Sunday, June 15, 2014

மனதைக் கவர்ந்த மார்கழி...

   “மார்கழிப் பனி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்” மார்கழி மாதம் என்று சொல்லும் போதே சுகம் பிறக்கும். எழுதும் போதே கவிதை சுரக்கும். மார்கழி என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது கோயிலில் திருப்பள்ளி எழுச்சி, பொங்கல், வண்ணக்கோலங்கள், பாசம் வைக்கும் பனி, சங்கீதமாய் உலவும் குளிர்காற்று. இவைகள் நம் நெஞ்சை நிறைக்கும் பஞ்சுமெத்தைகள். மனதிற்கு இதம் தரும் இனிய நிகழ்ச்சிகள் .

ஆனால் தற்போதெல்லாம் மார்கழி மாதம் இப்படியா நம்மை எதிர்கொள்கிற்து? ஒலிபெருக்கிகளின் அலறல் ஒன்றைத் தவிர வேறு எதைச் சிறப்பாகக் கூறமுடியும்? காலையில் எழுந்து தலை குளித்து விட்டு மொட்டை மாடியிலோ, தென்னந்தோப்பிலோ, மரத்தினடியிலேயோ உட்கார்ந்து படித்தால் ஆகா? சொர்க்கம் இங்கேதான், இப்போதுதான் என்று சொல்லத் தோன்றும். எழுத அமர்ந்து விட்டாலோ வார்த்தைகள் பாய்ந்தோடி வந்து கவிதையாய்ப் படுத்துக் கொள்ளும். ஆனால் இப்போதைய மார்கழிகள் மலர்வதே ஒலிபெருக்கியின் சப்தத்தினால்தான்.


   பெரிய கோயில்கள், நடுத்தரக் கோயில்கள், சிறிய கோயில்கள், குழந்தை கோயில்கள் ( பாம்பை அடித்து அதைப் புதைத்து ஒரு கல்லை வைத்து சாமி என வணங்குதல், குரங்கைக் கொன்று அதைபுதைத்துக் கல்லை நட்டு வைத்து சாமி என வண்ங்குதல்) இப்படியாக ஒவ்வொரு விதமான கோயில்களும் ஒவ்வொருவிதமான ஒலிபெருக்கிகளைத் தாங்கிக்கொண்டு சப்தங்களே சங்கீதமாய் ஒலிக்கச் செய்கிறார்கள்.அதைக் கத்தவிட்ட உடன் விழா நடத்துவோர்களுக்கு ஏகப்பட்ட திருப்தி. தாங்கள் ஏதோ இமயத்தையே தொட்டுவிட்டு வந்து விட்டது போல.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தூக்கம் கெட்டுப் போகுமே, மாணவர்களின் படிப்புப் பாழாகிப் போகுமே என ஒருவரும் நினைப்பது கிடையாது. இதைக் குறிப்பிட்ட நபரிடம் சொல்லிவிட்டாலோ நாத்திகவாதிகள் பேச்சை நாங்கள் கேட்பதில்லை கடவுளுக்குச் செய்வதை தயவுசெய்து குறைகூறாதீர்கள் என்று ஒரே வார்த்தியில் கூறி விடுகிறார்கள்.

இப்படி கடவுள் வழிபாடு என்க்கூறிக்கொண்டு திருமங்கையாழ்வார் அருளியது, திருப்புகழ், தேவாரம், திவ்யப்பிரபந்தம், வாரியாரின் சொற்பொழிவு, மற்றையோரின் ஆன்மிகச் சொற்பொழிவுகள், ஆன்மிகப் பாடல்களையாவது போடுகிறார்களா? அடுவும் இல்லை. காதின் புனிதத் தன்மையே  கெட்டுவிடும் போல நாடோடிப் பாடல்கள், திரைப்படப் பாடல்கள் இவற்றைத் தான் போடுகிறார்கள்.

அது மட்டுமில்லாமல், திரையிசைபாடல்களின் மெட்டெடுத்து சாமி பாடல்களைப் பாடி அந்த ஒலிநாடாக்களைப் போடுகிறார்கள். இதற்கும் ஒரு காரணம் வைத்திருக்கிறார்கள். எப்படிக் கேட்டால் என்ன? இசையில் என்ன பேதம்? எல்லா இசையும் இறைவனுக்குகந்தவைகளே என்கிறார்கள். திரைப்படப் பாடல்களைக் காலையில் ஒலி பெருக்கியில் அலற விட்டால்தான் அருளுவேன் என்று சாமி சொன்னாரா? எதுவும் புரியவில்லை.

 கொச்சை வார்த்தைகளால் கோர்த்த பாடல்களைத்தான் இறைவன் விரும்புகிறானா? சங்கத்தமிழ் படைத்து முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் தோற்றுவித்துத் தமிழ்பாடித் தமிழ் வளர்த்த சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நாடுதானா இது?

ஆன்மீகம் ஆளுமையை வளர்ப்பதாய் இருக்க வேண்டுமேயன்றி வெறித்தன்மையை வளர்ப்பதாய் அமைதல் கூடாது. மனித நேயத்தை, நல்ல பண்பை, உயரிய நாகரிகத்தை வளர்ப்பதாக ஆன்மிகம் அமைந்தால் இனிய இந்தியாவாகும். இல்லையேல் இன்னலுக்குள் இடிந்து போன இந்தியாவாய்.....

ஐயோ அப்படி போக விடலாமா???

(இது என்னுடைய முத்துப் பந்தல் என்ற நூலில் எழுதிய கட்டுரை...1995ல் வெளியானது. நான் அப்போது B.Com  புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.)


4 comments:

  1. நாகராஜன்June 15, 2014 at 5:54 PM

    இப்ப அதைவிட படு பயங்கரக் கொடுமையாயிருக்கு .

    ReplyDelete
  2. அரையாண்டு விடுமுறை காலத்தில் (மார்கழி மாதம்) , கிராமத்தில் என் தாத்தாவின் ஓட்டு வீட்டில் விடியற்காலை வாசலில் கட்டியிருக்கும் படுதாவையும் தாண்டி விசும் கடுமையான குளிரை போர்வையில் இழுத்து போர்த்தி படுத்த படியே கோவிலிலிருந்து கேட்ட பாடல்கள் பசுமையான நினைவுகளாக உள்ளது. பிறகு எழுந்தவுடன் ஒவ்வொரு வீட்டு முன்னாலும் போட்டி போட்டு கொண்டு பெண்கள் ப்ப்டும் கோலமும் அழகே.

    ReplyDelete
  3. எழுத்து நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  4. எழுத்து நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete