மாற்ற வேண்டியவைகள்
**************************************
இன்றைய சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் போய்விட்டது. இதற்குக் காரணமாக உள்ள அடிப்படை முடிச்சை அவிழ்க்காமல் ஒவ்வொருவரும் அவர் மேல் தான் பிழை, இவர் மேல் தான் பிழை என்று ஆளாளுக்குக் குறைகளை மட்டும் அடுத்தவர் மீது தூக்கிப் போடும் வழக்கம் மட்டுமே இங்கே நிறைந்திருக்கிறது.
மாற்றுக் கட்சிகள் இந்தக் கட்சி ஆட்சி செய்தால் சட்டம் ஒழுங்கு சரியிருக்காது. அதிகார வர்க்கம் கீழ் மட்டத்திலிருந்து ஒழுங்கின்மையைத்தான் கடைபிடிக்கும் என்பார்கள்.
ஆளும் கட்சியோ இது அவர்களிடமிருந்து வந்தது. கோணலாய் அவர்கள் செய்ததை நாங்கள் மிகச் சரியாக செய்வதற்கே நாட்கள் ஆகுமென்று சப்பைக் கட்டு கட்டுவார்கள்
ஆசிரியர் தரப்பில் நாங்கள் பாடங்களை மட்டும் தான் நடத்த முடியும். ஒழுக்கம் என்பதும், பரிவு, பாசம், நேர்மை இப்படிக் கொண்ட குணங்கள் சமூகத்தின் பொறுப்பு. எங்களை அவர்கள் மதிப்பெண் எடுக்கவில்லையே என்று தானே கேட்கிறார்கள் அவர்கள் மனிதநேயத்தோடு இருக்கிறார்களா என்றா கேட்கிறார்கள் என்பார்கள்.
மாணவர்களே பள்ளியிலும் வீட்டிலும் ஏன் படிக்கவில்லை என்று கேட்கிறார்கள். ஆனால் இவர்கள் சினிமா, தொலைக்காட்சி என்று வாழ்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள்.
அதிகாரிகளோ நாங்கள் யாரை என்று நடவடிக்கை எடுப்பது, மக்களை - மாணவர்களை நடவடிக்கை எடுத்தால் அரசியல்வாதிகளுக்குக் கோபம் வருகிறது. ஆசிரியர்களை நடவடிக்கை எடுத்தாலும் அதுவும் பலனில்லை. நாங்கள் கையறு நிலையில் இருக்கிறோம் என்கிறார்கள். உண்மையில் இங்கு நடப்பது என்ன? ஒரு ஆசிரியர் பள்ளியில் இருக்கும் போது பாடத்தில் உள்ளதில் தெளிவடையச் செய்ய முடியுமே தவிர அவர்கள் மனதில் உள்ளதை எண்ணத்தை, கொடுஞ்செயலை என்ன செய்ய முடியும்?.
மனதில் படியும் அழுக்குகள், அக்கிரமங்கள், எங்கிருந்து வருகிறது? இந்த சமுதாயத்திலிருந்து தானே. அவர்கள் விடிய விடிய வன்முறை நிறைந்த தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், பத்திரிக்கைச் செய்திகளைப் படிக்கிறார்கள் எதனை ஒருவன் அதிகம் பார்க்கிறோனோ, கேட்கிறானோ ,வாழ்கிறானோ, அது தானே மனதில் படியும்? வாழ்க்கையாய் விடியும்?அதனை ஏன் ஒருவருமே உணர்வதில்லை.
மது அருந்து விட்டு வரும் வீட்டுத்தலைவன் இன்சொல் பேச வேண்டும் என்றும் நன்னடத்தையில் ஈடுபட வேண்டும் என்றும் எப்படி எதிர்பார்க்க முடியும்?
பொதுவாக அரசுப்பள்ளிகளில் எந்தப் பள்ளியிலுமே சேர்க்க இயலாது என்று அப்புறப்படுத்தப் பட்டவர்களும் நிராகரிக்கப்பட்டவர்களும் தான் சேர்க்கப்படுகிறார்கள்.பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், நடத்தை சரியில்லாதவர்கள் மதிப்பெண்களில் மிக அடிமட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்தப் பள்ளியில் தான் இருப்பார்கள்.
சில நியாயவாதிகள் கேட்கலாம் ஏழைகள் இங்கேதான் வரவேண்டும் என்று. ஆனால் அவர்கள் பணத்தால் மட்டும் ஏழைகளாய் இல்லை மனதால், நற்குணங்களால் என்று எல்லாவற்றிலும் இல்லாதவர்களாக அல்லது ஏழைகளாகக் காணப்படுகிறார்கள்..
கலாச்சாரம், பண்பாடு, உணவுவகை மற்றும் இன்னபிற விஷயங்களில் மேற்கத்திய முறைகளை பின்பற்றும் நாம் அல்லது பின்பற்ற ஆசைப்படும் நாம் கல்வி முறையில் மட்டும் ஏனோ மாறுபட்டு நிற்கிறோம்.
மேலை நாடுகளில் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் நல்ல மதிப்பெண் பெறுபவர்களாகவும் ஒழுக்கம் நிறைந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் தான் கடைநிலை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஒழுக்கம் தவறினால் அல்லது மதிப்பெண் தவறினால் அவர்கள் பள்ளியிலிருது உடனடியாய் நீக்கப்படுகிறார்கள்.
ஆனால் இங்கே அனைத்து சமூகத்தின் அனைத்து வகை மக்களின் பிள்ளைகளையும் ஒரு அரசுப்பள்ளி சேர்த்தாக வேண்டும். இல்லையேல் அரசியல்வாதிகளின் ஓட்டுவங்கி, மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். இந்த அரசியல்வாதிகளும் மக்கள் மக்குகளாக இருந்தால் தான் இவர்கள் ஊழல் செய்தால். கண்டு கொள்ளாதவர்களாக அல்லது கவனத்தில் கொள்ளாதவர்களாக இருந்தால் தான் தங்கள் அரசியல் வாழ்வு செம்மையுறும் என்ற தவறான கண்ணோட்டத்துடனேயே வாழ்கின்றனர். எனவேதான் இந்த நிலை நீடிக்கிறது
ஒரு வகுப்பில் தோராயமாக 50 பிள்ளைகள் இருந்தால் அதில் 20 பிள்ளைகளைப் படிக்க வைக்கவே முடிவதில்லை. 30 பிள்ளைகளை நல்லபடி வளர்த்த ஆசிரியர் என்ற பாராட்டுக்குப் பதில் 20 பிள்ளைகளை படிக்க வைக்க இயலாத ஆசிரியர் என்ற கெட்ட பெயர் வருவதால் அவர்களும் மதிப்பெண் விஷயத்தில் சற்று கடினமாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கான மன உளைச்சல்கள் இங்கு அதிகமாக ஆக்கப்படுகின்றன அல்லது கூட்டப்படுகின்றன. மனிதநேயம் மறந்து மதிப்பெண்களை மட்டும் துரத்த வைக்கும் கருவியக இவர்கள் மாற்றப்படுகின்றனர்
. போட்டியே ஏற்கனவே அதிகமான மதிப்பெண்கள் எடுத்து ஓரளவுக்கு நல்ல சூழ்நிலையில் இருந்து வரும் மாணவர்களுடன் சாதாரண சூழ்நிலையிலும் அதற்கும் கீழ் மோசமான சூழ்நிலையிலும் இருந்து வரும் பிள்ளைகளோடு இந்த ஆசிரியர்களும் அவர்களுக்காகப் போராட வேண்டியுள்ளது இது சரியான முறைதானா?
அரசுப்பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் தன் பிள்ளைகளை ஒரு தனியார் பள்ளியில் விட வேண்டியதன் கட்டாயநிலையில் இருப்பதை இங்கு யாரும் யோசிக்கவில்லை. ஆனால் அவர்கள் மேல் பொறாமை ப் படவும் அவர்கள் அரசின் ஊதியம் பெற்று தனியாரிடம் படிக்க வைப்பதால் ஏதோ பெரிய தீங்கு செய்து விட்டதாக இந்த சமூகம் அவர்களைக் கண்டபடி திட்டுகிறது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஏன் அங்கே சேர்க்க இயலவில்லை? வெறும் போதனா முறை மட்டும் காரணம் அல்ல என்பது அனைவருக்குமே தெரியும். அரசுப்பள்ளிகளில் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அந்தந்தத் துறைக்கு அந்தந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆனால் தனியார் பள்ளிகளிலோ ஏதோ ஒரு துறையில் தேறிய அல்லது தவறிய ஆசிரியர்கள், எந்தவிதத்திலும் பயிற்சி பெறாதவர்கள் என்று பல குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் அங்கு சேர்ப்பதன் காரணம் என்ன என்றால் ஒழுக்கம் தான்.
அங்கும் அனைத்து மாணவர்களும் பெரி ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து நேர்மையாக வாழ்கிறாரகள், படிக்கிறார்கள் என்று எந்த உத்திரவாதமும் சொல்வதற்கு இல்லைதான். ஆனால் மிகச் சாதாரணப் பேச்சில் கூட மோசமான அல்லது கேட்க இயலாத வார்த்தைகளை உச்சரிக்கும் பிள்ளைகளிடமிருந்தும் கெட்டவைகளை அதிகமாகக் கவர்ந்திழுக்கும் பிள்ளைகளிடமிருந்தும் ஓரளவேணும் தள்ளி வைத்து விடலாமே என்ற யோசனையில் தான் இது போன்ற நிகழ்வுகள் நிகழ்கின்றன.
பெரும்பாலும் ஒரு குடும்பத்தில் தலைவனும் தலைவியும் சேர்ந்தே வேலைக்குப் போனால் தான் இந்த சமூகத்தில் மதிப்பாக, உயர்வாகப் பார்க்கப்படுகிறோம் என்பதால் அந்த ஊதியத்தையும் இழக்க மனமில்லாமல் குழந்தைகளையும் வளர்க்க இயலாத கையாலாகத்தனத்தோடுதான் பலர் வாழ்கிரார்கள். அவர்களின் நோக்கமோ, எண்ணமோ ஒரு நடுநிலைவாதியாக தவறு என்று சொல்ல இயலவில்லை.
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தவறுவதில்லை என்று சொல்வதற்கில்லை. அங்கும் அடாவடிகள் அதிகமாகிப் போனதென்னவோ உண்மைதான் . மிக மோசமான சூழல் அங்கும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன என்பது தான் மிகக் கொடுமை.
அரசு வெறும் இன்பிராஸ்ரெக்சர் (infrastucture) எனப்படும் கட்டிடம் மட்டும் தளவாடச் சாமான்கள் கொடுத்து மாற்றி விடமுடியுமா? அது மாயசக்தி தெரிந்த மந்திரவாதியால் கூட முடியாது. அப்படி ஜீபூம்பா சொல்லி மாற்ற முடியாத ஒரு காரணியை இந்த ஆசிரியர்களிடம் இந்த சமூகம் எதிர்பார்ப்பது கேலிக்குரியதாகத்தான் இருக்கிறது. கட்டிடம், இன்னபிற வசதி செய்துவிட்டோம் என்ற மாயத்தோற்றத்தைத்தான் அரசியல் வாதிகளும் ஏற்படுத்துகிறார்கள் இவர்கள் செய்ய வேண்டியது கட்டிடத்தில் மாற்றங்களா? அல்லது அடிப்படைக் கட்டமைப்பில் மாற்றங்களா என்பதை புரிந்து கொண்டார்களா அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கிறார்கள்ளா என்பது தான் புரியவில்லை.
ஒரு நல்ல நேர்மையான அரசு, சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களுக்குமாக சேர்த்து நன்னெறி போக்கு, பழக்கவழக்கம் எல்லாவற்றையும் மாற்றினால் இது மாறிவிடாதா? அதெப்படி முடியம் என்று அதைரியப்படுவதை விட மாற்ற முயற்சி செய்து முதற்படி ஏறினால் அடுத்தடுத்த படிகள் நமது கண்களில் பட்டுவிடாதா? மாணவர் சமுதாயம் ஆசிரியர்களைத் திட்டுவதும் ஆசிரியர்கள் தங்கள் இயலாமையால் மாணவர்களைத் திட்டுவதும் ஒட்டுமொத்தமாக ஒருவர் மற்றவர்களைத் திட்டுவதால் நடக்கும் பயன் தான் என்ன?
கண்டிப்பாக மாற்றங்கள் தேவை! சிறப்பான கட்டுரை! நன்றி!
ReplyDeleteசமூக சிந்தனையுள்ள பதிவு
ReplyDeleteசிந்திக்க வேண்டிய கேள்விகள்...
ReplyDeleteஅருமை .நல்ல பதிவு
ReplyDeleteபொதுவாக அரசுப்பள்ளிகளில் எந்தப் பள்ளியிலுமே சேர்க்க இயலாது என்று அப்புறப்படுத்தப் பட்டவர்களும் நிராகரிக்கப்பட்டவர்களும் தான் சேர்க்கப்படுகிறார்கள்.பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், நடத்தை சரியில்லாதவர்கள் மதிப்பெண்களில் மிக அடிமட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்தப் பள்ளியில் தான் இருப்பார்கள்.>>>>
அரசு பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியர்கள் படிக்கிறார்கள் என்பதை ஏற்கிறேன் .ஆனால் நடத்தை சரி இல்லாதவர்கள் என்பதை எனர்க முடியாது .ஏனெனில் எல்லா பள்ளிகளிலும் ஒரு சில மாணவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .அதோடு கிராமப்புறங்களில் அரசுப்பள்ளிகள் தான் இன்றும் சிறந்த மாணவர்களை உருவாக்கிறது
தங்களது கருத்துகள் நியாமானவை.
ReplyDeleteஆதங்கம் உண்மையானது.
நானும் வழிமொழிகிறேன்.
பகிர்விற்கு நன்றி கவிஞரே!
த ம 2