Wednesday, November 4, 2015

கலை நகர்...

கல்கியின் தீபம்,,,கனவுக்காட்சிகள்...09...கவிஞர் சுவாதி
***********************************************************

ஆழ்ந்த உறக்கத்தில் வந்த கனவு, நரசிம்மவர்மன் வியந்து போனான். “மாமல்லபுரத்தில் கடற்கரையில் எழுப்பப்பட்ட குடை வரைக்கான வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால், தற்போது உருவாகியுள்ள வடிவம் இப்படியில்லையே...இந்த வடிவத்தைத்தான் சிற்பிகளிடம் சொன்னோம். அவர்களுக்குப் புரியவில்லை...இல்லையில்லை...அவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் நாம் சொல்லவில்லை. அதனால் நேர்ந்த குரைபாடு இது. இப்போது என்ன செய்வது? இடித்து விட்டு மறுபடி வேறு அமைக்க வேண்டியதுதான்.

மன்னனின் உத்தரவைக் கேட்ட சிற்பிகள் திகைத்துப் போனார்கள். கஷ்டப்பட்டு மாதக்கணக்கில் செய்த பணியை இடித்துத் தூளாக்குவதா? இடிக்கவே மாதக்கணக்காகுமே...எவ்வளவு துல்லியமாகக் கணக்கிட்டு..எவ்வளவு பேரின் உழைப்பு இது? இதைத் தகர்ப்பதா? மன்னர் ஏனிப்படி உத்தரவிடுகிறார்? சித்தம் கலங்கி விட்டதா அவருக்கு?

சிற்பிகளின் எண்ணங்கள் இப்படி தாறுமாறாக ஓடின. பல்லவ மன்னரான நரசிம்மவர்மரை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியுமா என்ன? தந்தைக்கு விசித்திரசித்தர் என்ற பெயர் பொருத்தம் என்பது போல், இவருக்கும் அது பொருந்துகிறது. எப்படி எதை எப்போது நினைப்பார்”: செய்வார்: என்று அனுமானிக்கவே முடியவில்லை.

அவர்களின் சிந்தனை இப்படியெல்லாம் ஓடுகிறது என்பது, மாமல்லரான் நரசிம்மவர்மருக்கும் புரிந்து தான் இருந்தது. என்ன செய்ய? அவருடைய கனவுகள் அவ்வளவு பளிச்சென்று தெளிவாக இருக்கின்றனவே. கட்டியதை இடித்துத் தள்ளக்கூட 60 நாட்கள் ஆனது. பலருக்கு கண்ணீர் அல்ல...செந்நீரே வந்தது.

மன்னனும் சாதாரணமானவன் இல்லை. வணிகம், மருத்துவம், வேளாண்மை என்று எந்தத்துறையின் நிபுணர்களையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் தன் அருகில் வைத்திருந்தான். அவசியம் ஏற்பட்டால் அவர்களிடம் எந்த இரவிலும் தமது ஐயங்களைக் கூறி, கண்டு தெளிவுபடுத்திக் கொண்டான். பணியாளர்களைப் போற்றுவதில், பேணுவதில் நரசிம்மவர்மனுக்கு நிகர் அவனே தான். ஒரு மன்னன் இப்படி கீழ் நிலை பணியாளர்கள் வரை எல்லாமும் செய்வானா என்று வியக்கும் அளவுக்கு செய்யும் மன்னன். அதிகாரத்தினால் அவன் இவற்றை இடிக்கக் கூறவில்லை. ஆனால், அவன் நெஞ்சில் இருந்தது அன்பு...அன்பு...அன்பு...அன்பன்றி வேறொன்றுமில்லை.

தான் சரியாக விளக்கவில்லை என்பதை உணர்ந்ததும், ஓவியங்கள் வழியாக தன் கனவு நகரை அவர்களுக்குச் சொல்ல முடியும் என்று நம்பினான் அவன். அவசர அவசரமாக ஓவியக்கலை பயின்றான். அவன் பயின்றானா அல்லது அவனுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு கலையை மேம்படுத்தி விட்டார்களா எனும் அளவுக்கு வேகமாகப் பயின்றான்: அவர்களுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்தினான்.

இம்முறை சிற்பிகள் மிகவும் கவனம் கொண்டனர். ஏனெனில், அவர்களுக்கே இது ஒரு சவால். மீண்டும் சரியில்லை எனில் மீண்டும் உழைப்பு இடிபடும். தம் உழைப்பு தம் கண் முன்னால் அழிவதை எந்த உழைப்பாளனும் பொறுப்பதில்லை. எனவே, ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை நடந்தது. சிவ பெருமானை நோக்கி ஒரு நீண்ட தவம் செய்த பின்னரே வேலையை ஆரம்பித்தனர். இப்போது வேலை செய்யும் இடம் ஒரு தவச்சாலை ஆனது, ஆக்கியது மன்னனின் பிடிவாதம், இல்லை,,, தன் கனவின் மீதான நன்நம்பிக்கை..

தொடக்கத்தைல், சில நாட்கள் கனவுகள் பற்றி ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்படவில்லை நரசிம்மனுக்கு. இவை எல்லோருக்கும் ஏற்படுவது போல் மிக மிகச் சாதாரணமாகத் தோன்றி மறைகின்றன என்றே நினைத்தான். வெளியே சொல்லக்கூடத தயக்கமாக இருந்தது. இவற்றைப் பிறர் என்ன நினைப்பார்கள்? என்ற தயக்கம், தன் படை தளபதி, பட்டத்தரசி, தோழர்கள் என்று யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், செயல்படுத்த எண்ணினான். ஒரு மிகப் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால், பகலில் தூக்கம் வரவில்லை, இரவில், அதுவும், ஆழ்ந்த தூக்கத்தில், தான் செய்ய வேண்டிய செயல்களைச் சொன்னது போலத்தான் இருந்தது. முதலில் கவலை வந்தது. கனவுகள் வருகிறதென, பயந்தான். பின்நாட்களில் கனவுகள் எப்போது வரும் என்று ஏங்கினான்.

கனவுகளின் வாயிலாக, எத்தனை தொழிலாளர்கள் எந்த திசையிலிருந்து வருவார்கள். யார் யார் நல்ல பணியாளர்கள் என்பதெல்லாம் கூடத் தெரிந்தது. இறை பக்தியில் ஆழ்ந்த தன் முன்னோர்களால் தனக்கு ஏற்பட்ட நன்மை இது என்றே நினைத்தான்: பெருமிதம் கொண்டான். ஆனால், கனவுகள் வருவதை எவரிடமும் சொல்லவில்லை.

இரண்டாம் புலிகேசியை யாராவது வெல்ல முடியுமா? பெயரைக் கேட்டாலே புலியைப் பார்த்தது போல் பயந்து ஒதுங்கினார்கள் பல மன்னர்கள். வெளியிலோ தனக்கு அப்படி ஒரு ஆசை இல்லை என்றே பேசிக்கொண்டனர். ஒரு நாள் திடீரென்று வாதாபி கொண்டான் என்று ஒரு குரல் கனவில் கேட்டது. துள்ளி எழுந்து தூக்கம் தவிர்த்தான்,. “ இது இறைவனின் ஆணை....இறைவனின் ஆணை....என மனதுள் திடம் கொண்டான். படைவீரர்களை தயார் செய்தான். நம்பிக்கை வார்த்தைகளைக் கொடுப்பதிலும் அன்பை கொடுப்பதிலும் அவனுக்கு நிகர் அவனே தான். கடைசிப் பணியாளர் வரை தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் அவனே மன்னன்.

தான் எடுத்துக் கொண்ட எந்தச் செயலிலும் கடைசிவரை உறுதி கொண்டான். ஏனெனில், கனவில் அவனுக்கு அது நடக்கும் என்று அழுத்தமாகக் கூறப்பட்டு விட்டது. எனவே, யார் மாற்றிச் சொல்ல வந்தாலும் அவர்களை ஒரு நிமிடத்தில் தன் கொள்கைகளுக்குள் நுழைத்து விடும் நுட்பமும் திட்பமும் பெற்றிருந்தான்.

இந்த விடாப்பிடியான அன்பாலும் ஓயாத உழைப்பாலும் கிடைத்தவர்தான் நிருபகேசரியின் மகன் பரமதுர்க்கன் ( வாதாபி போரில் துணை செய்த கொடும்பாளூர் வேளிர் குலத்தவர். வாதாபிஜித் என்றொரு அடைமொழியும் அவருக்குச் சொல்லப் படுகிறது.) அது நாள் வரை உதயணனை தலைமை சிற்பி என்றே எல்லோரும் கருதினார்கள். முதல் முறையாக சிற்பி நரசிம்மவர்மனை, அவன் வார்த்தைகளைக் கவனமாகவும் காதலாகவும் கேட்க ஆரம்பித்தான் உதயணன். தன் தொழிலை நேசித்து தன் தொழிலில் ஆர்வம் கொண்டு, அதன் அடி ஆழம் வரை பேசும், சிந்திக்கும் மன்னனை யாருக்குத்தான் பிடிக்காது? அப்படித்தான் நம்பிக்கை கொண்டான் உதயணன். ஆனால், அதுவரை இல்லாமல் மன்னன் சொன்ன புது யோசனை வியப்பாகவும், புதுமையாகவும், மாறுபட்டதாகவும் இருந்தது.

மன்னனின் அந்தக் கோரிக்கை சிற்பிகளுக்குப் புரியாத புதிர், அது நாள் வரை செங்கற்களால் கட்டுமானப் பணி நடப்பதுதான் நடைமுறை. ஆனால், மன்னன் விரும்பியதோ கருங்கற்களால்: அதுவும் மலையைக் குடைந்து விமானங்கள், விதானங்கள் அமைக்க வேண்டும் என்பது, அன்பும் , பணிவும் கொண்ட தலைமைச் சிற்பி உதயணனுக்கே இது ஆச்சரியம்...அதிசயம். இயலாதோ என்றும் ஒரு அயற்சி. ஆனால், மன்னர்தான் எதற்கும் சமாதானம் ஆகமாட்டாரே, சரி, தோல்வியை ஒத்துக் கொள்வோம் என்று தோன்றியது. அனைவருமே உடன்பட்டனர். தீவிரமான, பக்தியான நம்பிக்கையான முயற்சி, தோற்பதற்கு வாய்ப்பே இல்லை.

எப்போதும் ஒரு யோசனையுடன் அமர்ந்திருப்பது போல தோற்றம் அளிக்கும் அவனை, சிலர் மனதிற்குள் ஏசினர். என்றாலும், அனைவரும் தன்னோடு ஒத்துப்போகும் வரை கூட்டங்கள் நடத்தினான். அவர்களை இசைய வைத்தான். தன்னுடைய எண்ணங்களை அவர்களுக்குள் மடைமாற்றம் செய்தான். கொஞ்சம் கொஞ்சமாக சிற்பிகளுக்குள்ளும் அவன் கருக்கொண்டான்: உருக்கொண்டான்: விளைவு...கடற்கரையில் கலைநகரம் அரும்பியது.

அதுவரை மணல்வெளியையும் பாறைகளையும் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த கடல் மகள், அழகான ரதங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்: அலைக்கரங்களைக் கொட்டி ஆரவாரித்தாள். இன்று வரை ஓயாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது அவளது ஆராவாரம். அந்த ஆராவாரத்தில், நரசிம்மவர்மனின் பெருமையல்லவா பாடப்படுகிறது. கனவுகள் எல்லோருக்குமே சில நாள் தொடரும். ஆனால், வாழ்நாளெல்லாம் வழிகாட்டியாக இருந்தது நரசிம்மவர்மனுக்கு மட்டும் தான்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் எளிதாகத் தீர்வு கிடைத்தது. ஒரு செயலை யார் செய்தாலும் சாதாரணமாகச் செய்வார்கள். அதே செயலை அசாதாரணமாக செய்வோர் வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். நரசிம்மவர்மன் இதற்கான உதாரணம்...


(காண்போம்)

********************************************************************************

3 comments:

 1. வணக்கம் சகோ அரிய விடயங்கள் பல அறிந்தேன் நன்று தொடர்கிறேன்...

  சகோ கடந்த பதிவு கனவுக்காட்சி 7 இது 8 தானே 9 போட்டு இருக்கின்றீர்கள் கவனிக்கவும் சுட்டிக்காட்டியது தவறெனில் மன்னிக்கவும்

  தமிழ் மணம் இணைப்புடன் 1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ...8 சகுனி...அந்த ஸ்கிரிப்ட் காணும்.அதனால் அடுத்த இதழில் வெளியான்னதை தந்துள்ளேன்..அதைக் கண்டுபிடித்து...தட்டச்சி விடுவேன் விரைவில்ல்..நன்றி சகோ...

   Delete
 2. மாமல்லனின் கனவு நினைவாகி இன்றும் கலையாக கண்முன்னே நிற்கிறது! அருமை!

  ReplyDelete