Thursday, June 19, 2014

தமிழ் படித்தேன்...தளர்வழித்தேன்....

உள்ளமதும் எப்போதும் உவகைகொள்ள
   உலகினிலே என்ன உண்டு தமிழைப்போல
கள்ளமெலாம் மெதுவாக மறைந்து போகும்
   கருத்தாக தமிழை நாம் கற்றிட்டாலே!
தெள்ளியதோர் நீரோடை போலே இங்கு
  தெங்கிளநீர் பருகிடவே தருமே தமிழும்
முள்ளும்தான் தமிழினையே தானும் கேட்க
   முனைமுறிந்து சீராகும் அன்பு பூக்க!


தென்றலதும் வேண்டுவோர் தமிழைப்படிக்க
   தேனள்ளி குடித்ததுபோல் சுவையைப்பருக
மன்றதனில் தமிழ்தன்னை ஒருவர் பேச
   மகுடம்சேர் மாண்புகிட்டும் விருதுசூழ!
குன்றிலிட்ட விளக்கெல்லாம் முவலயம் போற்ற
   கூற்றத்தை எதிர்கொள்வர் தமிழைக் கேட்டு
கன்றெல்லாம் பசிமறக்கும் எமது மொழியில்
   காடுகளும் கவினாகும் அழகு தமிழில்!

செந்தமிழை நானும் தான் படித்துப் பார்த்தேன்
   சிந்தையெல்லாம் நறுமணமே அறிவுபூக்க
தந்தம்போல் தரமுயர்ந்த அழகே தமிழ்
   தமிழ்படித்தேன் தளர்வழித்தேன் நன்று சொல்வேன்
முந்துதமிழ் விநாயகனும் தமிழ்படித்தே
   முதற்கடவுள் ஆனானே தமிழர்தமக்கு
சிந்துதமிழ் படியுங்கள்! வாகைகிட்டும்
   வரலாறு ஏந்திடுமே வளமை நிறைக்க


முத்தெனவே சிறந்திருக்கும் தமிழின்பாட்டு
   மூள்பகையை போக்கிடுமே தமிழின் போக்கு
தித்திக்கும் திங்களென நமது வாழ்வு
   தீந்தமிழின் தரமான பாடல் கேட்டால்
சித்தமெலாம் தமிழைத்தான் நாமும் நிறைப்போம்
   சிகரத்தின் உயர்வினையே எட்டி நிற்போம்
பத்தரையின் மாற்றேபோல் தமிழே எங்கும்
   பாதையெங்கும் வழிகாட்டும் அறிந்து கொள்வோம்
********************************************************

3 comments:

  1. தமிழ்ச்சுவையை சுவைதமிழால் உரைத்தமை வெகுசிறப்பு கவிஞரே!

    ReplyDelete
  2. காத்தப்பன்June 20, 2014 at 4:51 AM

    இப்படித் தமிழ் படிக்க சந்தோச மாக உள்ளது. உங்கள் சிறகு விரியட்டும்

    ReplyDelete
  3. marabuk kavithaihalil athigam gavanam seluththavum. athu ungaluku alahavum thodaragavum varukirathu. nanadri

    ReplyDelete