Wednesday, June 4, 2014

அது....அது..அது....

’அது’ அற்ற என் வீட்டில்
’அது ’இருக்கும் இடத்தில்
ஒரு சிறிய
புத்தக அலமாரி அடுக்கு,
சிறிய மற்றும் பெரிய
 ஆச்சரியங்களைத் தருவிக்கிறது
வருகிறவர்களுக்கு!!!!

பிள்ளைகள் அது இல்லாமல்
எப்படி சாப்பிடும் என்பாள்
ஒரு தோழி
ஏதோ அது
குழந்தைகளைச்
 சாப்பிட வைக்க என்றே
ஜனித்த அல்லது
 உற்பத்தி செய்த பொருள் போல

அது இல்லாமல்
என் குழந்தைகள்
என்னதான் செய்கிறார்கள்
அன்று அதிர்ந்து போகிறாள்
மற்றொரு தோழி

அது அற்ற அவர்களை
 ஏற்க இயலவில்லை
அவளால்.
ஆக்ஸிஜன் கிடைக்காமல்
வாழ இயலுமா என்பது போன்ற
கேள்வியின்
அழுத்தமும் ஆழமும் அதிர்ச்சியும்
அந்தக் கேள்விக்குள் கிடந்தது.

நான் எங்கேனும் ஒழித்து
வைத்திருக்க இயலுமோ
என்ற எண்ணத்தில்
இந்த வீட்டில்
எத்தனை அறைகள்?
புழக்கத்திற்கு சரியாக இருக்கிறதா என்று
மாற்றுக் கேள்விகள் கேட்டு
வேறெங்கும்
‘அது’வைக்கப்பட்டிருக்கிறதா
என்று ஆராய்கிறார்
மற்றொரு தோழர்

விடுமுறை தினங்களில்
’அது’ இன்றி
என்பிள்ளைகள்
என்னதான் செய்கிறார்கள் என்றே
மறுநாள் வேலைக்குப் போகாமல்
விடுப்பெடுத்தாலும் பரவாயில்லையென்று
கும்கோணத்திலிருந்து
வந்து பார்த்துப் போகிறாள்
வங்கியில் பணிபுரியும்
 ஒரு தோழி

‘அது’ அற்ற
எங்கள்: வீட்டைப்பற்றியே
சொல்லிவிட்டுத்தான்
என்னை ‘எழுத்தாளர்’ என்று
அறிமுகம் செய்து வைப்பார்
என் மேலதிகாரிகளில் ஒருவர்


‘அது’ தொடர்புடைய
ஏதேனும் ஒன்றைப்பற்றிப்பேசி
’அது’ ப்ற்றி
நான் அறிந்திருக்கிறேனா
என்று கூட பரிசோதிப்பார்கள்
சில தோழிகள்
தலைமைஆசிரியர் கூட்டங்களில்!


சில நேரங்களில்
எனக்கு
நெருக்கமானவர்கள்
அதில் பேசுவதால்
குறையாகத்தான் தென்படும்
எனக்கும்!


எது எப்படிப் போனாலும்
‘அது’ இருந்தால் போதுமென
இருக்கும் கூட்டம் இருப்பதால்
’அது’இல்லாமல்
இவ்வுலகம் இல்லை என்றானது போலும்


பள்ளிகளில் மாணவர்களுக்குக் கூட
அது பற்றியே தான் பேசுகிறார்கள்
தேர்வுகாலங்களீலும் கூட!

அது’ ஆட்டிப்படைக்கும்
ஆட்களே இல்லாத்து போல்
பேருந்தில், ஆலயங்களில்
பட்டிமன்றங்களி, கூட்டங்களில்
அங்கிங்கெனாதபடி எங்கும்
‘அது’ பற்றித் தான்
 பேசிக்கொள்கிறார்கள்

வணிகம், புள்ளியியல்
வேளாண்மை மேலாண்மை
மருத்துவம், மனயியல்
என்று எல்லாத் துறைகளிலும்
‘அது’வன்றி
எழுச்சியே இல்லை என்றாகிப் போனது

அது வேண்டுமென்று கேட்டால்
உடனே வாங்கித்தரும்
கணவர்தான் வாய்த்திருக்கிறார்.
ஆனாலும் நான்
இன்னும்
‘அது’ பற்றி
அவரிடம் பேசியதில்லை
‘அது’ பற்றி அவரும்
என்னிடம் விவாதித்ததிலை


‘அது’ அற்ற
எங்கள் வீடு
அழகாய்த்தான் இருக்கிறது
‘அது இன்றி நாங்களும்
நன்றாகத் தான் இருக்கிறோம்


ஆனாலும்
அதை அவசியம்
வாங்கி வைக்கச் சொல்லித்
தூண்டுகிறார்
பக்கத்து வீட்டுக்காரர் கூட


இன்னமும் கூட
‘அது’ வாங்க வேண்டுமென்ற
எண்ணமின்றியும்
‘அது’ வாங்கவேண்டுமா
என்ற
நோக்கம் பற்றியும்
எங்களிடம்
திட்டம் ஏதுமில்லை


நீங்களே சொல்லுங்கள்
எங்கள் வீட்டுக்கு
இது வரை
‘அது’ என்ற
தொலைக்காட்சிப்பெட்டி
தேவையா???????

********************************************






3 comments:

  1. அது என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது சில வரிகள் கடந்ததுமே புரிந்து கொண்டு விட்டேன். ‘அது‘ இல்லாத வாழ்வு நிம்மதியானது என்பது என் அனுபவம்.

    ReplyDelete
  2. ஸ்டெல்லா மேரிJune 9, 2014 at 8:39 PM

    அடடா உங்கள் எல்லாப் படைப்புகளையும் படிக்க ஆவல் ஏற்படுகிறது

    ReplyDelete