Wednesday, May 28, 2014

விருந்தோ விருந்து

 
 விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்று என்றார் வள்ளுவர். சிலப்பதிகாரத்திலும் அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் துறவோர்க்கு எதிர்த்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கெடலும்- என்று கண்ணகி கோவலனின் பிரிவாற்றாமையால் செய்ய இயலவில்லை என்று விருந்தோம்பும் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது.

   மேலும் தொல்காப்பியத்தில் விருந்தே தானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே என்றும் நற்றிணையில் அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற என்றும் புறநானுற்றில் விருந்துகண்டொளிக்குந் திருந்தா வாழ்க்கை என்றும் சிறும்பாணாற்றுப்படையில் வெண்சோறு சுவைத்தாள் அலவன் கலவையோடு பெருகுவீர் என்றும் கூறுகிறது.

   ஆனால் இன்றோ விருந்தினர்கள் ( நாம் இருக்கும் இடத்திலிருந்து) பெரியவர்களாக இருந்தால் பார்க்க வேண்டிய கோயில் தலங்களைப் பற்றி அறிந்து கொண்டு வருகிறார்கள்.( விக்கிப்பீடியா தான் அவர்களுக்குக் கக்கீபீடியாவாக இருக்குமோ?) சிறியவர்கள் என்றால் திரைஅரக்குகள் அதில் ஓடும் திரைப்படங்கள் பொழுதுபோக்கு இடங்கள், பார்க்கவேண்டிய இடங்கள் என்று நம்மை விடபொது அறிவில் பிரமாதமாய் இருக்கிறார்கள்.

   அன்றைய காலகட்டங்களில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள் எனவே பெண்கள் ஆளுக்கொரு வேலையாக செய்து மகிழ்ந்து விருந்தை மதித்தனர். இன்றோ தனிக்குடும்பம் .அதிலும் குடும்பத்தலைவி வேலைக்குப்போகிறவரென்றால் விருந்தினர் என்றாலே இடி இறங்கியது போன்று அலறுகிறார்கல். வரும் விருந்தின்ர்களும் “ செல்விருந்தோம்பி வருவிருதந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு என்பது போலவா நடந்து கொள்கிறார்கள்? (அதான் கொல்வார்களே)

   அவர்கள் வீட்டுக்குழந்தைகளால் வீடே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டு திருப்பி வைக்கப்படும்.அவர்கள் அராஜகத்திற்கென நம் குழந்தைகள் விட்டுக்கொடுப்பார்கள். பெரியவர்களால் நான்கு மாதத்திற்கு வர வேண்டிய உணவுப்பொருளை வீணாக்கப்படும். ( அது எப்படித்தான் அடுத்த வீட்டு எண்ணெய் என்றால் அரைச்சட்டி ஊற்றித்தாளிப்பார்களோ?)

   விருந்தினர்களால் நேர விரயம், மன விரயம், பொருள் விரயம், வீண் ஆவது தான் மிச்சம். வேறு ஒன்றும்நடந்த பாடில்லை. முடிந்தவரை சண்டை மூட்டி விடுபவர்களாகவே பெரும் பாலோர் வருகிறார்கள். ( ஆயக் கலைகள் அறுபத்து நான்காடு இதையும் சேர்த்திருப்பார்களோ?)

   இதில் ஒரு குடும்பத்தின் கணவனைச் சார்ந்தவர்கள் என்றால் மனைவீன் போக்குகளில் ஏதேனும் ஒரு குற்றமேனும் கண்டுபிடித்தேஆக வேண்டும் என்று கங்கணம் கட்டி அலைவார்கள். மனைவியச் சார்ந்தவர்களோ அந்த வீட்டுக் கணவனைப் பற்றி இல்லாதும் தாங்கள் நேரில்பார்க்காதவற்றையும் கூட பார்த்தது போலவே கதை கட்டி விடுவார்கள். ( சங்கர் படத்தில் கதை வசனம் எழுதப்போனால் காசாவது கிடைக்கும்)  ஒருவேளை அவர்கள் குடும்பத்தில் நடந்தவைகளை யாருக்கேனும் தர வேண்டும் என்று நினைப்பார்களோ? ( யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இதிலாவது இருப்போம் என்றோ? )

   வேலைக்குப் போகும் பெண்கள் வீட்டில் ஒவ்வொரு ஞாயிறுமே பயந்து பயந்து தான் விடியும். ஆனாலும் அவர்கள் வீட்டிலேயே தான் மிகவும் கொடூரமாய் அரங்க்ந்ந்றும் இச்சம்பவங்கள். மூட நம்பிக்கையை நம்புகிறவர்கள் நம்பாதவர்கள் என்று அனைவரும் காகம் கரைந்தால் காகத்தையும் கரித்துக் கொட்டுபவர்களாக மாறிப்போனார்கள்.

   இந்தக்கொடுமையில் சைவர்கள், அசைவர்கள் என்ற பேதமே இல்லை. சைவர்கள் என்றால் சற்று கொடுமைகூடுதலாக இருக்கும். கூட்டு, பொறியல், அவியல், வறுவல், ரசம் பாயாசம் அப்பளம் என்று மனித உழைப்பும் பொருளும் வீணாகும். நம் வீட்டில் தான் அவர்கள் குழந்தையை தானே சாப்பிட பழக்குவார்கள். அதுக்கு தனி இலை போட்டு அனைத்தையும் வைத்து வீடெல்லாம் கொட்டி அதனை பெருமையா பார்த்து வேறு சிரிப்பார்கள்.

   சொந்தக்காசு கொடுத்து வாங்கினால் முருங்கைக்காய்த் தோலையும் மென்று விழுங்கி வைப்பவர்கள் நாகரிகம் என்ற பெயரிலோ, மனதிற்குள் புதைந்து கிடக்கும் வக்கிரம் காரணமாகவோ உணவுப்பொருள் வீணாகும். இது மட்டுமா?

   பல விருந்தினர்கள் வெளியில் விருந்துக்க்கு வந்தால் மட்டும் வாழ்வை சீராக வைத்துக் கொள்வார்கள் போல. காலையில் சிற்றுண்டிக்கு முன் தேநீரும் பின் காப்பியும்(குளம்பியும்) மதியம் பட்டியல், பிறகு மாலை தேநீரோடு ஒரு சிற்றுண்டி, இரவு உணவின் போது ஒரு சிற்றுண்டி, தூங்குமுன் பால் வேறு ( பேருண்டியை ஏன் சிற்றுண்டி என்கிறார்களோ)

   விருந்தினர்கள் வந்து போகும் போதெல்லாம் கணினி கெட்டு விடும். தண்ணீர் மோட்டார் வேலை செய்யாது. மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிஜ் முதற் கொண்டு சீர் கெட்டு விடும். இன்னும் பல எலக்ரிக், எலக்ரானிக் பொருள் கள் தனி. நம் குழந்தைகள் பாடம் படிக்க என்று வாங்கிய பொருள் முதல் ஐபாட்...டேப், வரை எல்லாம் இதற்குள் அடக்கம்.

   அதோடு விடுவார்களா? அவர்கள் வீட்டில் நடந்த சம்பவங்களை ஒன்று விடாமல் சொல்லியும் அவர்கள் மழலைகள் செய்த குறும்புகளைச் ( அந்த அநியாயங்களுகு இவர்களாக வைத்த பெயர் தான் குறும்பாம்) சொல்லியும்  டண் கணக்கில் தலைவலியை இறக்குமதி செய்கிறார்கள். அதுவும் போக உலகிலேயே அவர்கள் கடைபிடிப்பது எல்லாமே நியாயமாகவும் நாம் செயல்படுவது அத்தனையும் நிற்பது, இருமுவது, தும்முவது  போன்றவைகளில் கூட எங்கே தவறு நடக்கிறது என்று கண்டு கொள்வதில் மகாக்கில்லாடிகளாகவும் பெருங்கணக்கர்களாகவும் இருக்கிறார்கள்.

   காலாண்டு, அரையாண்டு , முழுஆண்டு விடுமுறை விட்டால் அப்பாடா நிதானமாக எழுந்து குளித்து, உணவு சமைத்து , பிடித்த வேலைகள் செய்து குழந்தைகளோடு கொஞ்சி விளையாடலாம் என்பது போய்... யாருக்கும் விடுப்பே விடாமல் தொடர்ந்து  வேலைநாட்களாகவே இருந்து விடக்கூடாதா என்று நினைக்கும் அளவிற்கு விருந்தினர்களின் அராஜகம் அரசியல் அல்லல்களைத்தாண்டியும் நம் வாழ்வைக் குலைக்கிறது. மொத்தத்தில் மே மாதம் உலக்ப் பெண்களின் துக்க கரமான மாதம் என்று அறிவிக்கலாமா என்று யோசிக்கும் வகையில் போய்விட்டது.

  இதில் நாம் வழக்கமாய் பேசும் தோழிகள் கூட நம்மைப் புரிந்துகொள்ளாமல் நாமே நைட்டிநனைய வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது என்ன பேசமாட்டேங்கிற ...ம்.... சரி சரி என்பார்களே பார்க்கணும்.... நாம் தொலைபேசக்கூட சொல்லப்போனால் தொலைபேசியை பார்க்கக்கூட நேரமில்லாமல் தத்தளிக்கும் போது அது அணுவைப் பிளந்து ஆராய்ச்சி செய்வதை விட கொடுமையானது.

   நம் வள்ளுவர் வேறு மோப்பக்குழையும் அனிச்சம் என்றாரா? அவர்கள் முகம் கோணாமல் ந்டக்க இனி கடவுளிடம் தான் கோச்சிங் கிளாஸ் போக வேண்டும். மொத்ததில் விருந்தினர்கள் வேண்டாதவர்களாகவே இருக்கிறார்கள்...






5 comments:

  1. மே மாதத்தை உலகப் பெண்களின் துக்ககரமான, சங்கட மாதம் என்றே அறிவித்துவிடலாம்

    ReplyDelete
  2. அட ! இது புதுசா இருக்கே!?!
    இதுமாதிரி கூட எழுதுவீங்களா சுவாதி? எழுதுங்க எழுதுங்க..
    உங்க 4ஆவது முதுகலைப் பட்டமாகத் தமிழைத் தேர்வுசெய்ததற்கு நன்றி.
    அதனாலேயே உங்களை இணையத் தமிழ் வகுப்பில் பார்க்க முடியாததற்கு வருத்தப்பட்டனர் நண்பர்கள், நானும்தான்.
    தேர்வுகளை எழுதுவதில் அகலத்தை விட ஆழம் தேவையென்று நினைப்பவன் நான். எனவே உங்களின் எழுத்துகள் - படைப்புகளில் இன்னும் ஆழத்தை எதிர்பார்க்கிறேன் தொடரட்டும் நன்றி.

    ReplyDelete
  3. விருந்தினர்களை இந்த வாரு வாருகிறீங்களே! நியாயமா?!

    ReplyDelete
  4. மொத்தத்தில் மே மாதம் உலக்ப் பெண்களின் துக்க கரமான மாதம் என்று அறிவிக்கலாமா என்று யோசிக்கும் வகையில் போய்விட்டது.-
    உண்மைதான்.
    “நாளும் கிழமையும் நலிந்தோர்க் கில்லை
    ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக் கில்லை” - கந்தர்வன்.
    ஞாயிறு என்பது விடுமுறையின் குறியீடு.

    ReplyDelete
  5. நாகப்பன்June 5, 2014 at 4:17 AM

    நல்ல அனுபவமா சுவாதி? பாவம் நீங்கள்.

    ReplyDelete