Wednesday, September 30, 2015

விளைநிலமும்...கருவேலமரமும்..

இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ இன் ஐந்து வகைகளில் வகை-2 சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டிக்காகவே எழுதப்பட்டது”. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன். 

நான் பணிபுரியும் பள்ளி கிராமத்தில் இருந்தாலும் அதிகமான சீமைக்கருவேலமரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் தான் இருக்கிறது. சுற்றிலும் விவசாயமே இல்லை.

 அதே பள்ளியில் தான் என் அப்பாவும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அந்த ஊருக்குக் கூட்டிப்போனால் மிகவும் மகிழ்வாகச் செல்வேன். அங்கே உள்ள மனிதர்கள், அவர்கள் தரும் அன்பு, அதோடு இயற்கை சூழ்ந்த அந்த இடம், பள்ளிக்கு தென்மேற்கே ஒரு குளம். அதில் தாமரைகள்..வடகிழக்கில் ஒரு குளம் அதில் அல்லி மலர்கள். கரையில் ஒரு பிள்ளையார் கோவில். மார்கழி மாதம் மட்டும் தான் மிகத் தீவிரமாக பிள்ளையார் கவனிக்கப் படுவார். மற்ற நாளில் அரசமரக்காற்றை வாங்கிக் கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதான்

 அப்பா நான் சிறு பிள்ளையாக பள்ளிக்கு சென்று வந்த காலங்களில் அங்கே அழைத்துச் செல்வார். பிள்ளைகளிடம் நான் ஒரு தேவதையாக வலம் வரலாம் என்ற நப்பாசையும் என்னிடம் இருந்தது. அந்த ஊரில் ஆசிரியரின் பிள்ளைகள் தேவதைகள்.அதோடு தலைமை ஆசிர்யரின் பிள்ளைகள் தேவதைகளின் தேவதைகள்.

 ஏனோ அந்த ஊரில் இருந்த அனைவருமே நல்ல நாவல் பழ நிறமென்பதாலும், நான் மிகவும் சிவப்பாக இருந்த காரணத்தாலும் கொஞ்சம் அதிகமாக பழகுகிறார்கள் என்று நானாக கிறுக்குத் தனமாக நினைத்துக் கொண்டதும் உண்டு.தங்கள் வயல்வெளிகளுக்கு அழைத்துச் சென்று தேவையான காய்கள், பழங்கள், நுங்கு, கடலை, என்று தங்களால் தரமுடிந்ததை எல்லாம் தருவார்கள். ஆனால் அப்பாவிற்கு நான் வாங்குவது எதுவும்பிடிக்காது என்பது ஊராருக்குத் தெரியுமாதலால், எனக்குப் பிடித்த கடலையை மட்டும் வயலிருந்து அப்படியே பிடிங்கி அங்கே வயலுக்குப் பாயும் நீரில் அதனை அலசி தின்று விட்டு வருவேன்

நானும் ஆசிரியரான போது எனக்கு பணிமாறுதலின் போது நான் இந்த ஊரை வேண்டும் என்று விரும்பிக் கேட்டு வாங்கிக் கொண்டேன். வழக்கமாக அவர்களை அத்தை, பெரியம்மா, என்று உறவு முறை வைத்துத் தான் அழைத்து வந்தேன். நான் டீச்சர் என்றாலும் மாணவர்கள் மட்டுமே என்னை டீச்சர் என்றார்கள். மற்ற எல்லோருக்கும் நான் பாப்பாவாகிப் போனேன்.
ஆனால் இப்போது ஊரில் சிறு மாற்றம் நிகழ்ந்தது. அடுத்த தலைமுறையினர் படிக்க வந்திருந்தனர். அதோடு விவசாயத்தை வெறுக்கும் சமூகமாக மாறிப் போனார்கள். அவர்களிடையே படிப்பு மட்டுமே உயர்ந்த பதவியும் நிறைய பணமும் தரும். வெளிநாட்டில் வேலை என்றெல்லாம் மாறியிருந்தனர்.

நான்  பணியில் சேர்ந்ததும் இந்த மாற்றங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது, என்றாலும் என்னால் முடிந்த அளவில் அவர்கள் மனம் மாற பாடுபட்டேன். அவர்களின் ஆழ்மனதில் ஏனோ விவசாயம் ஒரு வேண்டத்தகாத செயலாகப் போனது.

இப்போது சில வருடங்கள் கழித்து மீண்டும் இதே ஊருக்கு தலைமை ஆசிரியர் மாறுதல் கிடைத்தவுடன் என் மனம் மகிழ்வால் துள்ளியது. என் உறவினர்களுடன் வேலை செய்யப் போகிறேன் என்று எனக்கு ஆனந்தம். அரசாங்கம் இவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்னாலும் என் மனதிற்குள் இவர்களை உயர்த்தப்பட்டவர்களாகவே மதித்தேன்.மதிக்கிறேன்.

 தற்போது அங்கிங்கெனாதபடி எங்கும் சீமைக் கருவேல மரங்கள். அப்போதெல்லாம் மழைகாலங்களில் காட்டாற்றின் வெள்ளம், வந்து சூழ்ந்து கொள்ளும்.புதுகையும் இந்த ஊரும் தனித் தீவு போல ஆகிவிடும். ஆனால் இப்போது மேம்பாலம் கட்டப்பட்டு விட்டது ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. வெள்ளம் ஓடிய இடத்திலும் கருவேல மரங்கள். ஒரு காலத்தில் இந்த ஊர் தீவு போல் இருக்கும் இந்த ஊருக்கு மாற்றல் ஆகி வரும் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருவார்கள். இரண்டு ஆடைகள் கொண்டு வந்து பள்ளி வந்ததும் மாற்றிக் கொள்வார்கள் என்பதை அந்த ஊர் இளைய தலைமுறைகளே நம்ப மாட்டார்கள்.

 எல்லோர் வீட்டிலும் டி.வி. இருக்கிரது. கைகளில் போன் இருக்கிறது. ஊரில் தான் விவசாயம் இல்லை..இந்த ஊரில் கடலையும் துவரையும் விளையும் நல்ல மண் என்பது கூட மறக்கடிக்கப்பட்டு விட்டது.

விவசாயிகளின் மகன்கள், மகள்கள் படிப்பும் ஏறாமல் , விவசாயமும் செய்யாமல் மூட்டை தூக்கும் தொழிலாளியாக மாறிப்போனார்கள். எப்போதும் வறுமையும், இல்லாமையும் தான் இவர்களை நிறைத்திருக்கிறது. அன்றைய நாளில் நான் சிறு பிள்ளையாக இருந்த போது அந்த ஊரில் நிறைய நிலங்கள் வைத்து விவசாயம் செய்து வந்தவரின் மகனை என் அண்ணன் என்று என் அப்பா அறிமுகப்படுத்தி வைத்த போது  எனக்கு ஒரு மாதிரியாகவே  இருந்தது. என் வீட்டில் எல்லோரும் சிவப்பாகவும் இங்கு எல்லோரும் கருப்பாகவும் இருந்தது தான் காரணமாக இருக்கலாம்.அல்லது என் அம்மா பின்பற்றிய சாதி ய முறை காரணமாகவும்  இருக்கலாம்.ஆனால் யாரையும் நான் வெறுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ( அந்த அண்ணன் தான் இன்று என் பள்ளியின் பெற்றோர் சங்கத் தலைவர். )

அன்று எல்லோருக்கும் படியளந்தவர்கள் இன்று பலரிடம் கையேந்துகிறார்கள். சமீபத்தில் புதுகையின் அன்வோ அமைப்பை சேர்ந்தவர்கள் மூலமாக தாரகை என்ற ஒரு ஜவுளி நிறுவனத்திலிருந்து அனைவருக்கும் தீபாவளிக்கு இலவசமாக ஆடைகள் வாங்கிக் கொடுத்தேன். மறுநாள் ஒரு மூதாட்டி தன் பேத்தியை பட்டுப் பாவடையில் பார்த்த அவர்,என்னைக் கட்டிக் கொண்டு அழுத காட்சி இன்றும் என்னை உலுக்குகிறது. ஒரு காலத்தில், இவர்கள் எல்லோருக்கும் கொடுத்தவர்கள், இன்று எல்லோரிடமும் கையேந்துபவர்களாகவும் இருக்கிறார்கள்

விவசாயம் தழைக்கவும் இந்த விளைநிலங்கள் விலை நிலங்களாக மாறுவதைத் தடுக்கவும் ஏதேனும் ஒரு ஜீபூம்பா செய்தால் நன்றாய் இருக்கும்

.
நிறைய விளைநிலங்கள் வீடுகளாக்கப்பட்டு விட்டது.விளைநிலங்களின் ஒரு பகுதியை ஒரு பாக்கு மற்றும் புகையிலைக்கம்பெனி ஆக்கிரமித்துக் கொண்டது. மற்றொரு பகுதியை நான்கு வழிச் சாலை ஆக்கிரமித்துக் கொண்டது. மீதி நிலங்களில் சீமைக் கருவேல மரங்கள் தான் நிரம்பி வழிகின்றன

அன்று என்னை தேவதையாகக் கொண்டாடிய ஊரில் தான் இன்று இருக்கிறேன்.. ஒரு சில முதியவர்கள் தான் பாப்பா என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் எல்லோருக்கும் பெரிய ”அம்மா”( தலைமை ஆசிரியரை அப்படி அழைக்கும் வழக்கம் இருக்கிறது)  இவர்களிடம் விவசாயம் கீழானது என்று போதித்தவர்கள் யார்? இப்போது எதுவுமே இல்லாமல் கையேந்துவது எதனால்??

நிலம் இருந்தவர்கள் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு விற்று விட்டு பணத்தை வங்கியில் போட்டு விட்டு சாப்பிடுகின்றனர். அங்கே கூலி வேலை பார்த்தவர்கள் ஏதும் இன்றித் தவிக்கின்றனர்.

பழைய பாசத்தோடு உழவுத் தொழில் மேன்மையை நான் புரிய வைப்பதற்குள் இவர்கள் எல்லாவற்றையும் விற்று, ஏழ்மையில் கிடக்கிறார்கள்.

 இப்போது பிள்ளையாருக்கு அடிக்கடி விழாக்கள் நடக்கிறது. வயல்கள் தான் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது, 

2 comments:

  1. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  2. தங்களின் இந்தப் படைப்பு நமது விழாத்தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
    பார்க்க - http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    ReplyDelete