Tuesday, October 22, 2013

சிவாஜி

05.10.2013 அன்று நான் சிவாஜி மன்றத்துக்கு நான் வாசித்த கவிதை

எல்லா நேரங்களிலும்
இனிக்கும் தமிழுக்கு வணக்கம்

கவித்தலைமைக்கு
தங்கம் மூர்த்தி என்றால்
தமிழ் கொஞ்சம் தளர்ந்து கொள்ளும்
வார்த்தைகள் வளைந்து செல்லும்
சீர் தளைகள் சிரம் தாழ்த்தி
வணக்கம் சொல்லும்
கவித்தலைமைக்கு
அந்த கவின் தலைமைக்கு
என் இனிப்பு வணக்கம்
இனி
தங்கம் மூர்த்தி என்பது தவிர்த்து
தமிழ் மக்கள்
முகநூல் மூர்த்தி என்றே அன்போடு அழைக்கட்டும்

பதக்கங்களில் நீ
தங்கப்பதக்கம்.....
திரை சக்தியில் நீ பராசக்தி!
நாடக உலகின் வித்து
தமிழ்த்திரையின் சொத்து
சிவாஜி என்ற டப்பர் வேர்
டப்பாவில் ஊற்றப்பட்ட நெய்
இன்று
எல்லோருக்கும் ஒளி தருகிறது

பெருங்காய வாசனைக்காய்
உன்னை
பிரபலப்படுத்தியவர்களுக்கும்
நீ
பெரும் காயத்தைத்தராமல்
பெரும் ஆதாயத்தையே தந்தாய்

அரசியலில் நடித்தார்கள்
நடிப்பை அரசியலாக்கினார்கள்

இரண்டும் தெரியாத உனக்குத்
தமிழக முன்னேற்ற முன்ன்ணி
பின்ணனியையே தந்தது

குடமுழுக்கு செய்து
கொண்டாட வேண்டிய உன்னை
குடத்தில் இட்டு
முழுகியே விட்டார்கள்

மாக்கவியையே
மண்ணுக்குள் புதைத்தவர்கள்
மகாக்கலைஞன் நீ
மாண்புகளா செய்வார்கள்?

பறக்கும் பூச்சிகளைத்
 தின்னும் பல்லிகளுக்கு
பறக்கத்தெரியாதது போலவே
ந்டிப்பு பல்கலைக் கழகம் நீ
வடித்த கலைகளுகு
சிலைகள் செய்யத் தெரியவில்லை எமக்கு

இங்கே
அஃறிணைகள் எல்லாம்
உயர்திணைகளாகக் கொண்டாடப்படுகின்றன
கணேசா
உயர் திணை நீ
இன்னும் கொண்டாடப்படவேயில்லை
விலங்கிலிருந்து வந்தவர்கள் தானே
போட்டித்தீயில்
பொசுக்கி விட்டார்கள் உன்னை
ஆனாலும்
உயிர்தெழுகிறாய்
சிலுவையில் அறைந்த பின்னும்
சிலிர்த்தெழுகிறாய்?
சாக்ரட்டீசுக்குக் கொடுத்த
விஷக்கோப்பையைக்
கொடுத்த போதும்
இறந்த பின்னும்
பிறந்து பிறந்து சிரிக்கிறாய்
இனியும்
குழந்தைகள் மூடிய கைகளோடு
பிறக்கட்டும்
உனது கலையை
பத்திரப்படுத்த என்றே?
இனியும் சூரியன்
தினமும் உதிக்கட்டும்
உன் ஆற்றலை
பிரகடனப்படுத்த என்றே

வீரபாண்டிய கட்ட பொம்மனோ
சிவபெருமானோ
கப்பலோட்டிய வ.வு.சி யோ
பாரதியோ,பாமரனோ
எங்களுக்கு
அறிமுகப்படுத்தியது நீதான்

பத்தோடு பதினொன்றாய்
உன்னைப் பார்த்தவர்களை
அத்தோடு போக வைத்தாய்

பெண் வேடம் கொடுத்தவர்களுக்கும்
பெருமை சேர்த்தாய்
முள் கீரிடம் சூடியவர்களோடும்
முறுவலித்தாய்
தமிழ் சொல்லுக்கெல்லாம்
கீரிடம் வைத்தாய்
நடித்த நடிப்பில் எல்லாம்
வைரம் பதித்தாய்

வாலிப வயதில்
வயோதிக வேடமிட்டாய்
வயோதிக வயதிலும்
வாலிபன் போல் வாழ்ந்து காட்டினாய்

இன்னமும் கூட
உன்னை நிறைய நிறைய
பயன்படுத்தியிருக்கலாம்
பயன் படுத்தியிருக்க வேண்டும்
ஏற்று நடித்த வேடங்களனைத்தும்
யானைப்பசிக்கு சோளப்பொறிதான்
சோளப்பொறியே சுகமாய் இருக்கும் போது
நல்ல உணவு எப்படி இருந்திருக்கும்

எல்லோரையும் போல்
எனக்கும்
ஆதங்கம் உண்டு கணேசா
திரையுலகின் மகுடம் நீ
திரை மேகங்கள்
உன்னை மறைத்தாலும்
நடிப்பின் சூரியன் நீ
திசைகளின் விசை நீ
திரைக்கோயிலின்
கலசமும் நீ
கர்ப்பகிரகமும் நீ
இலக்கணமும் நீ
இலக்கியமும் நீயே
பாட்டும் நீ
பாவமுன் நீ
உனக்கான ஆராதனைகள்
யார் செய்தாலும் அவர் வாழ்க
உனக்கான போற்றுதல்களை
யார் சொன்னாலும் அவ்ர் வாழ்க
நன்றி. வணக்கம்


3 comments:

  1. திரையுலகின் மகுடத்திற்கு மகுடம் சேர்க்கிறது வரிகள்... பாராட்டுக்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete