடுத்து
எங்கோ இருக்கும் நீ
இவ்வளவு பணமிருந்தும்
ஏழை தானே மாமா

திருவிழா தினங்களிலும்
பண்டிகைப் பொழுதுகளிலும்
உனது பணத்தால் ஆன
விருந்தொன்று நடக்கிறது
விருந்துண்ண நீயின்றி

நீ
வரும் போதெல்லாம்
உன்னோடு
உதடு வலிக்க பேசவேண்டும்
என்ற என் ஆசையில் மண்வீசி
உன் தம்பி தங்கைகளே
உன்னை ஆக்கிரமிக்கிறார்கள்

உடல் தேடல் மட்டுமே
எனதாக இருக்குமென்று
இரவில் மட்டுமே தனித்து விடுகிறார்கள்
உன்னோடு என்னை

எல்லோரிடமும் எப்படி சொல்வேன்
உன்னோடு நேரிலும்
பேச வேண்டுமென்ற
என் ஆசையை

எல்லாம் செய்துஇளைப்பாறும் போது
இதயம் தேடுகிறது உன்னை
பேசிப் பேசிக் களைப்பாற
வந்து விடேன் மீண்டும்
மீட்டெடுக்க முடியாத என்
நாட்களை மீட்டெடுக்க

எல்லோருக்கும் பரிசளிக்கிறாய்
அவரவர் விரும்பும் படி
நான் கேட்கும் பரிசு
நீயே தான்
வந்துவிடேன் ஊருக்கு!


6 comments:

  1. ஆகா... மிகவும் ரசித்தேன்... பாராட்டுக்கள்....

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. நீங்கள் அனுப்பிய தகவல் படி ப கிர்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  3. வணக்கம்
    எல்லோருக்கும் பரிசளிக்கிறாய்
    அவரவர் விரும்பும் படி
    நான் கேட்கும் பரிசு
    நீயே தான்
    வந்துவிடேன் ஊருக்கு

    மனதின் ஆதங்கம் புரியவைக்கும் கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. மு.கோபி சரபோஜிNovember 12, 2013 at 12:00 AM

    உள் மன உணர்வுகளை உணராத உறவுகள், சமூகத்தின் மீதான பார்வை வேதனையாய் அதே நேரம் உண்ர்வு பூர்வமாய், இயல்பாய் வந்துள்ளது.கொஞசம் குறைவான வரிகளில் இத்தனை உணர்வுகளையும் அடுக்கி இருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும்.

    ReplyDelete
  5. அருமை!
    வெளிநாட்டில் வாழும் கணவனைப் பிரிந்து வாழும் மனைவியின் பரிதவிப்புகள்...உண்மைதானே..இதே கருத்துகளை ஒரு தோழியும் சொல்லியிருக்கிறார் .

    ReplyDelete