Tuesday, February 25, 2014

தேர்தல் காலங்களில்......(கவிதை)











மனுக்கள் கொடுத்ததைச் சேர்த்து வைத்து
மஞ்சள் நிற சைலோ வாங்கிவிட்டார்கள்-அது
மனுக்கள் வாங்குவதற்காக
வாங்கப்பட்டதாம்!

ஓட்டுப்போட்டுவிட்டு
சுதந்திரத்தை மட்டுமல்ல
சுயசிந்தனையையும்
கப்பம் கட்டியிருக்கிறோம்

எச்சில் இலையிலேயே
எங்கள் காலங்களும் வயிறுகளும்
கழுவப்படும் போது
நாங்கள் எங்கே
எரிமலையாகி ஏற்ற இறக்கத்தைத் தணிப்பது????
கனவுத்துடுப்புகள் மட்டுமே எங்களை
கரைசேர்க்க வருகிறது!

தேர்தல் சமயங்களில் தான்
வீதியோரம் கிடந்த எங்களுக்கெல்லாம்
விலாசம் தரப்பட்டன
ஆனால்...
ஆட்சிக்கு வந்ததும்
அரையாடை கூட ஆதரவற்றுப் போகிறது

வறுமைக் கோட்டுக்குக் கீழே
வாழும் தேசம் என்று
பொருளியலாளர்
கருத்து தெரிவித்துள்ளாராம்
அதை அமைச்சர்கள் படித்துவிட்டு
அப்படியா என்றார்களாம்!
வெந்து போகும் எங்களூக்கல்லவா
வேதனையின் வாசம் புரியும்

இந்தியம் செத்தது போல்
இரத்தமும் செத்ததால்
விரக்தியின் வீட்டினுள்
வேதாந்தம் பேசிக்கொள்கிறோம்

அநீதி அழிந்து போகுமாமே
சத்தியம் ஜெயிக்குமாமே
தர்மம் தலைதூக்கி நிற்குமாமே
பொறுத்திருந்து பார்ப்போம்
எங்கள்
சந்ததினரேனும்
சட்டை போட்டுக் கொள்ளட்டும்!
இப்படிக்கு
ஊழல்களைப் பார்த்துக் கொண்டு
ஊமையாய் இருக்கும்
இந்தியன்...
********************************

1 comment:

  1. உண்மைகள் தான்...

    மாறும் காலம் வர வேண்டும்... வரும்...

    ReplyDelete